1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கதை முயற்சிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by saidevo, Jul 22, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    விமானம் புறப்பட ஒருமணி நேரம் இருந்தது. செக்யூரிடி செக் முடிந்து லௌஞ்சில் காத்திருந்தபோது மனதில் அமைதி நிறைந்திருந்தது. புயலுக்குப்பின் அமைதி. சந்நியாச பாவமானதொரு அமைதி. அல்லது துறவு.

    கடந்த சில மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் துறந்து, என் வாழ்வில் ஒரு பயணத்தை முடித்து மற்றொரு பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபோது நான் இப்போதுதான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்குவதாகப் பட்டது.

    என் உடலின் பரிமாணங்களை மட்டும் நேசித்து என் மனதின் பரிமாணங்களைப் புறக்கணித்த உலகிலிருந்து விடுதலை.

    இத்தனை நாள் வெறும் ரோபோவாக இருந்த நான் இந்த நிமிடம் முதல் ஒரு முழு மனிதனாக, சாதனையாளனாக, வளரும் கம்ப்யூட்டர் வித்தகனாகப் பரிணமித்து என்னைச் சுற்றியிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது வெளியுலகம் அழகாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் தோற்றமளித்தது.

    தூரத்தே மறைந்துவிட்ட சூரியனுடன் என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்து நாளை ஒரு புதிய பூமியில் நான் புதுப்பிறவி எடுக்கப்போவதை நினைத்துக்கொண்டபோது பயணிகள் விமானத்தில் நுழவதற்கான அறிவிப்பு வந்தது.

    இன்னமும் நான் யாருக்காக அல்லது எதற்காகக் காத்திருக்கிறேன்? நிகழ்வதற்கு இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது?

    புரிந்தது. என் மன உணர்வுகளில் லயித்திருந்தபோது நான் சற்று சாவதானமாக அமர்ந்திருக்க, காற்றில் மெலிதாக ஊசலாடிக் கொண்டிருந்த என் மாங்கல்யம் எதிரில் அமர்ந்திருந்த ஓர் இளம் அமெரிக்க ஜோடியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அதைப்பற்றி மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கத் திரும்பிப் பார்த்தபோது என் கணவர் பூனைபோல வந்து அருகில் நின்றிருந்தார், தனது இடது உள்ளங்கையை விரித்தபடி.

    "வாசப் படியத் தாண்டறதுக்கு மின்ன, கட்டின தாலியைக் கழட்டி வெச்சுட்டுப் போடி நாயேன்னு சொன்னனில்ல? எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ? என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு? கமான், ரிமூவ் இட்!"

    "ஓவராக் கத்தாதீங்கோ. இந்தப் பயணம் ஒரு நிரந்தரப் பிரிவு இல்லை. யு நோ ஐ ஹாவ் டு மேக் திஸ் ட்ரிப். கொஞ்ச நாள்ல நீங்க உங்க தப்பை உணர்ந்து, மனசு மாறி, என்னோட இந்த செயலை அங்கீகரிப்பீங்கன்னு இப்பவும் நான் நம்பறேன். இந்தத் தாலி அந்த வகையில நமக்கிடையில் ஒரு தொலைத் தொடர்பு வளையமாகவும், எனக்கு ஒரு பாதுகாப்---"

    பளார் என்று என் கன்னத்தில் அறை விழுந்தது.

    "ப்ளடி பிச்! எனக்கு அறிவுரை கூற உனக்கு என்னடி தகுதியிருக்கு? கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு! ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட்!"

    அங்குமிங்கும் புருவங்கள் உயர, அந்தக் கௌன்டர் பெண் "மேடம், யு ஆர் அல்ரெடி லேட், ப்ளீஸ்!" என்று விண்ணப்பிக்க, "ஃபைனல் கால் ஃபர் பாஸஞ்சர்ஸ் போர்டிங் த ஃப்ளைட்..." என்ற அறிவிப்பு கணீரென்று ஒலிக்க, நான் சட்டென்று தீர்மானித்து, என் மனதில் எழமுயன்ற சம்பிரதாய உணர்வுகளைக் கம்ப்யூட்டரின் ’க்ளியர் ஸ்க்ரீன்’ ஆணைபோல் சுத்தமாகத் துடைத்துக்கொண்டு, என்னுடைய கடைசி நினைவுச் சின்னத்தையும் துறந்துவிட்டு, விடுவிடுவென்று கேட்டைத் திறந்துகொண்டு, ஓட்டமும் நடையுமாக அந்த விமானத்தில் ஏறிக்கொள்ள, சில நிமிடங்களில் எஸ்கலேட்டர் விடுபட்டு அந்த விமானம் ரன்வேயில் டாக்சியித்துக்கொண்டு கிளம்பியது.

    "யு ஆர் ஆல்ரைட்?" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில் அந்த அமெரிக்கப் பெண்.

    "ஐ’ம் ஃபைன். அன்ட் ரிலீவ்ட், தாங்க் யு."

    உரிமையுடன் அவள் அணிந்திருந்த பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்திக்கொண்டபோது, தூரத்தே என் கணவர் முகம் அஷ்டகோணலாக, கண்களில் அவநம்பிக்கையுடன் என் விமானம் சென்ற திசையில் வெறித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

    *** *** ***
    (இன்னும் முடியவில்லை)
     
  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    (இறுதிப் பகுதி)

    ஒரு நெடிய பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தபோது எனக்கே வியப்பாக இருந்தது! என் கணவர்மீது எனக்கு அத்தனை வெறுப்பா, அதுவும் தாலியைத் துறக்கும் அளவுக்கு!

    இந்தக் கதையின் பாத்திரங்கள் மிகைப்படுத்தப் படவில்லை. அந்த ’நான்’ வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். கதையின் சம்பவங்களும் உரையாடல்களும் பெரும்பாலும் என்னைச் சுற்று வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்தவையே. அவற்றை வசதிக்கேற்ப மாற்றி அமைத்துத் தொகுத்தது மட்டுமே என் பணி. என் வலிய உணர்வுகளின் ’கார்டியோக்ராஃப்’-ஆக என் பேனா கிறுக்கிவிட்ட இந்தச் சித்திரத்தில் இவ்வளவு தூரம் என்னை ஒரு தீவிரவாதியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தை உடனே புறக்கணித்தேன். என்னைப் பற்றி எழுதத் துணிந்த பின் என்னைப்பற்றி எழுதத்தானே வேண்டும்?

    என் முன் மேசையில் அந்த கான்ட்ராக்ட் படிவங்கள் காற்றில் அசைந்தன. எனது அரிய ஸாஃப்ட்வேர் பாக்கேஜின் முழு உரிமைகளையும் அந்தக் கம்பெனி பெயரில் மாற்றி அவர்கள் நிர்ணயித்திருந்த ’ராக் பாட்டம்’ ராயல்டிக்கு சம்மதித்திருந்தேன். அவர்கள் அளித்திருந்த பயண, வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டதில், இதுவாவது வரட்டுமே? ஏற்கனவே பதிவாகிவிட்ட விமானப் பயணச் சீட்டை ரத்து செய்துவிட என் கணவர் சென்றிருக்க, அவர் சமீப காலமாக விரித்திருந்த அன்பு வலையில் நான் வசமாக சிக்கிகொண்டுவிட, அடுப்படியில் எனக்கு வேலைகள் காத்திருக்க, நான் ஆயாசத்துடன் எழுந்துகொண்டபோது அடிவயிறு கனத்தது.

    *** *** ***
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    மானுடம் போற்றுதும்
    ரமணி

    பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு நிரப்பிய வாசுதேவன், "கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்" என்றான்.

    "சும்மா இரய்யா, அவன் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றான்" என்றான் ஸ்டீபன், தன் பாட்டிலைத் திறந்தபடி.

    "இல்லை ஸ்டீபன். ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன்னு நான் ஆணித்தரமாக நம்பறேன். இதை என்னால் நிரூபிக்க முடியும்."

    "அதுக்காக உன் குழந்தையைப் பணயம் வைக்க முடியுமா?"

    "என் குழந்தையைப்பற்றி எனக்கு கொஞ்சம்கூடக் கவலையில்லை. மணி நாலுதான் ஆறது, ப்ராட் டேலைட். வடபழனி இங்கிருந்து எட்டு கிலோமீட்டர். சாதாரணமாக இருபது நிமிஷத்தில் போயிடலாம். ஆட்டோக்காரன் தெரியாதவனா இருந்தால் என்ன? எங்க மாமனார் வீட்ல டெலிபோன் இருக்கு, இங்கேயும் டெலிபோன் இருக்கு. ’வாட் கேன் ஹாப்பன்’?"

    "ஆட்டோ நம்பரை நீ நோட் பண்ணக்கூடாது" என்றான் கோபி, தன் கிளாஸை நிரப்பியபடி.

    "கோபி திஸ் இஸ் டூ மச்" என்றான் ஸ்டீபன் கூர்மையாக. "விளையாட்டு வினையாய்டக்கூடாது."

    "நீ ஒண்ணும் கவலைப்படாதே ஸ்டீபன். கோபி இஸ் ரைட். ஆட்டோ நம்பரை நோட்பண்ணுவது என் நம்பிக்கைக்கு முரணானது. திருடன்கூட அடைப்படையில் நல்லவன்னு நான் நம்பறபோது ஒரு ஆட்டோ டிரைவரை நம்ப முடியாதா?"

    "உன் மனைவி ஊர்ல இல்லாத இந்த நேரத்தில நீ ஒரு பெரிய, தேவையில்லாத ரிஸ்க் எடுக்கற, அவ்வளவுதான் நான் சொல்வேன்."

    "வாசு, ஃபர்கெட் இட். நான் சும்மா கலாட்டா பண்ணினேன்."

    "அப்ப ஒத்துக்க என்னுடைய கருத்தை."

    "நோ! ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன் என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். மனிதர்களில் பெரும்பாலோர் ஆதாரமாக நல்லவர்னு சொல்லு, ஒத்துக்கறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் என்பது சரியல்ல."

    "ஐ ரிபீட், ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன், அது கொலைகாரனாக இருந்தாலும்கூட. உன்னைக் கன்வின்ஸ் பண்ண நான் என் நாலுவதுப் பையனைத் தனியா, முன்பின் தெரியாத ஆட்டோல எங்க மாமனார் வீட்டுக்கு அனுப்பணும், ஆட்டோ நம்பரை நான் நோட்பண்ணக்கூடாது, அவ்வளவுதானே? வெரி சிம்பிள்!"

    நண்பர்கள் மூவரும் தன் கிளாஸைக் கையில் எடுத்துக்கொள்ள, ஸ்டீபன், "இப்படித்தான் ’மேயர் ஆஃப் காஸ்ட்டர்பிரிட்ஜ்’ நாவல்ல குடிவெறியில் தன் மனைவியைத் தொலைச்சான்" என்றான்.

    "நல்லவேளை, ஞாபகப்படுத்தினே! நாம இன்னும் ஆரம்பிக்கலை. தவிர, இது ஒரு பார்ட்டி இல்லை. சும்மா ஜாலியா ஆளுக்கு ரெண்டு பாட்டில் பியர் சாப்பிடப்போறோம். நாம ஆரம்பிக்கறதுக்கு மின்ன நான் என் குழந்தையை அனுப்பிடறேன். அப்புறம் நான் குடிவெறியில செஞ்சிட்டேன்னு சொல்லிடக்கூடாது பாரு? குட்டிப்பையன்?"

    "என்னப்பா?" என்று கேட்டபடி பெட்ரூமிலிருந்து ஓடிவந்தது குழந்தை. "பாட்டி வீட்டுக்குப் போலாமாப்பா?"

    நீல ஷார்ட்ஸ், அரைக்கை வெள்ளை மல் ஜிப்பாவில் குழந்தையின் சந்தனநிறம் அடங்கித் தெரிந்தது, ட்ரேஸிங் காகிதத்தில் தெரியும் தங்க நகையாக. அமெரிக்கக் கொடி வண்ண வரிகளில் ஸாக்ஸ், மஞ்சள் ஷூ அணிந்து, ஜிப்பாவுக்குள் மைனர்செயின் மார்பில் புரளத் தலையைத் திருப்பியபடி அது பார்த்தபோது ஸ்டீபனுக்கு ஒரு கணம் வயிற்றை என்னவோ செய்தது.

    "குட்டிப்பையன், இந்த மாமா ரெண்டு பேர்க்கும் விஷ்பண்ணு?"

    "குடீவனிங்" என்று கைநீட்டியது. "எனக்கும் கொஞ்சம் கூல் டிரிங்க்பா?"

    "வாட்’ஸ் யுவர் நேம்?" என்றான் ஸ்டீபன், குழந்தையின் கையைப்பற்றிக் குலுக்கியபடி.

    "மை நேமிஸ் ஶ்ரீகுமார். எனக்கும் கூல் டிரிங்க் வேணும்ப்பா?"

    "இப்பத்தானே கண்ணா நீ ஃப்ரூட்டி சாப்பிட்டே? பார், உன் தொப்பைகூட இன்னும் ஜில்லுனு இருக்கு!"

    சிரித்தது. "போலாமாப்பா பாட்டி வீட்டுக்கு?"

    "போலாமே! ஆனா, முதல்ல நீ மட்டும் போறயாம் ஆட்டோல ஜாலியா. கொஞ்ச நேரம் கழிச்சு நான் ஸ்கூட்டர்ல வருவேன். அப்பாவுக்குக் கொஞ்சம் வேலை இருக்கில்ல?"

    "ஏன்ப்பா என்னைமட்டும் தனியா அனுப்பறே?"

    "தனியா அனுப்பலை கண்ணா! நீ ரிக்*ஷாவில ஸ்கூல் போறல்ல, அதுமாதிரிதானே? லுக், நாம ரெண்டுபேர்க்கும் ரேஸ். நீதான் ஆமை. நான் முயல். இந்த கோபி மாமா நரி. நீ ஃபர்ஸ்ட்டு கிளம்பிட்டே. முயல் இப்ப தூங்கிட்டிருக்கு. அது கொஞ்ச நேரம் கழிச்சு, திடீர்னு முழிச்சுப் பார்த்துட்டுக் கிளம்பும். பார்த்தா, அதுக்குள்ள ஆமை பாட்டி வீட்டு கேட்டைத் தொட்டு வின் பண்ணிடும்!"

    குழந்தை கொஞ்சம் யோசித்தது. பின் அவன் கன்னத்தைத் தொட்டுத் திருப்பி, "இங்க பார், ஆட்டோவைவிட ஸ்கூட்டர்தானேப்பா ஃபாஸ்ட்டா போகும்? அப்ப முயல்தானே வின் பண்ணும்?"

    "அதனாலதான் நான் கொஞ்சம் கழிச்சுக் கிளம்பப்போறேன்."

    *** *** ***
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    நிசமாகவே அந்த முயல் தூங்கிப்போனது. பந்தயத்தை நடத்திய நரியும், பார்த்த முயலின் தோழனும்கூடத் தூங்கிப்போயின.

    பியரில் ஆரம்பித்த பார்ட்டி காக்டெயிலாக மாறிவிட அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து மதுவெள்ளத்தில் மூழ்கித்திளைத்து தற்காலிகமாக அடங்கிப்போனார்கள்.

    நிர்ணயித்த இலக்கை ஆமை அடையவில்லை என்ற தகவல் மூன்று முறை தொலைபேசியில் முயற்சிக்கப்பட்டு, அந்தத் தொலைபேசி எடுப்பார் இல்லாத கைப்பிள்ளையாகச் சிணுங்கி, அழுது, முயலின் குறட்டையில் ஓய்ந்துபோனது.

    நான்காம் முறையாகத் தொலைபேசப்பட்டபோது விழித்துக்கொண்டான். சுற்றிலும் இருள் சூழத்தொடங்கியிருக்க, அவன் அதிர்ந்து எழுந்தபோது சுவர்க்கடியாரத்தில் கதவு திறந்துகொண்டு அந்தக் குருவி ஒருமுறை கூவியதைப் பார்த்தான்.

    நீ எப்பப்பா வருவே?
    ரெண்டு முள்ளும் ஸிக்ஸ்க்கு வரும்பார் அப்ப வந்திடுவேன்.
    ஓ காட்!

    குழந்தை இன்னமும் வந்துசேரவில்லை என்ற செய்தி தொலைபேசியில் இடற, இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.

    நான் உடனே வரேன் என்று சொல்ல நினைத்து, "ழான் உழனே வழேன்" என்றான்.

    தலை கனத்து உணர்வுகள் இன்னமும் மரத்திருக்க குளியல் அறையை நோக்கிச் சென்றபோது நினைவுகளில் பின்னகர்ந்தான்.

    கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்.
    ஆட்டோ ஃப்ளையோவர் வழியா போகுமா டாடி?

    மாலை நாலு மணியளவில் கோபி, ஸ்டீபன் பார்த்திருக்க, கண்ணில் எதிர்ப்பட்ட ஒரு ஆட்டோவை நிறுத்தி நம்பர்கூடக் குறித்துக்கொள்ளமல் குழந்தையை ஏற்றி அனுப்பியாயிற்று.

    ஆட்டோ டிரைவர் பருமனாக, மேலுதடு முழுவதும் மீசை வைத்துக்கொண்டு பக்கங்களில் நீளத் தூண்களாக இறங்கும் கிருதாக்களுடன், வலது கையில் வாட்ச்சும் சிகரெட்டுமாக இருந்தார். குழந்தையை மட்டும் அனுப்பியபோது அவனை ஒருமாதிரியாகப் பார்த்தது போலிருந்தது.

    உலகத்தில் எவ்ளோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றல், அரசியல், பயங்கரவாதம் தினமும் நடக்கிறது! நீ என்னடான்னா எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள்னு பேத்தரையே?

    நீ சொல்ற செயல்கள்ல ஈடுபட்டு இருக்கிறவங்க உலகத்தோட ஜனத்தொகையில் எத்தனை பெர்சென்ட் இருக்கும்? அரை பெர்சென்ட், ஈவன் ஒரு பெர்சென்ட்? என்னய்யா இது, நூத்துல ஒருத்தன் தற்காலிகமா ஒரு கெட்ட செயல்ல ஈடுபடும்போது அவனைத் திருத்துவையா, அவனுக்குத் துணைபோவையா?

    ஒருதுளி விஷம் சேர்ந்தாலும் குடத்திலுள்ள பால் முழுதும் விஷமாய்டறதே? பார்க்கப்போனா நீ சொல்ற ஒரு பெர்சென்ட்டால இந்த உலகமே ஒருநாள் அழியப்போறது.

    இந்த உலகம் அவ்வளவு எளிதில் அழியாது ஸ்டீபன். புறநானூற்றுல சொல்லியிருக்காப்பல கிடைக்கமுடியாத இந்திரர் அமிழ்தமே கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்பவர்களும், வீண் கோபம் கொள்ளாதவர்களும், விழிப்புடையவர்களும், புகழ் எனில் உயிரும் கொடுப்பவர்களும், சமத்துவ விரும்பிகளும், சமதர்ம நோக்குடையவர்களும், தமெக்கென வாழாப் பிறர்க்கென வாழுபவர்களும் உள்ளவரை இந்த உலகம் அழியாது.

    இவன் ஒருத்தன், புறநானூறு-அகநானூறுன்னு கதையடிப்பான், இந்த கம்ப்யூட்டர் யுகத்தில. ஓகே, நீ சொல்றபடி பார்த்தாக்கூட நூத்துல ஒருத்தன் கெட்டவனாறது, இல்லையா ஸ்டீபன்?

    அதுமாதிரி இல்லை கோபி! ஒரு மனிதனுடைய ஜீன்களில் நல்லவன் கெட்டவன்கிற செய்தி இல்லை. லுக் அட் இட் திஸ் வே! ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் கம்ப்யூட்டர். எ வாக்கிங், பயலாஜிகல் கம்ப்யூட்டர். உயிர்தான் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மின்சக்தி. மனம் அதன் பேசிக் ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஐம்புலன்கள் அதன் உள்வாங்கும் அமைப்புக்கள். அதே ஐம்புலன்கள்--ஒரு வேளை காதுகள் தவிர்த்து--வெளியிடும் அமைப்புக்கள். மூளை அதன் ஞாபக அடுக்குகள்.

    தினசரி அலுவல்களில் கம்ப்யூட்டருடன் உறவாடும் நண்பர்களுக்கு இந்த உதாரணம் பிடித்துப்போய் அவர்கள் கவனத்தை ஈர்த்ததைக் காணமுடிந்தது.

    ஐ ஹாவ் மேட் எ பாயின்ட் என்ற சந்தோஷத்துடன் தொடர்ந்தான்.

    ரைட், இந்த கம்ப்யூட்டருடைய அடிப்படை வேலைகல் என்ன? உயிர் வாழ்வது, இனம் பெருக்குவது. இந்தக் கம்ப்யூட்டருக்குத் தேவையான தகவல்கள் என்ங்கிருந்து கிடைத்தன? ஒரு காலகட்டம் வரையில் இயற்கையில் இருந்து. இப்பவும் இயற்கை ஒரு மாபெரும் தகவல்தளம்--டேட்டாபேஸ். அப்புறம் மனிதனே மனிதனுக்காக உருவாக்கிய தகவல் தளங்கள்: வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மதக்கோட்பாடுகள், இலக்கியம், விஞ்ஞானம், கலைகள் போன்றன.

    இந்தக் கோணத்தில் பார்ப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கு.

    யோசித்துப்பார் கோபி! மனிதன் தனக்கு வேண்டிய தகவல்களை இயற்கை என்னும் தகவல்தளத்திலிருந்து இழுத்துக்கொண்டவரை அவனுக்குள் பேதங்கள், பிரிவுகள் இல்லாமல் இருந்தது. தகவல்களுக்காக மனிதனை மனிதன் சார்ந்தபோதுதான் நல்லது கெட்டது என்கிற அடிப்படைப் பிரிவினையும் அதையொட்டி உயர்ந்தது தாழ்ந்தது இன்னும் பல பிரிவுகள் தோன்றின. மனிதர்களில் சிலர் அமைத்த தகவல்தளங்களை மனிதர்களில் சிலர் சிதைத்ததன் விளைவுதான் உலகில் நாம் காணும் தீச்செயல்கள்...

    *** *** ***
     
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ஜெமினி மேம்பாலத்தில் ஸ்கூட்டர் தம் பிடித்து ஏறி, இடப்புறம் வளைந்து சரிந்தபோது பின்னால் அமர்ந்திருந்த கோபி, "ஐ’ம் வெரி சாரி வாசு! ஐ ஃபீல் கில்ட்டி" என்றான்.

    "ப்ளீஸ் டோன்ட். நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை."

    "எனக்கென்னவோ பயமா இருக்கு வாசு! என்ன செய்யறதுன்னே புரியலை. பேசாம போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்திரலாமா?"

    "டோன்ட் பானிக்யா. இப்பத் தேவையானது லாஜிகல் திங்க்கிங். எனக்கு இன்னும் அந்த ஆட்டோ டிரைவர்மேல் நம்பிக்கை இருக்கு."

    "குழந்தையை அனுப்பி மூணு மணி நேரமாகப்போகுது வாசு!"

    "இந்த அளவு தாமதத்திற்கு நிச்சயம் ஒரு எளிய, முறையான காரணம் இருக்கும் கோபி. நீ மிருணாள் சென்னோட ’ஏக் தின் ப்ரதி தின்’ மூவிபற்றிக் கேள்விப்பட்டிருக்க, இல்ல?"

    "மனித உறவுகளுக்கு மட்டும் இல்லை வாசு... மனிதனோட அலட்சியங்களுக்கும் சுயநலம்தான் காரணம். என்னோட குழந்தை இல்லயேங்கற சுயநல உணர்வாலதானே நான்கூட அந்த ஆட்டோ நம்பரைக் குறிச்சிக்கலை? தட்ஸ் வொய் ஐ ஃபீல் கில்ட்டி."

    "இட்ஸ் நோபடீஸ் மிஸ்டேக் கோபி. நிச்சயம் இதுக்கு ஒரு சாதாரணமான காரணம் இருக்கும். ஏதாவது பெரிய ஊர்வலம், அல்லது ஆட்டோ பிரேக்டவுன்..." அல்லது ஏதாவது ஆக்ஸிடென்ட் என்று மனதில் ஓடிய எண்ணத்தைத் தவிர்க்கமுடியாமல் கண்கள் கனத்தன.

    கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வாகனப் பட்டறையின்முன் அந்த ஆட்டோ காலியாக நின்றிருந்தது.

    இவர்கள் அதை இனம்கண்டுகொள்ள முடியாமல் கடந்தபோது பட்டறையில் இருந்த பையன் ஒருவன் கைதட்டிக் கூப்பிட்டபடி பின்னால் ஓடிவர, வாசுவின் மனதில் நம்பிக்கை வேர்கள் துளிர்விட்டன.

    "சார், ஒங்க பேர் வாசுதானே?--ஆட்டோ டயர் பஞ்சராய்டுத்து--தாஸ் உங்க கொய்ந்தய வேற வண்டில கூட்டிட்டுப்போறேன்னு சொல்லச் சொன்னாரு."

    "தாஸ் யாரப்பா?"

    "அவர்தாங்க இந்த ஆட்டோ டைவரு. இவராண்டதானே ஒங்க கொய்ந்தய அனுப்ச்சீங்க?"

    "என் பேர் எப்படித் தெரியும்?"

    "ஒங்க ஊட்லர்ந்து கெளம்பறப்ப ஒங்க ஸ்கூட்டர் நம்பர தாஸண்ணன் நோட்பண்ணிக்கிட்டாராம். கொய்ந்தய வண்டில வுட்றச்ச ஒங்க தோஸ்த் ’வாசு நீ செய்யறது நல்லால்ல’னு சொன்னதைவெச்சு ஒங்க பேர் தெரிஞ்சுக்கிட்டாராம். நீங்க எப்படியும் இந்தப்பக்கம் வருவீங்கன்னு தாஸண்ணன் பார்த்திட்டிருக்கச் சொன்னாரு."

    "குழந்தையை எப்ப, எந்த வண்டியில கூட்டிட்டுப் போனாரு? அவர் வண்டி எப்ப பங்க்சராச்சு?"

    "கொய்ந்தயக் கூட்டிட்டுப்போய் ஒரு அவர் இருக்குங்க. தாஸண்ணனுக்குத் தெரிஞ்ச மணிங்கறவரோட ஆட்டோ தற்செயலா வந்தது. அதில ரெண்டுபேரும் ஏறி டைவர் சீட்ல குந்திகினு, பின்னால கொய்ந்தய வெச்சுக்கினு போனாங்க. மின்னால அஞ்சரை மணிக்கு தாஸண்ணனோட ஆட்டோ பஞ்சர்னு தள்ளிக்கிட்டு வந்தாரு. வள்ளுவர் கோட்டமாண்ட எதோ பெரிய தொய்ச்சங்க ஊர்வலம் போச்சாம். ஒரே கல்ட்டாவாயி சோடாபாட்டில்லாம் வுட்டுக்கிட்டாங்களாம். ரோடேல்லாம் கிளாஸு பீஸு, பஞ்சராய்ட்டாதுன்னு சொன்னாரு."

    "குழந்தைக்கு ஒண்ணும் ஆகலயேப்பா? நீ பார்த்தியா குழந்தையை?"

    "கொய்ந்தைக்கு ஒண்ணியும் ஆவலிங்க. அதுமாட்டு சிரிச்சிக்கினு அவங்களோட போச்சு"

    *** *** ***
     
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    (இறுதிப் பகுதி)

    வடபழனி அருகில் மாமனார் வீட்டை அடைந்தபோது குழந்தை இன்னும் வந்துசேரவில்லை என்னும் செய்தி அவனைத் தாக்கியது. மாமியாரின் கண்களில் கண்ணீர் தெரிந்தது. மாமனாரின் வார்த்தைகளில் கனல் தெறித்தது.

    கனத்த இதயத்துடன் திரும்பியபோது மனத்தின் நம்பிக்கை விளக்குகள் அணைந்துபோய் குழந்தையைப் பற்றிய கேள்விகள் கவலையாக விஸ்வரூபம் எடுத்து இருளாக விரிந்தன.

    கைகள் இயந்திரமாக ஸ்கூட்டரின் கொம்புகளைப் பற்றிச் செலுத்த, பின்னால் கோபி ஒரு ரோபோபோல் அமர்ந்திருக்க, ஆர்காடு சாலையின் சோடியம் விளக்குகளின் ஒன்றை ஒன்று குறுக்கிடும் ஒளிப்படலங்களில் சாலை நடுவே இருக்கும் வேலிகளின் நிழல்களில் தற்காலிக டைமன் கட்டங்கள் அமைந்து விலக, பார்க்கும் இடம் எல்லாம் குழந்தை தெரிந்தது. சிரித்தது. அழுதது. துவண்டது. துடித்தது. ஓய்ந்தது. மீண்டும் சிரித்தது.

    *** *** ***

    வீட்டை அடைந்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் அவனுக்காகக் காத்திருக்க, அருகில் ஸ்டீபன் முகம்மலர நின்றிருந்தான்.

    "ஸாரி ஸார், ரொம்ப பேஜாராய்ட்டது! பாம்குரோ ஓட்டலத் தாண்டினதும் ஒரு ஊர்வலத்தில மாட்டிக்கிட்டேன். சோடா பாட்டில்லாம் வுட்டு சாலைய நாறடிச்சிட்டாங்க. ஒரு அவரு ஓரங்கட்டிட்டு அப்பால வண்டிய எடுத்தா, பத்தடி போறதுக்குள்ள டயரு பஞ்சரு. அப்டியே மெதுவாத் தள்ளிக்கினுபோய் நம்ம சங்கரலிங்கம் கடைல வுட்டுட்டு, டயர்டா இருந்திச்சா, கொஞ்சம் நாஸ்த்தா பண்ணிட்டு--பையன் ஒண்ணும் வாண்டான்னுட்டான்--இதுக்குள்ளாற நம்ம மணி வரவே அவன் வண்டில பையனைக் கூட்டிட்டுப் போனேனா, கமலா தியேட்டராண்ட போலீஸ்காரன் நிறுத்திட்டான். ’எங்கய்யா கொழந்தயக் கடத்திட்டுப் போறீங்க’ன்னு மடக்கி, எவ்ளோ சொல்லியும் கேக்காம டேசன்ல ஒக்காரவெச்சிட்டான். எஸ்.ஐ. வந்தாத்தான் வுடுவேன்னுட்டான். அங்கயே ஒரு அவரு ஆயிட்டது. ஒரு வழியா கெஞ்சிக் கூத்தாடி மணிய டேசன்ல வுட்டுட்டு, நான் மட்டும் பையனைக் கொண்டுபோய் விட்டீங்க. ஒங்க மாமியார் வூட்ல லெப்ட்ரைட் வாங்கிட்டாங்க. போலீஸ்ல ரிபோர்ட் பண்ணுவேன்னாங்க. போலீஸ்கிட்டர்ந்துதாமே வரேன் வெளக்கி ஸொல்லி, திரியும் டேசனுக்குப்போய் மணியக் கூட்டுக்கினு, அப்பால கடையிலபோய் வண்டிய எடுத்துகினு வரேங்க. ரொம்ப பேஜாராட்ச்சுய்யா, ஸாரிங்க."

    "உன்மேல ஒண்ணும் தப்பில்லை தாஸ்", என்றான் கோபி. "உன்னோட நல்ல மனசுக்கு நாங்க ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம். நியாயப்படி உன்னோட ரிட்டர்ன் டிரிப்க்கும் நாங்க உனக்குப் பணம் தரனும். கமான், மறுக்காத, வெச்சுக்க!"

    "ஒரு துளி விஷம்னு சொன்னேன். இப்பத்தான் புரியுது", என்றான் ஸ்டீபன், டிரைவர் சென்றதும். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு."

    "யு ஆர் ஆஃப்டரால் ரைட் வாசு", என்றான் கோபி. "ஸுச் அன்யூஷ்வல் கட்ஸ்!"

    "என் கருத்து வெறும் நம்பிக்கை மட்டுமல்ல கோபி. அது ஓர் உணர்வு. ஒரு ஆக்ஸிடன்ட் ஆறபோது நாலுபேர் உதவ ஓடிவரும்போதும், ஒரு கண்ணில்லாதவன் சாலையைக் கடக்க முயலும்போது யாரோ ஒருவன் உதவ முன்வரும்போதும், ஏன், ஒரு தெரியாத இடத்துக்கு வழி கேக்கறபோது, கர்மசிரத்தையா ஒருவன் முன்வந்து வழிகாட்டும்போதும் எனக்கு மானுடத்தின் பேரில் நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் சொன்னதுபோல நாம் நம் தகவல்தளங்களை சீரமைக்கவேண்டும், குறைந்தது நம் சந்ததிக்காக."

    *** *** ***


    நண்பர்களிடம் விடைபெற்று மீண்டும் மாமனார் வீடு சென்றபோது குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டது. அவன் கேள்விகளுக்குத் தான் அழவோ பயப்படவோ இல்லை என்றது. அந்த டிரைவர் மாமா, இன்னொரு டிரைவர் மாமா, போலீஸ் மாமா எல்லோரும் நல்லவர்கள் என்றது. சாக்லெட் கொடுத்தார்கள் என்று சட்டைப் பையிலிருந்து சாக்லெட் உறையை எடுத்துக்காட்டியது. வழியில் பெரிய யானையைப் பார்த்ததாகக் கூறியது.

    குழந்தையைத் தழுவித் தடவி ஒன்றும் காயங்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு கண்ணீர் உகுத்தான்.

    அவனது செய்கைகளைக் கவனித்த அவன் மாமியார், "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. நானே இப்பத்தான் கவனிச்சேன்", என்றார். "இனிமேல் இதுமாதிரி விஷப்பரிட்சை எல்லாம் வேண்டாம்."

    "என்ன சொல்றேள் நீங்க?"

    "குழந்தையின் கழுத்தைப் பாருங்கோ."

    *** *** ***
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்
    பாட்டியும் பேரனும்
    ’ப்ராஹ்மண-பந்து’

    "பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். "நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!"

    பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே படாமல் எடுத்துவிட, பாட்டி, "இனி நான் பாத்துக்கிரேண்டா கண்ணா!", என்றாள். அம்மா முகவாய்க்கட்டையை ஒருதரம் தன் தோளில் இடித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள். அப்பா வழக்கம்போல் சோஃபாவில் உட்கார்ந்தபடி பேப்பரில் மூழ்கியிருந்தார்.

    பாட்டி மடியாக ஸ்நானம் பண்ணியவுடன், பேரனும் ஸ்நானம்பண்ணிவிட்டு ரெடியாக, இருவரும் அந்த சின்ன பூஜை அறைக்குள் சென்றனர்.

    "பாட்டி, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால, நான் ஸந்த்யா வந்தனம் பண்ணறதை நீ கூட இருந்து பார்க்கணும்". "ஆட்டும்டா கண்ணா", என்றாள் பாட்டி. பேரனின் ஸந்தியில் பாட்டி சிற்சில உச்சரிப்பு திருத்தங்கள் செய்தபோது, "எப்படி பாட்டி உனக்கு இதெல்லாம் தெரியும்? தாத்தா வாத்யாரா இருந்தார்னு சொல்வியே, அவர் உனக்கு சொல்லிக்கொடுத்தாரா?" என்றான் பேரன். "நானும் நாளைக்குத் தாத்தா மாதிரி ஆவேன், அதுதான் நேக்குப்பிடிக்கும்".

    பின்னர், பாட்டி ஷ்லோகங்கள் சொல்ல, பேரன் அவற்றை அழகாகத் திருப்பிச் சொல்ல பூஜையறை களைகட்டியது. இதற்குள் அப்பாவும் குளித்துவிட--அம்மா காலையிலேயே வழக்கம்போல் பாட்டியைத் திட்டியபடி குளித்துவிட்டிருந்தாள்--பாட்டியும் பேரனும் தரையில் உட்காந்துகொண்டு சாப்பிட்டனர். அதன்பின், அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து அரட்டையடித்தாவாறே சாப்பிட்டு முடிக்க, பேரன் அதுவரை பாட்டியிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அம்மாவின் "போதும் கதை கேட்டது, போய் ஹோம்வர்க் பண்ணு" குரல் ஒலிக்க, படிக்கச் சென்றான்.

    மாலை அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் சென்றுவிட, பாட்டியும் பேரனும் கோவிலுக்குப் போனார்கள். பாட்டி பேரனை வழக்கம்போல் ஒவ்வொரு ஸந்நிதியாக அழைத்துப்போய், அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய ஷ்லோகங்களையும் கதைகளையும் சொன்னாள். தீபாராதனை பார்த்துவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, பேரன் கையில் விபூதி-குங்குமம் ஈரமாகக் கொண்டுவந்தபோது அப்பா-அம்மா இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரிந்தது. பாட்டி தன் ஜபமாலையை உருட்டத்தொடங்க, பேரன் கொஞ்சநேரம் பாட்டியிடம் கதைகேட்டுவிட்டு, ஸ்கூல் பாடங்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்.

    அம்மா பாட்டியைக் கரித்துக்கொட்டுவது வழக்கம்தான் என்றாலும் ஒரு நாள் இரவு மென்குரலில் அப்பாவிடம் தீர்மானமாகச் சொன்னாள்:

    "இதப்பாருங்கோ, இதுக்கு ஏதாவது வழி பண்ணியே ஆகணும். என்னால இப்படி கஷ்டப்பட முடியாது. இந்தப்பிள்ளையும் உங்கம்மாவையே சுத்திச்சுத்தி வரது, நானும் தாத்தா மாதிரி வேத வாத்யாராவேன்னு இப்பவே பெருமையா சொல்லிக்கறது. தான் கண்ணைமூடறதுக்குள்ள பேரனுக்குப் பூணல் போடனும்னு சொன்னா உங்கம்மா. நீங்களும் சரின்னு ஆறு வயசுலேயே போட்டுவெச்சேள். இப்ப இந்தப்பிள்ளை நம்பளையே அலக்ஷியம் பண்ணறது. ஏம்மா உனக்கு பாட்டி மாதிரி ஸ்தோத்ரம்லாம் தெரியலே, நீ ஏன் பூஜை பண்றதில்ல, அப்பா ஏன் ஸந்திகூடப் பண்ணமாட்டேன்றா-ன்னு கேள்விவேற. அப்படியே தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கு. எல்லாம் அந்தக்கிழம் பண்றவேல. நாம் ரெண்டுபேரும் ஒடியாடி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறதால கிழம் சொகுசா அனுபவிக்கிறது. இல்லேன்னா என்னிக்கோ ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்திருங்கோன்னு சொல்லியிருப்பேன்."

    "இவ்வளவுநாள் தள்ளினே. அம்மாக்கு வயசு எண்பதைத்தாண்டியாச்சு. வியாதி-வெக்கை இல்லேனால்லும் எவ்ளோ வீக்கா இருக்கா பாரு. எதோ ஒரு ஸங்கல்பத்ல மற்றவாளுக்கு சுமையா இருக்கக்கூடாதுன்னு தன் கார்யத்த தானே பார்த்துக்கறா. அந்த அளவுக்கு உனக்கும் எனக்கும் வசதிதானே? நம்ப சம்பாத்யத்ல குழந்தையை எஞ்ஜினீரிங், சீ.ஏ.ன்னு படிக்கவெக்க முடியாதுதான். நடக்க நடக்க பார்த்துப்பமே."

    அவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ பாட்டி அடுத்த வாரமே ஒருநாள் ராத்ரித் தூக்கத்திலேயே தன் உடலை நீத்தாள். இவர்களுக்கு ஒரு சொல்லமுடியாத ரிலீஃப். பேரனால்தான் தாங்கமுடியவில்லை.

    பாட்டியின் படுக்கையில் தலையணை அடியில் அப்பா-அம்மா ஒரு கவரைப் பார்த்தார்கள். பிரித்தபோது அதில் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு அப்பா பேரில் ஒரு செக் இருந்தது. கூடவே ஒரு சின்னக்கடுதாசி, ஒரு மாதம் முந்தய தேதியிட்டு. "ப்ரிய புத்ர, ஸ்னுஷா! உங்களுக்கு அதிக ஷ்ரமமாக, பாரமாக இல்லாமல் ஷீக்ரமே கண்ணைமூடிவிடவேணுமின்னுதான் அனுதினமும் பகவானைப் ப்ரார்த்தனை பண்ணினேன். உங்கப்பா ஆசீர்வாதத்தால் அது விரைவில் நிறைவேறும்னு நினைக்கிறேன். உங்கப்பா சேமிப்புடன் நான் சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தையும், லாக்கரில் உள்ள என் பத்துப்பவுன் நகைகளையும் நீங்கள் இஷ்டம்போல் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என் பேரனை,--அவன் விரும்பினால் மட்டுமே--அவனது ஏழாவது வயதில் ஒரு வேதபாடஷாலையில் சேர்த்து அவன் (தன் தாத்தா போல) தொடர்ந்து வேத அத்யயனம் பண்ண நீங்கள் அனுமதிக்கவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்."

    பேரனுக்குப் பாட்டியின் பணமோ கடிதமோபற்றி ஒன்றும் தெரியாது. பாட்டியின் அந்திம காரியங்கள் முடிந்ததும் அப்பாவின் முன்னிலையில் அம்மா ஒரு நாள் மாலை பேரனிடம் சொன்னாள்: "கண்ணா, கவலைப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கிறோம்."

    "போம்மா, எனக்கு பாட்டிதான் வேணும். உனக்கு அவா மாதிரி கதை சொல்லத்தெரியுமா? நாலு ஷ்லோகம் சொல்லித்தரத் தெரியுமா? கோவிலுக்கு கூடவந்து எனக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? யாருக்கு வேணும் நீயும் இந்த ஸ்கூல்லயும் சொல்லித்தற நர்சரி ரைம், அலைஸ் இன் வொண்டர்லாண்ட், மடில்டா கதைலாம்?"

    "அதுதாண்டா இனிமே நமக்கு லைஃப் கண்ணா! நீ நல்லாப்படிச்சு, எஞ்ஜினீரிங் காலேஜ் சேர்ந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆகணும். அப்போதான் எங்களமாதிரி இல்லாம, கைநிறைய சம்பாதிக்கலாம். உன்கூடப்படிக்கற ஜனனியோட அண்ணா மாதிரி ஃபாரின் போகலாம், புரிஞ்சுதா?" என்றனர் அம்மாவும் அப்பாவும் கோரஸாக.

    "அதெல்லாம் முடியாது. நான் தாத்தா மாதிரி வேத பாடசாலைல படிச்சு வேதம்தான் சொல்வேன். அதுல உங்களுக்கென்ன கஷ்டம்?" என்றான் பேரன்.

    "கிழம் தப்பாம ஒரு வாரிசை உருவாக்கிட்டுத்தான் போயிருக்கு", என்றாள் அம்மா.

    *** *** ***
     
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ரம்யா
    (குறுநாவல்)
    ரமணி

    [1]

    கட்டில்மீது குழந்தையின் வண்ணப் புகைப்படங்கள் இறைந்திருந்தன. நடுவில் ஆஷ்ட்ரேயில் சிகரெட் துண்டுகள் நிரம்பி வழிந்து படுக்கை விரிப்பில் சாம்பல் உதிர்த்து இருந்தன.

    மடியில் கனத்த ஆல்பத்தின் ப்ளாஸ்டிக் பக்கங்களை யோசனையுடன் மெல்லத் திருப்பியபோது மனம் கனத்தது.

    எத்தனை எத்தனை வண்ணப்படங்கள்!

    அப்பாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு துறுதுறுவென்று ஓடும் போஸில் காமிராவுடன் நின்ற அம்மாவை நோக்கிச் சிரிக்கும் ரம்யா.

    அழகாகக் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ’ட்ரம்மர்’ பொம்மையின் தாளத்தை ரசிக்கும் ரம்யா.

    பசுமையான பின்னணியில் மரக்கிளையில் அணில் ஒன்று இயற்கையாக எட்டிப்பார்த்து வியக்க ஊஞ்சலாடும் ரம்யா.

    புறாக்களுக்குப் பொரி வேசும் ரம்யா.

    இன்னும் பலவித போஸ்களைல் தரமான ப்ரின்ட்களில் ஜீவனுடன் பளிச்சிடும் ரம்யாவின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் புரட்டியபோது வாசுவுக்குக் கண்களில் நீர் மல்கியது.

    கையிலிருந்த சிகரெட் துண்டத்தைக் கடைசிமுறையாக ஆழ இழுத்துப் பெருமூச்சுடன் புகைவிட்டு ஆஷ்ட்ரேயில் திணித்தபோது மனதில் ரம்யா புகைந்துகொண்டிருந்தாள்.

    நினைவுகளின் சலசலப்பில் புகைப்படலம் விலக, அந்தப் போஸ் அவனுள் ஆழமாக உறைந்து பளிச்சிட்டது.

    அவனுடைய கேனன் காமிராவில் சிக்காத அந்தப் படத்தில் ரம்யா ஒரு கார் சக்கரத்தின் அடியில் ரத்தவெள்ளமாகக் கிடந்தாள்.

    ’ரம்மி! டாடிய தொந்தரவு செய்யக்கூடாதுன்னு சொன்னேல்ல? ஸ்கூட்டர் ரிப்பேர் பாத்துட்டிருக்கேன், கழுத்திலேர்ந்து கைய எடு! அப்பறம் எனக்குக் கெட்ட கோவம் வரும்...’

    ’ரம்மி, சொன்னா கேக்கமாட்டே? ஸ்பார்க் ப்ளக் பக்கம் போகாதே, ஷாக் அடிக்கும்! கீதா, குழந்தைய உள்ள கூப்பிடு!...’

    ’சனியனே, போட்டேன்னா நாலு, போ அந்தாண்ட!’

    அவனுடைய வலிமையான கரத்தால் தள்ளப்பட்டு ஒரு பந்துபோலத் தெருவில் விழுந்த ரம்யாவின் அலறலும் அந்தக் கார் சக்கரத்தின் ’க்றீச்’ ஒலியும் ஒரே சமயத்தில் கேட்டுத் திரும்பிப்பார்த்தபோது காரியும் முடிந்துவிட்டது.

    ’தினோம் நா உங்ககிட்ட முட்டிக்கிட்டேனில்லயா, இப்படி எதுக்கெடுத்தாலும் கோபப்படாதீங்கன்னு! இப்ப பெத்த குழந்தையவே பறிகொடுத்துட்டு வந்து நிக்கறீங்களே!...’

    *** *** ***

    இந்த மூன்று வருட ஏக்கத்தில் கீதா மிகவும் உடைந்துபோய்விட்டாள். ரம்யாவின் அகால மறைவு அவள் கண்களின் ஒளியையும், முகத்தின் மலர்ச்சியையும், உடலின் செழுமையையும், மனதின் மகிழ்ச்சியையும் பறித்துக்கொள்ள, அவர்கள் வாழ்வில் அந்த இரண்டாவது இடி விழுந்தது.

    ’ஸோ, ஸாரி, மிஸ்டர் வாசுதேவன். யுவர் ப்ராப்ளம் இஸ் ஸைக்கலாஜிகல். உங்க ரம்யாவோட அகால மரணம் உங்க தாம்பத்ய வாழ்க்கையை நீங்க நினைக்கறதவிட ஆழமா பாதிச்சிருக்கு. தட்’ஸ் த ரீசன் யு ஆர் அனேபிள் டு ரீப்ரட்யூஸ். எதுக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட கன்சல்ட் பண்ணுங்க...’

    ’ஐ டிஸர்விட் கீதா, ஃபர் ஆல் மை ரெக்ளஸ் டெம்பெரமென்ட். ஐ’ல் காரி திஸ் கில்ட் டு மை க்ரேவ்! நீ என்ன பாவம் பண்ணேம்மா, கடவுள் உன்னை ஏன் சோதிக்கணும்?’

    கீதா அவனைப் புரிந்துகொண்டாள். மனதில் கனன்ற அவன் சோகத்தைப் பகிர்ந்துகொண்டாள். அன்பான செயல்களாலும் ஆதரவான வார்த்தைகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விரிசலை சரிசெய்ய முற்பட்டாள்.

    மூன்று நெடிய வருடங்களுக்குப்பின் இப்போது பாறையிடுக்கில் புல்லிதழ்களாக வசந்தம் அவர்கள் வாழ்வில் துளிர்க்க முற்படுவதற்கு அறிகுறியாகத் தென்பட்ட அந்தப் புகைப்படத்தை அவன் கையில் எடுத்து மீண்டும் ஒருமுறை கூர்ந்து நோக்கினான்.

    "காட், வாட் எ ரிசெம்ப்ளன்ஸ்! கீதா வில் லவ்விட்!"

    சுற்றுப்புற சூழல்களைக் காமிரா சாமர்த்தியமாக மறைத்திருக்க, ப்ளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டு அவனைப் பார்த்து நேசமுடன் சிரித்த குழந்தை ஃப்ரேம் முழுக்க விரவியிருந்தது.

    கண்களின் சுருக்கங்களில் முகத்தின் மலர்ச்சியில் இயல்பாக நின்ற தோற்றத்தில் குழந்தை அவன் திடுக்கிடும் வகையில் ரம்யாவை ஒத்திருந்தது!

    குழந்தை அணிந்திருந்த மஞ்சள் கவுனின் சுருக்கங்களும் மெலிதான அழுக்கும் கலர் ஃபிலிம் கவர்ச்சியில் அடங்கித் தெரிய அவன் மனதில் நம்பிக்கை விதைகள் துளிர்விட்டன.

    மறுநாள் கீதா திருப்பதியிலிருந்து வந்தவுடன் பக்குவமாக விஷயத்தை எடுத்துச் சொல்லவேண்டும் என்ற முடிவுடன் தலைமாட்டில் இருந்த ரம்யாவுக்கும் கையில் இருந்த ரம்யாவுக்கும் மென்மையாக முத்தமிட்டுவிட்டு விளக்கை அணைத்தான்.

    *** *** ***
     
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    [2]

    மாலைச் சூரியனின் செங்கதிர்கள் வானை நிறைத்திருந்தன. காக்கைகள் கூட்டம்கூட்டமாகப் பெரிய மரங்களை நோக்கிப் பறந்துகொண்டிருக்க, கீழ்வானில் தட்டையாக நிலா தெரிந்தது.

    அடுத்தவீட்டுக் குழந்தை மாலா ஸ்கிப்பிங் விளையாடுவதை ரசித்தபடி மொட்டைமாடியில் நின்றிருந்தாள் கீதா. பத்துநாள் பிறந்தவீட்டு கவனிப்பில் சற்றே மெருகேறியிருந்தாள். மெல்லிய தென்றலின் சலசலப்பில் அவள் கேசங்கள் அசைந்தன.

    பின்னால் காலடிகேட்கத் திரும்பாலமலேயே கேட்டாள்.

    "இந்த பத்து நாளா எவ்வளவு சிகரெட் பிடிச்சீங்க?"

    அப்போதுதான் அவனுக்கு தான் அந்த ஆஷ்ட்ரேயை அப்படியே ஜன்னல் மடியில் விட்டுச்சென்றது நினைவுக்கு வந்தது.

    "ஏன் கீதா?"

    "நேத்துமட்டும் முப்பத்திநாலு சிகரெட் காலி பண்ணியிருக்கீங்க! ரம்யாதானே காரணம்?"

    பரிவுடன் அவள் கை அவன் காலர் எலும்பின்மேல் விழுந்தபோது நெகிழ்ந்துபோனான்.

    "கம் ஆன், உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்."

    வசதியாக கூடைநாற்காலிகளில் அமர்ந்துகொண்டார்கள். நடுவில் இருந்த டீப்பாய் மேலிருந்து அவள் ஒரு நாவலை எடுத்தபடி விழிகளை உயர்த்தியபோது கண்களில் சிவப்புச் சூரியன் பிரதிபலித்தது.

    "ரம்யாவோட இந்தப் படத்தை எப்போ எடுத்தீங்க? அவள் கவுன்ல ஏன் இவ்வளவு அழுக்கு? பேக்கிரவுண்ட்ல என்னவோ போஸ்டர்லாம் அடிமட்டும் தெரியர்து. என்ன, எதாவது ட்ரிக் ஃபோட்டாக்ரஃபியா?"

    ’குட் கோயிங்’ என்று நினைத்துக்கொண்டான்.

    "நானே உன்கிட்ட சொல்ல இருந்தேன் கீதா. லுக் அட் திஸ் பிக்சர்."

    படத்தில் இன்னொரு ரம்யா அதேபோல் மஞ்சள் கவுனில் ஜெமினி ட்ராஃபிக் ஐலண்ட் கம்பியைப் பிடித்தபடி காமிராவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    "ஐ நோ திஸ் பிக்சர். நம்ப ரெண்டுபேரும்தானே எடுத்தோம்? ஆனால் இந்த ஃபோட்டோ நான் பார்த்ததே இல்லையையே? ரம்யாவை அந்தமாதிரி அழுக்கு கவுன்ல கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியலை."

    தலையைச் சிலிர்த்தபடி கண்களைச் சுருக்கிக்கொண்டு நெற்றியின் நடுவில் வரிகள் குத்திட அவள் பேசியபோது அவளே ஒரு பெரிய ரம்யாவாகத் தெரிந்தாள்.

    "ஒரு வாரம் முன்னதான் அந்தப் படத்தை எடுத்தேன் கீதா."

    சட்டென்று உறைந்தாள்.

    கலவரமும் வியப்பும் அவள் முகத்தை மேலும் சிவந்திடச்செய்ய, "மை காட்! எவ்ளோ க்ளோஸ் ரிசெம்ப்ளன்ஸ்! கம் ஆன், டெல் மீ ஆல் அபௌட் இட்", என்றாள்.

    "நீ ஊருக்குப்போன மறுநாள் சாயங்காலம் ட்ரைவ் இன்ல டிஃபன் பண்ணிட்டு ரோட க்ராஸ் பண்ணினபோது திடீர்னு ஓடிவந்து என் காலைக் கட்டிக்கிட்ட குழந்தை இது, கீதா. சட்னு எடுத்துத் தூக்கிக்கலாம் போல இருந்தது, அவ்வளவு ஒற்றுமை! பின்னாலயே அவங்க அம்மா வந்து குழந்தையை வாங்கிக்கிட்டுக் கையை நீட்டினா. எனக்கு ஒரு கணம் வருத்தமாயும் பயமாயும் இருந்தது, நம்ம ரம்யாவைத்தான் இவங்க எப்படியோ கடத்திகிட்டு போய்ட்டாப்பல. ’வாட் நான்சென்ஸ்’னு மனசில சொல்லிட்டு ஒரு ரூவா குடுத்தனுப்ச்சேன்."

    "அந்த போஸ்டர் பேக்கிரவுண்ட்லேர்ந்தே ஒருமாதிரி கெஸ் பண்ணினேன். அப்பாவும் ப்ளாட்ஃபார்ம் வாசிதானே?"

    "ஆமாம் கீதா, ஆனால்---"

    "வாட்ஸ் ராங்?"

    "வேண்டாம் கீதா, உன்னால தாங்கமுடியாது. இப்பத்தான் ஒரு மாதிரியா மனசைத் தேத்திட்டு வாழ்ந்திட்ட்ருக்கோம்."

    "பரவாயில்லை, சொல்லுங்க."

    சொன்னபோது, "இவ்வளவுதானே?" என்றவள் பதிலில் அதிர்ச்சியடைந்தான்.

    "ஐ வாண்ட் டு ஸீ த சைல்ட்."

    "போலாம். நாளைக்கு சனிக்கிழமை பேங்க் அரைநாள்தானே? மூணு மணிக்கு வந்திருவேன். நாலு மணிவாக்ல போய்ட்டு அப்படியே ட்ரைவ் இன்ல டிஃபன் பண்ணிட்டு வரலாம்."

    *** *** ***
     
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    [3]

    மறுநாள் சென்றபோது பிளாட்ஃபாரம் காலியாக இருந்தது கவலையாக இருந்தது.

    "வா, டிஃபன் பண்ணிட்டு தேடலாம்."

    மசால்தோசைக்கு ஆர்டர் கொதுத்துவிட்டு மௌனமாகக் காத்திருந்தபோது திடீரென்று கேட்டாள்.

    "நீங்க என்ன நினைக்கறீங்க?"

    "எதப் பத்தி?"

    "ரம்யாவைப் பத்தி."

    "ரம்யா?"

    "அந்த ட்யூப்ளிகேட் ரம்யா."

    "எனக்கு என்ன நினைக்கறதுன்னே தெரியலை கீதா. உள்ளூர பயம்மா இருக்கு."

    "நான் நினைக்கறதை சொல்லட்டுமா?"

    வெயிட்டர் மசால்தோசைகளைக் கொண்டுவந்து வைத்தார். கூடவே நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளர்களை அடுக்கினார். உணவு பறிமாறிய ட்ரேயைக் கடைசி மேசைமேல் வைத்துவிட்டு சுவரோரம் சென்று பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டார்.

    தோசையை நடுவில் விண்டு சாம்பாரில் நனைத்து வாயில் இட்டுக்கொண்டு கவலையுடன், "சொல்லு கீதா", என்றான்.

    "நான் குழந்தையை ஒருவாட்டி பாத்திடறேன். எனக்குத் திருப்தியா இருந்ததுன்னா", என்றவள் மெலிதாகப் புரையேற ஒரு வாய் நீர் பருகி விழுங்கிவிட்டுக் கண்களில் தீர்மானம் தெரியக் கூறினாள்: "வி வில் ஹாவ் த சைல்ட்."

    அவன் எதிர்பாராத பதிலாக இல்லாவிடினும் அதை அவள் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிய விதத்தில் துணுக்குற்றான்.

    "முதல்ல நீ குழந்தயைப் பார், கீதா. நீ சொல்றது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. இந்த ஸ்டேஜ்ல நாம எந்த ஐடியாவும் வெச்சிக்க வேண்டாம்."

    "இன்னிக்கு முழுக்க எனக்கு அந்த ஃபோட்டோ ஞாபகம்தான். எப்படா நேர்ல பார்ப்போம்னு இருக்கு. நம்ம ரம்யா அதுமாதிரி வறுமையான சூழ்நிலையில---"

    சட்டென இடைமறித்தான்.

    "அது நம்ம ரம்யா இல்லை கீதா."

    "நம்ம ரம்யாதான். நான் தீர்மானிச்சாச்சு. அந்தம்மாகிட்ட நான் பேசறேன். காஃபிக்கு ஆர்டர் பண்ணுங்க, நேரமாச்சு."

    *** *** ***

    வெளியில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை குழந்தை தென்படவில்லை. மௌனமாக கதீட்ரல் சாலையில் கொஞ்சதூரம் நடந்தார்கள்.

    ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி சுற்றுச் சுவரை ஒட்டிய நடைபாதையில் அந்தக் குடும்பம் உட்கார்ந்து இருந்தது. கல்லூரிக்கு விடுமுறையாதலால் பிளாட்ஃபாரம் காலியாக இருந்தது.

    தூரத்தில் வரும்போதே கவனித்துவிட்டு அவர்கள் கால்களை எட்டிப்போட்டபோது தாயும் குழந்தையும் தனியாகப் பிரிந்து தற்செயலாக அவர்கள் பக்கம் வருவது தெரிந்தது.

    "அதுதான் அப்பாவா?"

    அவன் உடன்பாடாக பதில் அளித்தபோது அந்த உருவம் தள்ளாடியபடி எழுந்துகொண்டது. நுனிகள் வற்றிய விரல்களில் ஓர் அலுமினியத் தூக்கை ஏந்தியபடி சுவரோரம் போய் அமர்ந்துகொண்டது.

    அந்தப் பெண் தன் மகளிடம் ஏதோ கூற, குழந்தை மறுபடியும் தந்தையிடம் ஓடிக் குனிந்து அவர் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு வந்தது.

    கீதா தலையை சிலிர்த்துக்கொண்டாள்.

    அவன் திரும்பி அவளைப் பார்த்தபோது, "அம்மா பார்க்க அழகாவே இருக்கா. நிறம்கூடப் பரவாயில்லை. அவளுக்கு ஒண்ணும் வியாதி இல்லைனு தெரியறது. தட்’ஸ் எ குட் சைன்", என்றாள்.

    நடைபாதை அருகில் இருந்த ஆவின் ’பூத்’ அருகில் அவர்கள் வந்தபோது குழந்தையை வைத்த விழி வாங்காமல் பார்த்தபடி அந்தப் பெண்ணை வழிமறித்து, "குழந்தை பேர் என்னம்மா?" என்றாள்.

    "ஏனுங்க?"

    "ஏனுங்கன்னு ஒரு பேரா!"

    அந்தப் பெண் புன்னகைத்தாள்.

    "இல்ல, எதுக்குக் கேக்கறீங்கன்னு கேட்டேன்."

    "ஒண்ணுமில்லைம்மா. குழந்தை பாக்கறதுக்கு துறுதுறுன்னு இருக்கறதால கேட்டேன்."

    "கொய்ந்த பேரு அமுதாங்க."

    "உன் குழந்தையா?"

    "ஆமாங்க."

    அந்தப் பெண் அவனை அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

    "எங்கம்மா இவ்வளவு அவசரமாப் போறீங்க?"

    "அவருக்குத் துன்ன எதாச்சும் வாங்கணுங்க. கொய்ந்தைக்கும் பசி."

    "எங்கபோய் வாங்குவ?"

    "தா அந்த டீக்கட்லதாங்க. அவருக்குப் பரோட்டாவும் டீயும். கொய்ந்தைக்கு பன்னு."

    "நீ ஒண்ணும் சாப்பிடலையா?"

    "நானும் ஏதாச்சும் துன்னுவேங்க."

    கீதா கைப்பையைத் திறந்து ஒரு புதிய ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தாள்.

    "இதை வெச்சிக்கம்மா. உங்க வீட்டுக்காரருக்கும் குழந்தைக்கும் ஏதாவது நல்ல பணியாரமா வாங்கிக்கொடு."

    அவள் கொஞ்சம் தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள். சுற்றிலும் கண்களை ஓட்டிவிட்டு ரூபாயை பத்திரமாக ஜாக்கெட்டினுள் செருக்கிக்கொள்ள, கீதா, "என்ன வயசாறது?" என்றாள்.

    "எனுக்கு இருபத்தி-எட்டுங்க. எங்க வூட்டுக்காரருக்கு நாப்பத்தி-ஏளு."

    "நான் பாப்பாவோட வயசைக் கேட்டேன்."

    "அமுதாவுக்கு மூணு முடியுதுங்க."

    "ஏம்மா, குழந்தைக்கு நல்ல துணியா தச்சுப் போடமாட்டே? பார், எவ்வளவு அழுக்கா இருக்கு. நீ மட்டும் பளிச்சினு உடுத்தியிருக்க?"

    "நம்ம தொயிலு அப்படியாப்பட்ட தொயிலுங்க", என்று அவள் தொடங்கியபோது கீதா புரிந்துகொண்டாள். கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தபோது அந்தப் பெண் கவர்ச்சியாக உடுத்தியிருப்பது தெரிந்தது. முகத்தில் லேசாகப் பவுடர் பூசியிருந்தாள்.

    "ஐயா போல்சுங்களா?" என்றாள் அந்தப் பெண் திடீரென்று.

    எங்கோ பார்த்துக்கொண்டிருந்த வாசு திரும்பி, "இல்லைமா, நான் பேங்க்ல இருக்கேன்", என்றான்.

    "நம்ப கஷ்டமரு ஒருத்தர்கூட பாங்குல இருக்கார்ங்க. பியூனு வேல."

    "ஏம்மா, ஏதாவது உழைச்சு சம்பாதிக்கற வேலையா செய்யக்கூடாது?" என்றாள் கீதா.

    "தொயு நோயாளி பொஞ்சாதிக்கு யார்மா வேலை தாராங்க? நீங்க குடுப்பீங்களா, சொல்லுங்க? ஒரு வூட்டாண்ட வேல செஞ்சிக்கிட்டிருந்தம்மா. ஒரு நாள் அந்தம்மா இவரப் பாத்துட்டாங்க. ஒரே கல்ட்டாவாய்ட்ச்சி. எதோ இந்தத் தொளில்ல ஒரு மாரி சமாளிக்க முடியுதோ, காலம் தள்றோம். பொண்ணு ஷோக்கா இருந்தா வர்ற ஆம்பிள வியாதியல்லாமா பாக்கறான்? எங்கூட்டுக்கார்க்கு தொயு நோய்யான்னு உண்மையைச் சொன்னாக்கூட, உனுக்கு வியாதி இருக்கா, அப்ப வாங்கறான்!" என்று சிரித்தாள்.

    "எதோ எங்க வூட்டுக்காரரும் ஒடம்பு சொகமாகி அல்லார் மாதிரியும் நடமாடுவார்ங்கற நம்பிக்கைல, கெடைக்கற பணத்ல கால் வயிறு சாப்ட்டு, மீதிய அப்பப்ப சேத்து வெக்கறங்க. அவருக்கு வைத்தியம் பாக்க ஒதவியா இருக்கும் பாருங்க?" என்றாள் கொஞ்சம் இடைவெளி விட்டு.

    "அவருக்கு உடம்பு எப்படிமா இருக்குது?" என்றான் வாசு.

    "மொதல்ல கொஞ்சம் சாஸ்த்தியா இருந்திச்சுங்க. கவர்மென்டு ஆசுபத்திரிலதான் மாசம் ரண்டு வாட்டி காட்டறம். இப்ப புண்ணு கொஞ்சத்துக் கொஞ்சம் ஆறிட்டு வருதுங்க."

    "ஏம்மா, நான் ஒண்ணு கேக்கறேன், தப்பா நினைச்சிக்க மாட்டியே?" என்றாள் கீதா.

    "அவரு கூடவே இருக்கறதால எங்களுக்கும் இந்த நோயி வராதான்னுதானே கேக்கப் போறீங்க? அவருக்கு இருக்கறது ஒட்டற வியாதி இல்லன்னு டாக்குடருங்க சொல்லிட்டாங்க. சமயத்ல எனக்குக்கூட அமுதாவ அவர் தூக்கிவெச்சு கொஞ்சறப்ப மனசு திக்குனு இருக்குங்க. அவருக்கு கொய்ந்தமேல உசிரு. எதோ ஆண்டவன் புண்ணியத்தில இதுவரைக்கும் சீக்கு பத்திக்காம இருக்கோம்."

    "நீ ராத்திரி வேலைக்குப் போறது உங்க வீட்டுக்காரருக்குத் தெரியுமா?"

    "தெரியுங்க" என்றாள், கண்களைத் தாழ்த்திக்கொண்டு.

    "குழந்தை?" என்றான் வாசு கவலையுடன்.

    "நைட்டு கொய்ந்த அவராண்டதாங்க இருக்கும்."

    "இந்த வண்டியில வெச்சு தள்ளிட்டு வராங்களே, அவங்களுக்கு வியாதி ஜாஸ்தியா இருக்குமா?" என்றான் வாசு.

    "பொதுவா அப்பிடித்தாங்க. அதுல செலபேர்க்கு ஒட்டற வியாதிகூட உண்டுன்னு சொல்லுவாங்க. நாங்க கூடுமான வரைக்கும் மத்தவங்ககூட கலக்காம தனியாத் தாங்க இருக்கறது."

    அவள் பதில் கொஞ்சம் ஆறுதல் தர, அவன், "பகல் பூரா இந்த ஏரியாவிலதான் இருப்பீங்களா?" என்றான்.

    "இந்தப் பக்கம்தாங்க சுத்திக்கிட்டிருப்போம். சமயத்ல கூட்டம் அதிகமாய்டிச்சின்னா அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை வரைக்கும் போறது உண்டு. நைட்டு பெரும்பாலும் இந்தப் பக்கம் வந்திருவோம்."

    "நல்லதும்மா, உன்னையும் உன் குழந்தையும் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இந்தப் பக்கம் வந்தா எங்களால முடிஞ்ச உதவி செய்யறோம்", என்று கீதா விடைபெற்றாள்.

    *** *** ***
     

Share This Page