1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Summary Of Anitha Saravanan Novels

Discussion in 'Books & Authors in Regional Languages' started by storiesdetails, Dec 23, 2019.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில் – (அனிதா சரவணன்)
    புரிதல், தெரிதல், அறிதல், உணர்தல், அணுகுதல்… போன்றவற்றால் நெய்யப்படும் மென்மையான இழையின் உறுதியின் தன்மையிலேயே உறவுகளின் வலிமை மையம் கொண்டிருக்கிறது.

    அனுமானங்கள், முன்முடிவுகள், அகங்காரங்கள், சந்தேகங்கள், எதிர்பார்ப்புகள்.. போன்றவற்றினால் உருவாக்கப்படும் கத்தியின் கூர்மை.. அந்த மெல்லிய இழையின் மேல் எப்போதும் குறி வைத்துக் காத்திருக்கிறது.

    இவையிரண்டிற்குமான இடைவெளியில் ஆழ்ந்த மௌனம் ஒன்று எப்போதும் நிலைபெற்றிருக்கின்றது. இழையின் மென்மையும் கத்தியின் கூர்மையும் ஒன்றையொன்று தாக்கும் தருணங்களில் எல்லாம், அம்மௌனம் மேலும் அழுத்தம் கொள்கிறது. அதனாலேயே இரைச்சல் அதன் மொழியாகிறது..

    மௌனம்… சொற்களற்ற மொழி தான், ஆயினும் அது நிறைய நிறைய பேசும்.. வலிக்க செய்யும்.. இனிக்கச் செய்யும்... அலட்சியப்படுத்தும்… அவமானப்படுத்தும்.. அமைதிப்படுத்தும்… சலிப்படைய வைக்கும்.. கோபம் கொள்ள வைக்கும்… ஆறுதல்படுத்தும்… சில சமயம் வெறி பிடிக்கவும் வைக்கும். ஏனெனில், மனதினுள் புதைந்து கிடக்கும் உணர்வுகள் எண்ணற்றவை. அதன் தாக்கங்கள் அளவற்றவை.. அதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கொட்டித் தீர்க்கும் மொழி ஒன்று உண்டென்றால் அது மௌனத்தின் இரைச்சல் மட்டுமே..

    இத்தகைய ஆற்றல் மிக்க மௌனம் உருவாக்கும் வெற்றிடத்தில், கவனம் கொள்ளவில்லையானால், அது மனங்களுக்குள் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கி விடும்.

    நிற்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், இதையெல்லாம் உணர்ந்து கவனத்தில் வைத்துக் கொள்ள முடியுமா..? என்றால்… ஏன் முடியாது..? நிச்சயம் முடியும்… அதற்கு உங்களுக்கு கொஞ்சம் நேரமும் தேநீரை விரும்பும் மனமும் இருந்தால் போதும்.. எவ்வளவு பெரிய மௌனத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் உடைத்து விடலாம்.. என்ற நம்பிக்கையை விதைக்கும் கதைக்களம்..

    தேநீர் பிடிக்காதவர்கள் என்ன செய்வது என்று குதர்க்கமாக(என்னை) யோசிக்கக் கூடாது.. இங்கு தேநீர் என்பது குறியீடு.. நாம் சற்றுப் பரவலாக சிந்தித்து பார்த்தோமானால், எப்போதும் ஒரு சந்திப்பானது… அது எந்த உறவின் அடிப்படையிலானாலும், எந்த ஒரு நிகழ்வென்றாலும், அதன் நோக்கம் எதுவென்றாலும்… பெரும்பாலும் அங்கு தேநீர் கோப்பைகள் தான், உறவுப்பாலங்களாக பரிமாணம் கொள்கின்றன.

    நாம் தேநீர் பருகும் அந்த சில நொடிகள் அல்லது நிமிடங்கள்… நம் மனதின் உணர்வுகள் எல்லாம்… தேநீர் கோப்பையின் ஆவியைப் போலவே, காற்றில் கலந்து இலேசாகிறது. எவ்வித எதிர்மறையான எண்ணங்களும் நேர்மறையில் அடைக்கலமாகி விடும்.. அனுபவம் உறவினை அர்த்தப்படுத்தி விடும்..

    பார்க்கும் பார்வையில், செய்யும் செயல்களில், வாழும் முறையில்… என எல்லாவற்றிலும் நேரெதிர் குணங்கள் கொண்டிருக்கும் அருவியும் அஜயனும் திருமண பந்தத்திற்கு ஆட்படுகின்றனர். இருவருக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்திருந்தாலும் அவர்களை மீறிய ஒரு வகை உணர்வில் மண வாழ்க்கையில் இணைகின்றனர். அதற்கு பெற்றோர்களுக்காக என்ற சமாதானம் துணை செய்கிறது.

    மஞ்சள் கயிறு மேஜிக் அவர்களுக்குள்ளும் தனது வேலையை காண்பிக்கிறது.. என்றாலும், இயல்புகள் எதையும் மீறிய ஒன்று அல்லவா..? விருப்பங்கள், முன்னுரிமைகள், தனித்தன்மைகள்.. போன்றவையும் கொஞ்சம் ஈகோவும் இணைந்து கொண்டதில் அவரவர் இயல்புகள் வேகம் கொள்கின்றன. விளைவு சச்சரவுகள், வலிகள், பிரிவு…. பின்பு புரிதலுடன் கூடிய இணைவு….

    மோதல் – திருமணம் - காதல், பிரிவு – வலி - உறவு, என்ற வகையில் இது ஒரு வழக்கமான காதல் கதை தான்.. என்றாலும் வழக்கத்திலிருந்து, சற்றே விலக்கிப் பார்க்க வைக்கும், அதன் கதை கூறும் உத்தியில்...

    கதாபாத்திரங்களின் கட்டமைப்பு மிகக் கச்சிதம்.. குறிப்பாகக் கதையின் நாயகனும் நாயகியும், இக்காலத்தின் இளைஞர்களை பிரதிபலிக்கும் தனித்துவமிக்க வார்ப்புகள்.. எந்த இடத்திலும் சற்றும் பிசிறில்லாமல், அவர்களது இயல்புகள் மாறாமல் கொண்டு சென்ற நேர்த்தியில்…

    கல்லூரி வாழ்க்கையின் கலாட்டாக்களை, அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய விதத்தில்..

    இப்போது எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். (அப்படி இருக்கின்றோமா..? என்பது வேறு விசயம்) தன்னுடைய தனித்துவத்தை, சுதந்திரத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர, அதையே பிறருக்கு நாம் செய்கிறோமா..? என்று சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.. அதையும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொள்.. என்ற இலேசான சீண்டலில்..

    மதில் மேல் பூனையின் நிதானத்துடன், கதையின் தன்மை கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது.. உணர்வுகளின் ஆழம் அழுத்தவில்லை.. இன்னும் சற்று அழுத்தம் கூடியிருந்தால், ஒரு புலம்பலாகவோ அல்லது சலிப்பாகவோ தோற்றம் கொண்டிருக்க எல்லா வகையிலும் வாய்ப்பிருந்தும்… உணர்வுகளை மிக அழகாகக் கோர்த்த அதன் கச்சிதத்தில்…

    சமூக அவலங்களினூடாக வெளிப்படும் அக்கறை.. அதில் விரவியிருக்கும் அழகான நகைச்சுவையில்…

    எழுத்து நடை, வர்ணனை, காட்சிப்படுத்துதல், விவரணைகள், வார்த்தைப் பிரயோகங்கள், முந்தைய கதைகளை விட வெகுவான முன்னேற்றத்தில்…

    என அனைத்துத் தளங்களிலும் இக்கதை சிறந்து விளங்குகிறது…
     
    Loading...

  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பிளாட்டோனிய காதல்– (அனிதா சரவணன்)

    உங்கள் குழந்தைகள், உங்களுடையவர்கள் அல்லர்
    அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.
    அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
    உங்களிடமிருந்து அல்ல
    உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
    உங்களுக்கு உரியவர்களல்லர்.
    அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
    எண்ணங்களை அல்ல…

    என்று நீண்டு செல்லும் இவ்வரிகள் கலீல் ஜிப்ரானின் வரிகள். கட்டுரைகள், கதைகள், செய்தித் துணுக்குகள், நிகழ்வுகள் என்று எத்தனையோ வழிகளில், வெவ்வேறு விதங்களில் இவ்வரிகளின் அர்த்தங்களே நமக்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. நாம் அதனை கண்டும் காணாமல் கடந்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் உணர்ந்திருக்கிறோமா..? அல்லது அதைப் பற்றியதான புரிதலையேனும் கொண்டிருக்கிறோமா..? ஆம் எனில் எவ்வகையில்..? இல்லையெனில் அதன் காரணம்..? என்று கேள்விகளை எழுப்பினால், அதற்கு கிடைக்கும் விடை, ஒருவகை மௌனமே.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை என்று சொல்வார்கள். அந்தக் கலையை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதில் இருக்கிறது அவர்களின் வாழ்க்கை. எனில், எல்லோருடைய வாழ்வும் சிறப்பாக அமைந்து விடுகிறதா..? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆனால், இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கலை என்பதை விட, அது ஒரு சவால் என்பதே மிகப் பொருந்தும். அந்த அளவிற்கு குழந்தைகளின் உலகில் இன்று பலவகைச் சிக்கல்கள் சூழ்ந்து விட்டன.

    அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு, சுதந்திரம், அதிகாரம், கல்வி, தேவைகள், விருப்பங்கள், இலட்சியங்கள்.. போன்றவைகளும் அவைகளுக்கான அளவீடுகளும் என பலவித குழப்பங்களுக்கிடையே குழந்தைகள் – பெற்றோர்கள் இடையேயான உறவு எப்போதும் பதற்றமான ஒரு நிலையிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும் நாகரிகங்கள், அதனை பிரதிபலிக்கும் சமூகங்கள் என ஒரு சிடுக்கான வாழ்க்கைக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் அழுத்தங்கள் நமது வாழ்க்கையை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கிறது. அப்படிச் செல்லும் பட்சத்தில் அதனை நேர்மறையாகக் கையாளும் திறனே நமது இருப்பின் நிலையை தீர்மானிக்கிறது.

    குழந்தைகள் வளர்ப்பில் ஓரளவிற்கு ஒரு புரிதலுக்கு வந்து விட்ட பெற்றோர்களுக்கு, அவர்கள் பிள்ளைகளாகும் போது, அப்புரிதலில் ஒரு தடுமாற்றம் வந்து விடுகிறது. பிள்ளைகளின் பதின்பருவம் அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மிகுந்த குழப்பநிலையையே அளிக்கிறது.

    முந்தைய காலத்தைப் போலல்ல பிள்ளைகள். சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக தன் விருப்பமாக நடந்து கொள்ளவே முனைகிறார்கள். அதற்குத் தகுந்த அளவுத் தகுதியும் அவர்களுக்கு உண்டு. எனினும் அதனைக் கையாளுவதில் தான் தடுமாறிப் போகிறார்கள். அதனைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றது போல் நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டு, அவர்களை வழிநடத்துவது மட்டுமே நமது பணி. மாறாக, அப்போதும் நம் கைக்குள் வைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த முனைந்தாலோ விளைவுகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே முடிகிறது.

    பசிக்கு மீன் கொடுப்பது நல்ல செயல். எனினும் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது உன்னதமான செயல். என்பதைப் பரிந்துரைக்கும் கதைக்களமே.. அனிதா சரவணனின் “பிளாட்டோனிய காதல்”

    அமெரிக்க வாழ் தமிழ்க்குடும்பத்தின் தலைவி இந்திரா. கூடவே பள்ளியில் மாணவர்களின் ஆலோசகராகப் பணி. அவரது பதின்பருவ மகள் தமிரா. இவர்களுக்கிடையேயான உறவும், அதன் மூலம் கட்டமைக்கப்படும் உணர்வுகளும், அவர்களது வாழும் சமூக நிலையும், அது ஏற்படுத்தும் தாக்கங்களுமாக கதை முழுவதும் இருவரே பிரதான கதாபாத்திரங்கள். அப்பா விஜய், சகோதரன் இனேஷ், என மிகச்சிறிய குடும்பம்.

    தமிரா உயர்நிலை வகுப்பிற்கு செல்லும் நிலையில் கதை ஆரம்பிக்கிறது. பதின்பருவ சிக்கலும் கூடவே ஆரம்பிக்கிறது. பெருகி வரும் இணையதள நட்பு, தன் வீட்டின் தமிழ்க் கலாச்சாரம், தன் நாட்டின் அமெரிக்கக் கலாச்சாரம், தன்னைச் சுற்றியுள்ள சமூக நாகரிகங்கள், உடன் பயிலும் தோழர்களின் கருத்துக்களும் கொள்கைகளும், கூடவே அவர்களின் நடத்தைகள், தோரின் மீதான அவளது ஈர்ப்பு என எல்லாவற்றிலும் குழம்பினாலும், அதிலிருந்து தனக்கென ஒன்றை வடித்துக் கொண்டு தன் வாழ்வை முன்னெடுத்து செல்கிறாள். அதற்கு அம்மா இந்திராவின் அணுகுமுறை எவ்வாறு அவளை வழிநடத்திச் செல்கிறது என்பதைக் கதையாகக் கூறுவதோடு காட்சிகளாகவும் விரிக்கிறது.

    இந்திராவின் பாத்திர படைப்பு தற்கால அம்மாக்களை சித்தரிக்கிறது. அதுதான் காலத்தின் கட்டாயம். கண்டிப்பும் அரவணைப்பும் வழிநடத்துவதும் என எல்லாவற்றையும் ஒருங்கே செயல்படுத்துவது என்பது மிகக் கடினம். எனினும், இத்தகைய அம்மாக்கள் தான் தற்காலத்தின் தேவை, என்பதை பிரதிபலிக்கும் பாத்திரம்.

    தோரின் கதாபாத்திரமும் இன்றைய இளைஞர்களை சித்தரித்தாலும், கூடுதலாக பொறுப்புணர்ச்சியோடு சித்தரித்த விதமும் அழகு. அது ஒருவகையில் நமது எதிர்பார்ப்பும் கூட.

    இவர்களையெல்லாம் விட தமிராவின் படைப்பே விஞ்சி நிற்கிறது. அந்த அளவிற்கு அவளது கதாபாத்திரம் கனகச்சிதம். அந்த வயதில் அவளுக்குள் எழும் கேள்விகள், குழப்பங்கள், சிந்தனைகள், உரையாடல்கள், ஈர்ப்புகள், எதிர்ப்புகள் என பதின் பருவத்தின் உணர்வுகள் எல்லாம் துல்லியமாக ஆசிரியர் கையாண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக, எதிர்பாலின ஈர்ப்பு நிலையைக் கையாண்டிருக்கும் விதம் மிக நேர்த்தி.

    கதையின் களமான அமெரிக்காவின் பழக்கவழக்கங்கள், அடையாளங்கள், உணவு, விழாக்கள், மக்களோடு அவர்களின் உணர்வுகளும் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    சமூகத்தின் மீதான அக்கறை, இளைஞர்களின் மீதான நம்பிக்கை, குடும்பத்தின் அணுகுமுறை பற்றிய அவரது கண்ணோட்டங்கள் அவருக்கேயுரிய கேலியோடும், பரிகாசத்தோடும் கதை முழுவதும் பயணிக்கிறது. கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு பற்றிய குறிப்பில் மிஸ்டர் ஆந்தையார் என்று அழைப்பது அவரது நக்கலுக்கு ஒரு சிறு சான்று. அதற்குக் காதலும் முத்தமும் கூட விதிவிலக்காகவில்லை.

    கதையோடு பொருந்திப் போக வைக்கும் இயல்பான மொழிநடையில், சீரான வேகத்திலும் சுவாரஸ்யமாகவே செல்கிறது.
     
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    சிதறும் கணங்கள் – (அனிதா சரவணன்)
    துயரம் மாந்தர்களை அகநோக்கு உள்ளவர்களாக ஆக்குகிறது. பிறரிடம் நமக்கு உள்ள உறவை மிகத் தெளிவாகவும், மிகவும் உறுதியாகவும் புலப்படுத்தச் செய்வது துன்பம் – வி.ஸ.காண்டேகர்.

    வாழ்வு தருணங்களால் ஆனது விரல்விட்டு எண்ணக்கூடிய சில முக்கியமான தருணங்களில் தான், நம்மில் பலரது வாழ்வு ஒளி வீசிச் சிறக்கிறது – அஜயன் பாலா.

    அப்படித் தவறவிட்ட தருணங்களின் மகத்துவத்தை, அவர்களுக்கு நேரும் துயரங்களின் வழி உணரும் இருமனங்களின் வாழ்வியல் கதை.

    சாத்விகா… லாஸ் ஏஞ்சல்ஸின் பிரதான சாலையில் அதிவேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். பயணத்தில் ஆங்காங்கே தடைகள் ஏற்பட, அதன் காரணமாக, அவளுக்குள் எழும் நினைவலைகளின் மூலமே, கதை பயணிக்கிறது. சக்தியைக் காண வேண்டும் என்ற துடிப்பும் இணைய அவளது நினைவலைகள் தொடர்ந்து கொண்டிருந்தன..

    சக்தி.. சக்திவேல்.. சாத்விகாவின் கணவன். அவனுக்குக் காதல் திருமணமாகவும், அவளுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவும் இருந்த வாழ்வு, சில வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல், விவாகரத்தின் மூலம் அவர்களிடமிருந்து கழண்டு கொண்டது. மூன்று வருடங்கள் நீண்டிருந்த பிரிவின் காலங்களுக்குத் தடையாக அவனது விபத்துச் செய்தி அவளை அடைய, அவனைக் காண விரைந்து கொண்டிருக்கும் வேளையில் பழங்கணக்கும் பார்க்கலானாள்..

    இருவேறு பழக்கவழக்கங்கள், பார்வைகள், குணங்கள், சூழல்கள் என்று பலதரப்பட்ட வித்தியாசங்கள் கொண்டிருந்தவர்களை திருமண பந்தம் இணைத்திருந்தாலும் கூட, அவரவர் சுயமும், எதிர்பார்ப்புகளும், எண்ணங்களும், கொஞ்சமே கொஞ்சம் வீம்பும் அவர்களை தள்ளி தள்ளியே நிறுத்தியிருக்கிறது, என்பதை அவள் காலதாமதமாகவே உணர்ந்து கொள்கிறாள்.. பயணம் முழுவதும் இதே வகையிலான கேள்விகளும் குழப்பங்களும், தெளிவுகளும் அவளை மூழ்கடிக்க… பயணத்தின் முடிவில் சக்தி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்து சேர்கிறாள்.

    அங்கு மருத்துவமனையில் இருக்கும் சக்தியோ, அவளைப் போலவே பலவற்றையும் நினைத்து மருகியவனாக இறுதியில் ஒரு முடிவை எடுக்கிறான். சாத்விகாவைக் காண வேண்டும் என்ற தவிப்புடனும், அவளிடம் தன் காதலைக் கூறி அவளுடன் தன் வாழ்வை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புடனும், நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறான்.

    இருவரும் சந்தித்துக் கொண்ட தருணத்தில் அவனது உள்ளத்தை அவளிடம் வெளிப்படுத்த, அவளது மனம் அவனிடம் நம்பிக்கைக் கொள்ள மறுக்கிறது. அவள் சிந்திக்க அவகாசம் எடுத்துக் கொள்கிறாள். ஆயினும், நாளடைவில் இருவரும் இணைந்து இல்வாழ்வில் சிறக்கின்றனர்.

    நல்ல எழுத்து நடை… விவாகரத்துகள் பெருகி விட்ட இன்றைய காலக்கட்டத்தின் ஆண்-பெண் மனங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கதைக் களம்.

    அவரவர் நியாயங்கள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்களைக் கூறும், அதே நேரத்தில், எதிர்த்தரப்பின் மீதும் விமர்சனங்களை விலாவாரியாக வைக்கிறார், ஆசிரியர்.

    இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் முறைகளைக் கூறி வரும் பொழுதே, அதனூடாக முந்தைய தலைமுறையின் வாழ்வியல் கோட்பாடுகளையும், சமூகப்பழக்கங்களையும் விமர்சனங்களுக்கு உட்படுத்துகிறார். அதில் சற்றே எள்ளல் தொனிக்கிறது.

    ஒரே நிகழ்வின் இருவேறு பரிமாணங்கள், கோணங்கள், அர்த்தங்கள் என்ற பார்வையில் விரியும் கதைக்களம் பின் பாதியில் கொஞ்சமே கொஞ்சம் சலிப்பின் கோட்டைத் தொடுகிறது.(எனக்கு) அது இருதரப்பு மனநிலையையும் உணர்த்துவதற்காக என்றாலும் கூட, அவ்வுணர்வை தவிர்க்க முடியவில்லை.

    கதை முழுவதும் ஆங்காங்கே வரும் காதல், திருமணம், உறவுகள் பற்றிய கேள்விகள், உளவியல் பார்வையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் கோர்கிறது.

    ஒவ்வொரு உறவுக்கு இடையிலும் ஒரு சுதந்திரம் இருத்தல் நலம். ஆனால், அது உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு என்ற அளவில் பரந்துபட்ட சுதந்திரமாக இருத்தல் கூடாது. மாறாக, நம் பாதை எது என்ற தேடலில் இருக்கிறது அந்த சுதந்திரத்தின் வெற்றி.. என்பதை உணர்த்தும் வகையில் இக்கதை சிறக்கிறது.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இமயா – (அனிதா சரவணன்)
    மலர்ந்த பூ மீண்டும் மொட்டாவதில்லை. பூவின் விசயம் அப்படி இருக்கலாம். ஆனால், மாந்தரின் மனம் பூவைப் போன்றதல்ல. அது மரத்தைப் போன்றது. பனிக்காலத்தில் மரம் பட்டுவிட்டாற் போல தென்பட்டாலும், வசந்த காலத்தில், அதில் புதுத்தளிர் விடுகிறதே..! அது போன்றது வாழ்க்கை.. – வி.ஸ.கண்டேகர்.

    அப்படிப் பட்டுப்போனதாக வெற்று வெளியில் சஞ்சரிக்கும் மனதில்.. காலமும் நேரமும் இணைந்து வசந்த காலத்தை உருவாக்குகின்ற.. கதைக்களம்…

    இமயா… மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புற வங்கி ஒன்றில் பணியில் இருக்கிறாள். அவளது பெற்றோரும் அவளுடன் வசிக்கின்றனர். மூத்தப் பெண் ஷிவானிக்கு திருமணம் முடிந்து தமிழ்நாட்டில் வசிக்க.. எஞ்சியுள்ள தனது அடுத்த கடமையான இமயாவின் திருமணத்தை முடித்து விட, அவளது பெற்றோர் நினைக்க… அவளும் பிடிகொடுக்காமல் நழுவுகிறாள். முடிவாக அவர்களது நச்சரிப்பு பொறுக்காமல் சம்மதித்து விட… அவர்கள் அவளுக்காகத் தேர்ந்தெடுப்பது விமல் என்பவனை…

    விமல்… இமயாவுடன் அதே வங்கியில் பணிபுரிபவன். அவளைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்தவன். இருவருக்கும் சற்று அளவளாவிக் கொள்ளும் அளவிற்கு நட்பும் இருந்தது.. இந்தக் காரணங்களால் அவன் அவளது பெற்றோர்களின் விருப்பமாகி விட.. வேறு வழியில்லாமல் அவர்களது விருப்பத்திற்கு சம்மதிக்கிறாள் இமயா.

    ஆனால், அவள் மனமோ வெற்றிடத்தின் வசிப்பிடமாகவே இருக்கிறது. ஏனெனில், அவளது கடந்து சென்ற காலமும்… அவள் கடந்து வந்த காதலும்… அவளைக் கடந்து சென்ற ஒருவனும்.. என எல்லாமாக இணைந்து கொண்டதில், காலம் அவளுக்கு அவ்வெற்றிடத்தை பரிசளித்துச் சென்றிருந்தது… அதன் காரணமானவன் குகன்..

    குகன்… அவளது சிறுவயது தோழன்.. பதின் வயது பங்குதாரன்… இளவயதின் இணையாளன்… இறுதி வரை உடன் வருவான் என ஆயிரமாயிரம் உணர்வுகளால் உருவான கற்பனைக் கோட்டைகளை, மனதிற்குள்ளேயே கட்டி முடிப்பதற்குள்ளாகவே அது சரிந்து மண் மேடாகி விட்டதில்.. இமயாவின் மனது எதிலும் பற்றுக் கொள்ளாமல் பட்டுப் போனது.. அதிலிருந்து அவளைக் காத்து விட எண்ணி, பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விமலாலும் முடியவில்லை. ஆனால், அது ஆதிரையனால் முடிந்தது...

    ஆதிரையன்… அவள் பணிபுரியும் வங்கிக் கிளையின் மேலாளர் ஷீலா திவாகரனின் மகன். பப்ளிக் ரிலேஷன் ஆஃபிஸர். இமயாவிடம் காதல் கொண்டு, அவளிடம் அதனைப் பகிர்கிறான். அப்போதும் அவள் இளகிவிடவில்லை. ஆனாலும், ஆதியின் அணுகுமுறை… இமயாவின் மனதை அவனுடன் நட்பாக இணைக்கிறது.. பின், நாளடைவில் அந்நட்பே அவளது மனதில் காதலாக இழைய… பட்டுப்போன மனதில் காதல் பூக்கள் பற்றுக் கொள்ள, வெறுமையான உணர்வுகளில் எல்லாம் ஆதியின் காதல்… நீட்சி கொள்கிறது…
     
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பாதையின் வழியே – (அனிதா சரவணன்)
    நிற்பதற்கு உறுதியான ஒரு இடம் தாருங்கள். இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்… என்ற அறிஞனின் வரிகள், நம் ஒவ்வொருவருக்கும், நிலையான இடம் எவ்வளவு அவசியம் என்பதையே உணர்த்துகிறது.

    இந்த உலகில் உள்ள அனைத்தும்… ஓரறிவுள்ள புல், பூண்டு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை.. தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள தினம் தினம் போராடும் நிலையில் இருக்கிறது காலம். இந்நிலையில், அதை எப்படி, எந்த வழியில், எந்த முறையில் அணுகுவது என்பது தெரியாத நிலை.

    இவையெல்லாவற்றையும் கடந்து, நேர்மையான முறையில், ஒரு இடத்தில் நிலைத்து நிற்பது, என்பது எவ்வளவு சவாலான காரியமாக இருக்கிறது.. என்பதைக் கூறும் யதார்த்தம்.

    கனவுகள். பார்வையற்றவனையும் காண வைக்கும் கனவுகள். நிலையற்ற வாழ்க்கை எனத் தெரிந்தாலும்.. நிஜமாகுமா என்று சந்தேகம் கொண்டாலும்.. உறக்கத்திலும், விழிப்பிலும் மனிதன் கனவுகளோடே வாழ்கிறான். அதுவும் பெற்றோரின் கனவுகள் என்றும் குறைந்ததில்லை. ஆனால், அவர்களின் கனவுகள் நிஜமாகும் தருணம்… காலத்தின் கோலத்தால் வெறும் துயர நினைவுகளாக மனதில் தங்கி விடும் துயரமும் நிதர்சனம்.. என்பதையும் தன் போக்கில் உணர்த்தி செல்கிறது.
     

Share This Page