1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இல்லம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 27, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    இல்லம் -
    சுஜாதா

    அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன்.

    இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். இரண்டு குழந்தைகள். மனைவி. அவள் அப்பா வேறு. அப்பாவுக்கு ஒத்து வரவில்லை.

    அண்ணா சாமாவிடம் அப்பா தாராளமாக இருக்கலாம். ஆனால் அண்ணா தினம் தினம் தண்ணியடிச்சிட்டு வருவதும், வீட்டுக்குள்ளேயே சிகரெட் பிடிப்பதும், சிக்கன் சாப்பிடுவதும், குழந்தைகளின் பாப் சங்கீதமும், கணவன் மனைவிக்குள் சதா சண்டை வருவதும் , இதை விட தினம் மன்னி அப்பாவிடம் " இந்த மாதிரி பிள்ளையை வளர்த்திருக்கேளே " என்று சொல்லிக் காட்டுவதும் அப்பாவுக்குப் பிடிக்கலே !

    தம்பியிடம் இருக்கலாம். அவனுக்கு இப்போதுதான் கல்யாணமாயிருக்கிறது. அவன் இருப்பது ஆர்மி குவார்ட்டர்ஸ்ல. அந்தப் பெண் பஞ்சாபிப் பெண். தினம் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும். அந்தப் பெண் பேல் பூரி பாவ் பாஜி , பானி பூரி , பிட்ஸாவிலேயே உயிர் வாழ்பவள். அவளைப் போய் ரஸம் வை , சாம்பார் வை , தொகையல் அரை என்று சொன்னால் சரிப்பட்டு வரவில்லை.

    அதோடு அப்பாவுக்குக் கட்டில் சப்தம் தாங்காது.

    இதனால் என்ன செய்வது என்று நாங்கள் யோசித்ததில் அப்பாவே எங்களைக் கூப்பிட்டு "எத்தனை நாள் நான் இருப்பேன் என்று தெரியாது. (அப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்பா ) . உடல் ஆரோக்கியமா இருக்கற வரை நான் ஒரு நல்ல ஹோமில் சேர்ந்துகொள்கிறேன். எனக்கு வரும் பென்ஷனில் வட்டிப் பணம் என் செலவுகளுக்குப் போதும். இதைப் பற்றி உங்களுக்கு எந்த விதக் குற்ற உணர்வும் வேண்டாம். உங்கள் மேல் எனக்கு எந்தவித வருத்தமோ வெறுப்போ கிடையாது" என்றார்.

    அப்பாவுக்கு ஊருக்கு வெளியே ஒரு எஸ்டேட் இருந்தது. அதை விற்று விடுவதைப் பற்றிப் பேச்செடுத்தோம். அது பற்றி அப்புறம் பேசுவோம் என்றார்.

    அப்பா சுக சாந்தி என்னும் ஹைகிளாஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். ஊருக்கு வெளியே தாம்பரம் தள்ளி இருந்தது. அடிக்கடி போய்ப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அதைத் தவிர அவருக்கு ஏகப்பட்ட வசதிகள் அங்கே. 15 நாட்களுக்கு ஒரு முறை அவரிடமிருந்து கடிதம் வரும். அண்மையில் வருவதில்லை.

    தற்செயலாக அண்ணா சாமா அப்பாவின் நிலம் பற்றி விசாரித்தான். அங்கே ஏதோ ஃபாக்டரி வருவதால் கோடிக்கணக்கில் போகும் என்றான்.மேலும் அவன் "என்ன அப்பாவைப் போய்ப் பார்க்க வேண்டாமா ராஜா? இப்படி முதியோர் இல்லத்தில் கேட்பாரற்று விட்டுவைத்தால் எப்படி? மயிலாப்பூரிலே நான் இருக்கும் கட்டடத்திலேயெ ஒரு ஃப்ளாட் விலைக்கு வரது. அதை வாங்கி அப்பாவை அங்கே வைத்துக் கொள்வதுதான் உசிதம். கடைசி காலத்தில் தாம்பரத்தில் அவருக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிவிட்டால்? சில நாளா லெட்டர் வேற வரவில்லை. அந்த நிலத்தை என்ன பண்ணப் போறார்னும் தெரியவில்லை " என்றான்.

    கடைசியில் நாங்கள் எல்லோரும் கால் டாக்ஸி எடுத்துக் கொண்டு அப்பாவைப் பார்க்கப் போனோம்.
    பாதை கரடு முரடாய் இருந்தது. டாக்ஸி போய்க்கொண்டே இருந்தது.
    குதித்துக் குதித்து ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்தோம்.

    அப்பாவைச் சேர்க்கும்போது இருந்ததை விட இப்போதுரொம்ப மாறியிருந்தது. நிறைய மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. காம்பவுண்டுக்குள் ரோடு சுத்தமாக இருந்தது. உபதேச வாசகங்கள் கம்பத்துக்குக் கம்பம் எழுதி வைத்திருந்தார்கள். (ஆரோக்கியம்தான் ஆனந்தத்தின் அடிப்படை. )
    நிசப்தமாக இருந்தது. கதவை மூடினதும் காலம் நின்று போனது போல் இருந்தது.

    டாக்ஸியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம். உள்ளே நெருங்கியபோது இல்லத்தில் ஒரு விழாப் போல எங்கும் தோரணம் கட்டி , டேப்பில் இனிமையாக, சப்தம் குறைவாக நாயனம் வாசித்துக் கொண்டிருக்க......
    அப்பாவின் அறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு பெண்மணி புது வேஷ்டி அணிவித்துக் கொண்டிருந்தாள்.
    அப்பா எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

    "வந்துட்டாங்களா ? லோச்சு , தீஸ் ஆர் மை சன்ஸ்....லெட்டர் கிடைச்சுதா ?"
    "என்ன லெட்டர் ?"
    "நான் கொடுத்த லெட்டரைப் போஸ்ட் பண்ணினியோ? லெட்டர் போட்டிருந்தேனே கிடைக்கலை? என்ன தபால் இலாக்காவோ? போன் வேறு ஒரு வாரமா வேலை செய்யல."

    பட்டு வேஷ்டியை இடுப்பில் மூன்று சுற்று சுற்றிக் கட்டிக் கொண்டு இருந்தார். மூஞ்சி தெளிந்து இன்னும் 15 வருஷத்துக்குத் தாக்குப் பிடிப்பார் போல் தெம்பாக இருந்தார்.
    "என்ன லெட்டர்ப்பா ?"

    "என்னை இந்த இல்லத்திலே பரிவாப் பார்த்துண்ட சுலோசனாவை இன்னிக்கிக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இவளுக்கும் மூணு பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கா. இனிமே இவதான் எல்லாம். இவளுக்குத்தான் எல்லாம்."
    எங்கள் திறந்த வாயில் " ஸ்வீட் சாப்பிடுங்க " என்று ஆளுக்கொரு ஜிலேபி விள்ளலை லோசனா செலுத்தினாள்.



    (சுஜாதா 2004 ல் இந்தகதை எழுதி இருப்பார் என நினைக்கிறேன். ஏனென்றால் முதல் பதிப்பு 2004 ல் என்று பார்த்தேன். 18 வருடங்களுக்குமுன்னாலே என்ன ஒரு தீர்க்க தரிசனம்! முதியோர் இல்லத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளை நினைத்துக் கொண்டிருக்காமல் தன்னைப் பார்த்துக் கொள்ளும் கெட்டிக்கார அப்பா!
    கில்லாடிப் பிள்ளைகள் ! இதுதான் இன்று 2022ல்)

    வழக்கம் போல் சுஜாதா தன் எழுத்து நடையால் கதையைப் படிக்க வைக்கிறார்.
    வாழ்க அவர் எழுத்து.
     
    Last edited: Jul 27, 2022
    vidhyalakshmid likes this.
    Loading...

Share This Page