1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வி.சி.த்.தி.ர.ன் - சிறுகதை

Discussion in 'Stories in Regional Languages' started by Nilaraseegan, Feb 8, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    muse_web.img_assist_custom.jpg
    பாகம் இரண்டு:
    காடு தன்னை விடுவிக்குமா என்பது பற்றிய கவலைகள் ஏதுமின்றி பெரும் இரச்சலுடன் விழுகின்ற அருவியில் தன்னுடல் நடுங்க குளித்துக்கொண்டிருந்தான் சித்திரன். யாருமற்ற வனத்தின் நடுவே பறவைகளின் சிறகடிப்புச் சத்தமும் கிளைவிட்டு கிளை தாவும் குரங்குகளின் சத்தமும் மட்டுமே இவனுக்கு துணையாக இருந்தது. உடைகள் துறந்து பிறந்த உடலுடன் ஆடிப்பாடி குளித்துக்கொண்டிருந்தபோது பெண்ணொருத்தியின் சிரிப்புச் சத்தம் கேட்டு திடுக்கிட்டவனாக உடைகளை எடுக்க ஓடினான். உடைகள் அணிந்து சிரிப்புச் சத்தம் வந்த திசைநோக்கி நடக்க துவங்கும்போது அம்மாவின் குரல் கேட்டது. சட்டென்று போர்வைக்குள் தலையை இழுத்துக்கொண்டு உறங்குவது போன்ற பாவனையில் கண்மூடிக் கிடந்தான். அறைக்குள் வந்த அம்மா இன்னும் உறங்குகிறானே என்று புலம்பியபடியே சமையலறைக்கு சென்றாள்.
    போர்வை விலக்கி சுவற்றில் மாட்டியிருந்த அருவி ஓவியத்தை பார்த்தான். மீண்டும் காடு. மீண்டும் பறவைகளின் சத்தம். இதுதான் சித்திரனின் உலகம்.
    கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தவனிடம் டிபன் பாக்ஸ்ஸை நீட்டினாள் அம்மா. “இன்னைக்காவது ஒழுங்கா நான் தர்றத சாப்பிடுடா… தினமும் சாப்பாடை வெளியில கொட்டிட்டு கேண்டின்ல சாப்பிடுறதே உனக்கு வேலையா போச்சு..ஹ்ம்ம் அப்பா இருந்திருந்தா அடிச்சு வளர்த்திருப்பார்..” புலம்பும் அம்மாவுக்கு எவ்வித பதிலும் தராமல் கண்ணாடிக்கு முன் நின்று தலைவாரிக்கொண்டிருந்தான்.
    கல்லூரியின் முதல் மாடியிலிருக்கும் வகுப்பில் ஜன்னலோர இருக்கையில்தான் சித்திரன் எப்போதும் அமர்ந்திருப்பான். இயற்பியல் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிந்தார். ஜன்னல் வழியே கல்லூரிக்கு அருகிலிருக்கும் சாலையில் விரைகின்ற வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தக்காட்சி அவன் கண்ணில் பட்டது. இரண்டு சிறுவர்கள் சாலையோரத்தில் பாலிதீன் தாளை விரித்து கைக்குட்டை விற்றுக்கொண்டிருந்தார்கள். கையில் ஒரு கைக்குட்டை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அசைத்து வாடிக்கையாளர்களை கூவி அழைத்தபடி இருந்தார்கள். அந்தக் கைக்குட்டையில் வரையப்பட்டிருந்த மரவீட்டின் ஓவியம் மீது வெயில் அடித்துக்கொண்டிருந்தது.சற்று தொலைவுதான் என்றபோதும் அந்த ஓவியம் முழுவதுமாய் கண்களுக்கு புலப்பட்டது.
    வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷமும் பூரிப்பும் ஏற்பட்டன. இதுவரை மரவீட்டிற்குள் இவனது காலடி பட்டதேயில்லை. நடக்கும் போது எழுகின்ற ஒலி வித்தியாசமானதாகவும் சிலிர்ப்பூட்டுவதாகவும் இருந்தது. நான்கைந்து முறை குதித்து பார்த்தான். பிறகு யாருமற்ற அவ்வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாக பார்த்து திரும்பிக்கொண்டிருந்தான். வீட்டிற்கு பின்னால் அழகிய தோட்டம் இருந்தது. அங்கே பூத்திருந்த பூக்களின் வாசம் இதுவரை இல்லாத பரவசத்தை இவனுக்குள் ஏற்படுத்தின. தோட்டத்தை நிறைத்திருந்த பூஞ்செடிகளை கடந்து உயர்ந்து நின்ற மரத்தடிக்கு வந்தான். அந்த மரத்தடியிலிருந்து பார்த்தபோது முன்பிருந்ததைவிட அவ்வீடு அழகாய் மாறிவிட்டதாக தோன்றியது. வீட்டின் அழகில் லயித்திருந்தவனின் முதுகில் எதுவோ வந்து விழுந்தது. துணுக்குற்று திரும்பி தன்மீது விழுந்த பொருளை எடுத்துப்பார்த்தான். நான்காய் மடிக்கப்படிருந்த தங்கநிற தாள் அது. அவசரமாக பிரித்தான். உள்ளே “சித்திரனுக்கு ப்ரியங்களுடன் வினோதினி” என்று எழுதியிருந்தது.
    அழகிய கையெழுத்தில் மின்னிய எழுத்துக்களை கண்டவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒன்றிரண்டு வண்ணத்துப்பூச்சிகள் பூஞ்செடிகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்தன. மனித நடமாட்டமே இல்லை. தான் மட்டுமே வசிக்கும் இவ்வுலகில் தனக்குத் தெரியாமல் தன்னை பின் தொடரும் பெண்ணை பார்க்கவேண்டும் என்கிற ஆவல் பீறிட்ட சமயம் இயற்பியல் ஆசிரியர் கத்திக்கொண்டிருந்தார் “எப்போ பாரு என் க்ளாஸ்ல தூங்கறதே வேலையாபோச்சுடா உனக்கு.இன்டர்னல் மார்க் வாங்க என்கிட்டதான வரணும்.அப்போ வச்சுக்கிறேன் உன்னை” திட்டிவிட்டு போய்விட்டார். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டவன் போலிருந்தது சித்திரனின் முகம்.

    பாகம் ஒன்று:



    ஆறாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் அம்மா சித்திரனை அத்தை வீட்டிற்கு அனுப்பி இருந்தாள். மலை கிராமம் அது. தலை உரசிப்போகும் மேகங்களும்,உடல் உருவும் குளிரும் இவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. எங்கு திரும்பினாலும் பச்சையாக காட்சியளித்தது. அத்தையுடன் சேர்ந்து காரட் பிடுங்குவதற்கு செல்வதிலும் மாலை வேளைகளில் அந்த மலைகிராமத்தை சுற்றிப்பார்ப்பதிலும் நேரம் கழிந்தது.
    ஒர் இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தவன் வீட்டிற்கு பின்புறம் சென்றபோது தூரத்தில் கண்ணைக்கூசும் வெளிச்சம் தெரிந்தது. வெளிச்சம் வந்த திசையில் வீடுகள் அதிகம் இல்லை. தனித்திருந்த வீடொன்றிலிருந்து அவ்வெளிச்சம் பரவுவதை கண்டவுடன் பயத்தில் கால்சட்டையில் சிறுநீர் கழித்ததுகூட தெரியாமல் வீட்டிற்குள் ஓடி வந்துவிட்டான். மறுநாள் காலையில் எழுந்தவுடன் நேற்றிரவு நடந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை. தெருச் சிறுவர்கள் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவனுக்கும் விளையாட ஆசையாக இருந்தது. போய் கேட்டவுடன் இவனையும் சேர்த்துக்கொண்டார்கள். ஏதாவது ஒரு மரத்திற்கு பின்னால் அல்லது வீட்டிற்கு பின்னால் ஒளிந்து கொள்வார்கள். ஒருவன் மட்டும் கண்டுபிடிக்க தேடி வரவேண்டும்.
    சித்திரனின் முறை வந்தபோது சிட்டாக பறந்து ஒளிந்து கொண்டார்கள். எங்கு தேடியும் ஒருவனைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வீடாக தேடிக்கொண்டு போனவன் மூங்கில்களான வீடொன்றை கண்டான். வீட்டின் அமைப்பும் அங்கு நிலவிய மயான அமைதியும் இவனுக்கு பயத்தை வரவழைத்தன. திரும்பிவிட எத்தனித்தபோது உள்ளிருந்து யாரோ இருமும் சத்தம் கேட்டது. மனதை தைரியப்படுத்திக்கொண்டு லேசாய் திறந்திருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போனான்.
    உள் அறையில் தோல் சுருக்கம் நிறைந்த கிழவன் ஒருவன் கண்மூடி உட்கார்ந்திருந்தான். இதுவரை அப்படியொரு கிழவனை இவன் கண்டதில்லை. அவனது தோற்றம் சீன படங்களில் வரும் குங்ஃபூ குருவை ஒத்திருந்தது. இந்த ஊரில் எப்படி இந்தக் கிழவன் வந்தான் என்கிற ஆச்சர்யத்துடன் கதவுக்கு பின்னால் நின்றுகொண்டு கவனித்தான். கிழவனுக்கு முன்னாலிருந்த சுவற்றில் விசித்திரமான படங்கள் தொங்கின. கோடுகளாலும் புள்ளிகளாலும் அவை இருந்ததால் இவனுக்கு எதுவும் புரிபடவில்லை. அங்கிருந்த ஒரு படம் இந்தக் கிழவனின் வீடை போலவே இருந்தது. அந்த படத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த கிழவன் சட்டென்று காணாமல் போனபோது சித்திரனை பயம் கவ்விக்கொண்டது. வெளியேறிவிடலாம் என்று நினைத்து இவன் திரும்பிய கணமும் கதவை திறந்துகொண்டு வீட்டிற்குள் கிழவன் நுழைந்த கணமும் ஒன்றாக இருந்தது.

    பாகம் மூன்று:


    வீட்டிற்கு வந்த நிமிடத்திலிருந்து அவளது ஞாபகமாகவே இருந்தது. அந்த அழகான கையெழுத்தும் “வினோதினி” என்கிற பெயர் தருகிற வசீகர ஈர்ப்பும் சித்திரனை நிலைகொள்ளாமல் தவிப்படைய வைத்தது. அதே நேரம் சித்திரங்களுக்குள் நுழைகின்ற வித்தை இவளுக்கு எப்படி தெரிந்தது? கிழவன் தனக்கு மட்டும்தானே அந்த வித்தையை கற்றுத்தந்தான்..இவளுக்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று பல கேள்விகள் இவனை தூங்கவிடாமல் செய்தபோதும் அவளை சந்திக்கவேண்டும் என்கிற பேராவலும் உடன் சேர்ந்துகொண்டது. வெகு நேரம் விழித்திருந்தவன் பின்னிரவில் உறங்கிப்போனான்.
    அதிகாலை எழுந்தவன் தன் அறை எங்கும் நிறைந்திருக்கும் புதியதொரு வாசத்தை உணர்ந்தான். அந்த மரவீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்குள் இவன் நுழைந்தபோது உணர்ந்த அதே வாசம். அப்படியெனில் அது பூவின் வாசம் அல்ல. அவளின் வாசம். அந்த நறுமணத்தை நுகர்ந்தபடியே வீட்டிற்கு வெளியே வந்தான். தெரு நிச்சலனமற்றிருந்தது. தெருவில் அந்த வாசனையில்லை. மீண்டும் தன் அறைக்குள் நுழைந்ததும் அவ்வாசத்தை உணர முடிந்தது. அவள் வந்துபோனதற்கான அடையாளமாக வீசிக்கொண்டிருந்தது மனம் மயக்கும் நறுமணம். படுக்கையில் சோர்வாக அமர்ந்தவன் தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். தன் அறைக்குள் நுழைந்தவள் ஏன் தன்னிடம் பேசாமல் போனாள் எதற்காக வந்தாள் எங்கிருந்து வந்தாள் எதுவும் சொல்லாமல் போனது ஏன் பெரும் குழப்பம் இவனை பிய்த்துத் தின்றது. கண்ணாமூச்சி காட்டும் அவளை எப்படி சந்திப்பது என்று யோசித்ததில் அந்த யோசனை உதித்தது. உடனே வெள்ளைத்தாளில் மிகத்தீவிரமாக ஓவியமொன்றை வரைய ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அவனது அறையில் யாருமில்லை.

    பாகம் நான்கு:


    பாதம் தொடும் அலைகளை ரசித்துக்கொண்டே கடலில் கல்லெறிந்துகொண்டிருந்தான் சித்திரன். எங்கும் கடல். நீலக்கடல் தன் காலடியில் கிடப்பது போலிருந்தது. யாருமற்ற அந்தத் தீவில் உயர்ந்து வளர்ந்திருந்தன மரங்கள். குரங்குகளின் கீச்சொலியும் பூச்சிகளின் சத்தமும் மட்டுமே கேட்டன. வெள்ளை மணலில் சிறு நண்டுகள் ஓடிக்கொண்டிருந்தன. பெரியதொரு மர அணில் மரமொன்றின் உச்சிக்கிளையில் வாலை உயர்த்தியபடி கத்திக்கொண்டிருந்தது. அங்கிருந்த மணல் மேட்டில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான்.
    இருள் கவிய துவங்கிய நேரமாகியும் அவள் வராததால் இவனுக்குள் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. தன் அறைக்கு திரும்பிவிடலாம் என்றெண்ணியபடி எழுந்தபோது காற்றில் மிதந்து வந்தது அவளது வாசம். சுற்றிலும் திரும்பி பார்த்துக்கொண்டே வாசம் வந்த திசை நோக்கி நடந்தான். சற்று தொலைவில் அந்த அற்புதக் காட்சியைக் கண்டான்.
    வார்த்தைகளுக்குள் அடங்காத வனப்பும் பேரழகும் நிறைந்த பெண்ணொருத்தி சித்திரனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஓடிச் சென்று அவள் முன் நின்றவனுக்கு பேச வார்த்தைகள் எழவில்லை. அவளது முகத்தில் கனிவும் அன்பும் அழகும் குடிகொண்டிருந்தது. இவனது பரிதவிப்பை கண்டவள் அருகில் வந்து இறுக்கமாய் அணைத்து பிரிந்தாள். அந்த ஒரு நொடி அணைப்பின் இதத்திலும் உயிரை உலுக்கும் அவளது வாசத்திலும் கிறங்கி நின்றவனை கண்டு புன்னகை செய்தவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். ஓடிச் சென்று அவளது கைகளை பற்ற இவன் முயன்ற தருணம் அவளது முதுகிலிருந்த சிறகுகள் படபடத்து வானில் எழும்பி பறந்து மறைந்தாள் அந்த வன தேவதை. சிறகில்லாத தன்னிலை எண்ணி துயரத்துடன் ஊமையாகி வானத்தை பார்த்தபடியே நின்றிருந்தான் சித்திரன்.

    -நிலாரசிகன்.
     
    Loading...

Share This Page