1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*பட்டாபி படும் பாடு!*- (சிறு கதை)

Discussion in 'Posts in Regional Languages' started by Rrg, Jun 23, 2020.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    *பட்டாபி படும் பாடு!*- (சிறு கதை)

    “என்னங்க? நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன். பதிலையே காணும்.”
    சாப்பிட்டுக் கொண்டிருந்த பட்டாபி, ஜானகியின் குரல் ஓங்கி ஒலிக்கவும் சிந்தனை கலைந்து நிகழ்காலம் திரும்பினான். ஏதோ சாப்பாடு விஷயமாகத்தான் இருக்கும் என்ற கணிப்பில், “பிரம்மாதம். டாப் க்ளாஸ்” என்றான்.
    “எது பிரமாதம்?” அடுத்த கேள்வி.
    சாப்பாட்டுப் பிளேட்டில் என்றும் இல்லாமல் புதிதாக கண்ணில் பட்டது ஊறுகாய்தான்.
    “இந்த ஊறுகாய் ஏஒன். பிச்சு உதறிட்ட போ”
    “மண்ணாங்கட்டி. அது நான் பண்ணினதே இல்லை. நேத்து ராத்திரி உங்கள் தங்கை வீட்டிலிருந்து ரொம்ப அன்பாக கொண்டு வந்தீங்களே அது தான் இது. ஒரே உப்பு. வாயில் வைக்கவே சகிக்கலை. உங்களுக்கு டாப் கிளாஸ் ஆகத்தான் இருக்கும். இங்க ஒருத்தி மாஞ்சு மாஞ்சு என்ன பண்ணிப் போட்டாலும் உங்களுக்கு நல்லபடியா ஒரு வார்த்தை சொல்லணும்னு தெரியாது. எல்லாம் என் தலைல எழுத்து.”
    பட்டாபி திரு திரு என்று முழித்தான்.
    “நான் கேட்டது உங்க அம்மாகிட்டே அவங்க வைரத்தோடைப் பற்றி நேத்து பேசினீங்களா? என்று”
    “ஒ! அதுவா? அது அம்மா காலத்துக்கு பிறகு நமக்கு வராமல் வேறு எங்கே போயிடும். அது நமக்குத்தான். அதில் என்ன சந்தேகம்?”
    “நீங்க இப்படி பேசிண்டு இங்க கனவு கண்டிண்டு இருங்க. ஆயிரம் பருந்து அங்க சுத்திண்டு இருக்கு. ஏதாவது ஒண்ணு கொத்திண்டு போயிடும். உங்க அம்மா தலையை ஆட்டி ஆட்டி பேசும் போதெல்லாம் அந்த வைரத்தோடு ரெண்டும் எனக்கு ‘டாட்டா’ ‘டாட்டா’ன்னு கை காட்டுறமாதிரி இருக்கு. நமக்கும் ஒரு பெண் இருக்கு. நாளைக்கே இவளுக்கு கல்யாணம் கார்த்தின்னா அந்த தோடு எவ்வளவு உபயோகமாய் இருக்கும்? பாட்டி தோடுன்னு நம்ம ரேணு எவ்வளவு சந்தோஷப்படுவா?”
    “ரேணுவுக்கு எட்டு வயசு தானே ஆறது. அதுக்குள்ளே என்ன கல்யாணத்துக்கு அவசரம்?”
    “ரேணுக்கு எட்டு வயசுதான்னாலும் உங்க அம்மாவுக்கு எழுபத்தெட்டு ஆச்சு இல்லே? எப்போ யாருக்கு என்ன நடக்குமோ? அப்புறம் பேச்சுக்கு ரேணுக்குன்னா, தோடு ரேணுக்கு மட்டும் தானா? நான் கொஞ்ச நாள் போட்டுண்டா ஏதாவது கொறஞ்சு போயிடுமா? இதெல்லாம் உங்க மரமண்டைல எங்க தோணறது? காலா காலத்துலே இதெல்லாம் முடிச்சுக்கலேன்னா காலம் முழுவதும் கஷ்டப்பட வேண்டியது தான். நான் சொல்றது இப்போவாவது புரியறதா?”
    “இப்போ என்ன பண்ணச்சொல்ற” என்றான் பட்டாபி தலையை ஆட்டிக்கொண்டே.
    “நாளைக்கே திரும்பிப் போய் நாசூக்கா தோடு விஷயத்தைப் பேசி தோட்டோட வாங்க”
    “ஜானு, ஜானு. அதெப்படி முடியும். அங்க நான் போனாலே மாலதியும் வந்து உக்காந்துக்கறா. அம்மாவோட தனியா பேசவே விடறதில்ல. அவள் தப்பித்தவறி காபி போட உள்ளே போனாலும் அவள் பொண்ணு சாந்தி ‘மாமா, மாமா’ன்னு கொஞ்சிண்டு வந்துடறா. நான் எப்படி இதெல்லாம் அம்மா கிட்டே பேசி காரியத்தை சாதிக்கறது.”
    “அப்ப ஒண்ணு பண்ணுங்க. அம்மாவ ஒரு சேஞ்சுக்கு நம்மோட ஒரு வாரம் வந்து இருக்கக் கூப்பிடுங்க. ஒருத்தர் தொந்தரவின்றி உங்களுக்கு முழு நேரமும் கிடைக்கும். எப்பிடியாவது தோட்ட கையிலே வாங்கிட்டா அதுக்கப்புறம் கவலை இல்ல பாருங்க. தோடு இங்க பத்திரமா இருக்கும்போது அவங்க எங்க இருந்தா நமக்கென்ன? அது அவங்க சௌகரியம்.”
    “கிரிமினல் ப்ரைன் ஜானு உனக்கு. எனக்கு தோணவே இல்லை பாரு. நாளைக்கே அம்மாவை நம்ம வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துடறேன்.“

    ஏதோ வீரமாய் சொல்லிவிட்டானே தவிர அம்மாவிடம் என்ன பேசி எப்படி தோடை வாங்குவது என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்தநாள் காலை தங்கை வீட்டிற்குப் போவதற்கு முன் தெருக்கோடி பிள்ளையார் கோயிலுக்கு சென்று ஒரு சூரத்தேங்காய் அடித்தான். “பிள்ளையாரப்பா, இது அட்வான்ஸ் தான். எப்படியாவது அந்த வைரத் தோட்டை அம்மாவிடமிருந்து வாங்கிக் கொடுத்து விடு. உனக்கு நூற்றியெட்டு தேங்காய் அடிக்கிறேன்” என்று வேண்டிக்கொண்டு கிளம்பினான்.

    “வாங்கம்மா. நீங்கள் வந்ததுல ரொம்ப சந்தோஷம். எப்போதும் உங்க பிள்ளைக்கிட்ட சொல்லிண்டே இருப்பேன் நீங்க ஒரு மாசமாவது எங்களுடன் வந்து இருக்கவேண்டும் என்று. இப்போவாவது நேரம் கிடைத்ததே. லஞ்சுக்கு
    என்ன சாப்பிடறீங்க?” ஜானகி மாமியாரை மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள்.
    “எனக்கு சூடா கொஞ்சம் ரசம் சாதம் இருந்தால் போதும்”
    “இதோ அஞ்சு நிமிஷத்தில் ரசம் ரெடி ஆயிடும். கொஞ்ச நேரம் உங்க பிள்ளை கிட்ட பேசிண்டு இருங்க” என்று சொல்லிக்கொண்டே ஜானகி சமையல் அறைக்குள் சென்றாள்.
    “ஏங்க, இங்க கொஞ்சம் வாங்க” சமையல் அறையிலிருந்து குரல் அடுத்த நிமிடம் அழைத்தது.
    “இதோ வந்துட்டேன் ஜானு” பட்டாபி ஓடினான்.
    “அம்மா காதை கவனித்தீர்களா? தோட்டைக் காணோம்; வெறும் ஓட்டைதான் இருக்கு. போய் விசாரீங்க.”
    “அடேடே, நான் கவனிக்கவே இல்லையே. இதோ கேட்டுண்டு வரேன்” திரும்பி ஹாலுக்கு ஓடினான்.

    “அட, இப்பதான் கவனிக்கிறேன். உன் தோடு எங்க போச்சும்மா?”
    “அதுவா. மாலதி ஸ்கூல்ல இந்த வாரம் ஏதோ fancy ட்ரஸ் போட்டி இருக்காம். அவோ மாமி மாதிரி வேஷம் போடறாளாம். அதான் என் தோட கேட்டா. நீயே வச்சுக்கோன்னு கொடுத்துட்டேன்.”
    பட்டாபிக்கு பகீரென்றது. எப்படி இதை ஜானுவிடம் போய் சொல்வது.
    அதற்கு தேவையே இருக்கவில்லை. சமையல் அறையில் ஏதோ பாத்திரம் எகிறி விழும் சப்தம்.
    “என்ன அங்க சத்தம்?” இது அம்மா.
    “எதாவது பாத்திரம் கை தவறி விழுந்திருக்கும். இதோ பார்த்துவிட்டு வரேன்”.
    “ஜானு, ரசம் கொதிச்சிடுத்தா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான்.
    “உங்க அம்மா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். ரசம் கொதிச்சதோ இல்லையோ, என் உடம்பெல்லாம் கொதிக்கிறது. வயிறு பற்றிக்கொண்டு எரிகிறது. ஒரே பித்தலாட்டக் குடும்பம். இதில் வந்து மாட்டிக்கொண்டு நான் படும் பாடு இருக்கிறதே ஏழேழு ஜென்மத்திற்கும் போதும். நாம் எதற்கு கூப்பிடுகிறோம் என்று தெரிந்து தோட்டை கழட்டி பேத்தி கையில் கொடுத்து விட்டு வந்திருக்கிறாள் உங்கள் அருமை அம்மா. எனக்கு கிரிமினல் மூளை என்றால் உங்கள் அம்மாவிற்கு உடம்பெல்லாம் கிரிமினல் ரத்தம். இவர் வயிற்றில் பிறந்தும் இப்படி ஒரு ஞான சூன்யமாய் இருக்கீங்களே? என்னால் இனிமேல் இங்கே இருக்க முடியாது. ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஒரு வருடமோ உங்கள் அம்மாவுடன் நீங்களே குடுத்தனம் நடத்துங்கள். நான் என் அம்மா வீட்டுக்குப் போகிறேன். பை பை.”
    ”ஜானு, கொஞ்சம் பொறு. இப்படி திடீர்ன்னு ஸ்ட்ரைக் பண்ணினால் எப்படி? நான் அம்மாவிடம் என்ன சொல்வது?”
    “என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது. தோடு கிடைத்ததும் வந்து கூப்பிடுங்கள், வருகிறேன்.“
    ஜானு பெட் ரூம் சென்று ஏதோ சில துணி மணிகளை ஒரு backpackஇல் அடைத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். அவளுக்கு இருந்த கோபத்தில் மாமியாரிடம் கூட ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியேறி விட்டாள்.
    “ஜானு எங்கே அவசரமாகப் போகிறாள்?”
    “ஒன்றும் இல்லை அம்மா. ரெண்டு நாளா அவளுக்கு மைகிரேன் தலைவலி. தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். இன்று ரொம்ப அதிகமாகி விட்டதாம். அது தான் என்னை சமையல் அறைக்கு கூப்பிட்டு சொன்னாள். உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்கள், அதனால் சொல்ல வேண்டாம் என்றாள். டாக்டரைப் பார்த்து விட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாள். அது சரி, மாலதி பெண் கேட்டாள்னு வைரத்தோட்டைப் போய் கொடுக்கலாமா அம்மா?” பேச்சை திசை திருப்பினான்.
    “அது வைரத் தோடுன்னு யார் சொன்னது?”
    “பின்னே?” பட்டாபியால் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் தாங்க முடியவில்லை.
    “நான் போட்டுக்கொண்டிருந்தது வெறும் வெள்ளைக்கல் தோடுதான். அதைத்தான் சாந்திக்கு கொடுத்தேன்”
    “அப்படின்னா அப்பா வைரத்தோடு போட்டதா சொல்லுவியே. அதெல்லாம் சும்மா லுலுலுலுவா?”
    பட்டாபி பதறிப் போய்விட்டான்.
    “இல்லடா, அதை ஜாக்கிரதையா பொட்டிக்குள்ளே வச்சுருக்கேன். அதை உனக்கு கொடுக்கத்தான் கொண்டு வந்திருக்கேன்”
    “பிள்ளையாரப்பா!” பட்டாபி தன்னையும் மீறி பெரிதாக கத்திவிட்டான்.
    “என்னடா? என்ன ஆச்சு?”
    “ஒண்ணும் இல்லையம்மா. ஜானகி தலைவலி சரியானால் பிள்ளையாருக்கு நூத்தியெட்டு தேங்காய் போடுவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அவள் தலைவலி இன்றே சரியாகி விடும் என்று ஏதோ தோன்றியது. அதுதான் கத்திவிட்டேன். அது சரி. தோட்டை எனக்கு கொடுத்து விட்டால் பாவம் மாலதி. அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவள் வருத்தப்பட்டு அழ மாட்டாளா? அவளுக்கு என்ன சொல்வாய்?”
    “என்னோட எட்டுக்கல்லு பேசரியை அவளுக்கு கொடுத்து விட்டேன். அதை அழித்து சாந்திக்கு வைரத்தோடு பண்ணச் சொல்லிவிட்டேன். என்ன இருந்தாலும் நீ மூத்தவன். அதனால் தோடை உனக்கு கொடுக்க முடிவு செய்தேன்”.
    “ரொம்ப தேங்க்ஸ் மா! ஆனால் இதுக்கெல்லாம் இப்போ என்ன அவசரம்? சரி, சரி. ஜானு இந்நேரம் டாக்டரைப் பார்த்திருப்பாள். நான் போய் அவளை அழைத்துக்கொண்டு வந்து விடுகிறேன். அப்புறம் சாப்பிடலாம்” என்று கூறிக்கொண்டே ஸ்கூட்டரில் ஏறிக் கிளம்பினான்.
    வழியில் அந்த பிள்ளையார் கோயிலில் நிறுத்தி “பிள்ளையாரப்பா! தேங்க்ஸ் பா! தோடு விஷயத்தை சூப்பரா முடிச்சுட்டே. ஆனால் இது என்ன புதிதாய் எட்டுக்கல்லு பேசரி குழப்பம். அதையும் எப்படியாவது சமாளித்து ஜானு காதில் விழாமல் பார்த்துக்கொள். அதற்கும் இன்னொரு நூத்தியெட்டு தேங்காய் போட்டுவிடுகிறேன்” என்று அக்ரீமெண்ட் போட்டு விட்டுப் பறந்தான் ஜானுவின் தாய் வீடு நோக்கி.
    அன்புடன்,
    RRG
    21/06/2020
     
    meepre likes this.
    Loading...

Share This Page