1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (30) வங்கக் கடல் கடைந்த !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 14, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    30 ) ஆண்டாள் பாடல் (திருப்பாவை சொல்லும் அடியார்கள் இறைவனின் அருள்பெற்று இன்புறுவர் என்கிறதான பாயிரம்- பாசுரப் பலன் சொல்லுதல்)

    வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன
    சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    "பெரிய கப்பல்கள் கடந்து செல்கின்றத் திருப்பாற்கடலை, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி, தேவர்களும் அசுரர்களும் கடைந்த போதில் அவர்களுக்குக் கூர்மாவதாரம் எடுத்து உதவி செய்த , கேசவனை (அழகிய சுருண்ட நீள்முடி கொண்டவன்) திருமகளை அடைந்ததினால் மாதவன் என்ற பெயர் கொண்டவனை, சந்திரனை ஒத்த அழகிய முகத்தை உடைய, அழகிய அணிகலன்கள் அணிந்த, இடைச் சிறுமியர், திருவடி பணிந்து, அவனது சன்னிதியில், தாங்கள் வேண்டிய பறையைப் பெற்ற செய்தியை விளக்கி,அழகிய திருவில்லிபுத்தூரில் அவதரித்தவளும், அன்றலர்ந்த குளிர்ந்த தாமரை மலரால் கட்டிய மாலையை அணிந்த பட்டர்பிரானின் (பெரியாழ்வார்) திருமகளுமான கோதை அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களை, குறையில்லாமல் ஓதும் அடியார்களுக்கு,நான்கு பெருமலைகளை ஒத்த திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையும், அழகிய திருமுகத்தையும் கொண்ட, அனைத்துச் செல்வங்களுக்கு அதிபதியான திருமால், இம்மையிலும், மறுமையிலும் கருணை காட்டி, பேரானந்தத்தை அருளுவான் !"

    பாசுரக் குறிப்பு

    திருப்பாவையின் முற்றான 30 ஆவது பாசுரம். திருப்பாவை சொல்லும் அடியார்கள் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிடும் 'பலஸ்ருதி ' பாசுரம். இப்பாடலில் தான் தன்னை யாரென்று ஆண்டாள் அறிவிக்கிறாள்.முதல் பாசுரத்திலும் " நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று நூற்பயனைச் சொல்லுகிறாள். அதற்கு இறைவனாம் கண்ணனின் கார்மேனி,கதிர்மதிய முகத்தை தியானிக்கச் சொல்லுகிறாள். இந்தக் கடைசி பாசுரத்திலும் " செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை" எண்ணி தியானித்து வணங்கி சரணம் செய்பவர்கள், "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.

    ஒரு சிறந்த இலக்கியத்திற்குரிய இலக்கணங்கள் யாவும் நிரம்பப் பெற்றுள்ள பக்தி இலக்கியம் திருப்பாவை. இதை இந்தப் பாசுரம் அழகாக எடுத்தியம்புகின்றது.
    பாடுபொருள் உயர்வு (பாடுபொருள் பரமன்), பாடுபவர் உயர்வு(பாடுபவர்- ஆண்டாள் ), பாடப்பட்டிருக்கும் செய்தியின் உயர்வு(பரமாத்மாவை சீவாத்மா சரணடைந்தால், இறைத்தொண்டு என்கிற வீடுபேறு கிடைக்கும் ), பாட்டைப் படிப்பவர் பெறும் பலன் (இதைப் படிப்பவருக்கு இம்மையிலும் மறுமையிலும் திருவருளும், இறையருளும் கிட்டும்) - இவையெல்லாமும் இப்பாசுரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

    வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனைத் திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்று இறைஞ்சிஅங்கப் பறை கொண்ட ஆற்றை - இது பாடுபொருள் உயர்வு . இறைவனைப் பற்றிய இலக்கியம் என்ற குறிப்பு.

    அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன- பாடியவர் பெயர்,பெருமை - கோதை, பெரியாழ்வார் பெண். இந்தக் குறிப்பே உயர்ச்சியை விளக்குமே !

    சங்கத் தமிழ்மாலை- இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள கருத்தின் உயர்வு பற்றிய குறிப்பு.வடமொழியிலிருக்கும் வேத வேதாந்த இரகசியங்களை, அழகு தமிழில் சொன்னதே இவ்விலக்கியத்தின் சிறப்பு, உயர்வு.

    முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் - இலக்கியத்தைப் படிப்பவர் பெரும் பலன் பற்றிய குறிப்பு. இகவுலகிலும், பரவுலகிலும் இன்புறுதலே பயன்.
     
    periamma and jskls like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    கப்பல்கள் செல்லுகின்ற பாற்கடலைக் கடைந்து,
    அப்பழுக் கொன்றில்லாத இலக்குமியை அடைந்த,
    கொப்புச்சுருள் முடியழகு வாய்த்தக் கேசவனை,
    அப்பால்நிலா முகத்தோர், நகைசூடும் பெண்கள்,
    எப்பாடோபட்டு அவனடியில் பணிந்து -அவனளித்த
    அப்பேர்பட்டப் பறையை வாங்கியின்பம் அடைந்த,
    அப்பாட்டையை அனைவர்க்கும் காட்டித் தருவதற்கு, (பாட்டை-வழி)
    இப்புதுவை நகர்வாழும் பெரியாழ்வார் சிறுபெண்,
    ஒப்பற்ற குளிர்தாமரை மாலையணிந்த கோதை,
    செப்பியதாம் சங்கநிகர் செந்தமிழ்ப் பாமாலை,
    முப்பதையும் முழுமனதாய் அடியார் குழாமாகத்
    தப்பாமல் கூடிக்கொண்டு கோவிந்தனைப் பாட ,
    செப்பற்கரும் மலையொத்தத் தோள் நான்கோடும்,
    ஒப்பில்லாத செவ்விழியும் ,முகவழகும் கொண்டு,
    செப்பமுடைத் திருமகளை ஆள் திருமாலருளால் ,
    இப்புவியில் எவ்விடத்தும் இன்பங்களே பெறுவார் !
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வங்கக் கடல்கடைந்த - வங்க என்றால் அழகிய என்று பொருள். கடல் என்றால்- திருப்பாற்கடல். (மனமென்னும்) பெருங்கப்பல்கள் செல்லும் திருப்பாற்கடல்.

    “மனமென்னும் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
    சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
    மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
    துளையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே
    ” - என்று மாணிக்கவாசகர் பாடுவதை நினைவு படுத்தலாம்.

    மனம் என்னும் படகிலேறி , அறிவு என்னும் கோலைத் துடுப்பாக ஊன்றி ,சினம், கோபம், பொறாமை முதலிய தீய குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு, சம்சாரம் என்னும் பெருங்கடலிலே போகும் போது காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம், நம் உடலென்னும் கப்பல் !

    பாற்கடலைக் கடைந்தவர்கள் தேவர்களும் அசுரர்களுமென்று அவர்கள் எண்ணலாம். ஆயினும் அவர்களுக்கு ஆதாரமாக ஆமையாக நடுவில் நின்று,மந்தார மலையைத் தாங்கியவன், பரந்தாமனே அல்லவா ? ஆமையாக முதுகில் மலையைத் தாங்கிப் பாற்கடலைக் கடைந்தது மட்டுமல்ல, மோஹினி அவதாரமெடுத்து அரக்கர்களை மயக்கி, அமுதமெல்லாம் தேவர்களுக்கேக் கிடைக்கும் படிச் செய்தவனும் இந்த மாதவன் தான்.நாமும் எல்லாக் காரியங்களையும் நான் செய்தேன், நானே செய்தேன் என்று மார்தட்டிக் கொள்கின்றோமே ! நமக்குள்ளே சக்தியாக இருந்து நம்மை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி இறைவனே அல்லவா ?

    மாதவனை- மா என்கிற இலக்குமியின் கணவனை. பாற்கடலைக் கடைந்த சமயத்தில் முதலில் ஆலகால விடம் வந்தது. அதைக் கருணையே வடிவான சிவபெருமான் உட்கொண்டு, நீலகண்டனானார். மேலும் பல உயர்வான பொருட்கள் வெளிப்பட்டன. அவற்றையெல்லாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இலக்குமி தேவியோ, அங்கே இருந்தவர்களில் யார் தன்னை அடையுமளவிற்கு உயர்வானவர்களென்று ஆராய்ந்து, நாராயணனே என்று தெளிந்து அவனைத் தேர்ந்து, மார்பிலே உரைந்தாள் !

    தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக் கண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு உகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெறுவதற்குத் தலைப்பட்டானாம் ! அவ்வளவு ஆசையாம் இந்தக் கண்ணனுக்குப் பெண்கள் மேலே ! அதைக் குறும்பாகக் குறிக்கும்படி 'மாதவன்' என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.
    முக்கண்ணன் நஞ்சுண்ண,விண்ணவர் அமுதுண்ண,கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக பராசர பட்டர் விளக்கம். தேவர்களெல்லாம் தங்களுக்கே அமுது கிடைத்தது என்று மகிழ்ந்திருக்க, உண்மையிலேயே அமுதை அடைந்தவன் திருமால் மட்டுமே ! உயர்ந்த அமுது தாயாராகிய அன்னைத் திருமகள் மட்டுமே ! தாயாரை அடைவதற்காக பரந்தாமன் கடலைக் கடைந்தது மட்டுமல்ல, பின்னாளில், இராமாவதாரத்தில் கடலில் பாலம் கூட கட்டினான். அதற்கு முதலில் ஒத்துழைப்பு நல்காத ஸமுத்திர இராஜன் மீதில் கோபம் கொண்டு வில்லிலே நாண் கூட பூட்டிவிட்டான். அவ்வளவு ஆசை அவனுக்கு அவளிடத்தில் !

    கேசவனை- சுருள்முடி கொண்டவனை (கொப்பு -சுருள்). அடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி முதலான அசுரர்களை அழித்தவனை. பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகாலத்தை ஈஸ்வரன் அருந்துவதைக் கண்டவன், கேசவன்.மார்கழி மாதத்து அபிமான தேவதை.

    திங்கள் திருமுகத்து சேய்இழையார் - பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர். கண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வநலங்களை அடைந்த அழகிய திங்கள் முகம் அந்த ஆயர்குலப் பெண்களுக்கு ! 27 ஆம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா ? ஆகவே சேயிழையார் !

    சென்று இறைஞ்சி - 29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி
    அங்கு அப்பறைகொண்ட ஆற்றை - கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை. அங்கு அப்பறை - ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த கண்ணனைக் கண்டு, அவன் மனைவியாகிய நப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப்பறை, அதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை. அப்பேர்பட்ட பறை.

    அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை
    - இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற திருவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வாரின் பெண் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள். ஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஆண்டாள்.

    பைங்கமலத் தண்தெரியல் - குளிர்ச்சிபொருந்திய தாமரை மாலை அணிந்தவள். அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார்,தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல் -இவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை. இப்போது ஆண்டாள் மாலையென்றே குறிக்கப்படுகின்றது.

    சங்கத் தமிழ்மாலை - வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும், அதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,தெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே ஆண்டாள் தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.

    சங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.தமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று, ஏற்றுக்கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப்புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள். அப்படிப்பட்டத் தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கியமே கோதையின் திருப்பாவை என்று பொருள் கொள்ளலாம். நக்கீரனார், முக்கண்ணனையே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதை வைத்துப் பார்த்தால் இது உண்மையாகவே இருக்க வேண்டும். அதுவும் காலத்தால் முதல் இடை, கடைச்சங்கங்கள் என்று இருந்திருக்க வேண்டுமென்றாலும் கூட, கோதை வாழ்ந்த காலத்தில் சங்கம் இருந்ததா இல்லையா என்பது போன்ற சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாமென்றால்,வேறொருவிதத்தில் வைணவ நெறியினர் சொல்லும் விளக்கம்,கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக ஓதும்படியாகச் செய்யப்பட்ட திருப்பாவை என்னும் தோத்திர மாலை என்று கொள்ளலாம்.

    முப்பதும் தப்பாமே
    - ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா ? ஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும். முப்பதையும் இல்லாவிட்டாலும் 29 ஆவது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.

    இங்குஇப் பரிசுரைப்பார்
    - இம்மண்ணுலகிலேயே ஓதிவர. இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை. அவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதையளித்தத் திருப்பாவையினை ஓதினால் போதுமே ! நாம் ஆயர்பாடியிலிருந்த கோபிகைகளாகவோ , பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ, அவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ , ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.

    ஈரிரண்டு மால்வரைதோள் - வரை- மலை போன்ற பெரிதான நான்கு தோளுடைய. செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்- செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்

    எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்
    - எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர். செங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால் ! இறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறார்கள். ஆண்டாளும் அப்படியே !
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    தேவரமுதுக்குப் பாற்கடல் கடைந்து- இலக்குமி
    தேவியமுதத்தைத் தான் அடைந்த மாதவனை,
    நாவினால் துதித்துப் பணிதற்கு அடியவர்கள்,
    மேவிப்பெருங் கூட்டமாய் அடைவர் பாற்கடலை !
    இவ்வுலகில் உயிர்களைப் படைக்கும் பிரம்மாவும்,
    அவ்விதமே கையிலைமலை ஈசனாம் சிவனாரும்,
    இவ்விருவர் பணிந்து தொழுகின்ற நாரணனை,
    செவ்விய சரணாகதத்தின் வழியில் சென்றடைந்து
    அவனருளும் பேற்றினைப் பெறுதற்கு உதவிடவே,
    உவந்துத் திருத்துழாய் ஏற்கின்றப் பரமனுக்கும்,
    சிவந்த கமலமாலை விரும்புகின்ற தாயார்க்கும்,
    தவத்தொண்டு செய்யும் பெரியாழ்வார் அருளால்
    இவ்வைணவ நெறியறிந்த கோதையிவள் தானும்,
    அவ்வேதாந்தம் சொன்ன இறைஞானம் எல்லாம்,
    அவனிபுகழ் தமிழ்மொழியில் அடியவர்கள் ஓத,
    செவ்வியதாய் செய்திட்டாள் முப்பத்துப் பாட்டை!
    உவந்து இறைப்பணி செய்யும் அடியார்களோடு,
    இவ்வையைந்தும் ஐந்தும் இவ்விகவுலகில் ஓதில்,
    சிவந்த தாமரைக் கண்ணால் நோக்கியருளும்,
    உவந்து பெருந்தாயார் மார்பினிலே உறையும்,
    தூவெண்சங்கு சக்கரம் தரித்த தோள்வலியன்,
    அவனருளால் எல்லாத் திருவளமும் பெறலாம்!
    இவ்வுலக இம்மைக்கும் அங்கே மறுமைக்கும்
    பாவையிதைப் படித்தால் பரமனருள் தருவான் !
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மாதவனை - பரமனைத் திருமகளோடே துதித்துப் பணிய வேண்டும் என்கிற வைணவ நெறி குறிக்கப்படுகிறது.உடலுக்கு மூப்பு, பிணி, மரணம் நேராமல் காக்கக் கூடிய அமுதத்தைவிட, ஆன்மாவிற்கு இன்பம் நல்கும் தாயார் எனும் அமுதமே உயர்ந்தது.

    வங்கக் கடல்கடைந்த - பரமானந்த நிலையான வைகுண்டத்தில் திருமகளோடு உறையும் பரமனைக் காண அடியவர்கள் வந்த வண்ணம் இருப்பதனால் , நுரை பொங்கிக் கொண்டிருக்கும் பாற்கடல் !

    கேசவனை - கேஸவன்- கஹ + ஈஸன் கஹ சப்தம் பிரம்மாவைக் குறிக்கும் ஈஸ சப்தம் சிவபெருமானைக் குறிக்கும். இவர்கள் இருவரையும் தன்னுள் கொண்டவன் என்று பொருள். பரமாத்மாவை அடைவதற்கு சீவாத்மாக்களுக்கு உண்டாகும் தடைகளைத் தகர்த்து உதவுபவன், கேசவன்.

    திருப்பாற்கடலை–மந்திரமலையை மத்தாக வைத்து –வாசுகியெனும் பாம்பினைக் கயிறாகச் சுற்றித் தன்னையே அடியில் பிடிமானமாகக் கொடுத்துக் கடலுள் வாழும் உயிர்களுக்கும் அதில் போகின்ற கப்பல்களுக்கும் தொந்தரவில்லாதபடிக் கையாலே கடைந்து பெண்ணமுதாகிய பிராட்டியை அடைந்து மகிழ்ந்தான் மாதவன் . அதைப் போன்றே, சீவாத்மாக்கள் உறைகின்ற உடலுக்குக் கேடு எதுவும் வராமல்
    சம்சாரம் என்கின்ற கடலை, அடியவரைக் காப்பேன் என்று உறுதி பூண்ட தன் சங்கல்பம் என்கின்ற மந்திரத்தை வைத்து –தன்னுடைய கருணையென்னும் கயிற்றாலே சுற்றி–அருளென்னும் கைகளால் கைகளால் கடைந்து அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் சீவாத்மாக்களை அடைந்து இன்புறுவான் திருமால் ! அப்படிச் செய்கையிலே , அந்த சீவாத்மாக்கள் தன்னை வந்து அடைவதில் அவற்றுக்கு உண்டாகக்கூடிய தடைகளை எல்லாம் அழித்திடுவான் அந்தக் கேசவன்.

    திங்கள் திருமுகத்து
    - முதல் பாசுரத்தில் சொன்னாற்போல் இறைவன் கதிர்மதியம் போல் முகத்தான் ஆயினும், அவனது அடியவர்களுக்கு என்றும் அருள் செய்கின்றதிலே, குளிர்நிலா முகத்தவனாகவே இறைவன் இருக்கிறான்.

    சேயிழையார்
    - ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத்தொண்டு செய்கின்றவர்களே சேயிழையார், நேரிழையீர் !

    சென்றிறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட ஆற்றை
    -அப்படிப்பட்ட அடியார்கள் இறைவனைச் சரணம் புகுந்து, அவனுக்கு என்றும் பணி செய்து கிடப்பதான கைங்கர்யப் பேற்றைப் பெற்ற வழியை
    இறையருள் பெறுவதற்கு எளிமையானதும் ஒரே வழியாக இருப்பதும் இறைவன் திருவடியைப் பற்றுதலாகிய சரணாகதமே என்ற உண்மையைத் தனக்குப் பிறகு வருபவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் திருப்பாவை முப்பது பாடலைப் பாடியிருக்கிறாள் கோதை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் எனும் உயர்நோக்கு.

    அணிபுதுவை கோதைசொன்ன
    -வேத சாரங்களை நன்கு உணர்ந்தவராக இருக்கும்,திருவில்லிப்புத்தூரில் வாழும் ஆச்சார்யராம் ஹம்ஸப்பறவையினையொத்தத் தன் தகப்பனார் பட்டர்பிரான் பெரியாழ்வார் மகளான கோதை என்னும் ஆண்டாள் உரைத்தது இத்திருப்பாவை.


    கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே- தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா- அத்தகைய உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள் என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தானே ?

    பைங் கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்= பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும், செந்தாமரை மாலையும் அணிந்து, ஒரு வைணவன் பரமனையும், தாயாரையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற உண்மையினை ஒரு குருவாய் , தந்தையாய் கோதைக்கு உபதேசம் செய்தவர் பெரியாழ்வார்.

    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன- திருவில்லிப்புத்தூர் பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் ஆண்டாளின் தகப்பனார் மட்டுமல்ல, குருவும் அவரே ! இங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள். மதுரகவிகள் தன்னுடைய ஆசிரியரான நம்மாழ்வாரை முன்னிட்டேப் பாசுரங்கள் இயற்றியதைப் போலவே, ஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இது திருப்பாவையைப் பாடியிருக்கிறாள். இதுவே திவ்வியபிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று வைணவ குருபரம்பரையினர் கருத்து.

    சங்கத் தமிழ்மாலை-கூடியிருந்து எல்லோரும் சொல்லும்படி தமிழில் செய்த இத்திருப்பாவையை, எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகின்ற நீர்மைத் தமிழில் எழுதப்பட்ட இந்தத் திருப்பாவையை, அடியவர் குழாத்தோடு ஓத வேண்டும்.தனியாக அல்லாமல், அடியவர் குழாத்தோடே இறைவனைப் பாடிப் பணிய வேண்டும்.

    முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார்
    - அன்று ஆயர்குலத்தார் அடைந்த பேற்றை இன்று இருப்பவர்கள் எளிதில் அடைய வேண்டினால் ,அதற்கு உதவும் எளிய வழி, இப்பாவைப் பாசுரங்களை ஓதுவதே. திருப்பாவை முழுதுமே வேதாந்த உண்மைகள் நிரம்பிய பாசுரங்கள். கற்றவருக்கே விளங்கக் கடியதான வடமொழியில் உள்ள இறைஞானத்தை மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் செய்ததே, ஆண்டாளின் சிறப்பு.

    இங்கு- இப்பரிசுரைப்பார்
    -இங்கு என்பது இகவுலகாகிய இந்த மண்ணுலகில், பரிசு என்பது இறைத்தொண்டு என்னும் கைங்கர்யம், அடியார் குழாத்தொடு கூடி திருப்பாவை ஓதுதலும் இறைத்தொண்டே !

    செங்கண் திருமுகத்து
    - செங்கண் என்றால் இரத்தத் சிவப்பல்ல ! தாமரை மலரிலே ஊடாக பரவியிருக்கும் சிவந்த நிறத்தைப் போல் அழகாகத் தீட்டப்பட்ட செம்மை.இறைவனுடைய கண்ணழகு,முகவழகு மூலம் அவனது அருட்பார்வையின் பெருமையம், அடியார் மேலான கருணையும் பேசப்படுகிறது.

    ஈரிரண்டு மால்வரைதோள் - சங்கும் சக்கரமும் தாங்கும் இருகரங்கள், அபயமும் வரமும் அருளும் இருகரங்கள் என்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.

    செல்வத் திருமாலால் - இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு, முடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால் என்று உறுதியிடப் படுகிறது.

    எங்கும் இன்புறுவர் - இகவுலகிலும் திரு நிறைந்த வாழ்க்கை , பரவுலகிலும் மற்ற அடியாருடன் ஒன்றாகக் கூடி இறைப்பணி செய்யும் அருள் நிறைந்த வாழ்க்கை. பிறவியெடுத்ததைப் புண்ணியப்படுத்துவதற்கு, இறைத்தொண்டு செய்தால், அதற்குரிய பலனையும் ஆண்டவனுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால், ஒரு தாயெப்படித் தன்னுடைய குழந்தைக்கு எது நல்லதோ அதைச் செய்வாளோ, அது போல ஆண்டவனே அடியவர் எதிர்பாராத மேலான பலனைத் தந்து அருளை வழங்கி இன்பம் நல்குவான்.

    நம்முடைய ஆன்மாவின் பயணத்தை இறைவன் பார்த்துக் கொள்வான். நம்முடைய உடலின் பயணத்தை நம் கர்ம வினைகள் பார்த்துக் கொள்ளும். நம்மால் செய்யக் கூடியது, இவை போன்ற உயர்ந்த கருத்துகளைப் பற்றித் தெரிந்து கொள்வது, அவற்றை எண்ணுவது, இயன்ற வரையில் கடைபிடிப்பதே !

    ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் ! ஆண்டாள் நாமம் வாழி !
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்புடைய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் !

    இப்பதிவுடன் எனது திருப்பாவை பொருள் விளக்கக் கவிதை முயற்சி நிறைவுற்றது.
    இப்பதிவின் தொடக்கத்தில் சொன்னது போல், இது என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் செய்த முயற்சியின் வெளிப்பாடே. எந்த சமயத்தையும் உயர்த்தி, மற்றவற்றைத் தாழ்த்தும் நோக்கமுமல்ல.வைணவ சமயத்தைப் பரப்பும் நோக்கமுமல்ல. அதன் விளக்கங்களைக் கூறுவதுமல்ல. இருப்பினும் பாசுரங்களோடு, அறிஞர்கள் சொன்ன விளக்கங்களை வார்த்தைப் படுத்தியது, வாசகரின் புரிதலுக்கு உதவும் பொருட்டே.

    நான் இவ்விடம் எழுதியதில், வைணவ ஆச்சார்யர் விளக்கங்களுக்கு மாறாக, ஆன்மிக அன்பர்கள் மனம் புண்படும்படியாக, இன்னும் அறியாத வகையிலாக, எதாவது குறைகள் ஏற்பட்டிருக்குமேயானால், மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். சுட்டினால், அவற்றைத் திருத்திக் கொள்கிறேன்.

    தனிப்பட்ட ஓர் துன்பவியல் நிகழ்வின் பின்னர், துயருற்றிருந்த மனதிற்கு ஆறுதல் தேடியே என் இந்தத் திருப்பாவைப் பயணத்தைக் தொடங்கினேன். இந்த முயற்சிக்கு என் கணவர் அளித்த உற்சாகம் மிகவும் உதவியது.

    இந்த ஸமயத்தில், இப்பதிவுகளுக்குத் தொடர்ந்து தமது பங்களிப்பைத் தந்து, வாசகர்களுக்குப் பற்பல ஆழமான விளக்கங்களையும், கோணங்களையும் எடுத்துச் சொல்லி அறிவூட்டிய, பெருமதிப்பிற்குரிய திருமதி வத்ஸலா ஜெயராமன் @jayasala42 அம்மையார் அவர்களுக்கும் , எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தமது நேரத்தையும், கவனத்தையும் இப்பதிவுகளுக்குத் தந்து தொடர் பின்னூட்டங்கள் வாயிலாக என்னை ஊக்கப்படுத்திய அன்பிற்குரிய @periamma திருமதி ருக்மணி கிருஷ்ணராஜ் அவர்களுக்கும் என் பணிவான நன்றியை உரித்தாக்குகிறேன்.

    மேலும் இத்தொடர்ப்பதிவைத் தொடங்கியபோதிலேயே எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்திய மதிப்பிற்குரிய அன்பு நெஞ்சங்கள் @suryakala, @jskls, @rgsrinivasan, @rai, @vaidehi71, @ksuji ஆகியோருக்கும் , ஆன்மீகத்தில் நாட்டமில்லாவிட்டாலும், தமிழில் செய்த எனது முயற்சிக்குத் தமது ஆதரவினைத் தெரிவித்த நட்பு இதயங்கள் @GoogleGlass, @kaniths இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெடிதாக இருப்பினும் தம் நேரம் செலவிட்டு இந்தப் பதிவுகளைப் படித்து வந்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் முயற்சியைப் பகிர்ந்து கொள்ள நல்ல மேடையளித்த நமது தளத்தின் நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி !

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்.
    என்றும் அன்புடன்,
    பவித்ரா.
     
    kaniths, ksuji, jskls and 2 others like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நல்லதொரு செயல் நல்லபடியாக முடிந்தது அனைத்து பாசுரங்களின் விளக்கங்கள் மிக அழகாக இருந்தது .புதியதாக இருந்தது .இந்த பதிவுகள் அனைத்தையும் ஒரு நூல் வடிவத்தில் அமைக்கவும் .
    நீங்கள் மிக வேகமாக பாசுரங்களை எழுதிட்டீங்க.நான் மீதமுள்ளவற்றை நன்றாகப் படித்து பின்னுரை தருகிறேன் .
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*

    பலகோடி நூறாயிரம்

    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்

    சேவடி செவ்வித்திருக்காப்பு (1)

    அண்ணலே என் ஆயர்குல வள்ளலே இந்த மங்கை பவித்ரா பல்லாண்டு வாழ அருள் புரிவாயாக
    கண்ணன் கழலடிகள் சரணம்
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா உங்கள் அன்பு நிறைந்த ஆசிகளுக்கு மிக்க நன்றி ! எனக்கான உங்கள் பிரார்த்தனை மனதிற்கு நெகிழ்ச்சியளிக்கிறது. என் நமஸ்காரங்கள்.

    அப்படியெல்லாம் எனக்கு எண்ணமில்லை,பெரியம்மா ! கணவருக்கு இருக்கின்றது. இறைவன் சித்தம்.
    மார்கழி தொடங்கும் முன்னர் பூர்த்தி செய்ய வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன்,பெரியம்மா ! ஆகையினால் தான் கடைசி 15 பாசுரங்களை தினம் ஒன்றாகப் பதியும்படியானது. உங்களின் சிரமமான சூழலிலும், இப்பதிவுகளுக்கு நேரம் ஒதுக்கிப் படிப்பதோடல்லாமல்,எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் பின்னூட்டமும் வழங்கியதை நான் மிகவும் மதிக்கிறேன். உங்களுக்கு எப்போது முடிகிறதோ, அப்போது படித்துப் பார்த்துப் பின்னூட்டமிடுங்கள். அவசரமேயில்லை. தங்கள் ஆதரவிற்கும், ஆசிக்கும் மிக்க நன்றி !
     
    periamma likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தங்களுடன் ஒன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வுகளை நடித்து காட்டுவார்கள் .அரையர்சேவை என்று சொல்வார்கள்.இவர்கள் நடனமாடி இந்த காட்சியை கண் முன்னே நிறுத்துவார்கள் .மிக தத்ரூபமாக இருக்கும் .அரையர்கள் எனும் பதவி ஒரு குடும்பத்துக்கே பாத்தியப்பட்டது என்று கேள்வி ஞானம்.இன்று கூட மிக உயர்ந்த பதவியில் இருக்கும் இளைஞர் ஒருவர் மார்கழி மாதம் இந்த சேவை செய்ய வந்து விடுவார் என்று செய்திதாள்கள் வழி தெரிந்து கொண்டேன் .மோகினி வேடம் அணிந்தவர் நடனமோ கண் கொள்ளா காட்சி .தொடர்ந்து மூன்று வருடங்கள் இதை அனுபவிக்கும் பாக்கியம் தந்த அந்த கண்ணனுக்கு நான் என்ன தர முடியும் ?அவன் திருவடிகளே சரணம்
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் பெரியம்மா, சைவ சமயத்தில் ஓதுவார்கள் எப்படியோ அப்படி வைணவத்தில் அரையர்கள் ! பிரபந்தங்களைப் பாடி அபிநயம் செய்து காட்டித் ,தத்வார்த்தமும் விளக்கிக் கூறும் கலைஞர்கள், அறிஞர்கள். எனக்கும் இதுபற்றிக் கேள்வி ஞானமே. இதுவரை அரையர் சேவை கண்டதில்லை. மூன்று வருடங்கள் நீங்கள் கண்டது, கண்ணன் அருளே ! அவ்வருள் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.என்னோடு நீங்கள் பொக்கிஷ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ! நன்றி,பெரியம்மா !
     

Share This Page