1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 8

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, Apr 24, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    "ஏன் திருமணத்தை மறுக்கிறார், தாத்தா? காதல் என்று.." மேற்கொண்டு எப்படி கேட்பது என்று தெரியாமல் மிதுனா திணறினாள். 'யாகாவாராயினும் , நாகாக்க' சொன்ன திருவள்ளுவர் தாமதமாக தான் நினைவிற்கு வந்தார்! வந்த அன்றே சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிறோமே..ஆனால் தாத்தாவோ மடை திறந்த நதியாய் தன் ஆற்றாமையை அப்படியே அவளிடம் கொட்டினார்.


    "காதலுக்கு நான் ஒன்றும் எதிரியல்ல அம்மா. காலம் முழுமைக்கும் சேர்ந்து வாழப் போகிறவர்கள் தத்தம் துணையை தாமே தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான விஷயமே. அதற்காக விஜி யாரைக் கூட்டி வந்தாலும் 'வாம்மா' என்று கேள்வியின்றி ஏற்றுக்கொள்வேன் என்றும் அர்த்தமல்ல. ஒரு வீட்டிற்கு வரும் பெண் தன் கணவனை மட்டும் அனுசரித்துப்போனால் போதாது. அவனோடு, அவன் சுற்றத்தையும் தனதாய் பாவித்து அன்பு பாராட்ட வேண்டும். அப்படி ஒருத்தியை தான் நான் இந்த வீட்டிற்கு ஒளியேற்ற எதிர்பார்க்கிறேன்.

    ஆனால், விஜியின் நட்பு வட்டம்..காக்கா கூட்டம். அவன் இதுவரை காதல் என்று எ..யாரையும் அழைத்து வந்ததில்லை.. அவனுக்கு ஒரு அசட்டுப் பிடிவாதம் அம்மா..எந்த விஷயமும் அவனே தான் முடிவெடுப்பான். அவன் விஷயத்தில் யாரும் குறுக்கிட்டால் அவனுக்குப் பிடிக்காது. திருமணத்திலும் நாட்டம் கிடையாது..அது.. என் மகன் செய்த வினை.. அது உனக்கு அப்புறம் சொல்கிறேன்...அப்படியே ஓருவேளை மனம் மாறி அவன் கல்யாணம் என்று ஒன்று செய்து கொள்ள முடிவெடுத்தால், அவன் மனைவியை அவனே தான் தேர்ந்தேடுப்பானாம். அதுவரை அவனை நான் அவசரப்படுத்தக்கூடாதாம். எனக்கென்னவோ அவன்..அவனுக்குள் சமீபமாக ஒரு சலனம் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு சந்தேகம்..ஹ்ம்ம்..பார்க்கலாம்..நாம் ஒன்று நினைக்க, தெய்வமும் அதையே நினைத்தால் நல்லது."


    ஓ.. இந்த கடுவன் பூனைக்குக் கூட காதல் வருமா?!


    "ஏதோ ஒரு பெண்ணின் வலையில் விழுந்துவிட்டான் என்று சந்தேகம் அம்மா.. என்னடா..சொந்த பேரன் பற்றி இன்று வந்த உன்னிடம் புரணி பேசுகிறேன் என்று பார்க்கிறாயாம்மா? நீ..உன்னை மூன்றாம் மனுஷியாக நினைக்க முடியவில்லை தாயே.. சந்தானம் என் உயிர் நண்பன். நீ அவனுக்கு மட்டும் அல்ல, எனக்கும் சொந்த பேத்தி போலதான். உன் அம்மா என்னை, பெற்ற தந்தை போல பார்த்துக்கொள்வாள் அம்மா . உன்னிடமும் அவள் சாயல். அதே கனிவு, பரிவு, பாசம் எல்லாம்.. ஒரு குடும்பம் போல வாழ்ந்தோம்..பிரிந்த குடும்பம் இன்றாவது ஒன்று சேர்ந்ததே..சந்தானம் தான் கூட இருந்து பார்க்க.." தொண்டை அடைக்க கண்களைத் துடைத்துக் கொண்டார் பெரியவர்.


    "இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அவரும் தான் வந்துவிடுவாரே, தாத்தா.. வருத்தப்படாதீர்கள் " என்ற அவளது தேறுதல் அவரைத் தேற்றுவதற்கு பதிலாய் மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது. "ஆமாம், ஆமாம். வந்துவிடுவான் தான். வரத்தான் வேண்டும்" என்று தனக்குள் முனகிக்கொண்டார்.


    பேரனில் லயித்த மனம் மெதுவாய் பால்ய சிநேகிதனிடம் ஒன்றியது கண்ட மிதுனா தானும் தன் பாட்டனின் நினைவில் மூழ்கிப் போனாள்.



    இருள் மறைத்த நிழல் - 9

    இத்தனை ஆழ் நட்பு என்று தாத்தா சொல்லவேயில்லையே. ஆனால் திரும்பி திரும்பி சுந்தரம் தான் உனக்கு எல்லாம். அவன் சொல்படி நடந்து கொள்ளடா என்று பலமுறை சொன்னார்தான். அதெல்லாம் விருந்தினர் மனம் கோணாது சொல்பேச்சு கேட்டு சாமர்த்தியமாக இருக்க சொல்கிறார் தாத்தா என்றே அவள் பொருள் கொண்டிருந்தாள்.


    கடந்த சில மாதங்களாக, தசைப் பிடிப்புத் தொந்தரவு அதிகமாகிவிடவே வலியால் படும் அவஸ்தைகளால் அவர் அதிகம் பேசுவதும் இல்லைதான். எல்லாம் ரத்தின சுருக்கங்கள்தான். விட்டத்தை வெறித்த பார்வை..அல்லது வலியால் நெற்றி சுருக்கிய பார்வை - இதுதான் அவள் தாத்தாவின் சமீபத்திய தோற்றம் ஆகிப்போனது.


    தசைப் பிடிப்பை வைத்துக்கொண்டு காசியாத்திரையா என்று அவள் கலங்கியபோது, "நான் தனியாக செல்லவில்லை பாப்பா..என் நெருங்கிய சிநேகிதன் சுகவனத்தோடு தான் செல்கிறேன். பார், அவன் பையன் கூட ஒரு டாக்டர் தான். வேண்டிய மருந்து, மாத்திரை, மருத்துவ ஆலோசனை எல்லாம் எடுத்துக்கொண்டு துணையோடு தானே..சுகவனத்திற்கு நான் துணை..எனக்கு அவன் துணை.. எனது நீண்ட நாள் ஆசையும் கூட..இதுபோல எல்லாம் அமைந்து வருவது அரிது பாப்பா.. சுந்தரம் வீட்டில் நீ பாதுகாப்பாய் இருப்பாய் என்ற எண்ணமே என் பயணத்தை இன்னும் சுலபமாக்கும்.." என்று பலதும் சொல்லி அவள் மனதைக் கரைத்தார்.


    டாக்டர் ஆலோசனை, தக்க துணை..என்று சில விஷயங்களும்,. அத்தோடு தாத்தாவின் ஆசை என்ற முத்தாய்ப்பும் அவள் வாயைக் கட்டிப்போட்டன. அவ்வப்போது நல விவரம் கடிதம், தொலைபேசி மூலம் தெரிவிக்கவேண்டும் என்ற உறுதிக்குப் பின்னரே அவள் ஒருவாறு சம்மதித்தாள். அதன்படி முதலில் அவள் சுந்தரம் தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டாள். தாத்தாவை அவள் கிளம்பிய அன்றே சுகவனத்தின் பையன் சுகந்தன் அவர்கள் வீட்டிற்கு அழைத்துசெல்வதாக ஏற்பாடு. கிளம்பும் பரபரப்பில் டாக்டர் வீட்டு போன் நம்பரை எங்கோ தவறவிட்டுவிட்டது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.


    இப்போதேனும் தாத்தாவிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். "வந்து..தாத்தா..அந்த உங்கள் நண்பர் சுகவனத்தின் போன் நம்பர் இருக்கிறதா?.." என்று நப்பாசையுடன் கேட்டாள். தன் தாத்தாவின் நெருங்கிய நண்பர் இந்த தாத்தாவிற்கும் தெரிந்தவராக இருக்க வேண்டுமே என்று உள்ளம் தவித்தது. நல்லவேளை அவள் யூகம் வீண் போகவில்லை.


    "இருக்கிறதம்மா..நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். பள்ளி..தொழில் எல்லாவற்றிலும்..மும்மூர்த்திகள் என்று பிறர் கேலி செய்யும் அளவிற்கு..." பழைய நினைவுகளில் அமிழ்ந்தவர் தானே தொடர்ந்து, "நானும் சுகமும் தான் உன் தாத்தாவை ரொம்ப சமாதானப்படுத்தி இந்த..ஏற்பாட்டிற்கு படிய வைத்தோம். அவனுக்கு உன்னைப்பற்றி தான் ஒரே கவலை.. இப்படி உன்னை நி..விட்டு போகிறோமே என்று.." தொண்டையை கனைத்து சரிபடுதத்திக்கொண்டு , "இங்கே என் பாதுகாப்பில் நீ இருப்பது என்று முடிவான பின்தான் எங்கள் யோசனையை காது கொடுத்து கேட்டான். நீ பத்திரமாக இங்கு வந்து சேர்ந்ததை காலையிலேயே சுகத்திற்கு தெரியப்படுத்திவிட்டேனம்மா. உன் தாத்தா தூங்கி கொண்டு..வந்து அவன் எழுந்ததும் போன் பண்ணுவதாக சுகம் சொன்னான். போன் வந்ததும் உன்னை கூப்பிடுகிறேன் சரியா?" என்றார்.


    வாய் "சரி தாத்தா" என்றாலும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை. தாத்தா இந்நேரம் அங்கே ஏன் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்? அவள் கிளம்பிய அன்று மதியமே டாக்டர் வீட்டில் இருந்து காசிக்கு செல்வதாகத்தானே திட்டம்? இவர் சொல்வதைப் பார்த்தால் இன்று மாலை வரை டாக்டர் வீட்டில் தானா? தாத்தாவிடம் பேச வேண்டும் போல உள்ளம் பரபரத்தது.


    அதைப் புரிந்து கொண்ட பெரியவர், "ஒரு கம்ப்ளீட் செக்கப் முடித்த பிறகு இருவரும் பயணத்தை தொடரலாம் என்று சுகந்தன் கண்டிப்பாக சொல்லிவிட்டானாம் அம்மா. அதுதான் உன் தாத்தா அங்கேயே தங்க வேண்டியதாகிவிட்டது. " என்றார் சமாதானமாக. அதுவும் சரியாகேப் பட்டது மிதுனாவுக்கு. வருமுன் காப்பது நல்லதல்லவா? ஆனால் இதை ஏன் அவர்கள் முன்பே யோசிக்கவில்லை? மேலும், பயணம் தாமதமானால், அது முடிவுறவும் தாமதம் ஆகும் தானே.. அதுவரை இவள் இங்கல்லவா இருக்க வேண்டும்?!


    "ஏனம்மா, என்னோடு கூடுதலாய் மேலும் சில நாட்கள் இருப்பதில் உனக்கொன்றும் சிரமம் இல்லையே? " என்று வினவினார் சுந்தரம்.


    "ஐயையோ..அதெல்லாம் ஒன்றும் இல்லை தாத்தா..வந்து..தாத்தாவைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்று தான்.." அவள் திணறினாள். "புரிகிறதம்மா..உனக்கு இங்கே ஒரு குறையும் இல்லாது கவனித்து கொள்வது என் கடமை.உன் தாத்தன் இல்லாத குறை தவிர" என்ற அவரது குரல் ஏனோ உடைந்து தழுதழுத்தது.


    இவர் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்? தாத்தா காசிக்கு தானே செல்கிறார்? மூன்று மாதங்களில் வந்துவிடப்போகிறார்..ஒருவேளை தன்னைப் போலவே இவரும் தன் சிநேகிதனை எண்ணி ஏங்குகிறார் போல.. தன் தாத்தாகூட இப்படித் தான் சமீப காலமாக அடிக்கடி உணர்ச்சிவசபட்டது நினைவிற்கு வந்தது. பாவம் இவருக்கும் அதேத் தள்ளாத வயது தானே..தனிமை வேறு.. ஆனாலும் இந்த நளந்தன் காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு வெளியே வெளியே என்று ஓடாமல் இவரோடு அனுசரணையாக நாலு வார்த்தை தினமும் பேசலாமே என்று அவளுக்கு தோன்றியது.
     
    Last edited: Apr 24, 2010
    3 people like this.
    Loading...

Share This Page