1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (19) குத்துவிளக்கெரிய !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 3, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    19) ஆண்டாள் பாடல் (இந்தப் பாசுரமும் அடுத்தப் பாசுரமும் மார்கழி நோன்பிற்கு நப்பின்னை கண்ணன் இருவரையும் ஒரு சேர, உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தல் )

    குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
    மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
    எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
    தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்


    பாசுரப் பொருளுரை

    "நாற்புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை ஆகிய ஐந்து தன்மைகளையுடைய, யானையின் தந்தத்தினாலான ,கட்டிலில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து உறங்கும் ,நறுமலர்களால் ஆன மாலையை அணிந்த கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் நீ பேசுவாயாக! ( நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான, நீண்ட கண்களையுடையவளே, உன் கணவனான கண்ணனை எவ்வளவு சமயமானாலும் நித்திரை துறந்து எழுந்திருக்க நீ சம்மதிப்பதில்லை. ஒரு நொடிப்பொழுதும் அவனது பிரிவைத் தாங்க இயலாதவளாக இருக்கிறாய்! நீ இப்படிச் செய்வது நியாயமன்று, உன் இயல்புக்கும் தயாள குணத்திற்கும் தகுந்ததன்று! "

    பாசுரக் குறிப்புரை

    பள்ளியறைக் காட்சியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள ,அகத்திணை இலக்கணத்தில் அமைந்த இந்தப் பாசுரமானது மிகவும் உயர்ந்த காதலாம் இறைவனில் கலப்பதற்கான வழியை சீவாத்மாவானது இறைவி மூலம் பெறுவதைப் பற்றிப் பேசுகின்றது.பராசர பட்டர் இந்த பாசுரத்தின் நினைவில்தான் திருப்பாவையின் தனியன்களுள் ஒன்றான “நீளா துங்க” என்ற ஸ்லோகத்தை அருளினார். அவதார பஞ்சகத்தினைக் குறித்த பாசுரம் .இப்பாசுரமும், புருஷகார தத்துவத்தின் சாரமே. அம்பரமே தண்ணீரே சோறே பாசுரத்தில் கண்ணனை மட்டும் எழுப்புகிறாள், உந்து மதக் களிற்றன் பாசுரத்தில் நப்பின்னையை மட்டும் எழுப்புகிறாள். ஆயினும் அவர்கள் எழவில்லை என்றதும், புருஷகார முறைப்படி , தாயாரையும், பரமனையும் சேர்த்துத் தொழுது எழுப்புவதாக இப்பாசுரம் அமைகிறது. இருவரும் பிரிக்க முடியாதவர்கள் என்பது வைணவ இறைநெறி.
    மிகவும் அழகான தாம்பத்ய அந்நியோன்னியத்தைக் குறிக்கும் பாசுரம். அதன் சொற்பொருள் காதல் ரசம், உட்பொருள் புருஷகார சாரம் . தத்வமஸி, நானே அது, அதுவே நான் எனும் அத்வைத நெறியைச் சாடி,த்வய மந்திரமெனும் தத்துவத்தை உயர்த்தும் விசிஷ்டாத்வைத வைணவத்தை மேல் நிறுத்தும் பார்வை இப்பாசுரத்தில் உண்டு.. அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இந்த மூன்று பாசுரங்கள் 18,19,20, இவை ஜீவாத்ம நிலையானது , புருஷகாரத்தை முன்னிட்டுச் சரணடைதல் பற்றிச் சொல்கின்றன.
     
    periamma and rai like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    எரியும் விளக்கொளிரும் பள்ளியறை தன்னில்
    கரியின் தந்தத்தில் செய்யப்பட்டக் கட்டிலிலே ,
    கோரைப் புல்லோடு மயிலன்னத் தூரிகையும்,
    அரியவகைப் பூக்களுடன், இலவம் பஞ்சினையும்
    ஒருங்கே அமைப்பித்து விரித்த மெத்தையிலே,
    கருங்கூந்தல் அதனில் வாசமலர்க் கொத்துகளை
    விரித்திருக்கும் நப்பின்னை அழகு முலையதனில்
    தரித்துள்ள மாலைகள் புரள்கின்ற மார்புடனே,
    சரசித்து சாய்ந்தவனாய் அழகாய் உறங்குகின்ற
    கருநிறக் கண்ணாளா, திருவாய் திறந்தருள்வாய் !
    கருநீலனை அடைய வழியினைக் காட்டுகின்ற
    வரிவிழியில் மையெழுதும் நப்பின்னை தேவி,
    ஒருபோதும் காதலனைப் பிரியா திருப்பதற்கே
    விரி சுடருதித்தும் துயிலெழுப்ப ஒப்பாயோ ?
    கருணை கொண்டவளே இதுவுனக்கே தகுமோ ?
    பரமனவன் அருட்கருணை யாமும் பெறுவதற்கு
    உரிமை அளிப்பதன்றோ உனக்குத் தகுந்ததுவாம் !
    திருவடியினைக் காட்டுகின்ற தாயாருனை அணுகி
    அருளை வேண்டுகிறோம் கடைக்கண் பாரம்மா !

    குத்து விளக்கெரிய - நாம் இப்போது நைட் லேம்ப் வைத்துறங்குகிறோமே, அதுபோல அந்தக்காலத்தில் பள்ளியறையில் இரவிலும் ஒளி வேண்டி குத்துவிளக்கு ஏற்றி வைப்பார்கள். குத்துவிளக்கு ஒரு மங்களச் சின்னம். வீட்டிற்கு விளக்கேற்ற வந்த மருமகளென்றும், துடைத்து வைத்தக் குத்துவிளக்கு போன்ற அழகு என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோமல்லவா ?

    புறயிருளைப் போக்கும் குத்துவிளக்கு நம் தமிழ்ச்சமுதாயத்தின் மிக உயர்ந்த அடையாளம். அதன் அடிப்பகுதி பிரம்மதேவன் அம்சமென்றும், நீண்ட நெடும் நடுப் ஆகுதி நெடுமாலின் அம்சமென்றும், ஐந்து முகங்கள் கொண்ட மேற்பகுதி ஐந்தெழுத்துக்காரனாம் சிவபெருமானின் அம்சமென்றும், நெய் - நாதம்; திரி - பிந்து; சுடர் - திருமகள்; பிழம்பு - கலைமகள்; தீ - மலைமகள் இவற்றின் அம்சமென்றும் கருதுவது வழக்கம். இப்படிப் பலவாறும் சமயப்பெருமையும், சமூகப்பெருமையும் கொண்டது குத்துவிளக்கு. அதை வைத்து இப்பாசுரத்தைத் தொடங்குகிறாள் ஆண்டாள்.

    இறைவனையும் இறைவியையும் இணைத்துப் பாடும் முதல் பாசுரமல்லவா, சீவாத்மாக்களின் அகவிருளைப் போக்கி வீடுபேற்றுக்கு வழிகாட்டும் ஒளியைக் குறிப்பதல்லவா ,அது தான் இச்சொல்லாடல் ! குத்துவிளக்கு எப்படித் தானும் அழகுடன் மிளிர்ந்து மற்றவர்க்கும் ஒளி காட்டுமோ,அது போன்றே பிராட்டி தானும் மிளிர்ந்து மற்றவர்க்கும் பரமனைக் காட்டும் ஒளியைப் பாய்ச்சுகிறாள்.

    கோட்டுக் கால்- கோடு யானையின் வெண்தந்தம் அதில் செய்த கட்டில் Ivory Cot ! கண்ணன் கம்சனது மதங்கொண்ட குவலயாபீடத்தைக் கொன்று அதன் தந்தங்களை எடுத்து வந்து ‘கோட்டுக்கால்’ – நான்கு கால்களாக தந்தக்கட்டில் செய்து வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட தந்தக் கட்டிலில், மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மீதேறி படுத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணனில்லாவிட்டாலும், அவன் தந்தை நந்தகோபன் தான் உந்துமதக்களிற்றுனாயிற்றே ! அவரே செய்து தந்த தந்தக்கட்டிலாயிருக்கும் ! அடியவரின் அகந்தை மமதை என்னும் யானைத் தந்தங்களை உடைத்து நான்கு கால்களாய் நிறுவி அமைக்கப்பட்டக் கட்டிலில் இறைவன் உறங்குகிறான். கோட்டுக்கால் என்பதை கோடுகளாகிய ரேகைகள் பல ஓடுகின்ற கால் என்று பிரித்து, அடியவரின் விதிரேகையை மாற்றக் கூடிய அந்தத் திருமாலின் திருவடிகள் என்று அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறார்,முக்கூர் ஸ்ரீ இலக்ஷ்மி நரஸிம்மாச்சார்ய ஸ்வாமிகள் !

    பஞ்ச சயனம்- இலவம் பஞ்சோடு, கோரைப்புல், அன்னத் தோகை , மயில் தோகை மற்றும் நறுமணங் கமழும் மலர்கள் இவை ஐந்து பொருட்களால் ஆன படுக்கை. அழகு, குளிர்ச்சி, மென்மை, தூய்மை, வெண்மை ஆகிய பஞ்ச குணங்கள் உள்ள படுக்கையாம் அது. இறைவனும் இறைவியும் சீவர்களுக்குப் பெற்றோரல்லவா ? அம்மா அப்பாவின் படுக்கையில் ஏறிப் புரண்டு விளையாடும் உரிமை குழந்தைகளுக்குண்டல்லவா ? எனவே தான் அந்த வீடுபேறென்னும் பரவுலகக் கட்டிலில் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டி, ஞானத்தை அருளும் பிராட்டியையும், மோக்ஷத்தையருளும் பரந்தாமனையும் வேண்ட வேண்டும்.
    இறைவன் உறங்குமிடம் ஐந்து 1)திருப்பாற்கடல் 2) ஆதிசேஷன் 3) ஆலிலை 4) வேதங்களின் முடிவில்,5) அடியவர் இதயகமலம்.

    கொத்தலர் பூங்குழலி நப்பின்னை - மலர்க்கொத்துகள் சூடிய கூந்தலுடைய நப்பின்னை கொங்கை- பெண்களின் மார்பகம். கொங்கைகளென்று சொன்னது அன்னையின் தாய்மையைக் குறித்தே ! சீவர்களாகிய குழந்தைகளுக்கு நப்பின்னையாகிய திருமகளே தாயல்லவா ? ஆகவே அவள் அருள் செய்ய விரைந்து வருவாள்.

    வைத்துக் கிடந்த மலர் மார்பா- கண்ணனும் நப்பின்னையும் ஏகாந்தமாயிருத்தல். முந்தின பாசுரத்தில் தன்னை எழுப்பியதும் உறக்கம் கலைந்துவிட்ட நப்பின்னை ஆண்டாள் குழுவினருக்குக் கதவைத் திறக்க எழுகிறாளாம். அதைத் தடுத்து "அவர்கள் சொல்வதை இன்னும் கேட்போம்,பொறு" என்று கண்ணன் பிடித்து நிறுத்துகிறானாம். இப்படித்தான் உள்ளே நடக்கின்றது என்பதை ஊகித்த கோபிகைகள்" நீயும் எழவில்லை, எழுகின்ற நப்பின்னையையும் தடுக்கிறாய்,எங்கள் மனங்குளிரும் படி உன் திருவாய்த் திறந்து ஒரு மறுமொழியேனும் சொல்லக்கூடாதா ?" என்னும் நோக்கில் வாய் திறவாய் என்கிறாள் ஆண்டாள். என்னைத் தானே அழைத்தார்களென்று பிராட்டி எழ, நீயாக அருள் செய்ய முடியாது நானே வீடு பேறு அளிக்க வல்லவன் என்று பரந்தாமன் சொல்வானாம். இப்படியாக அடியவருக்கு யார் உதவுவது என்று இறைவனுக்கும் இறைவிக்கும் போட்டி நடக்குமாம்.

    மைத்தடம் கண்ணினாய் - மையெழுதிய விழியாளே. கண்ணனின் கரு'மை'யைப் பருகும் கண்ணினாய், நப்பின்னைக் கண்ணனை எப்போதும் தனது விழிகளில் நிறைத்திருக்கிறாளல்லவா ? ஆகவே அவனது திருமேனியின் கருமை, அவன் கருணையின் நிறம், அவளது கண்களில் நிறைந்து அடியார் மீதில் அருளைப் பொழியும் மைத்தடங்கண்ணாய் இருக்கின்றது.கண்ணனுக்காவது "மா சுச:" (நான் இருக்கிறேன், கவலையுறாதே) என்று வாயால் உறுதியளிக்க வேண்டிய அவசியமுண்டு. ஆனால் தாயாருடைய அருட்பார்வையினாலேயே அவள் குழந்தைகளுக்குக் காப்பிட்டு விடுவாள். எனவேதான் அவளது கண்ணழகு பேசப்படுகின்றது.

    மைத்தடங்கண்ணினாய்- தடம் என்றால் வழியெனப் பொருள். எந்த வழியைக் காட்டும் கண்கள் பிராட்டிக்கு ?மைத்தடம் . அதுவென்ன மை என்றால்- சீர்மை, நீர்மை, இனிமை ,பொறுமை,திறமை, உண்மை,நேர்மை, வாய்மை, தூய்மை, வண்மை ,பேராண்மை, திண்மை, எளிமை, வளமை, ,தகைமை,தலைமை- இப்படிப்பல பெருமைகளையுடைய இறைமையை அடையும் 'மைத்தடத்தை', வழியைக்,காட்டித் தரக்கூடிய கண்கள் அந்தப் பிராட்டியுடைய கண்கள் !

    அவனது தலைமாட்டில் அமர்ந்தால் அவள் மடிமேல் தலை வைத்து உறங்குவானே அந்தப் பரந்தாமன். இருந்தும் அதைத் தவிர்த்து அவன் காலடியில் அமர்ந்திருப்பதன் அவசியமென்ன ? அவளது குழந்தைகளான நமக்கு "இங்கே பாருங்கள், உங்களைக் கடைத்தேற்றும் திருவடிகள் இவையே,பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று உபாயம் காட்டுவதற்குத் தானன்றோ ? அவள் கருணையே உருவான தாயாரல்லவா ?

    எத்தனை ஏலும், பிரிவு ஆற்றகு இல்லாயால்?- எங்களை நீ ஏற்றாலும், கண்ணனைப் பிரிவதற்கு மனமில்லையோ ?
    தத்துவம் அன்று தகவு ஏல் - ஓர் எம்பாவாய் ! - உன்னை முன்னிட்டே கண்ணனை அடைய வந்தோம் , எங்களுக்கு அருள் புரிவாய். எங்களுக்கு நீயிரங்காமல் இருப்பது உனக்குத் தகுதியான செயலில்லை. .விடிவதற்கு முன்னமே எழுந்திருந்து, “மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம்!” என்று நாங்கள் இருக்க, நப்பின்னாய்! நீ கொத்தாக அலர்ந்த பூக்கள் நிறைந்த குழலுடன், குத்துவிளக்கெரிய விட்டு, மலர்மார்பனான கண்ணன் மீது உறங்குவதோடல்லாமல்,அவனையும் துயிலெழ விடாமல் செய்கிறாயே, இது நியாயமா என்கிறாள் ஆண்டாள் !

    தத் துவம்- த்வயம்- அம்மந்திரத்தின் 'ஸ்ரீ' ஸப்தமே நீயல்லவா ? யார் எப்போது த்வய மந்திரத்தைச் சொன்னாலும் அதில் முன்னிலே தோன்றி அருள் செய்ய வேண்டியவள் நீயே அல்லவா ? இப்படி உன் மணாளனை துயிலெழவிடாமல் தடுப்பது உன் சுபாவத்திற்கு ஏற்ற செயலல்லவே ? ஆகவே விரைந்து வந்து எங்களுக்குக் கண்ணனைக் காணத் தடையாயிருக்கும் கதவுகளைத் திறவாய். தத்துவமாவது பிராட்டியின் ஸ்வரூபம், தகவு அவளது சுபாவம்- இவையிரண்டும் இறையடியவருக்கு இரங்கி பரந்தாமனிடம் எடுத்துக்கூறி அருள் தரச்செய்வது.
     
    periamma and rai like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள் 1

    இப்பாசுரத்திற்கு மிக நுட்பமான சமயாச்சார விளக்கங்கள் கொடுக்கிறார்கள், வைணவ அறிஞர்கள். ஆச்சார்யனுக்கு ஆச்சார்யனாகத் தாயாரை உருவகித்து ஒரு பார்வை.இதைக் கீழ்கண்ட முறையில் வார்த்தைப் படுத்த முயன்றிருக்கிறேன்.

    குருவருள் செய்கின்ற மூன்றாம் மந்திரங்கள்
    பொருளை உணருகையில் அடையும் ஞானத்தால்
    பெருகும் ஒளியாலே புரியும் உண்மைகளே !
    திருமகளவள் தன்னால் ஞானம் இதையடைந்து
    குருவாய் நமக்கிருந்து அருளைப் பொழிகின்றாள் !
    அருமைப் பேறுகளாம் அறமும் பொருளோடே
    விருப்பம் வீடிவற்றை விரும்பும் உயிர்களெல்லாம்
    திருவடி சரணமென்று புகுவது இறைவனையே ! ,
    பரம நிலையொன்று பரிவார நிலையொன்று
    இரங்கி இறங்குகிற அவதார நிலையொன்று
    கருவறைச் சிலையாக கோவிலுறை நிலையோடு
    அருவாய் அனைத்துள்ளும் இருக்கும் நிலையென்று
    அருளும் பரமனுக்கு இவ்வைந்தும் நிலையாமே !
    பேரானந்தமெனும் பரவீடாம் நிலை அதனில்,
    திருவுறை மார்போடு விளங்கும் இறையவனின்
    பெருமை பாடிக் கொண்டு பணியிலாழ்வதென
    உருகும் அன்போடு அணுகும் அடியவர்க்குக்,
    கருணை புரிகின்ற தாயாய் விளங்குகின்ற
    திருமகள் தானேதான் ஞானம் புகட்டுகிறாள் !
    பேரருள் தருகின்ற இறைவன் திருவடியைச்
    சேருங்கள் என்றவளும் பாதை காட்டுகிறாள் !
    திருமகள் அவளுடனே பரமனும் பிரியாமல்
    இருவரும் ஒன்றாக அருள்கிற நிலையைத்தான்
    பரமபத மென்னும் தத்துவம் உரைக்கிறது!
    பிரமம் நானேயென்றுக் குதர்க்கம் பேசுகின்ற
    தருக்க வாதிகளின் செருக்குரைகள் ஏற்காமல்
    திருவின் துணையோடு அடையும் பிரமமொன்றே
    அருளைப் பொழிகின்ற இறைவனும் அவனென்றே
    பரமனைப் பணிந்திடுவோம்,வீடும் அடைந்திடுவோம் !

    குத்துவிளக்கெரிய- இறைஞான ஒளியால் மிளிரும் அழகோடு , அவ்வொளியை அடியவருக்கும் காட்டி பரமனின் திருவடிகளை சேர்க்கின்ற கருணை வடிவான பிராட்டி. உபேயமாகிய பரமாத்மாவுடன் பிராட்டி போலவே இணைபிரியாதிருக்கும் ஏகசேஷித்வம் பெற , சரணாகதி செய்யும் பிரமாதாவாகிய சீவாத்மாவிற்குப் , பிராட்டியானவள் புருஷகாரத்தை உபாயமாகத் தந்து , கர்மவினைகளைக் களைந்து ,மோக்ஷம் கிடைக்க வழி வகுக்கிறாள். அவளே குத்துவிளக்கின் ஐந்து முகத் தத்துவமாகிறாள்.

    கோட்டுக் கால் கட்டில்- தனது அடியவருக்கு இறைவன் அருள்கின்ற பேறுகள் நான்கு, புருஷார்த்தமெனக் குறிப்பிடப் படுபவை தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்- அறம், பொருள், இன்பம், வீடு .

    பஞ்ச சயனத்தின் மேல் ஏறி- இறைவன் கோலோச்சி உறைகின்ற நிலைகள் ஐந்து-1)பரம் --பரமாத்ம நிலை 2) வ்யூஹம்,-அவரது நான்கு தொழில் நிலைப் பிரிவுகள்- வாசுதேவ- ஞானம் அருளல் , - , ப்ரத்யும்ன- காத்தல், ஸங்கர்ஷண- அழித்தல், அநிருத்த-ஆக்கல் 3) விபவம் -,அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட ஒரு உருவம் தாங்கியிறங்கி மண்ணில் வரும் அவதார நிலை 4)அர்ச்சாவதாரம் -உருவச் சிலை நிலை -ஸ்வயம்புவாகத் தோன்றிய உருவங்கள், தேவர்கள் வடித்த உருவங்கள், முனிவர்கள் வடித்த உருவங்கள், மனிதர்கள் வடித்த உருவங்கள், கல்லில் செதுக்காத, விருப்பத்திற்கேற்ற பொருட்களில் ஆவிர்பவிக்கும் உருவங்கள் 5) அந்தர்யாமி, --- உருவமின்றி ஒளியாக அனைவரின் இதய கமலத்திலும் உறையும் நிலை

    கொத்தலர் பூ - பரத்துவ நிலையில் விளங்குகின்ற பிராட்டி, மலர் மார்பா-பரத்துவ நிலையில் பிராட்டி இணை பிரியாமல் விளங்குகின்ற பரமன்.இறைவனும் இறைவியும் பிரிக்க முடியாதவர்கள்.

    வாய் திறவாய்
    - இந்த தம்பதிகளைப் பாடிப் பணிந்து , இவர்களின் பணியில் ஆழ்வதே அடியார்களின் நோக்கம். இந்தக் கைங்கர்யமே வீடு என்னும் பேறு.

    நப்பினை கொங்கை -அனைத்துயிர்களுக்கும் தாயாக இருப்பவள், தாயாராகிய திருமகள், அவளே நமக்கு இறைஞானத்தைப் பாலாய்ப் புகட்டுகிறாள். கொங்கைகளென்று சொன்னது அன்னையின் தாய்மையைக் குறித்தே ! சீவர்களாகிய குழந்தைகளுக்கு நப்பின்னையாகிய திருமகளே தாயல்லவா ? ஆகவே அவள் அருள் செய்ய விரைந்து வருவாள்.

    எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்- பரமனையும் பிராட்டியையும், தனித்தனியே பிரித்து வணங்குதல் முறையாகாது. அவளைக் கொண்டே அவனை அடைய வேண்டும்.இதுவே வைணவ நெறியின் 'ஏக ஸேஷித்வம் '. இறைவனும் இறைவியும் இணைந்தே அருளும் நிலை.

    தத்துவம்- பரமாத்மாவின் ஒரு பகுதியே நாம், அவனை அடைந்து பனி செய்வதே நம் நோக்கம். இது விசிஷ்டாத்வைத தத்துவம். தத் தவம் அஸி நானே அது என்பதெல்லாம் மாயாவாதம். (அத்வைதக் கொள்கை மறுப்பு ?!)
    தகவு- திருமகள் வழிகாட்டப் பரமன் திருவடியில் சரணம் அடைவதே வீடுபேறு அடைய நமக்கிருக்க வேண்டிய தகுதி. ஸ்ரீ-மன்-நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே! ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ! த்வயம் என்கிற மந்திரமே பிராட்டியின் தத்துவம்.திருவோடு கூடிய என்று அவளுக்கே முன்னுரிமை. ஸ்ரீ-யால்-கூடிய நாராயணன் திருவடிகளில் சரணம் அடைகின்றேன் , ஸ்ரீ-யுடன்-நாராயணனே! எனதில்லை(ந+ம), எல்லாம் உனதே!
     
    rai likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள் 2

    கண்ணனை ஆச்சார்யனென்று கொண்டு, பிராட்டியை குருவிற்கு உகந்த சீடனென்று கொண்டு ஒரு பார்வை. பிராட்டியாகிய சீடன் மூலம் குருவாகிய பரமனை அடைய வேண்டுமென்ற கருத்து. இதைக் கீழ்கண்ட முறையில் வார்த்தைப் படுத்த முயன்றிருக்கிறேன்.

    குருவின் அருளாலே ஞானவொளி பெற்றுப்
    பரமன் திருவடியில் சரணம் புகுகின்றோம் !
    பெருஞ்செல்வம் அறம் பொருள் இன்பமுடன்,
    அரிய வீடென்னும் பேற்றினையும் வேண்டி,
    மிருகயினம், தேவருடன்,தாவரம் ,சடத்தோடு,
    அருமை மனிதரென ஐவகை உயிர்களினால்,
    உருவம் கொண்டவிந்த இகவுல காளுகின்ற
    பரமன் அருளைப் பெறவே விழைகின்றோம் !
    அரவணை துயில்கின்ற ஆனந்த நிலையதனில்
    திருவுடன் உறைகின்ற இறைவன் திருவடியை
    சரணம் செய்திடக் காத்துக் கிடக்கின்றோம் !
    குருவின் மனதிற்கு மிகவுகந்த நல்லடியாரே !
    பரமனைக் காட்டியருள் செய்யும் ஆசானின்
    திருவிழிப் பார்வைபட நாங்களும் தவிக்கின்றோம் !
    உரிமை உமக்கென்றே சொல்லுவதை விடுங்கள் !
    குருவின் ஞானவொளி யாமும் பெறுவதற்குக்
    கருணை மனத்தோடு உதவி செய்யுங்கள் !
    பிரமமும் நாமுமொன்றே என்று குழப்புகிற
    தருக்க வாதத்தை நம்பா தொழிந்திடுங்கள் !
    பரமனின் ஒருபகுதி தாமென உணருங்கள் !
    ஒருபகுதி எமக்கும் உண்டென அறியுங்கள் !
    குருவின் கருணையினை எமக்கும் தாருங்கள் !

    குத்துவிளக்கெரிய - ஆச்சார்யன் ஆகிய குரு உபதேசித்து அருள இறைஞான ஒளி வீசும். கோட்டுக்கால் கட்டில் - ஆச்சார்யருடைய கருணையினால் அடியவர் மனதில் அமைதியும், இறை சிந்தனையும், மகிழ்ச்சியும், ஏற்படுவதோடு, நல்லோருடன் கூடி இறைத்தொண்டு செய்யும் இன்பமும் வாய்க்கும். இதுவே கட்டிலின் நான்கு கால்கள்.

    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்
    - தேவ, மானுட, மிருக, தாவர, ஜட என்னும் ஐவகை பூதங்களால் ஆன இந்த உலகில் இருக்கும் நாம்(சீவாத்மா) ஏறி நிற்கும் பஞ்ச சயன நிலையாவது அர்த்த பஞ்சகத்தின் ஐந்து நிலைகளைக் குறிக்கும். ஒரு சீவாத்மா பரமாத்வை அடைய பயணப்படும் வழிநிலைகளே இந்த பஞ்ச சயனம்.
    ஆன்ம ஸ்வரூபம்—- ஆன்மா தன்னுடைய உண்மையான இயல்பை அறிதல்.
    பரஸ்வரூபம்— பரமாத்மாவின் இயல்பை அறிதல்
    புருஷார்த்த ஸ்வரூபம் — ஆன்மா அடையும் பயனை (வீடுபேறு ) அறிதல்
    உபாய ஸ்வரூபம்— ஆன்மா அப்பயனை (இறைவனை) அடையும் வழி அறிதல்
    விரோதி ஸ்வரூபம் — அதற்கு உண்டாகக் கூடிய தடைகளை அறிதல்

    கொத்தலர் பூ, திருமகளோடு இருக்கும் பரமனை சுற்றிக் குழுமியுள்ள தேவர்கள், முனிவர்கள், அடியவர் கூட்டம். மலர் மார்பா - கருணையின் உருவான திருமகள் அவன் மார்பில் தான் இருக்கிறாள், எனவே பரமன் பெருங்கருணையாளன்.

    வைத்துக் கிடந்த- இறைவனையே நாளும் சிந்தனை செய்து கொண்டிருப்பது. மைத் தடம் கண்ணினாய்- குருவின் அன்பிற்குக், கருணைப் பார்வைக்குப் பாத்திரமாகிய உத்தம சீடன்

    மணாளனை- ஆச்சார்யனை , எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய், - எங்கள் மேல் நயன தீட்சைக் கடாட்சம் பட விடாமல் தடுப்பது தகவு அன்று -உனக்குத் தகுந்த இயல்பல்ல
    தத்துவம் அன்று தகவு- தத்+த்வம்+அஸி என்பதற்குப் பொய்யான விளக்கம் கொடுக்கும் , இறைவனும் நானும் ஒன்றே என்று சொல்லும் தாமஸக் கொள்கையாளர்கள் வாதத்தை ஏற்றுக் கொள்ளாதீர்.

    தத்+த்வம், உங்களைப் போன்றே குருவானவர்(இறைவன்) எமக்கும் உரியவர் என்று பொருள் கொள்ளுங்கள் . அவரில் நாமும் ஒரு பகுதி என உணருங்கள். தத்துவம் என்பதை சத்தியம்(உண்மை) என்றும் தகவு என்பதை தர்மம்(நியாயம்) என்றும் கொண்டால் பரமன் உனக்கு மட்டுமன்று; உலகுக்கே உரியவன் எனும் உண்மையை நீ உணரவில்லை; நீ இப்படி இருப்பது நியாயமில்லை என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம்.
     
    periamma and rai like this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,572
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கோட்டுக்கால் என்பது தந்தத்தில் தயார் செய்த கட்டில் .
    கோடு என்றால் ரேகை.கால் என்பது திருவடி.பகவானின் திருவடியில் ஆயிரத்தெட்டு ரேகைகள் உள்ளன.த்வஜ ரேகா,சங்க ரேகா, சக்ர ரேகா,அங்குச ரேகா மட்டுமே வெளியில் தெரியும்.மற்ற ரேகைகள் உள்ளே மறைந்துள்ளன.அவற்றுள்
    துர்வர்ண பங்க்தி நிரசன ரேகா என்பது ஒன்று.இது அடியார்களின் தலை எழுத்தை அழித்து மாற்ற வல்லது.
    பஞ்ச சயனம் என்பது சாமான்ய சுகத்தைத் தரும் மெத்தை அல்ல.இது அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிக்கும்.ஞானியான முக்தன் படுக்கையில் ஏறுகிறான்.லட்சுமியுடன் கூடிய பரமாத்மா பக்தனின் ஹ்ருதயத்தில் பிரவேசித்துப் பிரகாசிக்கிறான்.
    ஜெய்சாலா 42
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமையான தகவல்களுக்கு நன்றி !
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மைத்தடங்கண்ணினாய்- தடம் என்றால் வழியெனப் பொருள். எந்த வழியைக் காட்டும் கண்கள் பிராட்டிக்கு ?மைத்தடம் . அதுவென்ன மை என்றால்- சீர்மை, நீர்மை, இனிமை ,பொறுமை,திறமை, உண்மை,நேர்மை, வாய்மை, தூய்மை, வண்மை ,பேராண்மை, திண்மை, எளிமை, வளமை, ,தகைமை,தலைமை- இப்படிப்பல பெருமைகளையுடைய இறைமையை அடையும் 'மைத்தடத்தை', வழியைக்,காட்டித் தரக்கூடிய கண்கள் அந்தப் பிராட்டியுடைய கண்கள் !


    மைத்தடம் -பதினாறு மைகளை இங்கு சுட்டி காட்டி இருக்கிறீர்கள் .இது தான்" பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க "எனும் வாழ்த்தின் பொருளோ என்று எனக்கு தோன்றுகிறது .
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எனக்கு நீங்கள் கூறிய பிறகே தெரிகின்றது பெரியம்மா ! :) உங்கள் கோணம் அருமை !
     

Share This Page