1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (2) வையத்து வாழ்வீர்காள் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 21, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    2) ஆண்டாள் பாடல் ( இறைவன் திருவடியில் சரணாகதம் செய்வதற்கு மனோ வாக் காயம் என்கிற, எண்ணம், சொல், செயல் இவற்றால் செய்யக்கூடாத தீச்செயல்களை விட்டொழிப்பது பற்றியும், செய்ய வேண்டிய நற்செயல்களைத் தவறாமல் செய்வது பற்றியும் உரைப்பது உட்கருத்து)

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
    செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமன் அடிபாடி,
    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
    மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
    செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.


    பாசுரப் பொருளுரை

    " மண்ணுலகில் வாழ்பவர்களே ! நாங்கள் நோற்கும் இந்நோன்பிற்கு உண்டான விதிமுறைகள் என்னவென்று சொல்கிறோம் கேளுங்கள் ! பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடிப் பெருமைகளைப் பாடி நாங்கள் நோற்கும் இந்நோன்பின் காலத்தில், நாங்கள் நெய் பால் போன்ற வஸ்துக்களை உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடுவோம். எங்கள் கூந்தலைப் பூச்சூட்டி அழகுபடுத்த மாட்டோம், விழிகளுக்கு மை தீட்ட மாட்டோம். செய்யக்கூடாத தீச்செயல்களைச் செய்யமாட்டோம். யாரையும் பற்றிப் புறம் சொல்லி வம்பு பேச மாட்டோம். இறை அடியவர்களான ஆச்சார்யர்களுக்கும், பிரம்மச்சாரிகள், துறவியருக்கும் வேண்டிய பொருட்களை எங்களால் முடிந்தவரை தந்து உதவுவோம். பெண்கள் விரும்பும் மங்கலப் பொருட்களான மெட்டி,வளையல், மூக்குத்தி, தாலி, நெற்றித் திலகம், கூந்தலில் சூடும் மலர் இவை ஆறையும் வேண்டி மார்கழி நோன்பு நோற்போம் !"


    பாசுரக் குறிப்பு

    இப்பாசுரத்தில் இறைவன் நமக்கு வீடு பேறளிக்க, மனோ, வாக், காயம்,( எண்ணம், சொல், செயல்) இம்மூன்றின் வழியாக நாம் செய்ய வேண்டுவன, செய்ய வேண்டாதன பற்றி ஆண்டாள் அறிவித்தாள். கர்தவ்யம்,(செய்ய வேண்டிய கடமைகள்) தியாஜ்ஜியம் (செய்யக்கூடாதவை ), உபவாசம்,(உண்ணாமை) ஜாகரணம்(விழித்திருத்தல்) என்பதான ஏகாதசி விரதத்திற்கு ஏற்ற வழிமுறைகளைச் சொல்லுதற் போல், பாவை நோன்பிற்குண்டான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களான நம் வாழ்வில் நடக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியைக் கற்பனை செய்து கொள்வோம். சிறு குழந்தையொன்று அழுகிறது. அதன் தாய் அதைச் சமாதானம் செய்வதற்காக, ' நீ அழுகையை நிறுத்தினால், அப்பாவிடம் சொல்லி இனிப்புப் பண்டம் வாங்கித் தருகிறேன்' என்று கூறுகிறாள். இதில் தாய் தன்னுடைய பிள்ளைக்கு, முதலில் அழுகையை நிறுத்து, அப்பா இனிப்பு தருவார் என்று இரண்டு விஷயங்களைப் புரிய வைக்கிறாள். அது போலவே, ஆனாலும் அதைக் காட்டிலும் கருணையோடு , இனிப்பான செய்தியாய், ஆண்டாளாகிய தாய் , தந்தையாகிய பரமன் , குழந்தைகளாகிய நமக்குப்,பறையைத் தருவான் என்பதை முதல் பாசுரத்தில் இரண்டு சிறப்பு ஏகார ஒலிகளோடு சொல்லி விடுகிறாள். நம் மனதிற்குத் தெம்பூட்டி விடுகிறாள். இந்தப் பாசுரத்தில், அந்தப் பறையைப் பரமன் நமக்களிக்கக், குழந்தைகளாகிய நாம் செய்ய வேண்டுவன, செய்ய வேண்டாதன பற்றிக் கூறுகிறாள். முதலில் நம்பிக்கையூட்டும் செய்தி. பின்னர்,அறிவுறுத்தல். குழந்தைகள் மனநிலையை நன்கு அறிந்தவள் அன்னையன்றி வேறு யார் ? போஷகம் என்று சொல்வதான வைணவ நெறியின் த்வய மந்திரத்தைக் குறிக்கும் பாசுரம். (ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே + ஸ்ரீமதே நாராயணாய நமஹ ) குழந்தைகளை நன்கு நெய்யும், பாலும், பருப்பும் உண்ணத் தந்து போஷித்து வளர்ப்பவள் அன்னையே அல்லவா ? அது தானோ என்னவோ இரஹஸ்யத் த்ரயத்தில் தாயாரை முன்னிலைப்படுத்தும் த்வய மந்திரம் போஷக மந்திரம் என்று குறிக்கப்படுகின்றது. (அறிஞர் விளக்கம் தர வேண்டுகிறேன் )
    இப்பாசுரத்தில், அவதார பஞ்சகத்தின் பரமாத்ம நிலை குறிக்கப்பட்டுள்ளது. அர்த்த பஞ்சகத்தின் விரோதி நிலை, அதாவது சரணாகதம் செய்வதற்கு உண்டாகும் இடையூறுகள் இப்பாசுரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
     
    knbg, rai and periamma like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம் - சொற்பொருள்

    மண்ணுலக மாந்தர்காள் ! யாம் நோற்கும்
    நோன்பிற் குள்ளவாம் முறைகள் அறிவீரோ?
    கண்ணுறங்கா துயில் பூணும்- பாற்கடல்
    அண்ணலவன் பாதம் பற்றிக்- கன்னிப்
    பெண்டிர் பாவை முழுதும் தூயோராய்,
    தண்ணீர்க் குளத்தில் அதிகாலை நீராடி,
    உண்டியிலே நெய்யோடு பால் நீக்கிக்,
    கண் அணியாம் அஞ்சனமும் பூசாது,
    நீண்டக் கருங்குழலைப் பூச்சூடி ஓம்பாது,
    வேண்டாத அல் வினைகள் செய்யாது,
    யாண்டும் இடும்பை தருகின்ற -கோள்
    ஒன்றும் சொல்லாது- மேலாய் உள்ளோர்
    வேண்டும் பொருள் யாவும் மனமுவந்து,
    அண்டியவர் வேண்டும் பொருள்- இல்லை
    என்று சொல்லாது தந்து மகிழ்ந்திடுவோம் !
    துன்பங்கள் நாளும் தீண்டாதபடி நாமும்,
    பெண்டிர் அணிகின்ற மெட்டி, வளையலும், -
    மென்னொளி வீசிடும் நாசி நகையதும்,
    வேண்டிப் பெறுகின்ற திரு மாங்கல்யமும்,
    நன்றாய் நெற்றியிலே ஒளிரும் திலகமும்,
    கொண்டை முடிகின்ற வாசனை மலரென,
    நன்மை தருகின்ற மங்கலப் பொருளாறும்,
    வேண்டி- நமக்கதனை அளிக்கும் பரமனாம்,
    கண்ணனருள் செய்ய நோன்பு நோற்கலாம்
    !

    வையத்து வாழ்வீர்காள்! - பரமபதம் என்று சொல்லக்கூடிய வைகுண்டத்திற்குப் போகக் கூடிய பேறு பெற்றவர்கள் மண்ணுலகில் பிறந்தவர்களே. தேவர்களாயினும், அவர்களும் மண்ணுலகில் பிறந்து சரணாகதம் செய்தால் தான் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்பதால், வையத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.
    கிரிசைகள் - கிரியை, பையத் துயின்ற பரமன்- மாய உறக்கம் என்று சொல்லக்கூடிய, முடியும் மூடாமலும் மிகவழகாக உறங்கும் இறைவன், நாட்காலை - இருள் பிரியா அதிகாலை
    தீக்குறளை- அடுத்தவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லும் வம்புப்பேச்சு ,
    ஐயம்- ஆசிரியருக்குக் கொடுக்கும் பொருள் ,குருதக்ஷிணை எனக் கொள்ளலாம்
    பிச்சை- துறவியருக்கும், கல்வி பயிலும் மாணவருக்கும் (பிரம்மச்சாரிகள்), இறைவன் அடியவர்க்கும் நாம் ஆதரித்து இடும் பொருள்--உணவு, உடை இது போன்று
    உய்யும் ஆறு எண்ணி- (பெண்களுக்கு) ஏற்றம் தரக்கூடிய மங்கலச் சின்னமாக விளங்கும் ஆறு பொருட்களென ஆண்டாள் குறிப்பது, மெட்டி,வளையல், மூக்குத்தி, தாலி, நெற்றித் திலகம், கூந்தலில் சூடும் மலர். இவற்றை வேண்டிப் பாவை நோன்பிருப்பதாக மேலோட்டமான பொருள்.
     
    knbg, jskls and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    கருணை உருவேயாம் பிரமம் நமக்கென்று
    இரங்கி, உருவொன்றில் இறங்கி, அளப்பரிய
    அருளும் விதமாக விளையாடல் பற்பலவும்
    புரியும் இடமான மண்ணுலகில் வாழ்வோரே!
    பரமானந்தம் எனும் வைகுண்டப் பாற்கடலுள்,
    திருவுடன் உறைந்து உறங்கா துறங்குபவன்,
    பெருமை யாவையுமே நாவால் நவின்றபடி
    சரணாகதம் என்றிடும் விரதம் பூணுதற்கு,
    உரிய வழிமுறைகள் அறிந்து கொள்வீரே!
    அருமை எனக் கொண்டாடும் அன்றாடப்
    பெரும் போகம் அத்தனையும் கைவிட்டு, ,
    அருளும் இறையனுபவம் தன்னில் நீராடி ,
    விரும்பி ஓம்புகின்றப் புறவழகை விலக்கித்,
    தரமற்றத் தீவினைச் செயலேதும் செய்யாது,
    வருத்தும்படி வாக்கால் புறமேதும் கூறாது,
    பரமனைக் காட்டும் ஆசான் அடிபணிந்தேப்
    பரமன் பக்தர்களை மனமுவந்து ஆதரித்து,
    நாராயணன் அவனே பரமனென உணர்ந்து ,
    பரமனை அடைவதே கடமையெனப் புரிந்து ,
    சரணாகதி ஒன்றே மார்கமெனத் தெளிந்து ,
    சரணம் செய்தால் பேறுண்டெனக் கண்டு ,
    யாரும் செய்யலாம் சரணமெனக் கொண்டு ,
    குருவினருளால் தான் இயலுமென அறிந்துப் ,
    பேருண்மை இவற்றை மனதில் பதித்தபடிக்,
    கரியநிறக் கண்ணன் திருவடித் தாமரையில்,
    சரணாகதி செய்யும் வழியை மேற்கொண்டால்,
    பரமன் திருவடிக்கீழ்த் தொண்டு செய்வதுவாம்
    பேரின்பப் பேற்றினை நாமும் பெற்றிடலாம் !


    வையத்து வாழ்வீர்காள்! - என்றும் இருப்பதான பரமானந்த நிலையினின்று (வைகுண்டம்) இறங்கி, மண்ணுலகில் வாழு(டு)ம் நமக்காக மனம் இரங்கி, அவதாரம் பூண்டு,அதற்கேற்றபடி திருவிளையாடல்கள் செய்து (லீலா வினோதம் ) , பின்னர் கற்சிலை வடிவங்களில் உறைகின்ற (அர்ச்சாவதாரமாகிய சிலா ரூபங்கள் ) பிரம்மமான இறைநிலையைக் காணக் கூடிய அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள் பூலோகமாகிய இகவுலகில் வாழும் இறையடியார்களே. இது பெருமிதச் சுவை !
    பாற்கடலுள் - க்ஷீராப்தி எனும் தத்துவம்- பரலோகத்தில் வாசுதேவனாய் அனைத்தின் மூலவனாய் விளங்கும் பேரானந்த நிலை
    பாற்கடல் பையத் துயின்ற - அவதார பஞ்சகத்தின் பரமாத்ம நிலை குறிக்கப்பட்டுள்ளது -
    நெய், பால் என்று குறிக்கப்பட்டவை, உயர்ந்தன என்று நாம் தினந்தோறும் மனத்தால் அனுபவிக்கும் அற்ப சுகபோகங்களே.
    மனமாகிய எண்ணத்தினால்( செய்யா தனசெய்யோம்)- செய்ய வேண்டாதவைகள்,(உய்யுமா றெண்ணி) செய்ய வேண்டியவைகள் கூறப்பட்டன
    காயமாகிய உடல் செயல் மூலம் ,(மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்)- செய்ய வேண்டாதவைகள், (நாட்காலை நீராடி) -செய்ய வேண்டியவைகள் கூறப்பட்டன
    வாக்காகிய சொல்லால் ( தீக்குறளைச் சென்றோதோம்) செய்ய வேண்டாதவைகள் ,(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி) செய்ய வேண்டியவைகள் கூறப்பட்டன
    உய்யும்(பேறடைதல் ) ஆறு (வழி) எண்ணி = வீடுபேறு உறுவதற்கு செய்ய வேண்டியவைகளைச் செய்து, செய்யக்கூடாதவைகளைத் தவிர்த்துப்,பாற்கடலுள் பையத் துயிலும் பரமனையே எண்ண வேண்டும். தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்துப் பேறடையலாம்.
     
    knbg, rai and periamma like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள்- பாவை நோன்பு என்பதே சரணாகதம் எனும் தத்துவம் அதற்கு நாம் எப்படித் தயாராக வேண்டும் என்று சொல்லப்படுகிறது

    செய்யும் கிரிசைகள் - பக்தி மார்கத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள் ஒன்பது.
    (மனோ) , மனத்தினால் இறைவனை சிந்தித்தல், தியானித்தல் (ஸ்மரணம்), வந்தனை செய்தல் (வந்தனம்), தொண்டுள்ளத்தோடு இருத்தல் (தாஸ்யம்)
    இறைவனையே தனக்கு உற்றத் துணையாகக் கருதுதல் (ஸஹ்யம் ) தன்னை இறைவனுக்கே அர்ப்பணித்தல் (ஆத்ம நிவேதனம்)
    (வாக்)
    வாயினால் இறைவன் பெருமைகளை,நாமங்களைப் பாடுதல் (கீர்த்தனம்) , இறைவனைப் பற்றியக் கீர்த்தனைகளைப் ,பெருமைகளை செவியினால் கேட்டறிதல் (ஸ்ரவணம் )
    (காயம்)
    , இறைத்தொண்டில் ஈடுபடுதல், உழவாரப் பணிகள் மூலம் திருவடிச் சேவை செய்தல் ( பாத சேவகம்)
    கோவில்களில் திருஉருவ வழிபாடு செய்தல் (அர்ச்சனை)

    செய்யாதன செய்யோம்-
    சரணாகத மார்கத்தில் ஈடுபடுபவர்கள் செய்யக்கூடாத செய்யாமல் இருக்கக் கூடாத என்று ஐந்து விஷயங்களை வைணவப் பெரியோர் கூறுகின்றனர். அவையாவன :

    1 ) அக்ருத்ய கரணம் - அடுத்தவர்களுடைய உடைமைப் பொருட்களை அபகரித்தல், பரமனல்லாத பிறரை, ஆதாயங்களுக்காக முகத்துதி செய்தல், பிறரை அவமதித்தல், அடுத்தவரிடம் தகாத ஆசைப் படுதல், பொய் கூறுதல், கூடா உணவை உட்கொள்ளுதல் போன்றவையெல்லாம் சாத்திரங்களில் ஒதுக்கப்பட்டுள்ள தீச்செயல்கள். இதைச் செய்யக் கூடாது.

    2) க்ருத்ய அகரணம் - சாத்திரங்கள் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனவோ, அந்த நற்செயல்களை செய்யாமல் இருக்கக் கூடாது.

    3) பகவத் அபச்சாரம் - இறைவனை வணங்காதிருத்தல், இறைவன் சொத்தை (கோவில் ) அபகரித்தல், இது போன்றவைகளைச் செய்யக் கூடாது. இதன் கீழ் பிற நெறிக் கொள்கைச் சாடல் வாழைப்பழ ஊசி போல சொல்லப்பட்டுள்ளது. அதை நான் தவிர்க்கிறேன்.

    4) பாகவத அபச்சாரம் - உண்மையான இறைத் தொண்டர்களின் மனம் /உடல் புண்படும்படி நடக்கக் கூடாது

    5) அஸஹ்யாபச்சாரம் - இறைவனையே, இறைத் தொண்டரையோ பற்றிய விஷயங்களைப் பொறாமல் இருத்தல், குரு நிந்தனை (ஆச்சார்ய அபச்சாரம்) செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.


     
    knbg and periamma like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காஞ்சி வரதராஜப் பெருமாள் திருவுளப்படி, 'உய்யும் ஆறு' என்று திருக்கச்சிநம்பிகள் மூலம் இராமனுசருக்கு உபதேசமான ஆறு வைணவ இறைக்கொள்கைகள்

    1) நாராயணனே பரதத்வம்
    2) பரமாத்மாவே ஸ்தூலமாகவும் சரீரமாகவும் இருந்தாலும், ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு.அனைத்திற்கும் வித்தான பரமாத்மாவை அடைந்து தொண்டு செய்வதே ஜீவாத்மா (சேஷ சேஷி அநுபவம்)
    3) பிரபத்தி எனும் சரணாகதியே இறைவனை அடைய சிறந்த வழி
    4) பரமாத்மாவை சரணாகதி செய்துவிட்டால் வீடுபேறு நிச்சயம்
    5) சரணாகதி யாரும் செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், உயிர் பிரிந்த பின் வீடுபேறு அடையலாம்
    6) சரணாகதி செய்த பின் குரு என்கிற உயரிய ஆசான் மூலமே பரமனை அடைய வேண்டும். )
     
    knbg and periamma like this.
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள பவித்ரா,
    திருப்பாவை 2ம் பாசுரம் விளக்கம் மிக அருமை.

    வையத்து வாழ்வீர்காள் _-மனிதப் பிறவியே பெரும் பேறு பெற்றால் தான் கிடைக்கும் என்பது ஒரு பொருள்.
    நோக்கத்தோடு வாழ்பவர்கள் என்பது மற்றொரு பொருள்.
    வெறும் மூச்சு விடுவதே வாழ்க்கை என்று நினைப்பவர்கள் கூட சில கிரிசைகள் ( disciplines _ கடைப் பிடித்தால் முக்தி அடையலாம் என்பதும் ஒரு விளக்கம்.
    உய்யும் ஆறு என்று சாதாரண பொருள் கொள்ளும்போது சில மங்கள் ஆபரணங்களைக் குறிப்பிடுகிறார்கள் அவற்றில் மூக்குத்தியும், திருமாங்கல்யமும் ஒன்று.
    ஆனால் சரித்திர, ஆராய்ச்சியாளர்கள் கருத்துப் படி ஆண்டாள் , பெரியாழவார் வாழ்ந்த காலம் கி.மு. 3055 ஆகும். அதாவது சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் இயற்றப்பட்ட பாசுரம்.
    மூக்குத்தி, திருமாங்கல்யம் இரண்டுமே மொகலாயர் படையெடுப்பிற்குப் பிறகு இந்தியாவில் தோன்றின.அதற்கு முன்னர் ரோம்,எகிப்து போன்ற தேசங்களில் இருந்திருக்கலாம்.இந்த விளக்க உரைகள் சமீபத்தில் தோன்றியவையாதலால் இந்த ஆபரணங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகவே அறிகிறேன்.மாங்கல்ய தாரணத்துக்கு மந்த்ர பூர்வமான அங்கீகாரம் கிடையாது.அது ஒரு சமூக அங்கீகாரம்.( இது திருப்பாவை சம்பந்தப் பட்டது அல்ல விளக்கம் சம்பந்தப்பட்டது )

    ஐயம், பிச்சை என்ற சொற்களுக்கு வேறு விதமான வியாக்யானங்களும் உண்டு.
    ஐயம் என்ற சொல் பரந்தாமனின் பெருமையை பாகவதர்களிடம் எடுத்தியம்பல்
    பிச்சை என்பது பாகவதர்கள் பெருமையை பரந்தாமனிடம் எடுத்துக் கூறுதல்.
    அடியார்கள் ஆண்டவனுக்கு இணையானவர்கள் என்ற பொருளும் தொனிக்கும்.
    ஆண்டாள் வெகு சாமர்த்தியமான பெண்.அவள் யாரையும் எதுவும் செய்யுமாறு வற்புறுத்துவதில்லை.வரிசையாக நோன்புப் படிகளை எடுத்தியம்புகிறாள்.
    ஆந்தனையும் --என்ற சொல் 'உன்னால் முடிந்தவரை'என்ற பொருள் படும்.எல்லோராலும் எல்லா விதி முறைகளையும் கடைப் பிடிக்க இயலாது.நெய், பால் விடுதலோ, மையிடுதல் மலர் சூட்டுதல் முதலியவற்றை விட்டு விடுதல் எல்லோருக்கும் சாத்தியமன்று.எனவே 'ஆந்தனையும் என்ற சொல் கிரிசைகளுக்கும் தொடர்பு கொண்டதுதான்.
    இன்னுமொரு பொருள்:வாழ்க்கை என்பது பல படிகள் கொண்டது.
    கடைசி படி கடந்து மோக்ஷத்தை அடைந்தால் தான் 'மகிழ்ச்சி என்பது இல்லை.ஒவ்வொரு படிக்கும் அதற்கான வெற்றி உண்டு.அந்த மகிழ்ச்சியை அடைய முயற்சித்து இறுதியில் பேரானந்த நிலை அடையலாம்.இதிலும் 'ஆந்தனையும்-ஆகும் வரையில்- என்ற வினை உரிச்சொல் அர்த்தம் பொதிந்தது.
    இதை மனதில் இருத்தியே சாய் பாபா சொன்ன அறிவுரை காதில் ஒலிக்கிறது.
    .
    Life is a song - sing it. Life is a game - play it. Life is a challenge - meet it. Life is a dream - realize it. Life is a sacrifice - offer it. Life is love - enjoy it. Sai Baba
    நோன்பின் விதிகள் யாவும் அவர் குறிப்பிட்ட 'sacrifice ( த்யாஜ்யம்)என்பதில் அடங்கும்.

    Jayasala 42
     
    periamma likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா விளக்கங்கள் நன்று .புரியாதவர்களுக்கும் புரிய வைக்கும் திறன் உங்கள் விளக்கங்களில் உள்ளன .
    "மாதங்களில் நான் மார்கழி "என்று சொன்னான் கண்ணன் .அதனால் அவனை பற்றி மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காக எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று ஆண்டாள் மூலமாக அவன் சொல்லி இருக்கிறான் .
    "நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
    மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;"இவை எல்லாம் நம் புற அழகை எடுத்து காட்டும் .
    இவற்றை தவிர்த்தால் பரமனடி மட்டும் கண்ணுக்கு தெரியும்

    "செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி"

    இந்த நற்செயல்களால் நம் அக அழகு கூடும் .மனத்தூய்மை நம்மை அந்த மாதவனிடம் கொண்டு செல்லும் .
    மீண்டும் சொல்கிறேன் இது என் எளிய விளக்கம் .நாட்டுப்புற கவிதை போல் என்று நினைத்து கொள்ளுங்கள்
     
    knbg and jskls like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மிக்க நன்றி !

    எனக்கிது புதிய செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி !

    ஆம் 'ஆந்தனையும்' (ஆகும் + தனையும்)என்ற சொல் நமக்கெல்லாம் பெரும் பற்றுக்கோடு.

    தங்களது மதிப்பு மிகுந்த பின்னூட்டத்திற்கு நன்றி !
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி, பெரியம்மா !

    அருமையான சிந்தனை ! உங்களது 'நாட்டுப்புறப் பாடல்' அனைவரின் மனதையும் கவர்கின்ற சக்தி உடையது. அதன் கருத்திலுள்ள எளிமை மட்டுமல்ல, ஆழத்தின் காரணமாகவும். தொடர்ந்து கருத்துக்கள் பதிவிட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றி !
     
  10. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள பவித்ரா,
    த்வய மந்திரம் போஷக மந்திரம்- தங்கள் விளக்கம் அழகு...!
    உய்யும் ஆறு ....அழகிய பட்டியல்....உய்யுமாறு'' எனவே எண்ணியிருந்தேன்....இந்த எண்ணிக்கை சுவாரசியம் தந்தது....
    நல்ல பதிவு...நன்றிகள் பல உமக்கு....
     

Share This Page