வளைகாப்பு: வளைகாப்பு, குளித்த மாதக் கணக்கிலிருந்து, ஐந்தாம் அல்லது ஏழாம் மாசம் செய்யப்படும். சாதாரணமாகப் பிறந்தகத்தில் செய்வது வழக்கம். சீமந்தத்துடன் சேர்ந்து செய்தால் ஆறாம் அல்லது எட்டாம் மாசம் என்பது கணக்கு. வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம். காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம். சில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு. முன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது. கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும். மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும். நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம். சில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம். இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம். இருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம். முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு. இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22) முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும். கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும். மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும். அந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம். அதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம். ஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும். பெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும். மூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர். பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும். வந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம். 5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும். ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம். வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம். சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு . மாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது. மாமியாரோ, மற்ற புக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம். அவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம். அன்புடன் சித்ரா.
சீமந்தம்: இது 6 அல்லது 8 வது மாதம் புகுந்த வீட்டில் செய்வது வழக்கம். நல்லநாள் பார்த்து காலையில் மங்கள ஸ்னானத்துடன் ஆரம்பிக்கப்படும். வளைகாப்புடன் சேர்ந்து செய்வதானால், விடியற்காலையில், வளைகாப்பைச் செய்ய வேண்டும் மூக்குப் பிழிதல் என்ற சம்பிரதாயத்துக்கு 9 கஜம் புடவை வாங்குவது வழக்கம். தற்காலத்தில்,கூறைப் புடவையையே சிலர் போறும் என்று நினைக்கிறார்கள் ! அது அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது . இதற்கு, வாத்தியார் அவசியம் தேவை. ஹோமம் வளர்த்து, உதய சாந்தி ஜபிப்பது உண்டு. அ தன் பின் அந்த ஜலத்தைத் தலையில் விடுவது வழக்கம். ஆல், அகத்தி மொட்டுகளை உரலில் இட்டு வீட்டுக் கன்யாப் பெண்களை " ஆம்பிளை பெத்தா, பொம்பளை பெத்தா" என்று கூறி இடிக்கச் சொல்லி அந்தக் கலவையை புதுப் புடவையின் சின்ன முடிச்சாய் முடிந்து மூக்கில் பிழிவார்கள். தோம்பு துணி என்ற சிவப்பு துணி வாங்கிஅதில் மூக்கு பிழிவதும் உண்டு. மொட்டு நசுக்கும் குழந்தகளுக்கு சிறிய பரிசு அளிக்க வேண்டும். பிறந்த வீட்டில், பெண்ணுக்கு 9 கஜம் புடை, மாபிள்ளைக்குப் பட்டு வேஷ்டி, உத்தரீயம் வாங்குவது வழக்கம். பட்டுப் பாயும், குடமும், குத்து விளக்கும் வாங்குவதும் உண்டு. பருப்புத் தேங்காயைச் சேர்த்து,5 வித பக்ஷணங்கள் பிறந்த அகத்தில் சீர் வைக்க வேண்டும். திரட்டிப்பால், முறுக்கு, அதிரசம் அல்லது அப்பம் அவசியம் செய்ய வேண்டும். முறுக்கும் திரட்டிப் பாலும் சுற்றோடும் சுழையோடும் சேர்ந்த பக்ஷணங்கள் என்று என் மாமியார் சொல்லுவார்கள் ! இதற்குப் புகுந்த வீட்டில் ஏற்றி இறக்கி, அச்சுதம் தெளிக்க வேண்டும். சமையலுக்கு பூசணிக்காய் கூட்டு செய்ய வேண்டும். சாப்பிடும் போது, பெண்ணின் நத்தனார் அவள் அருகில் உட்கார்ந்து, அவள் வாயில் சிறிது கூட்டு போட்டு, (சாஸ்திரத்துக்கு) வலது காதில் "பூ" என்று ஊத வேண்டும். இது வீட்டில் சம்பிரதாயம் இருந்தால் செய்தால் போறும். பெண் வீட்டிலிருந்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், புஷ்பம், மாலை முதலியவை வாங்க வேண்டும். மாலையில் நாத்தனார் பூச்சூட்டல் நடக்கும். இது நாத்தனார் தன் சகோதரன் மனைவிக்கு செய்யும் வைபவம். பூச்சூட்டிய நாத்தனாருக்கு, பதில் மரியாதை, பெண்ணின் தாயாரோ, பிள்ளையின் தாயாரோ செய்யவேண்டும். சில குடும்பங்களில், மாலை அப்பம் கொழுக்கட்டை மடியில் கட்டுவார்கள். அப்பம், கொழுக்கட்டை தயாரித்து, மாமியார் நுனி இலையில் வைத்து, மாட்டுப் பெண்ணின் மடியில் "நான் சுட்டுத் தரேன், நீ பெத்துத் தாடியம்மா" என்று சொல்லிக் கட்டுவது வழக்கம். அந்தக் கட்டு அவிழாமல், அந்தப் பெண் எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டும் ! பிள்ளை வீட்டில், பெண்ணுக்கு சீர் செய்ததற்கு எதிர் சீர் செய்வது வழக்கம். மறு நாள் பிரசவத்துக்கு கூட்டிக்கொண்டு போவதானால் நாள் பார்க்க வேண்டாம். பிறந்த வீட்டுக்குக் கிளம்பும் பெண்ணுக்கு, மாமியார் மட்டைத் தேங்காயை தாம்பூலத்துடன் கொடுத்து, உருண்டு திரண்டு, பெத்துப் பிழச்சு வாடியம்மா என்று சொல்லி தலையில் வேப்பிலை சொருகி ஆசீர்வாதம் செய்வார்கள் ! அன்புடன் சித்ரா.
Oh my my!! Such nice pictures! Your pregnancy glow and the B&W pictures add more color and beauty to this thread. I pray to God that all the ILites who are yet to celebrate their Valaikappu and Seemantham get to enjoy it real soooooooon! Regards Vidya