1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (18) உந்துமதக்களிற்றன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 2, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    18) ஆண்டாள் பாடல் ( மார்கழி நோன்பிற்கு நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டி)

    உந்து மதக் களிற்றன் ஓடாத தோள் வலியன்
    நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
    வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
    பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
    செந்தாமரைக் கையால் சீரார் வளை
    ஒலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    பாசுரப் பொருளுரை


    "மதம் கொண்ட யானையின் நடையை உடையவரும், போரில் பகைவரைக் கண்டு பின்வாங்காத தோள் வலிமை மிக்கவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தல் கொண்ட நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத் திற! எழுந்து வந்து கோழிகள் கூவுவதைக் கேள்! குருக்கத்தி கொடி (செண்பகப்பூ) படர்ந்த பந்தல் மேலமர்ந்து, பலவகையான குயில்கள் சத்தமிடுவதைக் கேள்! மலர்ப் பந்தைப் பற்றியிருக்கும் மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் போற்றிப் பாட வந்துள்ளோம். ஆகையால், தாமரை மலரை ஒத்த உன் சிவந்த, மென்மையான கையில் அணிந்த கைவளையல்கள் சீராக ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறப்பாயாக!"

    பாசுரக் குறிப்பு

    முக்கியமான பாசுரம். இங்கேதான் திருப்பாவைக் காவியத்தின் கதாநாயகி அறிமுகம் ! இப்பாசுரத்தால் கண்ணன் நாயகியாகிய நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறாள், ஆண்டாள். இராதை எப்படி வடநாட்டில் பிரபலமோ, இந்த நப்பின்னை தமிழிலக்கியங்களில் பிரபலம். இவளை நீளாதேவியின் அம்சமாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் குறிக்கப்படுவது, இறைவனும், இறைவியும் பிரிக்கப்பட முடியாதவர்கள் என்னும் பேருண்மை. இறைவியை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடையும் வைணவ நெறிக்கு 'புருஷகாரம்' எனப் பெயர். இதில் கண்ணனின் மனையாளாகிய, நப்பின்னைப் பிராட்டியின் மூலமாக, அவளை அன்னை மஹாலக்ஷ்மியின் உருவகமாகக் கொண்டு,கண்ணனாகிய நாராயணனை அடைவது பற்றிச் சொல்லுகிறாள் ஆண்டாள்.

    அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இந்த மூன்று பாசுரங்கள் 18,19,20, இவை ஜீவாத்ம நிலையானது , புருஷகாரத்தை முன்னிட்டுச் சரணடைதல் பற்றிச் சொல்கின்றன.

    முந்தைய பாசுரத்தில், நந்தகோபர், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்பிய பின், இப்பாசுரத்தில் கண்ணன் மேல் மிகுந்த உரிமையுடைய, அவனது முதல் மனைவியான, நப்பின்னை பிராட்டியை கோபியர் துயிலெழுப்புகின்றனர். வைணவ வழிபாட்டு முறையில், முதலில் ஆச்சார்யனையும் (குரு), தேவர்களுக்கும் மேலான அனந்தாழ்வாரையும், கருடாழ்வாரையும், வைகுண்டத்துத் தளபதியான விஸ்வக்சேனரையும் வாழ்த்திப்பாடி விட்டு, பிராட்டியார் வாழ்த்து பாடுவர். கண்ணன் அருளைப் பெறுவதற்கு பிராட்டியின் பரிந்துரை அவசியமானது என்பது இதன் உட்பொருளாம்.

    பூதவுடல் வாய்த்திருப்பதே இறைத்தன்மையை அனுபவித்து ஆழ்வதற்குத் தான் என்பதை உணர்த்தும் வகையில், ஐம்புலனுக்கும் விருந்தாக இருக்கும் திவ்ய தம்பதிகளை, (திருமகளும், பரமனும்) ஆண்டாள் கீழ்கண்ட குறிப்புகளால் இப்பாசுரத்தில் சுவை பட வணங்கியிருக்கிறாள்.
    கந்தம் கமழும் குழலி - நாசி
    உன் மைத்துனன் பேர் பாட - வாய்
    பந்து ஆர் விரலி- மெய்
    சீரார் வளையொலிப்ப - செவி
    வந்து திறவாய்
    மகிழ்ந்தே - கண்

    இப்பாசுரம் உடையவரான இராமானுஜருக்கு மிகவும் மனமுகந்த பாசுரம். ஒருமுறை அவர் பிட்சை எடுத்து வருகையில் , இப்பாசுரத்தின் "சீரார் வளை ஒலிப்" என்ற வரியினை உளப்பூர்வமாக அனுபவித்த அதே நேரத்தில், பிட்சையேற்க நின்ற வீட்டின் கதவை அவர் குருவான திருக்கோட்டியூர் நம்பிகளின் பெண்ணான அத்துழாய் (துளஸி) கைவளை குலுங்கத் திறந்தாள். அவளை நப்பின்னை பிராட்டியென்றே எண்ணிய உடையவர், கீழே விழுந்துப் பணிந்து மயக்கமுற்றார். இதைக் கண்ட அவர் குருவும், துளசியின் தந்தையுமான திருக்கோட்டியூர் நம்பிகளும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டு, தன் சீடரை, ஜீயராய் இருந்த இராமானுசரைத் தேற்றி, 'திருப்பாவை ஜீயர்' என்று பட்டமளித்தார் ! இதிலே இன்னும் திகைப்பூட்டும் செய்தி, திருப்பாவைக்கு விளக்கம் சொல்லும் தகுதி தனக்கில்லையென்று கருதியவர் உடையவர் ! அவர் அருமையை என்ன சொல்வது ?

    அஷ்டாக்ஷரம் என்னும் எட்டெழுத்து மந்திரத்தை இராமானுசருக்கு வழங்கியவர் இந்தத் திருக்கோட்டியூர் நம்பிகள்.இரகசியமான இதை மற்றவர்களுக்குச் சொன்னால் நரகம் புக நேரிடும் என்ற குருவின் வாக்கையும் மீறித், தான் நரகம் போனாலும் கவலையில்லை, இம்மந்திரத்தை செவியுறுபவர்கள் கடைத்தேறட்டும் என்று அனைவருக்கும் சொன்னப் பெருந்தகையாளர் உடையவர் இராமானுசர் !
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம் - சொற்பொருள்

    மதயானை போன்றே பேராண்மை படைத்தவனாம்!
    எதிரிகளைத் தோளின் வலிமையால் வெல்பவனாம்! .
    யாதவர் தலைவனாம் நந்தகோபன் -அவனுடைய,
    கோதிலாக் குலமகளே நப்பின்னைப் பிராட்டியே !
    அதிமணம் வீசுகின்ற கூந்தலினைக் கொண்டவளே !
    அதிகாலை விடிந்ததனால் வாசல் திறந்திடுவாய் !
    இதோயெங்கும் விடிந்ததென சேவல்கள் கூவுதம்மா !
    அதோவந்த வாசமிகு செண்பகப் பூம்பந்தலின்
    மீதமர்ந்து குயில்களும் கூவி அழைக்குதம்மா !
    சதா ஆனந்தமொடு பந்துருட்டி விளையாடும்
    மெதுவான விரலழகு வாய்த்தவளே-உந்தன்
    காதல் கணவனவன் பேரைப் பாடுகின்றோம் !
    பதுமமலர் போன்றுன் கைகளில் அணிந்துள்ள
    விதவித வளையல்கள் மெல்லொலி எழுப்பிடவே,
    இதமாய் மகிழ்ந்தபடி வாசல் திறந்திடுவாய் !

    உந்து மதக் களிற்றன் ஓடாத தோள் வலியன் - மதம்கொண்ட யானைகளைப் போன்ற நடையழகும், பகைவருக்குப் புறமுதுகு காட்டாத வீரத்தோளழகும் உடைய நந்தகோபன்.இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அவற்றைக் கண்டு அஞ்சி ஓடிவிடாமல் ,அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடியவராம் நந்தகோபன். .அவரது வீரத்தை நன்கு அறிந்திருந்ததால் தான் தான் கம்சனுக்கு ஆயர்பாடிக்கே நேரில் வந்து கண்ணனைக் கொல்லும் துணிவு வரவில்லை. மதுராவில் ஏற்பாடு செய்த விழாவிற்கு அழைத்து வஞ்சகம் செய்ய எண்ணிக் கடைசியில் அவனே மாண்டான்.

    கண்ணனைக் குறிக்கும் பொது முதல் பாசுரத்தில் 'நந்தகோபன் குமரன்' என்றாளல்லவா ? இங்கே கண்ணனின் மனையாளைக் குறிக்கும் பொது அதே நந்தகோபனை வைத்து' நந்தகோபன் மருமகளே' என்கிறாள். நந்தகோபனாகிய ஆச்சாரியார் மூலமே இறைவனையும் இறைவியையும் நாம் அறிகிறோமல்லவா ?

    நப்பின்னை- யசோதையின் அண்ணன் கும்பனின் மகள், கண்ணனின் மனைவி . கண்ணன் ஏறுதழுவி வென்று இவளைப் பரிசாய் அடைந்தான்.நப்பின்னை – நற்பின்னை என்பது நல் – பின்னை – நல்ல தங்கை (பின்னே வந்தவள்-பின்னை) - அன்னை மஹாலக்ஷ்மியாம் திருமகளைக் குறிக்கும். நந்தகோபன் மருமகளென்று சொல்லியும் நப்பின்னைப் பிராட்டி எழுந்து வரவில்லை ! ஆயர்பாடியிலுள்ள எல்லா பெண்டிருமே கண்ணனுக்குக் காதலிகள் தானே,நந்தகோபருக்கு மருமகள்கள் தானே என்று பேசாமல் இருந்துவிட்டாளாம். பின் நப்பின்னாய்! என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.

    பிறந்த வீட்டை விடப் பெண்களுக்கு மிகவும் ஏற்ற வீடு புகுந்த வீடே. அவ்விடத்தில் உள்ளவர்களின் மனதிற்குப் பிடித்தவர்களாய் ஆகிவிட்டால் செல்வாக்கு உயரும். எனவே தான் நப்பின்னையை, நந்தகோபன் மருமகள் என்று சொன்னாள். சீதையும் அனுமனிடம் தன்னை 'தசரதனின் மருமகள்' என்றே அறிமுகம் செய்து கொண்டதை நினைவில் கொள்க. பொதுவாகவே பெண்களைப் பிறந்த வீட்டில் செல்லம் கொடுக்கும் போது "என்ன இருந்தாலும் அடுத்தவன் வீட்டிற்குப் போக வேண்டியவள் தானே ! இங்கே மகிழ்ச்சியாக இருக்கட்டுமே !" என்றோ அல்லது கண்டிக்கும் போது " இது உன் வீடில்லை ! உனக்கு என்ன செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டுமென எண்ணமோ அதையெல்லாம் உன் திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டில் நடத்திக்கொள். இங்கே அடங்கிப்போ !" என்றோ சொல்லுவது நடைமுறையில் நாம் அறிந்தது தானே ?

    எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் உண்டென்றாலும், பிராட்டியும் தானொரு மானுடப் பெண்ணாக அவதாரம் செய்த போதில் பொதுவிலிருக்கும் சமூக நடைமுறையை ஒட்டியே வாழ்ந்து காட்டியிருப்பதை நாம் உணர வேண்டும். உண்ணுவது பழைய சோறானாலும் புகுந்த வீட்டினரோடு அன்புடன் பகிர்ந்து கொண்டால் அது விருந்தே ! பிறந்த வீட்டிற்கு விருந்தாய்ப் போனாலும் மூன்று நாட்கள் தான் மகிழ்ச்சி, பின்னரும் கிளம்பாவிட்டால் கசப்புத் தானே எஞ்சும் ?தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் நான் சொல்வது பலருக்கும் பின்னோக்கிய கருத்தாகப் படலாம். ஆயினும் நடைமுறையில் புகுந்த வீட்டினரை அனுசரித்துக் கொண்டு அவர்களின் அன்பைப் பெற்று வாழ்வதே பெண்களின் மகிழ்வான வாழ்க்கைக்கும் மனநிறைவிற்கும் பேருதவி புரியுமென்பதை மறுக்க முடியாதல்லவா ?


    கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய் ! நீ இருப்பது உன் வாசம் கமழும் கூந்தலிலிருந்து தெரிந்தது .பரந்தாமன் நறுமணப் பொருளென்றால், அதிலிருந்து எழும் நறுமணம் திருவன்றோ ? நீங்களிருவரும் பிரிவில்லாதவர்களாயிற்றே ! நீ யாரென்று நாங்கள் கண்டுகொண்டோம். எங்களை நீயே கடைத்தேற்ற வேண்டும்! என்று ஆண்டாள் துதிக்கிறாள்.

    வந்தெங்கும் கோழி அழைத்தன;மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயிலினங்கள் கூவின
    - பொழுது விடிந்ததென்று கோழிகள் கூவுகின்றன.அது சாமத்துக்கு சாமம் கூவும், சாமக்கோழியாகக்கூட இருக்கலாம் என்றால் ,உங்கள் வீட்டின் செண்பக மலர்ப்பந்தலின் மேலமர்ந்து பலமுறை குயில் முதலான பறவைகளும் கூவுவதை நீ கேட்கவில்லையா? மாதவிப் பந்தல்- செண்பக (குருக்கத்தி) மலர்ப்பந்தல்.
    கண்ணனோ மாவின் கணவன்,மாதவன், அவனது மாது மாதவி, மா வாகிய மஹாலக்ஷ்மி .

    பந்தார் விரலி- கண்ணனின் சிறுவயதுத் தோழி, மனைவி அல்லவா நப்பின்னை ! ஆகவே அவர்களிருவரும் ஆடும் பந்து விளையாட்டைக் குறித்தாள். நப்பின்னை ஒரு கையில் கண்ணனையும், மறு கையில் அவனோடு போட்டியிட்டு வென்ற பந்தினையும் பிடித்து வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். கண்ணனும் நப்பின்னையும் விளையாடும் பந்து விளையாட்டில் நப்பின்னையிடம் கண்ணன் தோற்றுவிடுவான். அந்த வெற்றிக்களிப்பில் அவள் கண்ணனை ஒரு கையிலும், பந்தினை ஒரு கையிலும் அணைத்தபடி உறங்குவாளாம்,கணவனையும், குழந்தையையும் இருபுறத்திலும் வைத்து உறங்கும் பெண்ணைப் போலவே.

    இறைவனும் இறைவியும் ஆடும் பந்தே நாமன்றோ ? இந்த சீவனுக்கு இன்னும் கர்மவினைகள் இருக்கின்றன ஆகையால் இன்னும் கொஞ்சம் ஆட்டுவிக்கிறேன் என்பான் இறைவன். இந்த சீவன் நம் குழந்தையல்லவா ? ஆகவே ஆட்டிவைத்ததுபோதும், கர்மவினைகளைக் களைந்து அருள் புரியலாம் என்று இறைவனிடம் பரிவோடு எடுத்துச் சொல்லி அதில் வெற்றியும் பெறுவாள் இறைவி. ஆகவே இறைவன் மேலும், நம் மேலும் அவளது ஆளுமை என்றுமுண்டு.

    உன் மைத்துனன்- கணவனின் சகோதரன் என்று பொருள். ஆயினும் பாமரப் பெண்கள் பேச்சுவழக்கில், தங்கள் கணவனை 'மச்சான்' என்று அழைப்பார்கள்.தன்னை ஒரு ஆய்ச்சியாகவே பாவித்த படியால், ஆண்டாளும் கண்ணனை மைத்துனன் என்றே குறிக்கிறாள். மைத்துனன் நம்பிக் கைத்தலம் பற்றக் கனா கண்டவள் தானே அவள் ! நந்தகோபரிடமோ, யசோதையிடமோ, பலராமனிடமோ சொன்னது போல், எங்கள் கண்ணனை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்க முடியவில்லை. அப்படிக் அங்கெல்லாம் கேட்டும் நடக்காமல் போய்விட்டது. அதனால் 'உன் மைத்துனன்' என்று நப்பின்னைப் பிராட்டியின் மேன்மையைச் சொல்லி, கண்ணன் மேலான அவளது உரிமையைச் சொல்லி,திருமாலுக்கும், திருமகளுக்குமான சம்பந்தத்தைச் சொல்லி அவள் புருஷகாரத்தை வேண்டுகிறார்கள்.

    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து! - அச்சம் நீக்கி வரமருளும், திருமகளின் அபய வரத ஹஸ்தங்களைக் காண விழைதல். கண்ணுடன் ஏகாந்தத்தில் மகிழ்வோடு இருக்கிறாயாதலால்,நாங்கள் உள்ளே கதவை திறந்து கொண்டு வர முடியாமல் தவிக்கிறோம். நீயே வந்த திற அம்மா ! உன் செந்தாமரை போன்ற கரங்கள் கதவைத் திறக்க நாங்கள் அதை தரிசிக்க வேண்டும்.நப்பின்னை எப்போதும் கண்ணனைத் தம்முடனேயே கொண்டிருப்பதால் அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றதாம். அந்த முகத்தோடு எங்களுக்கும் தரிசனம் கொடு என்கிறாள்.

    சீரார் வளை
    - கைகளில் சரியாகப் பொருந்துகின்ற வளையல்கள்.இவ்விடம் இலக்கியங்களில் குறிக்கப்படும் பசலை பற்றிக் கூறவேண்டும். தலைவியைப் பிரிந்து தலைவன் சென்றிருக்கும் காலத்தில் பிரிவாற்றாமையால் தலைவியின் உடல் மிகவும் இளைத்துப்போகும். எவ்வளவு இளைப்பென்றால் ,அவளது கைவளைகளே, இடுப்பிலணியும் ஒட்டியாணமாகப் போடுமளவு இளைப்பாம் ! கவிஞர் கற்பனை தான், உண்மையில் அப்படியானால் உயிர் தாங்குமா ? இங்கே நப்பின்னையோ கண்ணனை ஒருபோதும் பிரிந்திருக்காதவள். ஆகையால் அவளுக்கு வளையல்களை இடுப்பிலணிய நேரவில்லை அது தான் அவள் வளையல்கள் எப்படியிருக்கவேண்டுமோ அப்படிச் சீராக இருந்தனவாம் !
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள் தாயாரை முன்னிட்டுப் பரமனை அடைதல்
    அகந்தை மமதைகளை அடக்கி ஆள்கின்ற
    தகவுடை ஆசானைப் பணிந்தே அடியார்கள்
    உகந்த இறையடியில் சரணாகதி செய்து
    தகுந்த இறைப்பணியாம் வீடு அடைவாரே !
    இகத்தின் உயிர்கட்கு ஆசானாய் விளங்கும்
    சகத்தின் நாயகி, உன்னைச் சரணடைந்தோம் !
    மிகவும் வலிவுள்ள புலன்கள் யாவையுமே
    இலகுவில் அடக்கி ஆள்கின்ற ஆண்டவனை,
    இகவுலகும் பரமும் தனதென்றே உடையவனை,
    அகலாதே என்றும் ஒன்றிணைந் தனுபவிக்கும்
    சகத்தின் மாதா ,பிராட்டியேப் பணிந்தோம் !
    மிகுந்த இறைஞானம் பெற்ற ஞானியரும்,
    உகந்துமை அடையும் கர்ம யோகியரும்,
    அகத்தில் அன்புடைய பக்தரவர் தாமும்,
    புகழுடை வேதத்தின் இறைநெறி சாரத்தை
    அகழ்ந்தெடுத் தாராய்ந்து தெளிவும் பெற்று,
    சாகை பலவுள்ள மறையைக் கைக்கொண்டு
    சுகமாய் பரமனவன் பெருமை பாடுகிறார் !
    தகுவழி இவையொன்றும் அறியாமல் நீவிர்
    ஏகுமிடமெல்லாம் உம்மைப் பின் தொடர்ந்து,
    உகந்த பரமனவன் திருவடிகள் சரணடையும்
    தகவு பெற்றுள்ள எம்மீதுன் அருட்பார்வையை
    சகத்தின் மாதாவே, சற்றேப் பார்த்திடம்மா !
    இகவுலகில் பரமன் நடத்தும் விளையாட்டில்
    தகுந்த பந்தாக உருண்டோடும் எங்களையே
    அகன்றதாம் பரவுலகில் நாயகன் பரமனவன்
    உகந்து மனமகிழ்ந்திட அவனைப் பாடுகின்ற
    மிகவுயர்ந்த பேறெமக்கு வாய்க்கச் செய்யம்மா !
    வெகுளும் இறைவனுமே மனமிரங்கி வருமளவு
    உகந்த நல்வார்த்தை எமக்காய் எடுத்துசொலி
    மிகுந்த கருணையுடன் கடைத்தேற்றி அருளம்மா !

    நந்தகோபன் மருமகளே- திருமகளைக் குறிக்கும். நல்லாச்சார்யானைப் பணிந்து ரஹஸ்யத் த்ரயம் உபதேசம் பெற்று இறைவனைச் சரணாகதி செய்வதே உயர் வைணவ நெறி .இங்கே ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யனாக விளங்கும் திருமகளைச் சரணடைந்து அவள் மூலமாக இறையடியைச் சேர்தல் குறிக்கப்படுகிறது. பிராட்டியாகிய தாயாரை முன்னிட்டே பரமனை சரணம் செய்ய வேண்டும் என்கிற வைணவ நெறி உயர் தத்துவம் விளக்கப்படுகிறது. இதுவே புருஷகாரம்.

    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்- இறைவனைப் பேறாகப் பெற்ற , தம் சீடர்களாகிய அடியவருக்கும் அப்பேற்றினை வழங்குவதாக உறுதி பூண்டிருக்கிற ஆச்சார்யரையும் குறிக்கும் . அவரும் இறைவனைத் தாயார் மூலமாகத் தான் அடைகிறார் என்பதனால், திருமகளுக்கு மிகவும் பிரியமானவர். மதம் பிடித்த யானையைப் போன்ற இறைமறுப்பாளர்களைத் தம்முடைய ஞான பலத்தால் எதிர்த்து வெல்லக்கூடிய சக்தி படைத்தவர்கள் ஆச்சார்யர்கள் !

    இன்னுமொரு விதத்தில் மதங்கொண்ட யானையின் பலத்தோடு தன்னை அலைப்புறுத்தும் புலன்களை அடக்கி, மனம் வேறெங்கும் ஓடாமல், அலைபாயாமல், இறைவனது திருவடிகளையே சிந்திக்கின்ற, இறைத்தொண்டாகிய வீடுபேற்றினையே விரும்புகின்ற சரணாகதி செய்யும் தகுதியடைந்த சீவாத்மாவையும் குறிக்கும்.

    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்- இன்னுமொரு விதத்தில் வலிமையுள்ள நந்தகோபனை இறைவனுக்கு உவமானப் படுத்தியிருக்கிறாள்.இறைவன் விளையாடல் நடத்தும் இகவுலகு, பேரானந்த நிலையில் நிலைத்திருக்கும் பரவுலகு,இந்த இரண்டு செல்வங்களுக்கும் உரியவன். காம (விருப்பம்),க்ரோத (கோபம்), லோப,(பேராசை) மோக (தகுதியற்ற விருப்பம்) , மத,(தற்பெருமை ) மாஸ்சர்யம் (பொறாமை) என்ற எதிரிகளை வென்றவன். இத்தகு பெருமைகள் படைத்தவன் இறைவன் ஒருவனே. . ஆகவே இப்பதம் இன்னொரு விதத்தில் இறைவனைக் குறிக்கும்.

    நந்தகோபன்- நந்தன் + கோபன் = என்றும் இளைமைக்குக் குறைவில்லாதவன், அனைத்துயிர்களையும் காப்பவன்,திருமால் என்று பொருள் படும். மருமகள்= மரு +மகள்=மரு என்றால் வாசனை என்று பொருள்கொண்டு, நறுமணங்கமழும் திருமகள் என்று பொருள் கொள்ளலாம்.

    நப்பின்னாய்- பேராண்மையாளனாகிய இறைவனுக்கு மிகவும் உகந்தவர்களாகிய பிராட்டியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி. ஆயர்பாடியில் கண்ணன் இருந்தவரை,அவன் தேவியாக இருந்தவள், நப்பின்னை. இவள் நீளா தேவியின் அம்சம். அவள் பெயரைச் சொல்லி ஆண்டாள் பெரிதும் குறிப்பிட்டது பெரிய பிராட்டியாகிய,திருமகளை.

    மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின
    - மா என்றால் ஞானம், இறைஞானம் அருளும் வேதம் என்று பொருள்.வேதாந்தத்தின் பல கிளைகளை, பிரிவுகளை நன்கு அறிந்த, சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞானிகளும்,சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும், துருவன்,பிரகலாதன் போன்ற பக்த உள்ளங்களும்,ஆஞ்சநேயர் முதலான சரணாகத,தொண்டு உள்ளங்களும் இறைவனைத் தொழுகின்றனர்.

    நெடிது வளர்ந்து தழைத்திருக்கும் மரம் போன்ற நான்மறைகளும் அதன் பல்வேறு கிளைகளாக விளங்கும் உட்பிரிவுகளும் தான் மாதவிப்பந்தல் ! தமக்குரிய கிளைகளில் பறவைகள் எப்படித் தங்கி ஒலியெழுப்புமோ, அவ்வாறே தத்தமக்கு விருப்பமான வேதக்கிளையில் அமர்ந்து இறைஞான விளக்கங்களை முனிகளும், யோகிகளும்,தவசிகளும்,,தொண்டர்களும் நமக்கு அறிவித்தபடியிருக்கிறார்கள்.

    கோழி அழைத்தன - கோழி எவ்வாறு குப்பையைக் கிளறி உணவினைத் தேர்ந்தெடுக்குமோ அதுபோன்று வேதங்களில் பரவியுள்ள பரமன் சாரத்தை சிறப்பாகப் பிரித்தெடுடுத்து அனுபவித்து இறைவனை சரணம் புகுபவர்களுக்கு,வைணவ நெறியில் 'சரணார்கிகள்' என்று பெயர். கோழி மூன்று முறை கூவுதற் போல்

    1) தினமும் மூன்றுமுறை பரமனைத் தொழுதல் 2) வைணவ இரகசியங்களான மூன்றைச் சொல்லி இறைவனை சரணடைதல். ( மூலமந்திரம், த்வய மந்திரம், சர்ம ஸ்லோகம்)
    3) பரத்துவம், வைணவத்துவம், சரணாகதித்துவம் என்ற மூன்றின் அவசியத்தை உணர்தல் என்கிற இவை மூன்றும் வைணவனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள்.

    வைணவ அடியார்கள் நான்கு வகையானவர்கள் என்று சமயப் பெரியோர் கூறுகின்றனர்.
    1) கொக்கு- கொக்கு எப்படி உறுமீனுக்காகக் காத்திருக்குமோ அது போன்றே, தக்க ஞானாசிரியனைச் சரணமடையக் காத்திருக்கும் மாணவனாகிய அடியார்.
    2) கோழி- வேதாந்தங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து, வேண்டாதவற்றைப் புறந்தள்ளி வைணவ நெறிகளை நன்கு தேர்ந்தெடுத்துப் போற்றும் அடியார்
    3) உப்பு- ஆச்சார்ய சேவையிலும், பாகவதராகிய,இறையடியார் சேவையிலும், பரமனாகிய இறைவன் சேவையிலும் தன்னை உப்பைப் போல் கரைத்துக் கொள்ளும் அடியார்
    4) ஊமை- ஆணவ அகந்தைகள் எதுவும் இல்லாது நிர்மலமாய் இருக்கும் அடியார்

    பந்து ஆர் விரலி- இறைவனும் இறைவியும் இகவுலகில் உள்ள உயிர்களை வைத்து நடத்தும் லீலைகள், திருவிளையாடல்கள் குறிக்கப்பட்டன. பந்தினை எந்தப் புறமும் திருப்பிவிடக் கூடிய வல்லமை விளையாடுபவருக்கு உண்டு. அது போலவே, கர்ம வினைகளில் சிக்குண்டு ஓடும் அடியவர்களுக்கு இரங்கி அருள் செய்து தலையெழுத்தை மாற்றும் வல்லமை பிராட்டிக்கும், பரமனுக்கும் உண்டு.

    மாயையின் பிடியிலிருக்கும் நமக்கு நடப்பதெல்லாம் விளையாட்டு தான் என்று தெரிவதில்லை. இனிமையான தருணங்களில் மகிழ்ச்சியும், சோகத் தருணங்களில் துயரமும் அடைந்து, உணர்ச்சிகளில் சிக்கிச் சுழல்கிறோம். இதுவெல்லாம் நாடகம் தானென்பது புரிந்துவிட்டால், துயரமுமில்லை, துன்பமுமில்லை, நொடியில் மாறுகின்ற மற்றெந்த உணர்வுகளுமில்லை. நிலைத்த ஆனந்தம் ஒன்றே நம் உண்மை சொரூபம் என்பது புரிந்துவிடும். அதை உணர்வதற்கு, மாயை விலகுவதற்கு,பிராட்டியின் அருள் வேண்டும். அவளே இந்த விளையாட்டை நடத்தும் பரந்தாமனிடம் எடுத்துக்கூறி நமக்குப் பரிவாள்.

    சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் - தவறிழைக்கும் சீவன்களின் மேல் தகப்பனாயிருக்கும் இறைவன் கோபப்பட்டு தண்டிப்பான். ஆனபோதிலும் தாயாய் இருக்கும் இறைவி, அவளின் குழந்தைகளானவர்கள் மேல் கருணை கொண்டு, தன் கணவனிடம் நமக்காகப் பரிந்து பேசி, கோபத்தைப் போக்கி நமக்கு உதவியருளச் செய்வாள். இராமாவதாரத்தில், சீதையைத் துன்புறுத்திய காகாசுரனுக்கு, இறுதியில் சீதையே கருணை காட்டி, இராமனிடம் சொல்லி மன்னிக்கச் செய்ததை நினைவு கொள்ளலாம்.
     
    periamma likes this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,373
    Likes Received:
    10,580
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தேவியின் மஹிமையைப் பற்றிக் கூறுவது இப்பாடல்.
    க்ருஹஸ்தாஸ்ரமத்தில் மனைவியின் ஒத்துழைப்பு இன்றி அணுவளவும் அசையாது.அசையவும் கூடாது.

    ராமனிடம் வாலி"மஹாலக்ஷ்மி யைத் தொலைத்ததால் தயை எனும் குணம் உன்னிடமிருந்து போய் விட்டது." என்றான்.
    ராவணனைக் கொல்ல வேண்டுமானால் ராமனிடம் தயை இருக்கக்கூடாது.எனவே தான் முதலில் பாதுகா தேவியை பரதனிடம் கொடுத்தான்.பின்பு சீதையைத் தியாகம் செய்தான்.சீதை பக்கத்தில் இருந்தால் ராவண வதமே
    நிகழ் ந்திருக்காது.kaakasuran was saved just because of Sita's presence.

    நப்பின்னை தாயின் இலக்கணம்.
    குலார்ணவம் எனும் ஒரு நூல் உள்ளது.அதில் சிவன் பார்வதிக்கு மூன்று தீக்ஷை பற்றி உபதேசிக்கிறார்.
    ஸ்பர்ச தீக்ஷை ;-மழைக் காலத்தில் பட்சிகளால் இறை தேட முடியாது.குஞ்சு பட்சிகள் பசியினால் கத்தும்போது தாய்ப் பறவை இறக்கையினால் குஞ்சுகளை அணைத்துக் கொள்ளும்.பசி நீங்கி விடும்.
    திருக் -தீக்ஷை
    மீனுக்குள்ள சக்தி இது.தாய் மீனுக்கும் குட்டி மீனுக்கும் இடை வெளி அதிகம் .தாய் மீன் தன பார்வையாலேயே குஞ்சின் பசியைப் போக்கிவிடும்.

    வைத தீக்ஷை :-தாய் ஆமை ஒரு இடத்திலும் குட்டி ஆமை வேறு இடத்திலும் இருக்கும்.தன குட்டி ஆமை பசியோடு இருக்குமே.அதன் பசி நீங்க வேண்டுமே என்று மனத்தால் நினைக்கும்.உடனே குட்டியின் பசி அடங்கி விடுமாம்.
    இந்த மூன்று தாய்மையின் சக்திகளும் ஆச்சார்யனுக்கு உண்டு.சிஷ்யனைத் தொட்டாலும், பார்த்தாலும், ஸ்மரித்தாலும் குரு கடாக்ஷம் கிடைத்து விடும்.
    ஆள வந்தார் ராமானுஜரை நேரில் பார்த்தது கிடையாது.ஆனால் சம்பிரதாய ப்ரவரதகாச்சார்யானாய் விளங்குவார் என்று மனத்தால் சமரித்தார்.அப்படியே நடந்தது.

    கந்தம் கமழும் குழலி-என்பது ஞான வாசனையைக் குறிக்கும் .நாரத குரு 4 வயது துருவனுக்கு உபதேசம் செய்ததும், கர்பத்திலிருந்த ப்ரஹ்லாதனுக்கு உபதேசம் செய்ததும் பிரசித்தி .

    கோழியின் ஸ்தானம் மிக உயர்ந்தது.
    கொக்கு போல் இருப்பான்.கோழி போல் இருப்பான்.உப்பைப் போல் இருப்பான் .இது தான் ஆச்சார்ய லக்ஷணம்.
    கொக்கு பெரிய மீனுக்காகக் காத்திருந்து லபக்கென்று பிடித்துக் கொள்ளும்.குருவும் நல்ல சிஷ்யனுக்காகக் காத்திருப்பார்.
    கோழியும் குப்பையைக் கிளறி கிளறி நல்ல தீனியைப் பொருக்கிக் கொள்ளும்.
    உப்பும் ஜீரண சக்தியை அதிகப் படுத்திக் கிருமிகளை அழிக்கிறது.ஆச்சார்ய கிருபையினால் சத் விஷங்கள் மனதில் புகுந்து காம க்ரோதங்கள் யாவும் விலகும்.

    குயிலினங்கள் கூவின காண் _- குயில் முதலில் மாந்தளிர் சாப்பிடும்.வாய் துவர்க்கும். உடனே பலாவின் தேனைப் பருகும்.இனிமையான குரலை அடையும்.சாமான்ய விஷயங்களை படித்து மனம் சலித்ததும் தேன் போன்ற ப்ரம்ம வித்யாயை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே கருத்து.இப்படிப்பட்ட தேனை நல்குபவர் ஆச்சாரியர்கள் .

    ஜெய்சாலா 42
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமையான பார்வை. பெண்ணிற்கு நம் பண்பாட்டில் கொடுத்து வந்திருக்கும் மேன்மையையும், காலமாற்றத்தில் அந்நிலையிலிருந்து நாம் பிறழ்ந்து விட்டதையும் இன்றைக்குப் பல விதங்களில் அறிந்து கொள்ள முடிகிறதே !

    ஆம், அதுவே சிறந்தது !

    நல்லதொரு பதிவிற்கு நன்றி !
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மரு -மகள் பொருள் புதியது .

    சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் - தவறிழைக்கும் சீவன்களின் மேல் தகப்பனாயிருக்கும் இறைவன் கோபப்பட்டு தண்டிப்பான். ஆனபோதிலும் தாயாய் இருக்கும் இறைவி, அவளின் குழந்தைகளானவர்கள் மேல் கருணை கொண்டு, தன் கணவனிடம் நமக்காகப் பரிந்து பேசி, கோபத்தைப் போக்கி நமக்கு உதவியருளச் செய்வாள். இராமாவதாரத்தில், சீதையைத் துன்புறுத்திய காகாசுரனுக்கு, இறுதியில் சீதையே கருணை காட்டி, இராமனிடம் சொல்லி மன்னிக்கச் செய்ததை நினைவு கொள்ளலாம்.

    யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
    ஏதும் தரவிருக்கும் கருணை கடலன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
    மணி வண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    என்ற பாடல் நினைவுக்கு வந்தது
    பவித்ரா மீண்டும் ஒரு அருமையான விளக்கம்
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எனக்கும் பலரையும் போல இந்தப்பாடல் பிடிக்கும் !
    மிக்க நன்றி பெரியம்மா !
     

Share This Page