1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தானம் நிதானம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 24, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:தானம் நிதானம்
    அம்மான்னா சும்மா இல்லடா!:hello:

    எல்லாம் வாங்கிண்டு வந்துட்டியா?
    ரவி அனைத்தையும் எடுத்து அம்மாவின் முன் பரப்பினான். நல்ல கிழங்கு மாதிரி வெள்ளி டம்ளர், ஸ்வர்ண தானத்துக்கு பவித்திர மோதிரம். சாப்பிடறவா எல்லாருக்கும் சுத்தமான பத்தாறு காட்டன் வேஷ்டி.
    சொந்தக்காரா யாராவது தானம் வாங்கிக்க வராளான்னு வாத்யார் கேட்டார்.
    அதெல்லாம் வேண்டாம். எதுக்கு இருக்கப்பட்டவாளுக்கே கொடுக்கணும். மடத்துல இருக்கற ஏழை ப்ராம்மணா, அப்புறம் பாடசாலைல இருக்கற குழந்தேளுக்கு போய் சேரட்டும். அவர்ட்ட கண்டிஷனா சொல்லிடு
    சரிம்மா
    அப்புறம் கோதானம் சொன்னேனே.. என்னாச்சு விசாரிச்சியா?
    கேட்டிருக்கேன். பக்கத்துல அம்பத்தூர்ல ஒரு முதியோர் இல்லம் இருக்காம். அவா கோசாலையும் வச்சு பராமரிக்கறாளாம். அங்க தானம் கொடுக்கறோம்னு சொல்ல சொல்லிருக்கேன். அது இல்லாட்டி காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு சின்ன கோவில் இருக்காம். அந்த அர்ச்சகர் ஸ்வாமி கோவிலுக்குன்னு மாடு வேணும்னு கேட்டிருந்தாராம். அங்க வேணும்னாலும் கொடுக்கலாம்
    நல்லதாப் போச்சு. ரெண்டுபேர்ல யார் வந்தாலும் கொடுத்துடலாம். மாட்டுக்கு என்ன பண்ணிருக்கே?
    மாடில பால் ஊத்த வர்றாரே சண்முகம். அவர்ட்ட சொல்லிவச்சிருக்கேன். நல்ல இளம்மாடா , கன்னு போட்டு ரெண்டு மாசத்துக்கு மேல இருக்காத நல்ல கறக்கற மாடா இருக்கணும்னு சொல்லிட்டேன். ஏற்பாடு பண்றேன்னு சொல்லிருக்கார். முப்பதாயிரம் ஆகும்னார். பரவால்லன்னேன்
    என்னது பரவால்லன்னு சொல்றே? நன்னா கொடுக்கணும். கூட ஆனாலும் ஓகே சொல்லிடு. சரியா?
    ரவி தலையாட்டினான். என்னதான் செய்தாலும் மனசுக்குள் உறுத்தியது. இன்னும் அப்பாவை நன்னா பாத்துண்டிருக்கலாமோ? கரெக்டா ஆஸ்பிடல்ல சேர்த்து எல்லாம் தான் பண்ணினோம். ஒருவேளை டாக்டர் சொன்னவுடனே ஆபரேஷனுக்கு ஒத்துண்டிருக்கலாமோ. வயசானவராச்சே, ஆபரேஷனுக்கு உடம்பு தாங்குமான்னு ஒரு செகண்ட் ஒப்பீனியன் கேக்க நினைச்சது தப்பா?
    பத்தாம் நாள் காரியம் நடந்துண்டிருக்கும்போதே போன் வந்தது. ” மாடு கிடைச்சிடுத்து மா. திருவள்ளூர் பக்கத்துல இருக்கறவர் விக்க ரெடியா இருக்காராம். கன்னு போட்டு ஒன்றரை மாசம் தான் ஆறதாம். 32000 சொல்றார்”
    நல்லதாச்சு. பன்னெண்டாம் நாளன்னிக்கே மத்த தானத்தோட கோதானத்தையும் கொடுத்துடலாம். நீ என்ன பண்றே அவாளோட பேசி மாட்டோட வீடியோ ஒண்ணு அனுப்ப சொல்லு. நல்லதா ஒரு புது அங்கவஸ்திரமும், ஒரு எட்டுமுழ வேஷ்டியும் வாங்கு. வரும்போதே மாட்டுக்கு கொஞ்சம் புல் வைக்கோல் இந்த மாதிரி ஆகாரமும் கொண்டு வரச்சொல்லிரு
    அப்புறம் என்ன பண்றே? பால் கறக்கறா மாதிரி ஒரு பாத்திரமும் செம்பும் வாங்கிண்டு வா. மாட்டுக்கு ஒரு மாலை வாங்கிண்டு வந்துரு. வேனுக்கு என்ன சார்ஜோ அதை நாம கொடுத்துடறோம்னு சொல்லிடு. அப்புறம் யார் தானம் வாங்க வரான்னு சொன்னே?
    அந்த முதியோர் இல்லத்து நிர்வாகிதாம்மா. அவா கோசாலைக்கு வாங்கிக்கறேன்னு சொல்லிட்டா. பால் , இல்லத்துக்கு ஆச்சு. மேலும் இந்த பஞ்சகவ்யம் முதலான இயற்கை எருவெல்லாம் தயாரிக்கறாங்களாம். டீடெய்ல்ஸ் அனுப்பியிருந்தார்.
    நல்லதாச்சு. வாத்யார்ட சொல்லிரு. கோதானமும் கையோட கொடுத்துடறோம்னு. அப்புறம் மறக்காம தானம் வாங்கிக்க வரவருக்கும் ஒரு வேஷ்டி துண்டு வாங்கிடு. ஆயிரத்தொண்ணு தட்சணை கொடுத்துரு சரியா?
    சரிம்மா….
    பன்னெண்டாம் நாள் . அழகழகா பசங்கள். கட்டுக்குடுமியோட வந்து தானம் வாங்கிக்கச்ச மனசு நெறஞ்சு போச்சு. ஸ்வர்ண தானம் வாங்கிண்டவா கையோட அந்த பவித்திர மோதிரத்தை போட்டுண்டு தடவி தடவி பாத்து சந்தோஷப்பட்டு ஆசிர்வாதம் பண்ணினப்ப மளுக்குன்னு கண்ணீர் வந்தது ரவிக்கு.
    கோதானம் கொடுத்துடலாமா? மாடு வந்துடுத்தா?
    வந்தாச்சு ஸ்வாமின். வாசல்ல நிக்க வச்சிருக்கோம்…
    கூப்பிடுங்கோ. நடுவாசலுக்கு வரச்சொல்லுங்கோ. உங்க ஆத்துக்காரி எங்கே? அவாளைக் கூப்பிட்டு ஒரு வாளி ஜலமும் , கொஞ்சம் எண்ணெய், மஞ்சப்பொடி கொண்டு வர சொல்லுங்கோ…
    அம்மாடி. அந்த ஜலத்தை மெதுவா மாட்டோட முகம், வயிறு , வால்பக்கமெல்லாம் விடு. அப்புறம் அந்த எண்ணெயை மாட்டோட நெத்தி, பின்பக்கமெல்லாம் தடவு. தடவிட்டியா? இந்தா இந்த மஞ்சப்பொடியை நன்னா குழைச்சு நெத்தில, முதுகுல பின்னாடி வால்ல எல்லாம் தடவு. அப்படியே கன்னுக்குட்டிக்கும் பண்ணு பாப்போம். அந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடக்கொடும்மா.
    அப்பா, மாட்டை விக்கறவரே… முன்னாடி வாங்க. ரவி… வெத்தலை பாக்கு தட்டுல வச்சு பணத்தை அவர்ட்ட கொடுத்துட்டு மாட்டோட கயிறை வாங்கிக்கோ… உங்க பேர் சொல்லுங்க ஐயா…..
    எம் பேரா சாமி… சீனிவாசன்ங்க
    ….
    ரவி திகைத்துப்போனான். ” டேய் என்னடா மசமசன்னு நிக்கற? மாட்டோட கயிறை வாங்கு. ”
    நான் சொல்ற மந்திரத்தை சொல்லிண்டே,” தானம் வாங்கறவர் எங்க, இங்க வாங்கோ… அந்த மந்திரத்தை சொல்லிண்டே அவர் கைல கொடு. அம்மாடி நீயும் வந்து சேர்ந்து தம்பதியா கொடு. அப்படியே அந்த மாட்டுக்கு மாலையைப் போட்டு ஆரத்தியெடுத்துடு.
    ரவி ஒரு தட்டில் வேஷ்டி துண்டு, ஆயிரத்தொரு ரூபாய் தட்சணை வைத்து கொடுத்து நமஸ்கரித்தான். மாட்டிற்கு மேலே வேஷ்டியும் கன்றுக்கு அங்கவஸ்திரமும் போர்த்தி , பால் கறக்கத்தேவையான பாத்திரங்களும் ஒரு வருடத்திற்கான பராமரிப்பு செலவையும் கொடுக்கவே அவர் சந்தோஷமானார்.
    ரொம்ப நன்னாருப்பேள். என்னப்பன் ஸ்ரீநிவாஸன் உங்க குடும்பத்துக்கு எல்லா நலனையும் கொடுக்கட்டும். ரவி நெக்குருகி போனான்
    அம்மா எங்கருக்கே?
    இங்க தான் இருக்கேன். கால்வலின்னு கொஞ்சம் தைலம் தடவிண்டேன். சொல்லு ……
    அப்படியே அம்மாவின் மடியில் சரிந்து குலுங்கி அழ ஆரம்பித்தான்.
    ”பாத்தியாம்மா. தானம் கொடுக்க வந்தவரும் ஸ்ரீநிவாஸன். அத வாங்கிண்டவரும் ஸ்ரீநிவாஸன் க்ருபையால நன்னாருப்பேன்னார். அதுவுமில்லாம மத்த தானம் வாங்கிக்க வந்தவாள்ள ஒருத்தர் பேரு ரங்கநாதனாம், ஒருத்தர் பேரு வேதாந்தமாம். ஒருத்தர் ஆராவமுதனாம். எல்லாம் அந்த மூணு தலைமுறை பேரா அமைஞ்சது வாத்யாரே அதிசயப்பட்டுட்டார். முன்னோரெல்லாம் வந்து ஆசிர்வாதம் பண்ணிட்டா. இனிமே வாழ்க்கைல குறையே வராதுன்னு சொல்லிட்டா. இவ்ளோ நாளா மனசு உறுத்திண்டே இருந்தது. இப்ப மனசு நிறைஞ்சுடுத்தும்மா….”
    எனக்குத் தெரியுண்டா ரவி. உம்மனசுல எவ்ளோ புழுங்கிண்டிருந்தேன்னு. அதான் இப்ப எல்லாம் நன்னா நடந்து அப்பாவைக் கரையேத்தியாச்சு. அப்பாவுக்கும் எந்த குறையுமில்லாம நன்னா நடத்திண்டார், இதென்ன குழந்தையாட்டமா? கண்ணைத் தொடைச்சுக்கோ. நாளைக்கு சுபம். வர்றவாளை நன்னா வாய்நிறைய வாங்கோன்னு கூப்பிட்டு வயிராற சாப்பிடவச்சு மனசார தாம்பூலம் கொடு. சரியா? போடா போ………
    ரவி வெளியே சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு வேகமாக செல்போனை எடுத்துக்கொண்டு பின்பக்கம் சென்றவள், “ஹலோ வாத்யார் மாமாவா! நமஸ்காரம் மாமா… ரொம்ப சந்தோஷம். நான் சொன்னமாதிரியே பேர் சொல்ல சொன்னதுக்கு. ஆமா தானம் கொடுக்க வந்தவர்ட்டயும் முன்னாடியே பேசி ஸ்ரீநிவாஸன்னு சொல்லுங்கோ சொல்லிருந்தேன். எங்காத்துக்காரர் ஆயுசு முடிஞ்சிடுத்து. இவன் என்ன பண்ணுவான். மனசுக்குள்ள சரியா கவனிக்கலையோன்னு மருகிண்டே இருந்தான் . இப்ப அவன் மனசு பரிபூரண திருப்தியாயிடுத்து. ரொம்ப சந்தோஷம் மாமா……… ஆமா மாமா.. எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும். வச்சுடறேன்.”.
    போனை அணைத்தவள் ”என்னை மன்னிச்சுடுங்கோன்னா, அவனைத் தேத்த எனக்கு வேற வழி தெரில “ தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

    வாட் ஸ்டாப் நன்றி
    மனசைத் தொடும் எழுத்துக் கோவை.
     
    vidhyalakshmid likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,750
    Likes Received:
    12,573
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Last edited: Jun 14, 2022
    vidhyalakshmid likes this.

Share This Page