1. What Movie Did You Watch Today? : Post Here
  Dismiss Notice

Pombala Sivaji!!! - Actress Manorama Interview (Thanks Vikatan)

Discussion in 'Movies' started by Keet, Mar 19, 2015.

 1. Keet

  Keet Silver IL'ite

  Messages:
  199
  Likes Received:
  198
  Trophy Points:
  93
  Gender:
  Female
  எப்படி இருக்கீங்க ஆச்சி? டி.அருள் எழிலன், எம்.குணா படங்கள்: கே.ராஜசேகரன்'ஆச்சி’..!
  தலைமுறைகளின் சாட்சியாக உலாவரும் மனோரமா, இன்று தன் இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக வீட்டைவிட்டே வெளியே வராதவரைப் பற்றிய வதந்தி மட்டும் மாநிலம் முழுக்கப் பரவுகிறது.
  ''வாழ்க்கையில எல்லா இன்ப துன்பங்களையும் பார்த்துட்டேன். அதுல, 'நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்’னு நானே சொல்ற கொடுப்பினையும் எனக்குக் கிடைச்சிருச்சு. இதுக்கு மேல என்ன இருக்கு தம்பி?'' - விரக்தியைக்கூட அத்தனை வாஞ்சை நிரம்பிய குரலில்தான் சொல்கிறார் ஆச்சி.
  ''என்ன பேசணும் என்கிட்ட..? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே தம்பி! நான் என்னனு பேசுறது?'' - கைகளைப் பிசைந்தபடி யோசிப்பவர், ஆழ்ந்த அமைதிக்குச் செல்கிறார். திடுக் திடுக்கெனத் தூக்கிப்போட்டதுபோல, நினைவுகளைச் சேகரித்துப் பேசுகிறார்.
  [​IMG]
  ''அப்போ தினமும் ஷூட்டிங் இருக்கும். அதிகாலையிலயே எந்திரிச்சு, குளிச்சு முருகனைக் கும்பிட்டுக் கிளம்பிருவேன். விடியக்காலையில போய் விடிய விடிய நடிச்சிருக்கேன். களைச்சுப்போய் வந்தா, வீட்லயும் அவ்வளவு வேலை இருக்கும். இப்போ காலையில எந்திரிச்சா, கொஞ்சம் ஓட்ஸ் குடிக்கிறேன். அப்புறம் மதியம் வரை பொழுது போக்கணும். மதியச் சாப்பாடு கொஞ்சம் சாதம். தூங்கி எந்திரிச்சா சாயங்காலம் ஆகிடும். பல்லைக் கடிச்சுட்டே உக்கார்ந்திருந்தா, ராத்திரி டிபன் வந்துரும். நடு நடுவுல மருந்து மாத்திரை. எதையோ பிடிக்கப்போறதா நினைச்சு ஓடிட்டே இருந்த என்னோட வாழ்க்கை, இப்போ பத்து பதினைஞ்சு மாத்திரையில சுருங்கிருச்சு.''
  முதல் பாராட்டு!
  ''பள்ளிக்கூடம் போறப்பவே நான் நல்லா பாடுவேன். செட்டிநாடு பகுதிகள்ல நாடகம் போடுறப்ப ஆண்கள்தான் பெண் வேஷம் கட்டி ஆடுவாங்க; நடிப்பாங்க. மேடைக்குப் பின்னால இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் மட்டும்தான் பெண்களைப் பயன்படுத்துவாங்க. அப்போ எனக்கு 15 வயசு இருக்கும். 'அந்தமான் கைதி’னு ஒரு நாடகத்துல மேடைக்குப் பின்னாடி இருந்து நான் பாடினேன். 'நல்லா பாடுதே இந்தப் பொண்ணு’னு எல்லாரும் சொல்லவும் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்படியே மேடை ஏறி நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 'யார் மகன்?’னு ஒரு நாடகத்துல நான் ஹீரோயினா அறிமுகம் ஆனேன். அந்த நாடகத்துக்குத் தலைமை, இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். நாடகத்தில் என்கூட நடிச்ச ஒரு நடிகைக்கு, எஸ்.பாலசந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்னார் ஒருவர். அப்போ அவர் சொன்னார்... 'நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இதில் ஹீரோயினாக நடித்த பெண்ணுக்குத்தான் கொடுப்பேன்’னு சொல்லி என்னை வெளிப்படையாப் பாராட்டினார். அந்த முதல் பாராட்டுத்தான் என் சினிமா பயணத்துக்கான ஆரம்பம்.''
  [​IMG]
  முதல் புகைப்படம்! ''ஆரம்பத்தில் ஒரு நாடகத்துக்கு 10 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அது 40 ரூபாயாக உயர்ந்த சமயம், புதுக்கோட்டையில் பி.ஏ.குமார்னு ஒருத்தர் ஒரு திரைப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அவரே இயக்குநர். எஸ்.எஸ்.ராஜேந்திரன் அண்ணன், தேவிகா, நான்... எல்லாரும் படத்துல நடிக்கிறதுக்காக அவரோட வீட்ல தங்கியிருந்து ரிகர்சல் பார்த்துட்டு இருந்தோம். அப்போ 15 வயசுல எனக்கு மேக்கப் போட்டு அவர் எடுத்ததுதான் என் முதல் புகைப்படம். அந்தப் படத்தை அப்புறம் பார்க்கிறப்ப எல்லாம் எனக்கே பொறாமையா இருக்கும். குமார் வீட்டு மாடியில இருந்த குடிசை திடீர்னு எரிஞ்சிருச்சு. அதை அவர் அபசகுனமா நினைச்சார்போல, 'நான் சினிமாவே எடுக்கலை. நீங்கள் எல்லாம் கிளம்புங்க’னு அனுப்பி வெச்சுட்டார். அப்போ 15 வயசுல எனக்குப் பழக்கமான எஸ்.எஸ்.ராஜேந்திரன் அண்ணன்தான், சில வருஷம் கழிச்சு என்னை சென்னைக்கு வரவெச்சு கலைஞர் எழுதிய 'மணிமகுடம்’ நாடகத்தில் ஹீரோயினா நடிக்கவெச்சார்.''
  நகைச்சுவை நடிகையாக மாற்றிய கண்ணதாசன்!
  ''சென்னைக்கு நான் கிளம்புறப்பவே எனக்கு பூபதி பிறந்துட்டான். அவனையும் கைப்பிள்ளையா தூக்கிட்டு வந்துதான் நான் நாடகத்தில் நடிச்சேன். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. எஸ்.எஸ்.ஆர் அண்ணன்தான் அவரது வீட்டு மாடியில் தங்கவெச்சார். 'மணிமகுடம்’ நாடகத்தை சென்னை, சேலம், வேலூர், குடியாத்தம் போன்ற ஊர்கள்ல மாசக்கணக்கில் நடத்தினோம்.
  பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. பேரறிஞர் அண்ணாவுக்கு ஜோடியா நடிச்சேன்; 'உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியா நடிச்சேன். 'மணிமகுடம்’ நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்துட்டு, கவிஞர் கண்ணதாசன் 'மாலையிட்டமங்கை’ படத்தில் என்னை நடிக்கச் சொன்னார். ஆனா, அது ஹீரோயின் பாத்திரம் இல்லை... காமெடி ரோல். 'எனக்கு நகைச்சுவையா நடிக்கத் தெரியாது. நான் இதுவரை நாடகத்தில் ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன்’னு சொன்னேன். அப்போ கண்ணதாசன், 'நீ சினிமாவுல ஹீரோயினா நடிச்சா ரெண்டு, மூணு வருஷம்தான் ஃபீல்டில் இருக்க முடியும். ஆனா, காமெடி நடிகையா நடிச்சா, ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருக்கலாம்’னு சொன்னார். நான் சமாதானமாகி நடிச்சேன். இப்போ யோசிச்சா அவர் சொன்னது நூத்துக்கு நூறு சரினு தோணுது.
  கடவுள் புண்ணியத்துல சினிமாவில் நல்லா சம்பாதிச்சேன். ஆரம்பத்துல ஆயிரம், ரெண்டாயிரம்னுதான் சம்பளம் கொடுத்தாங்க. முதன்முதலா தேவர் ஃபிலிம்ஸ்காரங்கதான் 'வேட்டைக்காரன்’ படத்துக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்போ அது ரொம்பப் பெரிய சம்பளம். சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச சில வருஷங்களிலேயே, ஜானகிராம் தெருவில் 22 ஆயிரம் ரூபாய்க்கு மூணு கிரவுண்டு நிலத்துல ஒரு வீட்டை வாங்கினேன். சினிமாவில் நான் நடிக்கவும் அவ்வளவு சம்பாதிக்கவும் காரணமா இருந்தது அண்ணன் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். அண்ணன் இறந்தது, என் கூடப்பிறந்த அண்ணனையே இழந்துட்டது மாதிரி இருக்கு!''
  [​IMG]
  கல்யாணம் எனும் கசப்பு!
  ''என்கூட நாடகங்களில் வில்லனாக நடிச்சவர் எஸ்.எம்.ராமநாதன். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை நான் காதல்னு நம்பினேன். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெச்சு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்காகச் சாட்சிக் கையெழுத்துப் போட்டது நான் அண்ணனா நினைச்ச சக நடிகர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அப்புறம் நான் கர்ப்பமாகி ஒன்பது மாதம் வரைக்கும் நாடகத்தில் நடிச்சுட்டு, பிள்ளை பெத்துக்க என் சொந்த ஊரான பள்ளத்தூருக்கு வந்துட்டேன்.
  குழந்தை பிறந்து 16-வது நாள் என்னை வந்து பார்த்தார் என் கணவர். அதுக்கு அப்புறம் அவர் என்னைப் பார்க்கவே இல்லை. என்னையும் பிள்ளையையும் காப்பாத்திக்க நான் சென்னை வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச சமயம், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். என் திருமண வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். அப்புறம் அவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவரோட ரெண்டாவது சம்சாரம் யார் தெரியுமா? எங்க கல்யாணத்துல எனக்காகச் சாட்சிக் கையெழுத்து போட்டாரே எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி... அவரோட தங்கச்சி. நானும் எல்லாத்தையும் மறந்துட்டு அம்மாவை மட்டும் துணைக்கு வெச்சுட்டு வாழப் பழகிட்டேன்.
  நடிப்பு, நடிப்பு, நடிப்புன்னே ஓடிட்டு இருந்தேன். என் கணவர் இறந்த தகவல் கிடைச்சப்போ, நானும் பூபதியும் கிளம்பினோம். அப்போ என் அம்மா, 'அந்த ஆளோட என்ன பெருசா வாழ்ந்து கிழிச்ச... இப்போ எதுக்குப் பார்க்கப்போற?’னு கேட்டாங்க. ஆனா, எனக்கு மனசு கேட்கலை. நான் போனேன். பூபதியை அவர் வளர்க்கவும் இல்லை; படிக்கவும் வைக்கலை. அவரோட ரெண்டாவது சம்சாரத்துக்குக் குழந்தையே கிடையாது. அவருக்கு பூபதிதான் கொள்ளி போட்டான். அவருக்குக் கொள்ளிபோட ஒரு மகனைப் பெத்துக் கொடுத்தேன். அதுதான் எனக்கும் என் புருஷனுக்குமான ஒரே பந்தம்.''
  என் அம்மா!

  ''என் அப்பா, என் அம்மாவின் தங்கச்சியையும் கட்டிக்கிட்டார். அப்பாவும் சின்னம்மாவும் சேர்ந்து என் அம்மாவைத் துரத்திவிட்டுட்டாங்க. நான் பத்து மாசக் குழந்தையா இருந்தப்போ, என் அம்மா ராமாமிர்தம் என்னைத் தூக்கிட்டு பள்ளத்தூருக்கு வந்துட்டாங்க. வீட்டு வேலை செஞ்சு என்னைப் படிக்கவெச்சாங்க. ஒரு கட்டத்துல அவங்களுக்கு உடம்பு முடியாமப்போச்சு. இல்லைன்னா என்னை இன்னும் நல்லா படிக்கவெச்சிருப்பாங்க. அம்மா கடைசி வரை என் கூடவேதான் இருந்தாங்க.
  ஒருநாள் நான் அதிகாலையில் ஷூட்டிங் கிளம்பும்போது அம்மா இறந்துட்டாங்க. 'இனிமே என்ன பண்ணப்போறோம்?’னு நான் திக்பிரமை பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டேன். அம்மா இறந்த தகவல் தெரியவும் சிவாஜி அண்ணன் உடனே கிளம்பிவந்துட்டார். அவருக்கு என்னைப் பத்தி, என் குடும்ப வாழ்க்கை பத்தி எல்லாமே நல்லா தெரியும். 'இங்க பாரும்மா... நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டுப் போய் ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்தார். தலைப்பாகை கட்டிக்கிட்டு என் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனா, எனக்கு அண்ணனா நின்னு எல்லா காரியங்களையும் செஞ்சார். அந்தவகையில் எங்க அம்மாவுக்கு அது நல்ல சாவு.''
  உடல் நலம்!
  ''கொஞ்சம் நாள், உடம்புக்கு ரொம்ப முடியாம இருந்துச்சுப்பா. 15 வயசுல இருந்து ஓடிட்டே இருந்தேன்ல... அதான் இப்போ ஓய்வு தேடுது. எத்தனை வருஷ ஓட்டம்... என்னா உழைப்பு. அப்பப்பா! இப்போ நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருக்கு. என் ரெண்டு மூட்டுகளும் தேஞ்சிருச்சு. அதனால செயற்கை மூட்டுகள் பொருத்தியிருக்காங்க. மத்தபடி நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் நிறைய நடிக்கணும்னுதான் ஆசை. எங்கே..?!
  [​IMG]
  என்கூட 'மணிமகுடம்’ நாடகத்துல சம்பத்குமாரினு ஒருத்தங்க நடிச்சாங்க. இப்போ அவங்க பெங்களூருவுல இருக்காங்க. சென்னை வந்தா என்னைப் பார்த்துட்டுப் போவாங்க. நடிகை லட்சுமி அடிக்கடி போன்ல விசாரிப்பாங்க, எம்.என்.ராஜம் அடிக்கடி பேசுவாங்க. சிவகுமார் அப்பப்போ நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போவார். அவங்க எல்லாரும் அந்தக் காலத்துல பழக்கமானவங்க. இப்ப உள்ளவங்களுக்கு என்னை வந்து பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லையே... அண்ணா, கலைஞர், என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா...னு ஐந்து முதலமைச்சர்களோடும், நான்கு தலைமுறை நடிகர்களோடும் நடிச்சிருக்கேன்னு நானா என் கதையை என்கிட்டயே சொல்லிட்டு இருக்கேன் தம்பி. சினிமாவில் காமெடி காட்சிகள்ல மட்டுமே நடிச்ச எனக்கு, நிஜ வாழ்க்கையில அது மருந்துக்குக்கூட இல்லாம போச்சு!'' -
  சிரித்துக்கொண்டேதான் சொல்கிறார் ஆச்சி!
   
  Loading...

 2. Swethasri

  Swethasri Platinum IL'ite

  Messages:
  1,653
  Likes Received:
  1,567
  Trophy Points:
  283
  Gender:
  Female
 3. NirmalaGoofy

  NirmalaGoofy Gold IL'ite

  Messages:
  984
  Likes Received:
  419
  Trophy Points:
  138
  Gender:
  Female
 4. joylokhi

  joylokhi Platinum IL'ite

  Messages:
  1,735
  Likes Received:
  2,539
  Trophy Points:
  285
  Gender:
  Female
  So moving. Thanks for sharing.
   

Share This Page