1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Three Knives

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jul 29, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது.
    “இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”
    “அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.
    “என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.
    “நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான்.
    அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கண்ணன் முடிவு செய்தான்.
    “அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!” என்று கண்ணன் அழைத்தான்.
    “இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு!” என்றான்.
    சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டுச் சென்றனர்.
    மூதாட்டியின் வீட்டில் மூன்று கத்திகள்
    பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள்.
    “தாயே! நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?” என்று கேட்டான் கண்ணன்.
    “உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம்!” என்றாள் பிங்கலை .
    பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும், சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும், பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. “தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?” என்று கண்ணன் கேட்டான்.
    “என்னுடையவைதான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டும். அதன் பொருட்டுத்தான் இந்தப் பூஜை!”
    “யார் அந்த விரோதிகள் தாயே?”
    “குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும்தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!”. அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
    “அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?”
    “குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?”
    “பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?”
    “கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?”
    “அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?”
    “அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்துக் கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!”
    அர்ச்சுனன் முந்தானையால் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன்.
    “தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்”
    பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள்.
    அடுத்து கண்ணன் தொடர்ந்தான்.
    பாஞ்சாலியை மன்னித்த பாட்டி
    “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமேயானாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!” என்றார்.
    பிங்கலை இரண்டாவது கத்தியையும் கீழே வீசிவிட்டாள்.
    “போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும்!” என்றாள்.
    “சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,” என்றான் கண்ணன். அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
    கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”
    “நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ, மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு. கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்.” என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள்.
    பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.
    ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
     
    Thyagarajan likes this.
    Loading...

Share This Page