1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (1 )மார்கழித் திங்கள் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 17, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    (ஸ்ரீ நாதமுனிகள் சீடர் உய்யக்கொண்டார் அருளிய ஆண்டாள் நாச்சியார் மீதான தனியன் -பாடல் ஆசிரியரின் புகழ் )

    அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
    பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
    பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

    சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
    பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
    வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
    நாம் கடவா வண்ணமே நல்கு.

    கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
    சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
    நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
    வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

    பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
    வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
    வையம் சுமப்பதும் வம்பு;

    1) ஆண்டாள் பாடல் (மார்கழி நோன்பு என்கிற பாவை நோன்பின் முகவுரை. எப்போது ,யாரைக் குறித்து ,எதற்காக நோன்பிருக்க வேண்டும் என்ற கேள்விகளின் விடை )

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
    நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
    நாராயணனே, நமக்கே பறைதருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    "மார்கழி மாதத்துப் பௌர்ணமி நாளான இன்று, மார்கழி நோன்பு நோற்பதற்கான சிறந்த நாள். அனைவரும் நீராட வாருங்கள். பசுச்செல்வமும் ஏனைய செல்வங்களும் நிறைந்துள்ள ஆயர்பாடியின் பெண்களே, இறைவன் மீது அன்புடையவர்களே எழுந்து வாருங்கள் ! தனது குழந்தையின் மீதில் கொண்ட அன்பின் காரணமாக, சிறு எறும்பு கூட அவனைக் கடிக்கக் கூடாது என்று கையில் வேலோடு காவல் காக்கும் நந்தகோபனுடைய இளம்பிள்ளையும் , அழகான விழிகளையுடைய யசோதை தேவியின் சிங்கக் குட்டியுமான அந்த நாராயணன், கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற நோக்கில் நாம் நோற்கும் இந்நோன்பிற்கு வேண்டிய பொருளான பறைக்கருவியைத் தருவான். எனவே இந்நோன்பை நோற்றுப் புகழ் பெறலாம் வாருங்கள் !"

    பாசுரக் குறிப்பு

    திருப்பாவையின் தொடக்கப் பாசுரம் . 5 X 5 + 5 இல், நோன்பு நடத்துவதற்கான வழிமுறைகள் சொல்லப் படுகின்ற முதல் பகுதி( 1-5) தொடக்கப் பாசுரம் . திருப்பாவையின் நோக்கத்தைத் தெளிவாக உரைக்கும் பாசுரம். இறைவன் நமக்கு வீடாம் பேறு அளிப்பான் என்று அறிவிக்கும் பாசுரம் . இறைவனுடன் இரண்டறக் கலக்கின்ற வீடுபேறு வாய்க்கச், சிறந்ததும், எளியதுமான வழி, பிரபத்தி என்கிற சரணாகதியே என்றுத் தெளிவாகச் சொல்லும் பாசுரம். உபாயமாகிய(அடையும் பொருள்) பரமனை அடையும் உபேயமும்(அடையும் வழி) பரமனே. மாணிக்கவாசகரின்'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' இங்கே நினைவு படுத்திக்கொள்ளத் தக்கது.அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம். -- நாராயணனே (பரமாத்மா) நமக்கே (ஜீவாத்மா) பறை (கைங்கர்யமாகிய வீடுபேறு ) தருவான், என்கிற வைணவ நெறியின் சரணாகதி தத்துவம் விளக்கப்படுகின்றது. தாரக மந்திரமான மூல மந்திரத்தைக் குறிக்கும் பாசுரம்.
     
    knbg, jskls, suryakala and 2 others like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Thanks, read today.
    Seems Marghazhi month has come already.
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம் - சொற்பொருள்

    கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடியில் உள்ள கோபிகையாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்ட ஆண்டாள், கண்ணனைக் குறித்து மார்கழி நோன்பு நோற்பதற்குத் தன்னுடன் வசிக்கும் மற்ற கோபிகைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை அதிகாலையில் நீராட வருமாறு அழைப்பது போல் அமைந்த பாசுரம். கண்ணனுடைய தந்தை, தாய் பற்றிச் சொல்லி, கண்ணன் நமக்கு நோன்பு நோற்பதற்கு வேண்டியதானப் பறைக்கருவியைத் தருவான் என்று எடுத்துச் சொல்வதே இப்பாசுரம்.

    அரக்க மகவினுக்கு இரங்கியருள் செய்ய, (அரக்க மகவு-இரணியகசிபு மகன் பிரகலாதன்)
    நரனும் சீயமுமாய் உருவில் பாய்ந்திட்டப், (நரன்- மனிதன், சீயம்- சிங்கம்)
    பரமனவன் தனக்கு உரித்தப் பொழுதான,
    பிரமமுகூர்த்தம் எனும் மான்தலை மாதத்தில்,
    பூரண வெண்ணிலவு தோன்றும் நன்நாளிலே,
    பேரானந்தமதை அளிக்கும் இறைவன் பால்,
    பரியும் மனமென்னும் பெரியவணி பூண்ட, (பெரியவணி = பெரிய +அணி)
    அருமைச் செல்வநிறை ஆயர் பெண்டீர்காள் !
    கருணை மிகவோடு இடையரினங் காக்கும்,
    அரசன் நந்தனுமே பிள்ளையிடம் கொண்டப்
    பிரிய குணத்திற்காய்ப் போருஞ் செய்வானே !
    அரசியவன் மனையாள், பேரழகு வழிகின்ற,
    விரிமலர் விழியாளாம் யசோதை தேவியவள்,
    கருமை நிறத்தோனே-தாமரை மலர்களென
    இருவிழி உடையோனே-பகை களைகையிலே,
    அருணன் ஆண்டானாய்-பக்தர் விளிக்கையிலே, (அருணன்- சூரியனின் தேரோட்டி
    அருள்பொழி நிலவோனாய் -இருவித மொளிரும் (ஆண்டான்- அருணனின் எசமான் சூரியன்)
    திருமுகவழகு கொண்டக் கண்ணனவன் தன்னை,
    நாராயணன் என்பார் உலகினில் - நமக்கெல்லாம்
    தருவான் பேறவனே-அவனருள் பெறுவதென்றப்
    பெரும்புகழ் அடைவதற்குப் பாவை நோன்பெனும்
    விரதமிருந்திடலாம் விழைந்து நீராட வாரீர் !


    மார்கழி - மிருகசிரம் , மிருகங்களில் தலைமையானது ,சிங்கம் என்று பொருள் கொள்ளலாம். திருமாலின் நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கும். தேவ கணக்குப் படி அதிகாலைப் பொழுது மார்கழி . ம்ருக - மான், சிரம்-தலை = மான் தலை- மிருகசிரம் - மார்கழி மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணனும் உரைத்தான் .
    மதி நிறைந்த நன்நாள் - பௌர்ணமி நிலவு தோன்றும் நல்ல நாள்.
    நேரிழையீர் - , இறை பக்தியும் இறைத்தொண்டு செய்யும் எண்ணமும் ஆபரணாமாய்ப் பூண்டவர்களே
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்- பால்வளமும் மற்ற செல்வங்களும் நிறைந்த ஆயர்பாடியின், வளமான பெண்களே
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் - கூர்மையான வேலினையேந்திய,இடையர் குல அரசன் நந்தகோபன் மிகுந்த கருணை குணமுள்ளவன் ஆயினும் எறும்பு கடிப்பது போன்ற சிறுசெயலுட்பட எந்தத் துன்பத்திலுமிருந்து கண்ணனாகிய தன் பிள்ளையைக் காப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்படக்கூடியவன்.
    ஏரார்ந்த கண்ணி யசோதை - கண்ணனின் சேட்டைகளைக் கண்டு விரிந்த , அழகு நிறைந்த கண்களையுடையளான யசோதை
    கார்மேனி- கருத்த மேகம் போன்ற மேனிநிறம் கொண்டவன் செங்கண் - தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்
    இடையர்கள் கொண்டிருந்ததெல்லாமே வெண்மை தான் பால், தயிர், வெண்ணை, அவர்கள் உள்ளம், எனவேக் கருவண்ணக் கண்ணனிடம் மிகுந்த ஆசை
    கதிர் போல் முகத்தான் - கொடுமை களையும் போது சூரியனைப் போன்று ஒளி படைத்த முகம்
    மதியம் போல்முகத்தான்- அருளும் போது நிலவைப் போல் குளிர்முகம்
    நாராயணனே - எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியும் நிறைந்திருப்பவர் , பாரோர் - உலகிலுள்ள இறையடியார்கள் ,நல்லோர்
    பறை- விரதத்திற்கு (விரதம்- பாவை நோன்பு ) ஏற்ற இசைக்கருவி என்ற பொருளில் வருவது, ஆயினும் அதன் மறைபொருள் வீடுபேறு
    நீராடப் போதுவீர் ,போதுமினோ - ஆசையுடன் நோன்பிருக்க வாருங்கள்
    ஏலோரெம்பாவாய் = ஏல் + ஓர் +எம் +பாவாய் = எம்முடைய பாவை நோன்பினை நீங்களும் ஏற்பீர்களாக (அனைத்துப் பாசுரத்திலும் இதுவே ஈற்றுச் சொல் .


    பாவை நோன்பு பற்றிய சிறுகுறிப்பு


    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு' ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு நலத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித் துதித்து வழிபட்டனர். இவ்வழக்கத்தை ஒட்டியே ஆண்டாளும் தான் சொல்ல வந்த சரணாகதி தத்துவத்திற்கு நோன்பு என்று பெயரிட்டுத் திருப்பாவை நூலை இயற்றினாள்.
     
    jskls, vaidehi71 and periamma like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் (உட்பொருள்)

    மார்கழி நோன்பாகிய சரணாகதத்தை மேற்கொண்டால், இறைவன் பறை என்பதான வீடுபேற்றைத் தருவான் என்ற திருப்பாவையின் நோக்கத்தை முகவுரையாகக் கூறுவதே இப்பாசுர உட்பொருள். இப்பதிவில் வரும் மந்திர உபதேசங்கள் எல்லாம், குருமுகமாகத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் பதிவது எழுத்துகளால் ஆன சொற்றொடர்கள் மட்டுமே. வாசகர்கள் இதை உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். புரிதலுக்கு நன்றி !


    கருணை மிகவந்த இறைவனை அடைய
    உரிய வழியாக மறைகள் சொல்கின்ற
    பெரிய யோகங்களை நாமும் கடைபிடித்தல்,
    அரியப் பெருஞ்செயல் என்று அறிந்தோரே,
    திருவை முன்னிட்டு நாமங்கள் பாடிப் ,
    பரமன் மூலமே அவனின் திருவடியைச்,
    சேர வேண்டுமென்ற உண்மை உணர்ந்தவர் !
    கருமவினை யென்னுமிருள் சூழ் இகவுலகில்
    தரும எண்ணங்களே அணியாய்க் கொண்டு,
    பெரும் புலன்கள் யாவையும் அடக்கியாள்பவர் !
    அருளைப் பொழிகின்ற நாதன் பாதத்தைக்
    குருவின் அருளோடு ஞானமதைப் பெற்று,
    சரணம் அடைகின்ற நோக்கம் உடையவர் !
    பரமன் திருவடியை நாடும் அடியவரின்
    சிரம பாவங்களைக் களையும் தொழிலிலேக்
    கருத்தைக் கூர்மையாய் வைக்கும் பரமனும்,
    புரியும் அத்தொழிலில் வென்று வாகையென
    அரிய வைஜெயந்தி மாலை அணிந்தவன் !
    பரமானந்தம் எனும் நிலையை நமக்களித்து
    யாரும் மறுக்காதப் புகழை உடையவன் !
    வீரியமிகக் கொண்ட சீயமென்றே அவனும்,
    கூரியவாம் அடியார்கள் பாவம் அழிப்பவன் !
    பரந்த வானைப் போல் இறைவனவனுமே,
    விரிந்து எவ்விடமும் உறையும் பெரியவன் !
    கரியத் திருமேனிக் கமலவிழி நோக்கால்,
    இருளாம் தீவினைகள் போக்கும் கதிரவன் !
    அருளாம் அமுதினைப் பொழியும் மதியவன் !
    நாராயணன் என்னும் பெயரைத் தாங்கிடும்
    பெரிய நற்குணங்கள் நிறைந்த பரமனை,
    விரும்பியேப் பணிந்து சரணம் செய்திடில்,
    கருணை வடிவான இறைவனும் நமக்கு
    அரிய வீடென்னும் பேற்றை அருளுவான் !


    கூர்வேல் கொடுந்தொழில் - கர்ம/ஞான யோகங்கள் மூலமாக இறைவனை அடைதல் மிகவும் கடுமையானது சிலரால் தான் கடைபிடிக்க இயலும்.
    குமரன்- எல்லோராலும் விரும்பப்படுகின்ற பக்தி மார்க்கம். இறைவன் மேல் பக்தி செலுத்தி, சரணாகதி செய்தல் இறைவனை அடைவதற்கு மிகவும் எளிய வழியாகும்
    ஏரார்ந்த கண்ணி - பிராட்டி. பிராட்டியாகிய தாயாரை முன்னிட்டு, அதாவது திருமகளைத் தொழுது அவள் மூலமாகப் பரந்தாமனை அடைதல் . இதற்கு வைணவ நெறியில் புருஷகாரம் என்று பெயர் .
    இதன் மூலம் வைணவத்தின் இரஹஸ்யத் த்ரயத்தின் த்வய மந்திரம் சொல்லப்படுகிறது.(ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே + ஸ்ரீமதே நாராயணாய நமஹ)
    நேரிழையீர் - பிரபத்தி என்கிற சரணாகதி வழியை ஏற்றுப் பரமனை அடையும் எண்ணமுடையோர்
    மதிநிறைந்த- தன்னைச் சரணடைந்தோர்க்கு வீடுபேறு அளிப்பேன் என்ற இறைவனின் உறுதிமொழியை மனதில் எண்ணி அதன் உண்மைப் பொருளுணர்ந்தவர்
    நன்னாள் - இறைவனைச் சரணடையும் நாள் நல்லநாள்.
    ஆயர்பாடி - மண்ணுலகு, சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள் - இறைவன் மீது பக்தி கொள்ளும் அடியவர்
    மார்கழி- மார்க்க +சிரம் = வழி +தலையாய = பிரபத்தி என்கிற சரணாகதி செய்தலே இறைவனை அடைய தலையாய (சிறந்த) வழி. இராஜபாட்டை !
    செல்வச் சிறுமீர்காள்- ஆச்சார்யரின் அருளாலே சரணாகதி மூலம் வீடுபேற்றை அடையக் கூடிய வாய்ப்புள்ள ஜீவாத்மாக்கள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் - இறைவன் தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கும் கூர்மையான ஸங்கல்பமுடையவன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் - வெற்றி வாகையான வைஜயந்தி மாலை சூடியவன் - யசஸ் என்றால் மேலான புகழ் என்று பொருள். சரணாகதி செய்தவர்களைக் காத்து பரமானந்த நிலை தருவதான அவன் தொழிலில் சீறும் சிங்கம் போன்று வெற்றியே பெறுபவன் இறைவன் என்பதால் ,வெற்றி வாகை சூடிய புகழ் நிறைந்த சிங்கம் என்ற பொருளில் வந்தது.
    நாராயணனே- வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் முதலும் மூலமுமான திருமந்திரம் (எட்டெழுத்து)நாராயண மந்திரம் இப்பாசுரத்தில் போற்றப் படுகிறது பிரணவம் + நமோ +நாராயணாய= திருமந்திரம்
    மார்கழி நீராடப் போதுவீர், போதுமினோ- பரமன் திருவடியில் சரணாகதி செய்ய வருகிறவர்களெல்லாரும் வரலாம் ,விரும்பி வர வேண்டும்
     
    jskls and vaidehi71 like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நீவிர் பல்லாண்டு வாழ்க.உங்கள் தெய்வத் திருத்தொண்டு வளர்க

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பல கோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்
    செவ்வடி செவ்வி திருகாப்பு
    என்று சொல்லி உங்களுக்கு அந்த மாய கண்ணன் பக்தையாக வாழ்த்துகிறேன்
     
    PavithraS likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    (பாவை நோன்பு என்று குறிப்பது,ஷடாங்க யோகமான,(ஆறு பகுதிகள் உடைய) சரணாகத தத்துவம். எட்டெழுத்து நாராயண மந்திரத்தை உச்சரித்து, மெய்யான ஞானம் அடைந்த குருவின் மூலமாக, (ஆண்டவனைக் காட்டிலும் அவன் அடியவர்களே பெரியவர்கள்) சரணாகதம் செய்பவர்களுக்கு, இறைவன் மோக்ஷம் என்கிற, (கைங்கர்யம் என்று சொல்லப்படுகிற இறைப்பணி என்பதே சாலப் பொருத்தம்) வீடுபேறைத் தருவான் என்கிற வைணவ நெறியை ஆண்டாள் அறுதியிட்டுக் கூறுகிறாள். இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் உயர்ந்தவர்களே! இறைவன் குணங்கள் இன்னது, அவன் பெயர் இன்னது, அவன் பக்தர்களாகிய நமக்கு வீடு பேறு நல்குவான் என்று தான் கூறவந்த உண்மைகளுக்கு உறுதியான முகவுரையை இப்பாடலில் ஆண்டாள் உரைத்திட்டாள் . )

    குரு, ஆச்சாரியார்,ஸ்வாமி ,ஜீயர் இந்தச் சொற்கள் எல்லாமே வைணவ நெறியின் ஆசிரியப் பதவியிலிருப்பவர்களைக் குறிக்கும் சொல் தான். .

    ஒருவருக்கு இறைநெறியை அறிமுகப்படுத்தி ஆர்வமளிப்பவர் முதல் நிலையாளர், குரு,
    தீக்ஷை பெற்று ஒரு வைணவ மடத்தின் பட்டத்திற்கு வந்தவர் ஆச்சார்யர்,
    வைணவ நெறியினைப் பற்றி,கொள்கைகள் பற்றி சமூகத்தினருக்கு எடுத்துரைப்பவர் ஸ்வாமி ,
    எல்லோராலும் போற்றி வணங்கப்படும் உயர்நிலை ஆச்சார்யர் ஜீயர் -

    சரணாகத மார்க்கத்தின் ஆறு அங்கங்கள்

    1)அநுகூல்ய ஸங்கல்பம் (இறைவனுக்கு உகந்த செயல்களை மட்டுமே செய்வது என்கிற உறுதி)

    2) ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம், (, இறைவனுக்கு உகந்ததல்லாதவற்றை ஒரு போதும் செய்யாதிருத்தல் என்கிற உறுதி )

    3)பலத் த்யாகம்,( தான் எனது என்று சுயநலத்தோடு இல்லாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று எவ்வித பலனும் கருதாமல், இறைத்தொண்டில் ஈடுபடுதல்)

    4)மஹா விஸ்வாஸம் ,(இறைவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்)

    5)கார்பண்யம், ( அவனன்றி ஓரணுவும் அசையாது என்றுணர்ந்து, எல்லாம் அவன் செயல் என்று அறிதல்.)

    6)கோப்த்ருவ வரணத்துடன் (ஆண்டவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை செய்தல், தொழுதல்) கூடிய ஆத்ம நிக்ஷேபம்- (நம் மனச்சுமைகளை ஆண்டவன் மீது இறக்கி வைத்தல்)
    இவற்றைத் திருப்பாவையின் (நாம் மேலே காணப்போகும்) 26 ஆம் பாசுரத்தில் (மாலே மணிவண்ணா) ஆண்டாள் உள்ளிடு கருத்தாக வைக்கிறாள்.
     
    jskls, periamma and vaidehi71 like this.
  7. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Dear Pavithra,
    What a fantastic explanation!
    Really good, though I am not that familiar with analysing the poems I will read again to understand them.
    Continue your service and I am sure the Lord will shower his blessings on your family.
    Thanks,
    Vaidehi
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பிரியமுள்ள பெரியம்மா,

    உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ! இந்தப் பதிவின் மீதான உங்கள் விமர்சனத்தையும் எதிர் நோக்குகிறேன்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா

    Thank you, Vaidehi ! Would love to have Feedbacks and suggestions too !
     
    vaidehi71 likes this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @suryakala @jskls

    விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ! வாசகரின் எண்ணவோட்டம் அறிந்து கொள்ள முடியாமையால், மேற்கொண்டு பதியலாமா என்ற தயக்கம் வருகிறது. இப்பதிவின் நிறை குறைகளைச் சுட்டினால் , மிகவும் பயனுறுவேன் !
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    RGS,

    தங்களிடமிருந்து ,இந்தத் தொடர் பதிவைக் குறித்தக் கருத்தை/ஆலோசனையை வரவேற்கிறேன் .
     
    Last edited: Oct 17, 2016
    rgsrinivasan likes this.

Share This Page