1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Karna's Wife -uruvi

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Oct 19, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கர்ணனின் மனைவி

    அவள் பெயர் உருவி. புகேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும் அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு நேச நாடான புகேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அனைவருக்கும் செல்லக் குழந்தை. குந்தி என் மருமகளே என்றுதான் அவளை அழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், கெளரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்கதேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் கொள்கிறாள். தந்தை தனக்கு ஏற்பாடு செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மாலை சூட்டி உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்கிறாள். உயர்வர்ணப் பெண் கீழ்வர்ண ஆணைத் திருமணம் செய்வது தகுமா என்று கேள்வி கேட்பவர்களின் வாயை பிராமணப் பெண்ணான தேவயானி க்ஷத்ரியனான யயாதியை மணக்கவில்லையா என்று எதிர்கேள்வி கேட்டு அடைக்கிறாள். அவள் திருமண நாளிலிருந்து, கர்ணன் மரணிக்கும் நாள் வரை அவள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கேட்கும் கேள்விகளாக அந்த நாவல் விரிவடைகிறது. கவிதா கானே எழுதிய தி கர்ணாஸ் வைஃப் (the Karna’s wife;) என்ற நாவல் சமீபத்திய மறுவாசிப்பு நாவல்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

    நாவல் வியப்பூட்டும் தகவல்களோடும், உரையாடல்களோடும் நகர்ந்து செல்கிறது. சிறுவயது முதல் அஸ்தினாபுரத்தில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் தாய்தந்தையரோடு வரும் உருவி, சிறுமியாக இருக்கும் போதே, காந்தாரியைப் பார்த்து, நீங்கள் ஏன் கண்களைக் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் கண்களோடு இருந்தால்தானே கணவருக்கு நல்லபடியாக உதவ முடியும் என்று கேட்கிறாள். கர்ணனுக்கு ஏற்கனவே விருஷாலி என்று சூத இனத்தைச் சேர்ந்த ஒரு மனைவி இருக்கிறாள். அவளுக்கு சுதாமா, ஷத்ருஞ்சயன், த்விபாதன், சுஷேணன், சத்யசேனன், சித்ரசேனன் என்று ஏகப்பட்ட குழந்தைகள். இதில், பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த போராட்டத்தில், மூத்த மகன் சுதாமா இறந்து விடுகிறான். துரியோதனனின் மனைவி பானுமதி காம்போஜ நாட்டு இளவரசி. முதலில் அவளது அக்காவைத்தான் துரியோதனனுக்கு மணம் செய்து வைக்கிறார்கள். அவள் சில நாட்களிலேயே இறந்துவிட, துரோணரின் ஆலோசனையின் பேரில் அவளது தங்கை பானுமதி இரண்டாம்தாரமாக மணமுடிக்கப் படுகிறாள் என்று நாவல் முழுவதும் ஏராளமான புதுப்புதுத் தகவல்கள்.

    கர்ணனை மணமுடித்து வந்த உருவி மெல்ல மெல்ல அஸ்தினாபுரத்தின் அரசியல் நிகழ்வுகளை அறிவதும், அதில் பங்கேற்பதுமாக நாவல் செல்கிறது. வனத்தில் தன் இரு மனைவிகளோடும், ஐந்து குழந்தைகளோடும் வாழும் பாண்டுவின் மரணம் ரிஷியின் சாபத்தால் அல்ல, சகுனியின் சதியால், அவனது ஒற்றர்களால் பாண்டுவும், மாத்ரியும் கொல்லப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறாள் உருவி. ஏனெனில், அக்காலத்தில் ஆரியதேசத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் கிடையாது. தருமன் பாரதத்தின் அனைத்து அரசர்களையும் வென்று ராஜசூய யாகம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, தருமனை சக்ரவர்த்தியாக ஏற்க முடியாது என்று வெளிப்படையாக துரியோதனன் ஏன் அறிவிக்கவில்லை என்று கர்ணனிடம் சண்டை போடுகிறாள் உருவி. அப்போதே நேரடியாகப் போர்க்களத்தில் மோதி இருக்கலாம் அல்லவா? அதற்குத் தயாராக இல்லாத துரியோதனனும், கர்ணனும் கோழைகள் தான் என்று வெளிப்படையாகச் சொல்கிறாள். பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் கட்டியுள்ள மாளிகைக்கு ராஜசூய யாகத்தில் கலந்துகொள்ள கணவனோடு செல்கிறாள் உருவி. அந்த மாளிகையின் அழகில் மற்றவர்களைப் போல் அவள் மயங்கவில்லை. நான் வாழப் போகும் மாளிகையை ஒரு அருங்காட்சியகம் போல் கட்டவேண்டிய அவசியம் இல்லை என்கிறாள்.

    சூதாட்டம், பாஞ்சாலி துகிலுறிதல் சம்பவங்களின் போது கர்ப்பவதியாக இருக்கும் உருவி பெரும் ஆவேசம் கொள்கிறாள். துகிலுறியத் தூண்டியது தன் கணவன் என்று அறிந்ததும் தன் தாய்வீடு செல்ல முடிவு செய்கிறாள். என்னிடம் எந்த விளக்கமும் இல்லை. என் செயலை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை என்று மன்னிப்புக் கேட்டு நிற்கும் கர்ணனிடம், உன் வாழ்க்கை முழுவதுமே ஒரு பொய். நீ முழுக்க முழுக்க நாடகமாடி இருக்கிறாய். உனக்கு உன் கீழ்ஜாதிப் பிறப்பு, அதனால் ஏற்பட்ட அவமதிப்புகள் ஆகியவற்றை சரிசெய்து கொண்டு சமூக அங்கீகாரம் பெறுவது மட்டும்தான் வாழ்வின் ஒரே நோக்கம். நீ வாரி வாரி தானம் வழங்குவதற்கும் அதுதான் காரணம். சமூக அங்கீகாரத்திற்காக நல்லவன் போல் நீ போடும் வேஷம் இப்போது திரெளபதி துகிலுரிந்த விஷயத்தில் கலைந்து விட்டது என்று கடுமையாக திட்டிவிட்டு தன் தாய் வீடு சென்றுவிடுகிறாள். ஆனால் தருமன் சூதாடியதையும் அவளால் ஏற்க முடியவில்லை. அவனது மனைவி, தம்பிகளை எதுவும் செய்யட்டும். ஆனால் ஒரு மன்னன் என்பவன் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டியவன் அல்லவா? மன்னனுக்கு நாட்டையும், மக்களையும் சூதாட்டத்தில் பணயம் வைக்கும் உரிமை உண்டா? என்று ஒரு சட்டச் சிக்கலை எழுப்புகிறாள். தாய்வீடு கிளம்பும் போது அப்படியானால் நீ என்னை காதலிக்கவில்லையா? என்கிறான் கர்ணன் கண்கலங்க. இப்போதும் காதலிக்கவே செய்கிறேன். ஆனால், அந்தக் காதலோடு இதுவரை உன் மேல் ஒருவித மரியாதை இருந்தது. இப்போது அந்த மரியாதை போய்விட்டது என்கிறாள் அவள். குழந்தை பிறந்து, பெரியவர்கள் பலரும் புத்திமதி சொல்லியதால், வெகுகாலம் கழித்து, மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ அங்கதேசம் வருகிறாள் அவள்.

    பாரதப் போரின் போது, கர்ணனுக்கும், பீஷ்மருக்கும் பிரச்னை வரும்போது, பாண்டவர்கள் பாண்டுவின் வாரிசுகளாக இல்லாத போது, அவர்களை ஏற்ற நீங்கள், கர்ணனை மட்டும் சூதபுத்திரன் என்று வாய்க்கு வாய் நீங்கள் சொல்வது சரிதானா? என்று பீஷ்மரை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள் உருவி. கர்ணனின் பிறப்பு ரகசியத்தைச் சொல்லி, பாண்டவர் பக்கம் சேருமாறு குந்தி அழைப்பு விடுக்கும் போது, குழந்தை பிறக்காது, வேறு வழியில் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்து கொள்வோம் என்று மன்னர் பாண்டு கூறியபோது. பத்தினி போல் ஏன் நடித்தீர்கள்? ஏற்கனவே, ஒரு குழந்தை எனக்கு பிறந்துள்ளது என்ற உண்மையை அவரிடம் சொல்லியிருந்தால், வாரிசுக்காக ஏங்கிய மன்னர் பாண்டு, கர்ணனை அன்றே தம் புத்திரனாக ஏற்றிருப்பாரே! இன்று இத்தனை பிரச்னை ஏற்பட்டிருக்காதே! என்று குந்தியைத் திட்டி அழ வைக்கிறாள் உருவி. கர்ணன் மடிந்துபட்டதும் அவள் சொல்வது மிக முக்கியமானது. கர்ணன் ஆறுமுறை இறந்துவிட்டான். அவனது தாய் அவனை கங்கையில் விட்டபோது முதன்முறையாக. இரண்டாவது முறை பரசுராமன் சபித்தபோது. மூன்றாவது முறை இந்திரன் திருட்டுத்தனமாக கவச குண்டலத்தைக் கவர்ந்த போது. நான்காவது முறை குந்தி அவனிடம் வரம் வாங்கியபோது. ஐந்தாம் முறை சகதியில் சிக்கிய தேரை நகர்த்த சல்லியன் மறுத்த போது. ஆறாம் முறை அர்ச்சுனனின் அம்புகள் அந்த நிராயுதபாணியைத் தாக்கியபோது. எல்லாம் முடிந்து, எல்லாம் தெரிந்த போது வருந்தும் பாண்டவர்கள் மூத்தவரின் வாரிசு என்ற வகையில் கர்ணனுக்கும், உருவிக்கும் பிறந்த விருக்ஷ்கேதுவை அஸ்தினாபுரத்தின் அரசனாக்கலாம் என்கிறார்கள். இந்த பாரதக் கதை மீண்டும் ஒரு சுற்றுக்கு நடக்கும். எனவே அதெல்லாம் வேண்டாம். என் மகன் எங்களது புகேய நாட்டுக்கு அரசனாக இருப்பான். அவன் என்றும் உங்கள் குரு வம்சத்தின் வாரிசு அல்ல என்று பாண்டவர்களைக் கடிந்து விரட்டி விடுகிறாள் உருவி.

    கதை முழுக்க உருவி யதார்த்தமான பாத்திரமாக, நாம் அன்றாடம் சந்திக்கும் சற்றே புத்திசாலியான பெண்ணாகவே வருகிறாள். சராசரிப் பெண்கள் போலவே, அவளுக்கும் கணவனது நண்பர்களை அவளுக்குப் பிடிப்பதில்லை. இன்றைய மனவைிகளைப் போலவே உங்க பிரண்ட்ஸ் யாரும் சரியே இல்லை என்கிறாள். துரியோதனனுடன் சண்டை போடுகிறாள். சகுனியைச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. அஸ்வதாமனிடம் அவனது தந்தை முன்பு ஏகலைவனையும், தன் கணவனையும் அவமதித்ததற்காக சண்டை பிடிக்கிறாள். இத்தனை யதார்த்தமாக நகரும் கதையிலும் எனக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இருக்கிறது.

    கர்ணனின் இரண்டாம் மனைவியாக வரும் உருவி, கர்ணனின் அதிகாரபூர்வ மனைவியான விருஷாலி மீது பொறாமைப்படுவதில்லை. அவளோடு சண்டை பிடிப்பதில்லை. அக்கா என்று மிகவும் அனுசரித்துப் போகிறாள். தன் வாரிசுகளின் தாய் என்று இயல்பாகவே விருஷாலி மேல் பெரும் காதலோடு இருக்கிறான் கர்ணன். சத்திரிய வர்ணத்தைச் சேர்ந்த உருவியைவிட தனது ஜாதியைச் சேர்ந்த விருஷாலியோடுதான் அவனால் இயல்பாக இருக்க முடிகிறது என்பதைக் கூட புரிந்துகொள்கிறாள். ஆனால், காரணமில்லாமல் திரௌபதி மீது நிரந்தரமான பொறாமையில் இருக்கிறாள். தன் கணவன் அவளை சந்தித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். காரணமில்லாமல் திரௌபதி மீது சந்தேகப்படுகிறாள். கதையில் இப்படி அவள் நடந்து கொள்வதற்கான காரணங்கள் எதுவும் வலுவாக, நம்பகமாகக் காட்டப் படவில்லை என்பது மிகப் பெரிய குறை.

    மறுவாசிப்பு நாவலை எழுதும் பெண்களும் ஆண்மனச் சிந்தனைகளிலிருந்து வெளியே வரமுடியாமல் இருப்பது எனக்கு மிகப் பெரிய வருத்தம். திரௌபதியைப் பற்றி எழுதுபவர்கள் என்னதான் மாறுபட்ட, புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் கூட, ஐந்து பேருக்கு மனைவியாக இருப்பவள் ஆறாவதாக ஒருவன் மேல் ஆசைப்படாமல் இருந்துவிடுவாளா என்ன என்பது மாதிரியான ஆணாதிக்க சிந்தனையின் பாதிப்பில் எழுதுவதுதான் நம்மை வருத்தமடையச் செய்கிறது. மறுவாசிப்பாளர்களைப் பொருத்தவரை, சீதை ஒரு கணவனோடு வாழ்பவள் என்பதால், ராவணனை ஏறெடுத்துப் பார்க்காத கற்புக் கனல். திரௌபதி ஏற்கனவே ஐந்து பேரோடு சுகம் அனுபவித்தவள் என்பதால் சந்தர்ப்பம் கிடைத்தால். ஆறாவதாக ஒருவனோடு படுக்கத் தயாராகவே இருப்பவள் என்பது மாதிரியாகவே எழுதுகிறார்கள். இதுபோன்ற ஒரு பார்வை இந்த நாவலில் மட்டுமல்ல, சித்ரா பானர்ஜி திவாகருணியின் தி பேலஸ் ஆஃப் இல்யூஷன், பிரதிபா ரேயின் யக்ஞசேனி போன்ற பல படைப்புகளில் காணப்படுகிறது. யக்ஞசேனியில் பிரதிபா ரே ஒருபடி மேலே போய் உண்மையில் திரௌபதிக்கு கிருஷ்ணன் மேல்தான் காதல்,அவன் சொல்லித்தான், அவனது அனுமதியுடன் தான் பாண்டவர்களையே மணக்கிறாள் என்றெல்லாம் எழுதிச் செல்கிறாள். எல்லாப் படைப்பாளிகளையும் போலவே கவிதா கானேயும், தனது விருப்பத்திற்கு மாறாக, ஐவரை மணந்து திண்டாட நேர்ந்த அபலையான திரௌபதி மீது அபாண்டமாகப் பழி போட்டு எழுதுவதுதான் நாவலின் மிகப் பெரிய பலவீனம். இருந்தும் அதை மன்னித்துவிடத் தான் வேண்டும். அதற்கு மிகச் சிறப்பான காரணம் ஒன்று இருக்கிறது.

    இதுவரை நாம் பார்த்த வரையில் மறுவாசிப்பு என்பது பெரும் இதிகாசத்தில் ஒரு மூலையில் லேசாகக் குறிப்பிடப்படும் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் ஆசிரியர் சொல்ல நினைத்த விஷயங்களைச் சொல்வது என்ற வகையில் அமையும். இந்த நாவலின் சிறப்பு உருவி என்ற கற்பனைப் பாத்திரத்தை முன்னிருத்தி, அதன் வழியாக மஹாபாரதத்தின் அத்தனை பிரதான பாத்திரங்களையும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் கேள்வி கேட்பதுதான். பாரதத்தில் விருஷாலி பற்றி மட்டுமே குறிப்பு உண்டு. உருவி என்பது முழுக்க முழுக்க கற்பனையான பாத்திரம். அதை வைத்து இத்தனை கேள்வி கேட்ட கவிதா கானே மிகமிக பாராட்டுக்குரியவர். மஹாபாரதத்தில் பெண்கள் தான் நிறைய கேள்விகளை எழுப்ப முடியும், எழுப்ப வேண்டும் என்று எனக்கு உணர்த்துகிறார் கவிதா கானே.
    << பகிர்வு>>
    .Jayasala 42
     
    sangeethakripa and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி.
    அருமையான விமர்சனம். கானே புத்தகத்தை படிக்க விழைகிறது மனம்.
    ஒப்பற்ற நண்பர் இன்த ப்புத்தகத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

     

Share This Page