1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இறைக்கும் கேணி தான் சுரக்கும்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 14, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,973
    Likes Received:
    12,823
    Trophy Points:
    615
    Gender:
    Male
    இறைக்கும் கேணி தான் சுரக்கும்

    :hello: ஒரு விவசாயி கடுமையான பஞ்சத்தில், சோற்றுக்கு வழி இல்லாமல் தனது நிலம் தரிசாக கிடப்பதை பார்த்து கண் கலங்கினான்... அப்போது அவன் கண் முன்னே ஒரு சித்தர் பாத யாத்திரை செல்வதை கண்டு வேகமாக அவரிடம் ஓடியவன் அந்த சித்தரின் விழுந்து கும்பிட்டு தாங்கள் எனக்கொரு உதவி வேண்டும் என்றான்.

    "கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையப்பா" என்று சித்தர் கூற...

    சாமி நான் கேட்கும் உதவி... இப்போது நான் கடுமையான பஞ்சத்தில் இருக்கிறேன், எனது மனைவி மக்கள் எல்லாம் பசியால் தினம் அழும் சத்தம் என் சரீரமே கூசுகிறது.

    "சரிப்பா அதற்கு நான் என்ன செய்ய முடியும்!"

    எனக்காக நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.

    "என்ன? பிரார்த்தனை!"

    அதாவது என் ஆயுள் முழுவதும் எனக்கு எவ்வளவு உணவு கிடைக்குமோ அத்தனையும் இப்போதே கொடுக்கும் படி நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். "

    அட! அப்படி நான் பிரார்த்தனை செய்தால் உனது ஆயுள் சீக்கிரமாக முடிந்துவிடுமே!"

    பரவாயில்லை குருவே! என் மனைவி மக்கள் வயிறாற உணவு உண்டாலே போதும் என்றான்.

    அவன் கேட்ட வரத்தால் அதிர்ந்துபோன அந்த சித்தர் சரி உன் விருப்பமே... என்று கூறி அப்படியே அவன் நிலத்தில் அமர்ந்து ஈசனிடம் அவனுக்காக பூஜித்து பிரார்த்தனை செய்கிறார்,

    சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த சித்தர் வீட்டிற்கு சென்று பார் உனக்கொரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்.

    உடனே காற்றை விட வேகமாக வீட்டிற்கு வந்தவன் அவன் குடிசையில் "அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், என்று பார்க்கும் இடமெல்லாம் உணவு பொருட்களாக நிரம்பி வழிந்தது.

    அவன் மனைவி மக்கள் முகத்தில் புன்னகையும் ஆச்சரியமும் ஒன்றாய் வர... பார்த்தீர்களா அதிசயத்தை ஈசன் கண் திறந்துவிட்டார். எடுக்க எடுக்க உணவு வந்துகொண்டே இருக்கிறதே. பசி அடங்கும் வரை ஆனந்தமாய் உண்டனர்,

    மாதங்கள் பல செல்ல...

    மீண்டும் அதே வழியாக சித்தர் திரும்ப... "இந்த இடத்தில் ஒரு விவசாயிற்கு பிரார்த்தனை செய்தேனே! அவன் பேராசையில் இறந்துவிட்டானா! அல்லது... என்று... அக்கம் பக்கம் பார்க்கிறார்.. அப்போது அந்த விவசாயி குடிசையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உணவு பொருட்களை எடுத்து செல்வதை கண்டு என்ன இது விந்தை! அவன் விதி இன்னுமா முடியவில்லை! கிடைத்த உணவை இவன் தர்மம் அல்லவா செய்கிறான்! ஒன்றும் புரியவில்லையே.,, என யோசித்தவர் உடனே ஈசனிடம் மறுபடியும் பூஜித்து பிரார்த்தனை செய்து இதற்கான விளக்கத்தை கேட்க, ஈசன் சொல்கிறார்...

    "சித்தரே நீங்கள் என் நேசமிகு மனிதர், நீங்கள் கேட்ட பிரார்த்தனையை நான் நிறைவேற்றி அந்த விவசாயிற்கு அவனுடைய ஆயுள் உணவை தந்தேன், ஆனால் அவனோ அதை வைத்துக்கொண்டு என்ன செய்தான் தெரியுமா!

    "தன்னை போல் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு அவனுக்கு கிடைத்த உணவு பொருட்களை தர்மம் செய்துவருகிறான், அவர்களின் வாழ்த்துதான் அவனை இன்னமும் வாழ வைக்கிறது, அவன் நிறுத்தும் வரை என்னாலும் நிறுத்த இயலாது" என்றார்.

    "இறைக்கும் கேணிதான் சுரக்கும்....

    கொடுக்கும் கைதான் மனக்கும்."

    தானத்தின் சிறந்த தானம் "அன்னதானம்".

    ( படித்ததில் பிடித்தது )
     
    Loading...

Share This Page