1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

தாசன் கவிதை

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 14, 2023.

 1. Thyagarajan

  Thyagarajan IL Hall of Fame

  Messages:
  10,781
  Likes Received:
  11,663
  Trophy Points:
  590
  Gender:
  Male
  தாசன் கவிதை
  (வாட்ஸ்ஆஃப் பகிர்வு)
  பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு நின்றவன்​
  கவியரசர் கண்ணதாசன்
  குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவன் கண்ணதாசன்.
  “மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தைச்சித்தன் அவன்.
  அந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவனை விட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது.
  “பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.
  “பாடுவது கவியா? – இல்லை
  பாரிவள்ளல் மகனா?
  சேரனுக்கு உறவா?
  செந்தமிழர் நிலவா?”
  இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
  இன்றைய பாடல்களை எடுத்துக் கொண்டால் “என்ன விலை அழகே?” என்ற கேள்வி இருக்கும். கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது. அடுத்த அடி “சொன்ன விலைக்கு வாங்க வருவேன்” என்று தொடர்ந்து மேலே போய்க் கொண்டேயிருக்கும்.
  கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவனுக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “உன் புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு “என் இதயம் தந்த விலை” என்ற பதில் தொடர்ந்து வரும்.
  “நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவான் நம் கவிஞன். ஏனெனில் அவன் ஒரு “Perfectionist”. அவன் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தையை அவனால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.
  உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டையும் நடப்பையும் முறையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவனாக இருக்க வேண்டும். கற்பனைத் திறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவனாக இருத்தல் வேண்டும்.
  இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?
  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞர்களுள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டினத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது.
  குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:
  “இரவுக்கு ஆயிரம் கண்கள்,
  பகலுக்கு ஒன்றே ஒன்று
  அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
  உறவுக்கு ஒன்றே ஒன்று”
  பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :
  The night has a thousand eyes,
  And the day but one;
  Yet the light of the bright world dies
  With the dying sun.
  The mind has a thousand eyes,
  And the heart but one:
  Yet the light of a whole life dies
  When love is done.
  காப்பியடிப்பது எல்லோருக்கும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்து கொடுக்க அறிவு ஜீவிகளால் மட்டுமே முடியும்.
  “உள்ளம் என்பது ஆமை” என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஓர் உரைகல்.
  “தெய்வம் என்றால் அது தெய்வம் .. அது
  சிலையென்றால் வெறும் சிலைதான்..
  உண்டு என்றால் அது உண்டு ..
  இல்லை என்றால் அது இல்லை”
  என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சுமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருப்பான் கண்ணதாசன்.
  “உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
  உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
  உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
  உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே?”
  திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கைச் சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
  “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.
  வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?
  தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். 'கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்' என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்குப் பயிற்றுவித்த பாடமது’.
  “நடைபாதை வணிகனென
  நான் கூறி விற்றபொருள்
  நல்ல பொருள் இல்லை அதிகம்”
  என்று அவனே பாவமன்னிப்பு கேட்டிருக்கிறான். (எலந்தப்பழம் பாட்டைத்தான் சொன்னானோ என்னவோ எனக்குத் தெரியாது.)
  “ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்.
  ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது” என்று உரைத்தவன் அவன்.
  ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனாகத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன்.
  மனிதஜாதியின் வாழ்வியல் தத்துவத்தை ‘பிட்ஸ்மேன் சுருக்கெழுத்’தில் இதைவிட யாரால் தெளிவாகச் சொல்ல முடியும்?
  “குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
  கொத்தலர் பூங்கழல் நப்பின்னை கொங்கைமேல்
  வைத்துக் கிடந்த மலர்மார்பா .. ..” என்று ஆண்டாளைப் பின்பற்றி கண்ணதாசனும் பாடியிருந்தான்.
  “குத்துவிளக்கெரிய/ கூடமெங்கும் பூமணக்க/ மெத்தை விரித்திருக்க/ மெல்லியலாள் காத்திருக்க” – பச்சைவிளக்கு படத்தில் எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி நடிக்க, இந்துஸ்தானி வாத்தியமான ஷெனாய் இசைக்கையில் மனதைப் பிழிந்தெடுக்கும்.
  ஒளிவு மறைவு இல்லாதவன் என்று சொன்னால் அது கண்ணதாசனுக்குத் தான் பொருந்தும். உள்ளதை உள்ளதுபோல் சொல்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையால் கண்ணதாசன் பெற்ற ஆத்மார்த்த ரசிகர்கள் ஆயிரமாயிரம்.
  அதே சமயம், இது அவனுக்கு பின்விளைவையும் ஏற்படுத்தியது. கடுமையான விமர்சனங்களுக்கு அவன் ஆளானான். “போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்” என்று அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் மனதுக்கு சரியென்று பட்டதைச் செய்து முடிப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டிருந்தது.
  துணிச்சல் தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட கண்ணதாசனிடம் சற்று மிகுதியாகவே காணப்பட்டது.
  “நான் கவிஞனும் இல்லை/ நல்ல ரசிகனும் இல்லை/ காதலெனும் ஆசையில்லா/ பொம்மையும் இல்லை”
  இந்த வாக்குமூலத்தில் அவனது தன்னடக்கத்தை மட்டுமின்றி அவனது அந்தரங்க இயல்பையும் அவன் பிரகடனப்படுத்தி இருப்பதை நம்மால் காணமுடியும்.
  “ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்
  சேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்
  நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
  ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”
  – (தொகுதி-பாடல் 1 ‘பெண்மணீயம்)
  “தர்மா தர்மமெலாம் சாவுக்குப் பின்னரே
  தங்கமே கிண்ணமெங்கே?
  சரிபாதி நீயுண்டு தருவாய் என் கையிலே
  தழுவாது மரண பயமே!” – (தொகுதி IV, பாடல்-2, ‘மதுக்கோப்பை’)
  கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள்.
  ரத்தத்திலகம் என்ற படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” என்று பாடுவான். பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இவை.
  [உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. “கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பைக் குறிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் விளக்கம். அது இங்கே நமக்கு தேவையில்லாதது]
  “பாரசீகப் பாவலனும் சேராத பைங்கிளிகாள்” (தொகுதி IV-பாடல் 1) என்று உமர்கய்யாம் குறித்தே கவிஞன் பாடியிருக்கிறான்.
  கண்ணதாசனின் பாடல்களில் சங்ககால புலவர்கள் முதல் சமகால அறிஞர்களின் கருத்துக்கள்வரை தழுவல்களாகப் படித்து இன்புற முடியும். (கண்ணதாசனுக்கு ‘தழுவல்’ என்றால் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?)
  இத்’தழுவல்’ காரியங்களைப்பற்றி கவிஞர் கண்ணாதாசன் கூறிய விளக்கமிது:
  “சமஸ்கிருத மொழியில் ஓதப்படும் கல்யாண மந்திரத்தில் ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று பாடல்வரிகளாக எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்ததல்லவா?” என்று கேட்டிருந்தான். அவன் சொன்னது முற்றிலும் உண்மை.
  “காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடைத்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,
  “கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லோருக்கும் புரிகின்ற மொழியில்:
  “பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
  சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
  தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”
  என்று பாடியிருப்பான்.
  பிற அறிஞர்களின் சாத்திரங்களை நம் மொழியில் மொழி பெயர்க்கும் போது நம் மொழிக்கு மற்ற மொழியினரும் ரசிகர்களாகிறார்கள் என்பது மட்டுமின்றி, உலகளவில் ஒரு அங்கீகாரம் கிடக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
  கணியன் பூங்குன்றனார் என்ற ஒரு பழம்பெருங்கவிஞன். ஒரே ஒரு பாடல்தான் எழுதினான். அதுவும் வெறும் பதினான்கே வரிகள். “யாதும் ஊரே யாவருங் கேளிர்’ ஒரு வரி வாசகம் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. எழுதியவனுக்கு மாத்திரமல்ல தமிழன்னைக்கே சூட்டப்பட்ட மலர்க்கிரீடம்
  “மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் – சிறு
  மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
  ஆனாலும் அவை யாவும் நீயாகுமா?
  அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?”
  என்ற இந்த வரிகளைச் சாகித்திய அகாதெமி அமைப்பு கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
  “பால்மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்
  பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
  அந்நாளை நினைக்கையிலே என்வயது மாறுதடா
  உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா”
  என்ற வரிகள் வோர்ட்ஸ்வொர்த் சொல்வானே “Reflections in Tranquility” என்று; அதைத்தான் நினவு படுத்துகிறது. ‘ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!’ என்று நடந்து முடிந்த கதைகளை அசை போடும் மனநிலை அது.
  “தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கும் பொருத்தமாக என்னுடைய பாடல் ஒன்று அங்கே ஒலிக்கும்” என்று கண்ணதாசன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவன் தொடாத பாடமே கிடையாது. சுட்டிக் காட்டாத நிகழ்வுகளே கிடையாது.
  சர்ரியலிஸக் கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டு அப்போலினைர். அவரை பிரான்ஸ் தேசத்தின் ‘கடைசிக் கவிஞன்’ என்று அழைப்பார்கள். (அதாவது அவருக்குப்பின் பிரான்ஸில் வேறு கவிஞர்களே இல்லை என்ற அர்த்தத்தில்)
  “And my heart is as heavy as
  A Damascan lady’s backside”
  என்று எழுதுவான். இறுதி வரியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கும். வரவு எட்டணா/ செலவு பத்தணா/ அதிகம் ரெண்டணா/ என்ற பாடலில் இந்த மூன்று வரிகளில் தென்பாடத ஒரு அதிர்ச்சி யுக்தி “கடைசியில் துந்தனா” என்ற இறுதி வரியில் காணப்படும். இந்த ‘Shock Treatment’ பக்குவப்பட்ட கவிஞனால் மட்டுமே கொடுக்க முடியும்.
  “தோள் கண்டார் தோளே கண்டார்;
  தொடுகழல் கமலமென்ன
  தாள் கண்டார் தாளே கண்டார்
  தடக்கை கண்டாரும் அஃதே”
  (கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19)
  என்ற கம்பனின் வரிகளை “தோள் கண்டேன் தோளே கண்டேன்/ தோளில் இரு கிளிகள் கண்டேன்/ வாள் கண்டேன் வாளே கண்டேன்/ வட்டமிடும் விழிகள் கண்டேன் – என சுவைபட எளிய நடையில் வடித்திருப்பான் கண்ணதாசன்.
  “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாரதியின் வரியை “வியாட்நாம் வீடு” படத்தில் கவிஞன் கையாண்டபோதும் கூட அதை காப்பியென்று யாரும் சொல்லவில்லை. மாறாக அவ்வரிகள் பாரதிக்கு மேலும் புகழை ஈட்டித் தந்தது.
  “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று ராமச்சந்திரக் கவிராயரின் பாடல் கண்ணதாசனுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
  “அத்தான் என் அத்தான் – அவர்
  என்னைத்தான்… எப்படி சொல்வேனடி – அவர்
  கையைத்தான் கொண்டு மெல்லத்தான் – வந்து
  கண்ணைத்தான்…. எப்படி சொல்வேனடி?”
  காதலன் பூனைப்பாதம் வைத்து பதுசாய் காதலியின் கண்ணைப் பொத்தும் நிகழ்வை ராமச்சந்திர கவிராயனின் தத்துவார்த்த சிந்தனையோடு முடிச்சு போடுவதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அது கண்ணதாசனிடம் மிதமிஞ்சி இருந்தது.
  “மீன் செத்தா கருவாடு; நீ செத்தா சுடுகாடு; இது கண்ணதாசன் சொன்னதுங்க” என்றும் “கண்ணதாசன், காளிதாசன், கவிதை நீ நெருங்கி வா” என்றும் மறைந்த அந்த மகாகவியின் மேல் பாராட்டு மழை பொழிந்து விட்டு வேறொரு புறம் “கண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி” என்று இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் எழுதுவது உண்மையிலேயே அவரை பாராட்டுகிறார்களா அல்லது அவரை கிண்டல் செய்கிறார்களா என்று புரிந்து கொள்ள இயலவில்லை.
  “He came. He saw, He conquered and He has gone” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “அவன் வந்தான், வென்றான், சென்றான்” என்று சொல்வதை விட வந்தான், வென்றான், நின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நெஞ்சில் நின்ற வண்ணம்தானிருப்பான்.
   
  Last edited: Mar 14, 2023
  Loading...

Share This Page