Sri Suktham Slokam & History - ஸ்ரீ ஸுக்தம் & வரலாறு

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Thyagarajan, Oct 11, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: ஸ்ரீ ஸுக்தம் & வரலாறு :hello:
    நவராத்திரி 2021 – 06
    திருமகள்
    ஸ்ரீ ஸுக்தம் – தமிழ்த் தழுவல்
    (வேதத்தில் வருகின்ற மிக முக்கியமானதும், இனிமையானதுமான மந்திரங்களில் ஸ்ரீ ஸுக்தமும் ஒன்று. திருமகளின் அருளைப் பெற்றுத் தருமாறு அக்கினியை வேண்டுவதாகத்தான் இதில் பெரும்பாலான மந்திரங்கள் இருக்கின்றன.
    எதற்காக அக்கினி வேண்டப்படுகிறான்? அக்கினிக்கு மஹா தூதன் என்று பெயர். இந்தப் படைப்பில் பல்வேறு உலகங்கள் உள்ளன. அதில் பல்வேறு உலகங்களிலும் மனத்தால் கூட நுழைய முடியாது. இந்த உலகங்கள் பற்றிய விவரங்கள் ‘பிரம்மாண்ட புராணம்’ என்னும் பழைய நூலில் காணப்படுகின்றன. அவற்றை என் குருநாதர் சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்கள், ‘ The Structure of the Universe’ என்னும் அருமையான ஆங்கில நூலில் விவரித்திருக்கிறார்.
    அக்கினியால் மட்டுமே எந்த உலகத்திற்கும் சென்றுவர முடியும். அக்கினியே நம்முடைய பிரார்த்தனைகளை ஏந்திக்கொண்டு, செல்லவேண்டிய இடங்களுக்குச் சென்று, பெறவேண்டிய ஆசிகளைப் பெற்றுக்கொண்டு நம்மிடம் கொண்டு தருகிறான்.
    ஸ்ரீ ஸுக்தம், ‘வாக்’ என்னும் பெண்முனிவர் மூலம் வெளிப்பட்டது என்பார்கள்.
    மேலோட்டமாகப் பார்த்தால், இது கோரிக்கைகள் நிறைந்த ஒரு பிரார்த்தனை போலத் தென்படுகிறது. திருமகளின் அருளை வேண்டிப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, ஒரு கட்டத்தில் தானே இலக்குமியாகி, ‘நான் என் வீட்டிலிருந்து உனக்கு மூத்தவளானவளை விலக்குவேன்!’ என்று ஆவிர்ப்பு வந்தவள் போலச் சொல்கிறார். அடுத்த மந்திரத்தில் ஒரு பக்தையாக வேண்டுகிறார்! ஆச்சரியம் பெண்ணின் சக்தி!
    பிரார்த்தனை, கோரிக்கை இவற்றைத் தாண்டி, இது முழுக்க முழுக்க ஆழ்ந்த யோக அனுபவத்தைச் சொல்கிறது. மீண்டும் மீண்டும் இதில் பொன்வண்ணமும், தாமரையும் வருகின்றன. அது நம் இதயக் கமலமாகிய அனாஹதத்தைத்தான் குறிக்கிறது. பொன்னாலான தாழ்வாரமாகத்தான் அங்கே தென்படுகிறது.
    இதில்வரும் குதிரைகள் சுவாச நெறியையும், தேர்கள், ஒவ்வொரு சக்கரமாகச் செல்வதையும் குறிக்கின்றன. ஒரு யானைப் பிளிறல் இங்கே சொல்லப்படுகிறது. அது என்ன? யோகத்தில் அமர்ந்து, அனாஹதத்தில் நுழையும்போது, அந்தரங்கத்தில் ஓர் யானைப் பிளிறல் கேட்குமாம். உள்ளே கேட்கும் அந்த ஒலியில் காது செவிடாகிப் போன கதைகளும் உண்டு. பின்னர் கேட்கும் திறன் மீளுமாம். ஆனால், முக்கியம் என்னவென்றால், அந்தப் பிளிறலால் கர்மவினை அறவே தகர்க்கப்படுமாம்.
    அந்த யானைப் பிளிறலுக்குப் பிறகே அந்தத் தங்கமகள் தென்படுகிறாள்!
    இப்படி எத்தனையோ நுண்மைகள் கொண்ட ஸ்ரீ ஸுக்தத்தைப் பற்றி என் குருநாதர் என்னிடம் விளக்கியதுண்டு. இதை எளிமையாகத் தமிழாக்கம் செய்வேனென்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. இந்த நவராத்திரியில் இதுவும் நடந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.)
    எங்கெங்கும் தூதுவனாய் ஏறியிறங் கும்தீயே
    தங்கமய மாகத் தகதகக்கும் தேவியை
    வெள்ளிப்பொன் மாலை விதம்விதமாய்த் தான்சூடி
    வெள்ளிநில வாக நெகிழ்ந்து சிரிப்பவளை
    பார்வையின் ஓரத்தே பாவம் தகர்ப்பவளை
    ஆர்மனமும் கூவும் அலைமகளாய் வீற்றவளை
    பொன்னே உருவாகப் பூத்த பொலிவழகை
    என்னுள் எழுந்தருளச் செய்திடுவாய் அக்கினியே! (1)
    யார்மூலம் செல்வமெல்லாம் நானும் பெறுவேனோ
    பார்கவியை என்றுமென் பக்கத் திருக்கவிடு
    சற்றும் விலகாமல் சார்ந்திருக்கச் செய்துவிடு
    எற்றைக்கும் என் தேவி என்னோ டிருக்க! (2)
    பரிகளோ துள்ள ரதங்கள் பறக்கக்
    கரிகள் பிளிறக் ககனமகள் பின்வந்தாள்
    என்மனம்நின் றாளும் திருமகளே வந்துவிடு
    என்னுள்ளே நீமகிழ்வாய் எப்போதும் தங்கிவிடு (3)
    புன்னகையே உன்வடிவம் பொன்மயமே உன்னில்லம்
    என்றும் கருணையே நின்னியல்பே பொன்விழியே!
    நீயே நிறைவு! நினைத்துதிப்பார் யாவர்க்கும்
    நீயே நிறைவை மிகமகிழ்வாய்ப் பெய்திடுவாய்
    வண்ணக் கமலத்துள் வண்ணக் கமலத்தோய்!
    எண்ணற் கினிய திருவே இறைஞ்சுகின்றேன் (4)
    நெஞ்சில் குளிரும் நிலவாய், ஒளிசிதறிக்
    கஞ்ச மலரேந்திக் கஞ்சமலர் வீற்றவளாய்
    தேவர் வணங்கிடும் தீயாய், மிகநெகிழ்ந்தே
    ஆவலுடன் வந்தே அருள்பவளாய், ஈமென்னும்
    நுண்ணொலியின் உள்ளிலங்கும் பெண்ணே! மனக்கினியோய்!
    ஒண்பதம் வீழ்ந்தே ஒடுங்கியுனை வேண்டுகிறேன்
    என்வறுமை ஏதெனினும் இன்றே விலகட்டும்
    பொன்னேயென் நெஞ்சிலுன்றன் பூமுகமே மேவட்டும் (5)
    பானுவின் பொன்னிறத்தோய்! பாவாய்நீ செய்தவத்தால்
    கானகத்து மன்னன் கனகவில்வம் தோன்றி
    மரங்களெல்லாம் தீங்கனிகள் மண்டின! ஞானம்
    தரும்பழத்தைத் தந்தெம் அறியாமை நீக்காய்!
    அறியாமை நீக்கி அமங்கலங்கள் போக்கிச்
    செறிவும் தெளிவும் செழித்திடச் செய்திடுவாய் (6)
    செல்வக் குபேரனும் கீர்த்தியின் தேவனும், என்
    இல்லம் விரும்பி இனிதே வரச்செய்க!
    நின்னருள் வீசுமிந்தப் பொன்னாட்டில் நான்பிறந்தேன்
    நின்கருணை யாலெனக்குச் செல்வமெலாம் நல்கிடுக! (7)
    “செல்வத் திருந்து விலகிய தவ்வையை
    இல்லத் திருந்துநான் நின்று விலக்குகிறேன்”
    ஏழ்மை பசிதாகம் எல்லாம் விலக்கியில்லம்
    வாழ்வகை செய்தருள்வாய் வண்ணத் திருமகளே! (
    நல்ல மணமுடையாய்! நல்லினிமை மிக்குடையாய்!
    எல்லாம் நிறைந்தவள் நீ! வெல்லமுடி யாதவள் நீ!
    எவ்வுயிர்க்கும் நீ தலைவி! இன்பத் திருமகளே!
    இவ்வுயிர்க்கு முள்ளே இனிதிருக்க வேண்டுகிறேன்! (9)
    என்விருப்பம் என்னெண்ணம் என்றும் அறநெறியில்
    நின்றுநிறை வேறியுண்மை நீளட்டும் என்னாவில்
    நன்னெறியால் சோறுண்டு நல்லின்பம் ஓங்கட்டும்
    மன்னுலகில் நற்புகழே மண்டியெனைச் சேரட்டும் (10)
    கர்த்தம! நீ பெற்ற கமலமகள், தன்னருளால்
    உத்தம னாக்கியென்னுள் ஓங்கி வளரவேண்டும்!
    தாமரைத்தார் சூடும் தலைவியென் தாயவள்!
    ஆமென் குலத்தில் அமர்ந்தவள் காக்கவேண்டும்! (11)
    செய்யாள் திருமகனாம் சிக்லீத மாமுனியே!
    உய்வுதரும் தண்ணீர் உணவைப் பெருக்கட்டும்!
    இல்லத்தில் நீங்கள் இருக்கவேண்டும்! உம்மன்னை
    வல்லவள் எம்குலத்தில் வாழவேண்டும் என்னாளும்! (12)
    தாமரை மண்டும் தடாகத்தில் வாழ்பவள்
    ஆமனை வர்க்கும் அமுதூட்டிக் காப்பவள்
    குங்குமவண் ணத்தாள் குளிர்க்கமலத் தண்கழுத்தாள்
    பொங்கும் முழுமதியைப் போன்றவோர் பொன்னாள்!
    கருணை மிகுந்தவளை, தங்கமனம் கொண்ட
    திருமகளை, அக்கினியே! நீசொல்லிக் கூட்டிவா
    என்னில் அவளை எழுந்தருளச் செய்திடுவாய்
    பொன்னியை என்னுள் பொருந்திடச் சொல்வாய் (13)
    கருணை நிரம்பியவள் காரியத்தில் தேர்ந்தாள்
    தருமத்தைத் தான் நிறுவத் தங்கக்கோல் ஏந்தினாள்
    பொன்னுருகி ஓடும் பொலிவு நிறத்தழகி
    பொன்மாலை சூடிப் புதுக்கதிர்போல் தானொளிர்வாள்
    பொன்னேங்கும் பொன்னாய்ப் புடைத்த திருமகளை
    என்னெஞ்சில் வந்தே எழுந்தருள்வச் செய் தீயே! (14)
    எண்ணற்ற பொன்னையும் ஏவலுக்குச் சேவகரும்
    கண்ணுக் கினிய கறக்கும் பசுக்களும்
    யாராலே நானடைவேன்? அந்தத் திருமகளைப்
    பேர்சொல்லிக் கூட்டிவா பேராற்றல் அக்கினியே!
    என்னையவள் சற்றும் விலகாமல், தேவியெனும்
    பொன்னவளை என்னுள் பொருந்தியிருக் கச்செய்வாய் (15)
    யாவும் அறிந்தவனே அக்கினியே! தேவியென்னுள்
    மேவிக் களிக்கவே செய்.
     
    joylokhi and vidhyalakshmid like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I chanced upon the above near perfect translation from my colleague whose brother is the author of the text above. He is bringing out the essence of lyrics of kannadasan *who when turned theist translated into Tamil Sri Adhi Sankara’s KANAGADARA sthothram. One can google and find out.

    *
     

Share This Page