1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிதி சால சுகமா......

Discussion in 'Stories in Regional Languages' started by mathangikkumar, Dec 13, 2012.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனக்கு எப்பவுமே பிரபா சிஸ்டர்ஸ் கச்சேரி ரொம்பப் பிடிக்கும் , அவா சிலப் பாட்டுப் பாடணும்னு நான் தோப்புக்கரணம் போட்றதாவே வேண்டிப்பேன், போட்டும் இருக்கேன்! இப்டிதான் ஒரு நாள் என் பிரெண்ட் மைதிலி ப்ரீ டிக்கட் இருக்கு, உன்னோட ஆஸ்தான மனம் கவர்ந்த பாடகிகளோடது , வரயான்னு கேட்டா.கரும்பு தின்ன கூலியா ?

    நான் அஸ் யூசுவல் பேப்பர் ,பேனா சகிதம் ஒரு சின்ன தண்ணி பாட்டிலோட புறப்பட்டேன் .

    அது ஒரு மார்கழிக் கச்சேரி , பிரபா சகோதரிகளுடயக் கச்சேரி , சபைக் களை கட்டிக்கொண்டு ஜம்முனு இருந்தது . முதலில் மஹாகணபதிம் நாட்டைல எடுத்து , நின்னு கோரி வசந்தாவில பிசிறி , அப்பறம் தாரிணி சுத்த சாவேரியில லேசா தொட்டு , காம்போதியில திருவடி சரணம் பொறட்டுப் பொரட்டி , கல்யாணியில ''நிதி சால சுகமா'' ஆலாபனையை ஒன்னு சேத்து , உருண்டைப் பிடிக்க உருட்டிண்டு பாவத்தோட ஆலாபனை ஏழு நிமிஷத்துக்குப் பண்ணி பிறகு வயலினுக்கும் கொஞ்சம் டேஸ்டுப் பண்ணக் கொடுத்து அவர் சிரிச்சுண்டே ஒரு பார்வைப் பார்த்ததும் 'நிதி சால சுகமா' னு பல்லவியை அவ்ளோ அழகா உருக்கத்தோடப் பாடினா.

    அடுத்தது அநுபல்லவி அதுல "ததி நவநீத ஷீ ரமுலு 'ன்னு வரப்போ அப்டியே தயிரக் கடஞ்சு வெண்ண எடுத்து மோர் அபிசேகமே பண்ணிட்டா ,ரெண்டு பெரும். நிஜமாவே கண் முன்னாடி அபிசேகம் பாத்தா மாதிரி இருந்தது.
    வந்ததே சரணம் , இப்பத்தானா , இந்தக் கரண்ட் போயி ஜெனரேட்டரும் காலை வாரி விடனும்?

    ஒரு நிமிஷம் யாருக்குமே என்ன நடக்கறதுன்னு புரியறதுக்குள்ள , கம்பீரமா கல்யாணி சரணம் பண்ணி நடந்து வந்தாள் . அப்ப கச்சேரிக் கேட்க வந்தவாள்ளேருந்து , ஒரு மாமி கண்ணை மூடிண்டு சரணத்தைப் பாட ஆரம்பிச்சா!

    எல்லாருமே ஆடிப் போயி அக்கம் பக்கம் திரும்பிப் பாத்தால் அங்க அந்த மாமி அப்டியே சரணத்தோடா ஐக்கியம் ஆயிட்டா!

    எங்கேயோ இருந்த சபா செகரட்டரி கக்கத்துல வச்சிண்டு இருந்தப் பையை எடுத்து கையில வச்சிண்டு வாயிலப் பொவயிலயை ஒரு பக்கமா நகத்தி ஓடி வந்தார்.

    இதுக்குள்ள பிரபா சகோதரிகள் , பக்கவாதியகாராளுக்கு , 'சிந்து பைரவி'ல சிவகுமார் தலை ஆட்டி சிக்னல் கொடுத்தா மாதிரி, தலையை ஒரு ஆட்டு ஆட்டி க்ரீன் சிக்னல் கொடுத்தா. அவாளும் ரொம்ப சின்சியரா பக்க பலம் கொடுத்தா நம்ப 'எங்கேயோ கேட்ட குரல்' மாமிக்கு .

    அதுக்குள்ள என்ன மாதிரி இருக்கற சிலபேர் தன்னோட மொபைல்ல அப்டியே பாட்டு பாடறவாளையும் கேப்சர் பண்ணினா.வீடியோகாரன் கேமரா சகிதம் மாமிக்குப் பக்கத்துல வந்து போகஸ் பண்ணினான்.தம சம மனு கங்கா ன்னு பாடினப்போ அவ்ளோ குளுமையா அப்டியே வெயில் கால கங்கையில ஸ்நானம் பண்ணா மாதிரி இருந்தது .

    எல்லாருமே அப்டியே 'ஸ்பெல் பௌண்ட்' , என்னமா பாடினா அதுவும் பாவத்தோட! எல்லாரும் மாமி பக்கம் திரும்பிண்டு ,பாட்டுல ஊன்றிப் போனா.

    ரத்னப் ப்ரபா ,சந்திரப் ப்ரபா ரெண்டு பெரும் மேடையிலேயே உட்கார்ந்துண்டு தாளம் மட்டும் போட்டுண்டு இருந்தா. பக்க வாத்யக்காராளுக்கு இது ஒரு சேலென்ஜே , முன் அறிவிப்பின்றி முகம் தெரியாத பாடகிக்கு வாசிப்பதுன்னா சும்மாவா?

    மாமியப் பாத்தா சாதாரணமாத் தான் தெரியறது .'ஹிடன் டேலண்ட்' னு சொல்வாளே அந்த மாதிரி.

    தியாகராஜர் க்ருதி அவர் எப்படி நினச்சாரோ அப்டியே மாமி பாடினாளோன்னு கூடத் தோணும். அவ்ளோ உருக்கம் , மனசுல ஒரு சுமையோ, ஒரு வருத்தமோ நன்னாவேத் தெரிஞ்சுது. ஏதோ ஒண்ணு மாமியை வருத்தரதுண்ணு அதுக்கு வடிகாலோன்னு எனக்கு நினைக்கத் தோணியது.


    க்ருதி முடிஞ்சதும் பயங்கர கைதட்டல். மாமி பாடி முடிச்சதும் தான், இந்த பூமிக்கு வந்திருக்கணும், ஏனா அக்கம் பக்கம் பார்த்தவா எல்லோரும் தன்னையே வச்சக் கண்ண வாங்காமப் பாக்கறதிலிருந்தே புரிஞ்சுடுத்து , தான் ஒரு வேளை மனசு விட்டுப்பாடிட்டோமோண்னு. வெட்கமும், அவமானமும் கவ்வ தலையைக் குனிஞ்சுண்டு பாத்தா.

    எனக்கு ஏதாவது செஞ்சி மாமியோட மனக் கனத்தைக் குறைக்கணும்னு தோணித்து , என் பாட்டில்லேருந்து ஒரு சிப் தண்ணி குடிச்சு எழுந்து நின்னு ஒரு கையைத் தூக்கினேன்.. அதுக்குள்ள போன கரண்ட் வந்துடவே , எனக்கு மைக்கை கொண்டு வந்து கொடுத்தா. எனக்கு பொது இடங்கள்ள பேசறதுல ஒரு பயமும் கிடையாது, நம்மளை யாருக்கும் தெரியப் போறதில்லை, பின் விளைவுகள் நம்மைத் தொடராது, அங்கேயே பிசிரிடும்.

    தொண்டையைக் கணித்துக் கொண்டு,' 'மன்னிக்கணும்,எனக்கு ஒரு அளவுக்கு சங்கீதத்தை ரசிக்கவும்,அனுபவிக்கவும் தெரியும். இருந்தாலும் இந்த மாமி பாடினதுல ரொம்ப பாவம் ,அதுவும் மனசுருகிப் பாடினா மாதிரி தெரிஞ்சது . உங்களோடைய அபிப்ராயம் என்னவோ? ஏன்னா , நீங்க இந்தப் பாட்டை இப்டித்தான் பாடப் போறோம்னு ஒரு ப்ளான் பண்ணி ஆரம்பிச்சிருபீங்கோ , பக்க வாத்யக் காராளோட அபிப்ராயம் என்னன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன். இது முழுக்க முழுக்க ஒரு கத்துக் குட்டியின் இன்ட்ரெஸ்ட்' 'நத்திங் எல்ஸ் ''

    உங்களுடைய கேள்விலேயே பதிலும் இருக்கு, நிஜமாகவே மாமி சங்கீதம் நல்லா தெரிஞ்சவாதான் இன்னும் சொல்லப் போனா மேடை ஏறிக் கச்சேரி பண்ற அளவுக்கு ஞானம் இருக்கு, ஒரு பாடகிக்கு பாவம் ரொம்ப அவசியம். அது தான் சங்கீதத்தின் ஜீவன் , பாட்டோட வரிகளைப் புரிந்து, அதோட மனோ பாவத்தோடப் பாடினாலே பாவம் வந்துடும்னு. ஒருத்தரோட பாட்டுல சாஹித்யம் இல்லாம அதாவது வார்த்தைகள் இல்லாம பாடற ஆலாபனையாகட்டும் கற்பனையோட பாடற ஸ்வரமாகட்டும் அதிலும் பாவம் உண்டு,அது இருக்கவும் செய்யனும்னு எங்க குருநாதர் அடிக்கடி சொல்வார் .இது ர்தனப் ப்ரபா

    இந்த மாதிரி ஒருத்தர் சபையிலப் பாடினதா நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இதுவே எங்களுக்கு ஒரு பாடம், சங்கீதம் தெரிஞ்சவா நிறையப் பேர் அதை வெளிக்கொணராம இன்னும் மூளை முடுக்குகளில் எல்லாம் இருக்கான்னு.அவாளையெல்லாம் கண்டு பிடிச்சு கர்நாடக சங்கீதத்தை இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு போகணும். இது சந்தரப்ப்ரபா

    இதுக்கு எங்களைப் போன்ற பாடகாளும் சங்கீத சபாக்காராலும் மொனைஞ்சு ஒரு ஸ்லாட் வளரும் கலைஞர்களுக்குன்னு ஒதுக்கணும். இன்னும் சொல்லப் போனா நாங்களேக்கூட இந்த மாமி மாதிரி ஒரு கலைஞருக்குன்னு ஒரு அஞ்சு நிமிஷம் எங்க கச்சேரியிலே கொடுக்கலாம். 'சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம் 'பார்க்கலாம்'.' ஒரு ரிக்வெஸ்ட் இப்ப பாடின மாமி தயவு செஞ்சு கடைசி வரை இருந்து கேட்டுட்டு போகணும்னு நாங்க விருப்பப் படறோம்.'

    அப்புறம் ப்ரபா சிஸ்டர்ஸ் எந்தரோ பஞ்சரத்னம் நல்ல விஸ்தாரமாப் பாடினாள்.ஆனந்த பைரவில மரிவேரே முடிஞ்சு கரஹரப்ரியால சக்கனிராஜ பாடி கடைசிலே அவாளோட சிக்னேச்சர் பாரதியாரோட பாட்டு பாடி முடிச்சா.

    சபா கலஞ்சதும் மொதல்ல பிரபா சிஸ்டர்ஸ் அந்த மாமிகிட்ட தான் வந்தா. மாமிக்கு சாஸ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினா.அப்புறம் மாமிகிட்ட அவாளோட சங்கீதஞானம் பற்றிக் கேட்டு தெரிஞ்சுண்டா. மாமி கிட்ட அடுத்த நாளுக்கு ஒரு அப்பாய்ண்ட்மெண்டும் வாங்கிண்டா.

    அவ்வளவு தான் தெரியும் . எனக்கும் என்னுடைய கச்சேரி ஆசை நிறைவேறியதோட ,ஒரு கேள்வியும் கேட்டு ஒரு புது அனுபவமும் கிடைச்சது. என்னோட ப்ளாகுக்கு ஒரு தீமும் கிடைத்தது.

    * * * *

    இந்தக் கச்சேரி முடிஞ்சு நான் பிஸியா ப்ளாகுல எழுதிண்டு இருக்கப்போ, மைதிலி போன் பண்ணி , 'டி மாத்தூ , 'நாத இன்பம் ' டி வி ல அன்னிக்கு பாடின மாமியோட ஒரு இண்டர்வியு வரப் போறது, போட்டுக் கேளுடி.'ன்னா

    நான் ஒடனே அடிச்சுக்கட்டிண்டு சேனல் தேடிப் பிடிச்சு ஆன் பண்ணினேன்.
    'ஆஹா ,என்ன ஒரு அழகான பேக்ரவுண்டு ம்யுசிக் !'

    முதல்ல மாமியோட அந்தக் காலத்து வீடு, வாசல்ல " கல்யாணி நிவாஸ் ''னு கல்லுலப் பதிச்ச போர்ட் .நித்ய மல்லில ஓர் ஆர்ச். நீளமா நடந்து போனா தேக்கு மரத்துலப் நல்ல வேலைப் பாடு பண்ணின கதவு,சும்மா கம்பீரமா நல்ல வேலைப் பாடோட வரவேற்கறது .மாமிவந்து ப்ரபா சஹோதரிகளை வரவேற்கிறா.

    ஹால்ல ஒரு பெரியவரோட போட்டோக்கு சந்தன மாலைப் போட்டு இருக்கு. கலை நயம் உள்ள வீடாகத்தான் தெரிகிறது, பின்ன அவ்ளோ நல்லா சரஸ்வதி தேவியே பாடினா மாதிரி பாடின வீட்டுல கலை நயம் தாண்டவம் ஆடாதா?

    உள்ள இருந்து மாமியோட ஹஸ்பண்டாத்தான் இருக்கணும், பட்டபட்டயா விபுதி இட்டுண்டு ,மயில் கண்ணு வேஷ்டியைக் கட்டிண்டு ஒரு ப்ளூ கலர் டி ஷர்ட் போட்டுண்டு ரொம்ப பவ்யமா வந்து ஒரு நமஸ்காரம்னு சைகையில பண்ணார்.
    ப்ரபா சிஸ்டர்சும் மரியாதைக்கு எழுந்து பதில் வணக்கம் தெரிவித்தார்கள்.
    கேமரா மாமி பக்கம் போனதும், மாமியே, 'என் பேரு பைரவி, என் கணவர் கோதண்டராமன் .

    'இங்க படத்துல இருக்கறது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?' இது ரத்னப்ரபா

    'இது என்னோட அப்பா முடிகொண்டான் சடகோப அய்யர் '.இது கோதண்டராமன்.

    'அப்போ முடிகொண்டான் ராஜகோபால அய்யர் கூட உங்கப்பாவுக்கு தெரிஞ்சு இருக்கணுமே?'

    நன்னா சொன்னேள் போங்கோ, எங்கப்பாவோட குரு தான் ராஜகோபால அய்யர்.

    உடனே சந்த்ரப் ப்ரபா, அப்பா மாமியோட குரு யாரு?

    'இவர் என்னோட சொந்த மாமா, இவரோட அப்பா அதான் , என்னோட தாத்தா தான் என்னோட குரு. எனக்கு அஞ்சு வயசுலேருந்து பாட்டுக் கத்துக் கொடுத்தது என்னோட தாத்தா தான். நான் எல்லாருக்கும் கடசிலப் பொறந்தேன் அதனாலே தாத்தாக்கு நான் ரொம்ப பெட் .என்னை மட்டும் காலேஜுக்கு அனுப்பிச்சு படிக்க வச்சா. நான் எங்க குடும்பத்திலேயே எங்கம்மா வுக்குப் பிறகு பொறந்த ஒரே பொண் கொழந்தை.

    'அப்போ நீங்க கச்சேரி எல்லாம் ஏன் பண்றதில்லை'

    எங்க அப்பாக்கு பைரவிக் கச்சேரிப் பண்ணனும்னு தான் ஆசை. கடைசி வரை எவ்ளவோ சொல்லிப் பார்த்தா , ஆனா இவ குடும்பத்தை பார்க்கவே டைம் சரியாக இருக்கு,கச்சேரி எல்லாம் எட்டாத கனின்னு , பண்ணலை '

    ''தாத்தா ,எப்படி , ரொம்ப ஸ்ட்ரிக்டோ?'


    ஆமாம் , அப்யாசம்னு வரும்போது எந்த சாக்கும் செல்லாது'

    'இன்னும் கேட்கப் போனா, கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் அப்பா எங்களை சும்மா விட்டா, அதுக்கப்புறம் தினமும் பைரவி காத்தாலை ஒரு மணி நேரம் சாதகம் பண்ணனும், அப்புறம் சாயங்காலம் ஒரு மணி நேரம் பாடிட்டு , அப்பாகிட்ட கோ அஹெட் னு பர்மிஷன் வாங்கணும்.அது கிடைக்கலேன்னா அடுத்த நாள் என்னோட கூட இருக்கற நேரத்துல ஒரு மணி நேரம் மைனஸ் '
    .
    அதல்லாம் விட எனக்கு கிடைச்சு இருக்கற இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? அதை நம்மளாலே ஒழுங்கா காப்பாத்திக்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம். தாத்தாக்கும் வயசாகிண்டே போயிண்டிருந்தது . வீட்டு வேலைகள் வேறே, எல்லாமா சேர்ந்து எனக்கு மேனேஜ் பண்ண முடியலை.'

    'ராஜகோபால அய்யர் ,அவரோட பாணி தனின்னு சொல்வாளே, அது எந்த மட்டும் உங்க தாத்தாவால பாலோ பண்ண முடிஞ்சுது ?'

    'அவரோடதுன்னுப் பார்த்தா , எப்பவும் தாத்தா சொல்வா தனக்குன்னு ஒரு பாணி வச்சுகலைன்னாலும் ,தனி ஆவர்த்தனம் போது நடுல கொஞ்சம் ஸ்வரம் பாடுவான்னு சொல்லிக் கேள்வி, ஆனா அப்போ எனக்கு விவரம் கேட்கத் தோணலை.'

    'கமிங் டு த பாய்ன்ட் , நேத்து நீங்கப் பாடினப்போ ஒரு இறுக்கம் கலஞ்சாமாதிரி இருந்தது, அது ஏன்னு நாங்கத் தெரிஞ்சுக்கலாமா?'

    பைரவி கணவனைப் அர்த்தத்துடன் பார்த்தாள் , கண்ணிலேயே சொல்லட்டுமா வேண்டாமான்னு .

    அவள் தாறு மாறாக ஏதாவது பேசிடப் போறாளேன்னு கோதண்டனே ,' அது ஒண்ணுமி இல்ல, எங்களுக்குள்ளே மனஸ்தாபம் வந்து நான் கொஞ்சம் கோபத்துல இவளப் பாடக் கூடாதுன்னு சொல்லிட்டேன், அதுலேருந்து இவள் அப்செட் ' நேத்திக்கு 'நிதி சால' கேட்டதும் மனசு ஒடஞ்சு ப்ரவாகமா பாட்டு பாடிட்டா,' எத்தனை நாளா மனசுல வச்சிண்டு இருந்தான்னு இப்பத் தான் எனக்கு தெரிய வந்தது. ' ஐயம் சாரி பைரு '.

    கோதண்டன் மன்னிப்பு கேட்டதும் பைரவியே வாய் திறந்து பேசினாள் .

    'ஒண்ணு இவர் பாடக் கூடாதுன்னு சொன்னது, ரெண்டாவது எங்க தாத்தாவும் குருவுமானவர் சாகரதுக்கு முன்னாடி என்னை இந்தப் பாட்டு பாடச் சொல்லி கேட்டது, மூணாவது இந்தப் பாட்டை நீங்க பாடி கேட்கும் போது என் மனசுல ,ராமர் கிட்ட ,'நன்னாப் பாடிண்டு இருந்த என்னை பாடக்கூடாதுன்னு சொல்ல வச்சிட்டயேன்னு' கேட்கத் தோணித்து' . 'இது எல்லாமா சேர்ந்து என்னப் பாட வச்சுட்டது'.'எனக்கே ஒரு நிமிஷம் ஒன்னும் தோணலை, நிஜமாவே நான் பாடினேனா,இல்லை மனசுக்குள்ளே பாடினேனான்னு ஒரு குழப்பம் .ஆனால் எல்லோரும் என்னையே பார்த்ததிலிருந்து குழப்பம் போச்சு' .நல்ல காலம் அந்தப் பொண்ணு புண்ணியம் கட்டிண்டா .' 'அவள் மட்டும் கேள்விக் கேக்கலைன்னா என் பாடு திண்டாட்டமா போயிருக்கும்'.

    'சாரி, நாங்க ரொம்ப நேரம் எடுத்துண்டுட்டோம் , உங்கப் பூஜ ரூமைப் பார்க்கலாமா?'

    ஓ ,பேஷா , பாட்டு ரூமையும் பார்க்கலாம் ரெண்டும் பக்கத்துல, பக்கத்துல தான் இருக்கு'.'தாத்தாக்கு ரெண்டும் தனித் தனியா தான் இருக்கணும்னு,.'

    'ஏன் அப்படி?'

    'அவரைப் பொறுத்த வரை சரஸ்வதிக்குன்னு ஸ்பெஷல்லா இடம் ஒதுக்கி அதுல தேவியை ஆவாகனம் பண்ணி கலையை சமர்பித்தால் அதனுடைய அழகும் பலனும் வேறேன்னு அபிப்ராயம்.'

    'ஆஹா , கோவிலுக்குள்ளே நுழையறா மாதிரி இருக்கு'.

    'இங்கே தெய்வீக சக்தி இருக்கா மாதிரி தோணறது.'

    'யு ஆர் ரைட்'

    'தாத்தா சில சமயம் தேவிகூடப் பேசுவா, என் பொண்கள் கூட கேலிப் பண்ணுவா.' தாத்தா அதைப் பொருட்படுத்த மாட்டா .'

    'பூஜ முடிஞ்சதும் கதவை சாத்திடுவா , அப்ப தான் உள்ளே இருக்கற எனர்ஜி அப்டியே இருக்கும்னு '

    'அடுத்த ரூமுக்குப் போலாம் ,வாங்கோ, '

    'இது வித்வான் ராஜகோபால அய்யரோட குரல் மாதிரி இருக்கே?'

    'ஆமாம், இந்த ரூமுல எப்பவும் கேசட்டு பாடிண்டே இருக்கும்'.'தாத்தா இருக்கும் போதும் சரி அவர் போனப் பிறகும் சரி'.

    'இது அத்தனையும் பாட்டு கேசட்டும், சிடியுமா ?'

    'ஆமாம், இதுல அவா ரெண்டு பேரோடதும் மத்த பாடகாளோடதும் கலந்து இருக்கு'.

    'வித்வானோடது இருந்தாப் பாக்கலாமா'? 'ஆட்சேபனை ஒண்ணும் இல்லையே?'

    'அப்ஸ்சலூட்லி ' கோதண்டன் எடுத்துக் கொடுக்க , அவர்கள் பார்க்கிறார்கள் .

    பிறகு பிரபா சிஸ்டர்ஸ் விடை பெறும் சமயம் பைரவி வெத்திலைப் பாக்கு கொடுத்து அனுப்புகிறாள் ,அவர்களுக்குள் ஏதோ பேச, வாசல் வரை வந்து பைரவியும் அவள் கணவன் கோதண்ட ராமனும் வழியனுப்புகிறார்கள்.

    * * * *
    இந்த இன்டர்வ்யு கேட்டதும் என்னோட யூகம் சரின்னும் அந்த பைரவி மாமி எனக்கு தேங்க்ஸ் பண்ணினதும் கேட்டு மனசுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் பண்ணினா மாதிரி ஆச்சு.

    என்னோட அடுத்த வேலை நானே நேர்லப் போயி எனக்காக ஒரு தரம் பார்த்து பைரவி மாமியப் பார்த்து அது என்ன சின்ன மனஸ்தாபம்னு தெரிஞ்சுண்டு பேசிட்டு வரணும் , ஏன்னா அதை வச்சு 'ஒரு மூச்சு கதை 'எழுதலாம்.
     
    3 people like this.
    Loading...

Share This Page