1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

“கண்மணி என்னை மறந்தனையோ?”

Discussion in 'Regional Poetry' started by Rrg, Jan 16, 2020.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    “கண்மணி என்னை மறந்தனையோ?”
    இளவேனிற் காலம்; இளங் காலைத் தூக்கம்; இடையினில் குரல் கேட்டு கண் விழித்தேன்.
    யாரெனப் பார்த்தேன்; தமிழ்த் தாயென உணர்ந்தேன். அவள் காலடியில் நான் சரிந்து விட்டேன்.

    தாயே!
    உன்னைப் போற்றாத பேரில்லை; பாடாத கவி இல்லை;
    இப்பேதையைப் பற்றியும் நினைத்தனையோ?
    அவ்வை, கம்பன், பாரதி கேட்டும்
    அடியேன் கவிதையும் விழைந்தனையோ?
    தாயினும் மேலாம் தமிழே உன் புகழ் தரணி முழுதும் ஒலிக்குதம்மா!
    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போயும் அழகு மங்காமல் ஜொலிக்குதம்மா!!

    உலகின்
    முந்தைய மொழிகளில் மூத்தவள் நீ - எங்கள்
    முன்னோர் வளர்த்த தலைமகள் நீ
    தாயவள் பாலுடன் ஊட்டி விட்டாள் உன்னை
    தன்னிலும் மேலென காட்டிவிட்டாள்.

    தீந்தமிழ் ஊட்டி நன்னெறி காட்டிய தூயவளே எந்தன் தாய் ஆனாய். உன்
    மடியினில் தவழ்ந்தேன்; மகனென வளர்ந்து என் சாதனை(கள்) உன்னடி படைத்து விட்டேன்.
    உன் மகனாய்ப் பிறந்ததே என் பெருமை; நான் மறுபடி பிறப்பினும் உனக்கடிமை;
    என் தாயும் நீயே தலைவியும் நீயே தெய்வமும் நீயே சரணடைந்தேன்.

    கவிதையாய் வடிக்கும் சொல் விளையாட்டில் கனிமொழியே என் சேய் ஆனாய்!
    என்
    நாவினில் அமர்ந்தாய்; நல்லிசை படைத்தாய். நாள் முழுதும் என்னை மகிழ வைத்தாய்.
    தாயும் நீ; என் சேயும் நீயே; தன்னிகரில்லா தெய்வமும் நீ
    தமிழே எந்தன் உயிருடன் மூச்சுடன் இரண்டறக் கலந்து இணைந்து விட்டாய்.
    உன்னிடம் இருந்து என்னைப் பிரிப்பது இயலாதென்று உணர்ந்துவிட்டேன்.
    ‘உயிர் பிரிந்தாலும் உனக்காக’ எனும் உண்மையை உலகுக்கு உரைத்து விட்டேன்.
    உன் இளமை, வனப்பு, நளினம், புதினம், உயர்வெல்லாம் கண்டு மயங்கி விட்டேன்;
    அறிவு, தெளிவு, அன்பு, பண்பு, செழிப்பும் கண்டு மலைத்து விட்டேன்.
    ஏதேதோ தலைப்பில் கவிதைகள் வடித்தேன்; உன்னை வடிக்க ஓர் வார்த்தையில்லை.
    என்னை ஆட்டுபவள் நீ; ஆடுபவன் நான். அழகாய் ஓர் கவிதை உதிக்கவிடு.

    அன்புடன் வேண்டும் அருமை மகன்,
    உன் அடி பணிந்து ஏத்தும்
    RRG
    15/01/2010
     
    Loading...

Share This Page