1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திட்டம் என்றால் திட்டம் - சுஜாதா சிறுகதை

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 22, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,401
    Likes Received:
    10,615
    Trophy Points:
    438
    Gender:
    Female
    திட்டம் என்றால் திட்டம் - சுஜாதா சிறுகதை
    (நன்றி : குமுதம் 25-07-1963)
    வியத்தகு திட்டம்கூட விலங்கைத்தான் கொண்டு வந்தது. எப்படி?
    என் பெயர் ஆத்மநாதன் (நண்பர்களுக்கு ஆத்மா) உயரம்: 5 அடி 10 அங்குலம்: எடை: 140 பவுண்ட், தொழில். இதில் என்ன தயக்கம்? சொல்லிவிடுகிறேன் - திருட்டு! ரயில் நிலையத்திலும், பஸ் ஸ்டாண்டிலும் செய்கிற சில்லறை வேலைகள் அல்ல; கொஞ்சம் பெரிய விவகாரம். முதல் போட வேண்டும். அகப்பட்டால் ஐந்து ஆறு வருஷம் விழும். இதெல்லாம் தொழிலில் உள்ள திருப்பங்கள்.
    கதையில், முடிந்த பிறகுதான் நீதி சொல்வார்கள். நான் இப்போதே சொல்லிவிடுகிறேன். என் முக்கியமான திருட்டுக்கு மற்றவர் உதவியை, அதுவும் பெண்களின் உதவியை நாடவே கூடாது. இந்த நூற்றாண்டின் மகத்தான திருட்டு ஒரு பெண் அணிந்த வெள்ளை 'ஸாரி'யால் பாழாகிவிட்டது.
    என்ன ஆயிற்று தெரியுமா?
    நான் திருடத் திட்டமிட்ட பாங்க் தியாகராய ரோட்டில் மெளனமான நிழலில் இருந்த ஒரு சிறிய பாங்க். ஆனால் பக்கத்திலிருந்த தொழில் கல்லூரியில் வேலை செய்பவர்கள் சம்பளம், 'ட்ரெஷரி' பணங்கள் எல்லாம் புரளுவதால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்கூட மாறும் என்று ராம்லால் சொன்னான். ராம்லால் யார் தெரியுமா? அந்த பாங்கியின் இரவுக் காவல்காரன்; எனக்கு ரொம்ப 'தோஸ்த்'. அவனுக்கு இந்தக் காவல் வேலை கிடைத்ததால்தான் இந்தத் திட்டத்திலேயே இறங்கினேன். தினசரி, காஷ் ரிஜிஸ்டரைப் பரிசோதித்து விட்டு, பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, இரும்புக் கிராதிகள் போட்ட அறையில் இருக்கும் இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டு, சாவிக் கொத்தை பாங்கின் ஏஜெண்ட் திரு.சுந்தரராமன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவார். அதை ஒரு தோல் பையில் போட்டுத் தன் அறையில் வைத்திருப்பார். சுந்தாராமன் வீட்டில் தனியாக இருக்கிறார். இதெல்லாம் எனக்கு ராம்லால் தந்த விவரங்கள்....
    இந்த விவரங்களில் உருவாயிற்று என் திட்டம்.
    அதற்கு ஒரு பெண் தேவையாயிருந்தது. மற்றும் ஒரு கார் தேவையாயிருந்தது. பெண் பெயர் இந்திராணி (இந்திரா என்று கூப்பிட்டால் இவளுக்குக் கோபம் வரும்.) இவளை எனக்கு ராஜசேகரன் என்பவர் மூலம் தெரியும். ராஜசேகரனிடம் நான் ஆறு மாதங்களுக்கு முன் வேலை செய்து கொண்டிருந்தேன். அவர் நிஜமாகவே பெரிய மனிதர். அவர் நினைத்தால் லாயிட்ஸ் பாங்கைக்கூடக் கொள்ளையடிக்க முடியும். கெட்டிக்காரர். சினிமா எடுத்தார்; படம் 3000 அடி பிடித்த பிற்பாடு ஓடாது என்று தெரிந்து கொண்டு ஒரு மார்வாடிக்கு விற்று விட்டார். கிண்டி ரேசில் இவர் குதிரை ஒன்று ஓடுகிறது (ப்ளு டைமண்ட்).
    மன்னிக்கவும். நான் சொல்ல வந்தது இந்திராணியைப் பற்றி. குமாரி இந்திராணி ராஜசேகரனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சினிமா நடிகை குட்டி நடிகை. இவளை நீங்கள் கூர்ந்து கவனித்தால், எல்லா சினிமாப் படங்களிலும் பார்க்கலாம்.கதாநாயகி சந்தோஷமாகப் பாடும் போது திடீரென்று பின்னாலிருந்து தோன்றும் தோழிகள் பரிவாரத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது பெண்ணாக இருப்பாள். 'தேனருவி என்ற படத்தில் இவளை கிட்டத்தில் காட்டினார்கள். (கொட்டகை முழுக்க சீட்டி!) இவளுக்கு இப்போது அதிகத் தேவையில்லை. பல படங்களில் 'நடித்து' விட்டாள். ஒரு வீடு வாங்கி விட்டாள். அவ்வளவு பணமும் எப்படிக் கிடைத்தது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம், அல்லது இருட்டு.
    ராஜசேகரனிடமிருந்தபோது இவளை எனக்குப் பழக்கம். தப்பாக ஒன்றும் இல்லை. இவளைத்தான் எனக்கு உடந்தையாகச் சேர்த்துக் கொண்டேன்.
    நான் என் திட்டத்தை இவளிடம் விவரித்தபோது, அயர்ந்து போய் என் முதுகில் தட்டி, "ஆத்மா! நீ பெரிய ஆள் ஐயா!" என்று சிநேகித பாவத்தில் அணைத்துக் கொண்டாள்.(யூடி கொலோன் வாசனை) என் திட்டத்தினால் அவளுக்குப் பத்தாயிரமாவது கிடைக்கும் என்று தெரிந்ததும். மிகுந்த ஆர்வத்துடன் நான் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் காத்திருந்தாள்.
    கார். நான் உபயோகப்படுத்தியது புது கார். ராஜசேகரனிட மிருந்து இரவல் வாங்கியது.
    திருட்டு சனிக்கிழமை இரவு 12-30 மணிக்கு ஏஜண்ட் திரு.சுந்தரராமன் வீடு இருக்கும் அந்தத் தெருவின் கோடியில் இந்திராணியுடன் காரில் மரநிழலில் காத்திருந்தேன். இந்திராணி
    வெள்ளை ஸாரி அணிந்திருந்தாள். காரில் மிக உஷ்ணமாக இருந்தது. காற்றோட்டம் இல்லை. பயத்தால் வேறு வியர்வை.
    இந்திரா பதற்றமாக மூச்சு விட்டுக் கொண்டு, 'ஆத்மா! ஏதாவது தப்பாக நடந்துவிட்டால் என்னை மாட்டி வைத்துவிடாதே" என்றாள். நான் "பயப்படாதே இந்திரா. உன் நடிப்பு முடிந்ததும் அதில் உனக்குக் கொஞ்சம்கூடத் தொடர்பு கிடையாது உடனே நீ வீட்டுக்குப் போயிடலாம். அதோ பார் கோடியில் இடது பக்கத்தில் தெருவிளக்கு அருகில் தெருவுடன் ஒட்டியிருக்கும் அந்த வீடுதான். தயாரா?" என்றேன். சைபர் வடிவத்தில் அவள் உதடுகள்தான் குவிந்தன. சப்தம் வரவில்லை. அவ்வளவு பயம்.
    தெருவில் யாருமில்லை. கனமான நிசப்தம். நான் காரைக் கிளப்பி வெகு வேகமாகச் செலுத்தி, சுந்தரராமன் வீட்டு எதிரில் சரேல் என்று 'ப்ரேக்' போட்டு நிறுத்தினேன். இந்திரா இறங்கிக் கொண்டாள்.
    நான் இறங்கினதும் என்னிடம் வந்து என்மேல் மயக்கமாகச் சாய்ந்தாள்."கீழே போட்டு விடாதே" என்று மெதுவாகச் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டாள். நான் அவளைக் கைவாகு கொடுத்து அழைத்துச் சென்றேன்.
    திரு. சுந்தரராமன் வீட்டுக் கதவை அடைந்து தட்டினேன். பொத்தானை அழுத்தினேன். பதற்றத்துடன் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்துவரை எண்ணிவிட்டு மறுபடி கதவைத் தட்டினேன்.
    இந்திராவின் மயக்கம் உண்மையான மயக்கம் போலவே இருந்தது. அவ்வளவு துவண்டு என்மேல் சாய்ந்திருந்தாள் மறுபடி தட்டினேன்.
    உள்ளே மின்சார விளக்கைத் தட்டும் சப்தம் கேட்டது.
    செருப்பு சத்தம் கேட்டது.
    "ஆத்மா! ஜாக்கிரதையாக நடந்து கொள்: ஒரு தப்பு நடந்தாலும் எல்லாம் கெட்டு விடும்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். கதவு திறந்து சுந்தரராமன் எதிரே நின்றார்- நடுத்தர வயது. தூக்கக் கலக்கம், டிரெஸ்ஸிங் கவுன். "எஸ்" என்றார். என் மேல் சாய்ந்திருந்த பெண்ணைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்கினார்.
    நான் பதற்றம், அவசரம், கொஞ்சம் பயம் எல்லாவற்றையும் கலத்து, "ஸார், நான் காரில் வேகமாக வந்து கொண்டிருந்தபோது இந்தப் பெண் உங்கள் வீட்டு எதிரில் தெருவில் மயக்கமாக விழுந்து
    கிடந்தாள் நல்ல வேளை, 'பிரேக் போட்டேன். உங்கள் வீட்டில் 'போன்' இருக்கிறதா? டாக்டருக்குப் போன் செய்யலாம்" என்றேன்.
    அவர் "ஒ மை குட்னஸ்! உள்ளே கொண்டு வாருங்கள்! மூச்சு இருக்கிறதா?" என்றார்.
    "இருக்கிறது. சாதாரண மயக்கம் போலத்தான் இருக்கிறது.'
    இடது புறம் இருந்த அறையில் விளக்கு அருகில் இருந்த படுக்கையில் இந்திராவைச் சாய்த்தேன் அழகாகப் படுத்தாள். மூச்சை மேலும் கீழும் பலமாக (சற்றுக் கவர்ச்சிகரமாக) விட்டாள். கண் மூடியிருந்தது. நான் சொன்னேன்: "தயவு செய்து ஒன்று செய்யுங்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளியுங்கள். நான் அதற்குள் டாக்டருக்கு டெலிபோன் செய்கிறேன். அந்த ஜன்னல்களைக் கொஞ்சம் திறந்து விடுங்கள். டெலிபோன் எங்கே இருக் ...?"
    ''கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். இதோ வருகிறேன்"
    முழுவதும் நம்பிவிட்டார். பக்கத்தில் இருந்த செய்தித்தாளை எடுத்து அவள் முகத்தில் அவர் விசிறிக் கொண்டிருந்தபோது நான் அந்த அறையை விட்டு டெலிபோன் இருக்கும் எதிர் அறைக்கு வந்தேன். அவசரப்படாமல், கண்டபடி சில எண்களை டயலில் சுற்றி விட்டு, அவரது தோல் பையைத் தேடிக்கொண்டே, "டாக்டர் ராமுவா? நான்தான் சந்திரன் பேசுகிறேன் . ஒருத்தர் மயக்கமாக விழுந்துவிட்டார். ஹிஸ்டீரியா மயக்கம் போல்... உடனே வாருங்கள். ஆமாம்..."என்றேன்.
    சுந்தரராமனின் தோல் பை மேஜை மேலேயே இருந்தது. அதனுள் பாங்கின் சாவிக்கொத்து இருந்தது. அதைக் கொஞ்சம்கூட சப்தம் எழுப்பாமல் என் கைக்குட்டையால் அமுக்கி, பைக்குள் போட்டுக் கொண்டு டெலிபோனை வைத்து விட்டு மறுபடி முதல் அறைக்குச் சென்றேன்.
    "டாக்டர் வந்துவிடுவார்" என்றேன்.
    சுந்தரராமன் அவள் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்து, "முகத்தில் தண்ணீர் அடித்தேன். சற்றுப் புரள்கிறாள். மயக்கம் தெளிந்துவிடும்போல் தோன்றுகிறது" என்றார்.
    இந்திரா நான் சொல்லிக் கொடுத்தபடியே செய்தாள் இப்படி யும், அப்படியும் புரண்டாள். கண்ணைக் கசக்கினாள் மறுபடி புரண்டாள்; கண் விழித்தாள்.
    திடீரென்று எழுந்து உட்கார்ந்துகொண்டு, ''ஐயோ' நான் இங்கே எப்படி வந்தேன்?" என்றாள். (நான் என்ன நன்றாக நடிக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே) சுந்தரராமன் தந்தைபோல,
    “மிஸ், பயப்படாதே நாங்கள் உன் நண்பர்கள். இது என் வீடு; என் பெயர் சுந்தரராமன். என் வீட்டு எதிரில் தெருவில் நீ மயக்கமாக விழுந்திருந்தாய். காரில் வரும்போது பார்த்து உன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறார்... இவர் பெயர்..." என்று என்னைப் பார்த்து நிறுத்தினார்.
    "சுந்தரமூர்த்தி" என்றேன். (திடீரென்று உதயமான சந்திரன்)
    "நான் தெருவிலா விழுந்து கிடந்தேன்?'' என்று தீனமாகக் கேட்டாள்.
    "ஆமாம்!"
    இந்திரா விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்; எனக்குக் கொஞ்சம் பயமாகிவிட்டது. இதெல்லாம் நான் தயாரித்திருந்த கதை வசனத்தில் கிடையாதே...
    "அழாதே... இவர் டாக்டருக்குப் போன் பண்ணியிருக்கிறார்... நாங்கள் எல்லாம் உன் நண்பர்கள். அழாதே!" என்று கைக்குட்டையை அவளிடம் கொடுத்தார்.
    நான், ''மிஸ் உங்கள் வீட்டு விலாசம் என்ன? சொல்லுங்கள்" என்றேன்.
    அவள், என்னைக் கவனிக்காமல் சுந்தரராமனைக் கனிவுடன் பார்த்து, "சார் எனக்கு இந்த மாதிரி மயக்கம் அடிக்கடி வரும். சினிமாவுக்குப் போயிருந்தேன். கிட்டத்தில்தானே என்று தனியாகத் துணை இல்லாமல் போயிருந்தேன். அது தப்பு. திரும்ப வரும்போது... மயக்.. ஐயோ!" என்றாள்.
    "என்ன?"
    ''சினிமாவுக்குப் போவதை யாரிடமும் நான் சொல்லவில்லை. வீட்டில் ரொம்பக் கவலைப்படுவார்கள்!" என்னை முதல் தடவை பார்ப்பதுபோலப் பார்த்தாள். "ஸார் என்னைத் தயவு செய்து உங்கள் காரில் என் வீட்டில் கொண்டு விட்டு விடுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு.வீட்டில் ரொம்பக் கவலைப்படுவார்கள்."
    சுந்தரராமன், 'இல்லை. கொஞ்சம் இருங்கள்; உங்களுக்கு ரொம்பக் களைப்பாக இருக்கும். இவர் டாக்டருக்குத் தெரிவித்திருக்கிறார்.டாக்டர் வந்து விடுவார்" என்றார்.
    ''இல்லை. எனக்கு எல்லாம் சரியாகி விட்டது. வீட்டுக்குப் போய், தூக்க மாத்திரை சாப்பிட்டதும் முழுவதும் சரியாகிவிடும். ப்ளீஸ்! என்னை வீட்டில் கொண்டு விட்டு விடுங்கள்...!" என்று அழுகையுடன் கெஞ்சினாள்.
    'ஸார்! உங்கள் காரில் இவளைக் கொண்டு விட்டு விடுங்கள்" என்றார் சுந்தரராமன்.
    ''சரி ஸார்! அட்ரஸ் என்னம்மா?" என்றேன். சொல்லிக் கொடுத்திருந்த முகவரியைச் சொன்னாள். தடுமாறி நடந்தாள். என்னைப் பிடித்துக் கொண்டே சுந்தரராமன் வீட்டு முன் விளக்கைப் போட்டு வாயில் வரை வந்தார்.
    காரில்-
    "எப்படி?" என்றாள் இந்திரா.
    ''பிரமாதம் போ! சாவித்திரி பிச்சை வாங்க வேண்டும்?"
    ''பன்னிரண்டு நாள் இதை ஒத்திகை பார்த்தேனாக்கும்!"
    "நான் சொல்லிக் கொடுத்ததை மீறிக் கொஞ்சம் போய் விட்டாய்"
    ''ஆத்மா! அந்த மனிதர் நிஜமாகவே நம்பி விட்டார். நான் அழுதபோது, அவர் கண்ணிலும் கண்ணீர் வந்துவிட்டது. என் நடிப்புத் திறமை?"
    "ரொம்ப அபாரம் - உன் திறமையை டைரக்டர்கள் தான் கவனிக்கவில்லை" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, காரை விரட்டினேன். எனக்கு வேலை நிறைய இருந்தது. போகும் வழியில் அவளை அவள் வீட்டருகில் இருந்த தெரு திருப்பத்தில் இறக்கி விட்டேன்.
    ராம்லால் நெற்றியைத் துடைத்துக் கொண்டு காத்திருந்தான். மிக மெளனமாக இருட்டில் பார்க் அருகில் காரை நிறுத்தினேன்.
    "சாவி கிடைத்ததா?" என்றான்.
    சாவிக்கொத்தை வாங்கி அவசர அவசரமாகப் பாங்கைத் திறந்தான் அவன். இருளில் அழைத்துச் சென்றான்.
    'டார்ச்' விளக்கின் வெளிச்சத்தில் சுவரில் பதிந்திருந்த இரும்புப் பெட்டியைத் திறந்தோம் பணம்! பணம்! பணம்! ஒழுங்காக இருந்த ஆயிர ஆயிர அடுக்குகள். பக்கத்திலிருந்த குப்பைக் கூடைகளைக் காலி செய்து அவைகளில் பணக்கட்டுகளை நிரப்பினோம். காரில் 'டிக்கி'யைத் திறந்து அவைகளை அதில் கொட்டி நிரப்பினோம்.
    வேலை முடிந்தது. ராம்லால் டிக்கியை மூடி சாவியைச் கொண்டு என் கையில் கொடுக்கும்போது-
    திடீர்ப் புயல் போல ஐந்தாறு, 'ஜீப்'கள் வந்து டயரைக் கிழித்துக் கொண்டு பிரேக் போட்டு எங்களைச் சூழ்ந்து கொண்டு மின்னல் போல் நடந்தது! சுற்றிலும் போலீஸ்காரர்கள். சுலபத்தில் எங்களைப் பிடித்தனர். ஓடக்கூட நேரமில்லை.
    நான் தவித்தேன்! என்ன தப்புச் செய்தேன் திட்டத்தில்? எனக்கு அகப்பட்டுக் கொண்டதில் வருத்தமில்லை. எவ்வளவு மூளை நிறைந்த திட்டம் பாழ்பட்டதுதான் வருத்தம். எப்படி பாழ்பட்டது தெரியுமா? எனக்கு சொல்லவே லெட்கமா இருக்கிறது.
    காவல் நிலையத்தில் ஒரு போலீஸ்காரனிடம் வாங்கி காலை செய்தித்தாளைப் பார்த்தேன். ஒரு அடி உயர எழுத்துக்களில் என் திருட்டு முயற்சியைப் பற்றிய செய்தி வந்திருந்தது! சுந்தரராமனின் புகைப்படம், என் புகைப்படம் (எப்பொழுது எடுத்தார்கள்? அதுவும் தலை வாரிக் கொள்ளாமல்!) சுந்தரராமனுடன் அந்தச் செய்தித்தாளின் நிருபராம் (சோம்பேறி)
    பெரிய கித்தாய்ப்பாக என் திட்டம் பாழானது எப்படி என்று விவரித்திருந்தார்கள், அந்தப் பேப்பரில்.
    பாங்கின் ஏஜெண்ட் திரு.சுந்தரராமன் (வயது 42) 15 வருடம் பாங்கில் வேலை செய்து வருபவர். சொன்னார்: "முதலில் நான் நிஜமாகவே ஏமாந்து விட்டேன். ஆனால் அவன் அந்தப் பெண்ணுடன் காரில் திரும்பப் போகும் போது அவள் அணிந் திருந்த வெள்ளை ஸாரியைக் கவனித்தேன். என்னடா இந்தப் பெண் தெருவில் மயக்கமாக விழுந்திருந்தாள் என்றானே? தெருவோ புதிதாகச் செம்மண் போட்ட தெரு! அவள் புடவையோ ஒரு கறையுமில்லாமல் அப்பழுக்கற்று இருந்தது! எனக்குக் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. அப்புறம் அவன் அவசர அவசரமாக டெலிபோனில் பேசியது ஞாபகம் வந்தது. டாக்டரை வரச்சொல்லி விட்டேன் என்றான். எந்த இடத்துக்கு வரவேண்டும் என்று டெலிபோனில் சொல்லவில்லையே? டாக்டருக்கு எப்படி என் வீட்டு முகவரி தெரியும்!. உடனே என் அறைக்குச் சென்று என் பையைத் தேடினேன். பையில் சாவிக்கொத்து இல்லை!
    உடனே போலீஸுக்கு...
    பார்த்தீர்களா! இப்படித்தான் ஒரு சின்ன விஷயத்தில் என் மாபெரும் திட்டமே கெட்டுவிட்டது... யாராவது ஒரு நல்ல வக்கீலாக இருந்தால், பார்த்துச் சொல்லுங்களேன்:
    _ சுஜாதா
    JAYASALA42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,973
    Likes Received:
    12,823
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி. மிக அருமை. சம்பவம் நடக்கும் இடத்திற்கே சென்று வன்தமாதிரி..
     

Share This Page