1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடாரம் - 3

Discussion in 'Posts in Regional Languages' started by iniyamalar, Dec 12, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    View attachment 144566

    கடாரம் - 1
    கடாரம் - 2

    முதல் பயணம்

    தலைத்தக்கோலம், கடாரம்.
    (Takua pa in present day, Phang nga, Thailand)

    ந்த ராட்சத மரக்கலத்திலிருந்து சிறு படகொன்றிற்கு மாறி, கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

    எதிரில் கடாரத்தின் துறைமுகங்களில் ஒன்றான தலைத்தக்கோலத்தின் துறைமுகம் பிற்பகல் வெளிச்சத்தில் பளிச்சென்று வெகு அழகாய்த் தெரிந்தது.

    அங்கேக் கரையை மறைத்தபடி பொருள் ஏற்றும் படகுகளும், கலத்திலிருந்து பயணிகளைக் கரைக்குக் கொணரும் சொகுசுப்படகுகளும், கட்டுமரங்களும் கணக்கற்று மிதந்து கொண்டிருந்தன.

    சற்றுத் தள்ளி கடலுக்குள், எண்ணிலடங்காக் கலங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

    சீனத்தின் சிவப்பு நிற ’ஜங்க்’ கலங்கள், அரபு தேசத்தின் நீண்ட ’தௌ’ கலங்கள், வங்கதேசத்தின் கலை நுட்பம் வாய்ந்த கலங்கள், தமிழகத்தின் வித விதமான பெரும் மரக்கலங்கள் என்று கடலையேக் குத்தகைக்கு எடுத்தாற்போல் நாலாபுறமும் அங்குமிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    அதிலிருந்து பொருளிறக்கிவைக்கும் கூலிகளின் இரைச்சலும், கலங்களிலிருந்து படகுகளில் மாறிக்கொண்டே அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த வணிகர்களின் உரத்த குரல்களும், கரையில் இறங்குமுன்பே வாணிபத்தைத் தொடங்கி விடும் நோக்கோடு வியாபாரிகளிடம் குறைத்தும் கூட்டியும் விலை பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சொலிகளும் என்று அந்த இடமே பேரிரைச்சலாய் இருந்தது.

    கடலில் அரைக் காத தூரம் வரை மிதக்கும் வீடுகளாயும் மாளிகைகளாயும் தெரிந்த கலங்களும், அவற்றைச் சுற்றிக்கூடியிருந்த கட்டுமரங்களின் வரிசைகள் சாலைகளாயும் மாறி, என்னவோ இந்த வணிகப்பெருமக்கள் கடலிலேயே மிதக்கும் நகரொன்றை நிர்மாணித்து விட்டார்களோ என்னும் ஐயத்தை நித்திலனுக்கு ஏற்படுத்தியது.

    இத்தனையாண்டுகளாய் நாகபட்டிணத்துக் கரையிலிருந்தே இது போன்றக் காட்சிகளைக் கண்டு பழக்கப்பட்டவனுக்கு, முதன் முறையாக கடலிலிருந்து இந்தக் காட்சி, புதிதாய்ப் பெரும் அற்புதமாய்த் தெரிந்தது. இந்தப்பயணமே அவனைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதந்தானே!

    அவனுடைய முதல் கடற்பயணம் இது.

    அவன் எத்தனை விதமாய்க் கற்பனை செய்திருந்தாலும் தன் அனுபவத்தால் அவன் அடைந்த பரவசத்தை அதற்கு எத்தகையிலும் ஒப்பாக்க முடியாது என்றுணர்ந்தான். அத்தனை தூரம் அவன் இந்தக் கடல் பயணத்தை ரசித்திருந்தான். வெளியிலிருந்து பார்த்தால் என்ன தெரிகிறது?

    கடலில் பல திங்களாய்ப் பயணம் செய்கிறான் என்று தோன்றும். அவ்வளவு தான். ஆனால் அந்த பல திங்களும் கடலுக்குள் என்னென்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரிகிறது?

    னிதவாசங்களற்ற மச்சதேசமான பெருங்கடலும் அழகிய பெண்ணைப் போலத் தானே? அவளுக்கென்று ஒரு மனம் இருக்கிறதே?

    முதல் முறை பார்க்கையில் சுயத்தை மறக்குமளவு சிந்தையைச் சிறைபிடிக்கிறாள். பிறகும் பெண்கள் போலவே புரியாத மொழியில் காதல் பேசுகிறாள். அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவுடைய ஆண்மகன் உண்டா?

    அப்படியும் கஷ்டப்பட்டு புரிந்து கொண்டு அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்துக் கலத்தைச் செலுத்தினால், தன் ஆழ்மனத்து வேகச்சுழலைத் திடீரென்று மேலே விரவிவிட்டு நம்மைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பார்க்கிறாள்.

    அதிலுந்தப்பித்தால், அவளது ஊடல் கொண்ட கோபப் புயலுக்கு பதிலா சொல்ல முடிகிறது?

    அவள் மனதைப் பதாகையாய்ப் பிரதிபலிக்கும் வானங்கறுக்க, கோபத்தில் இடியாய் உறுமி உறுமி கலத்தைத் தன் அலைகரத்தால் தட்டாமாலை சுற்றுகிறாள். போதாக்குறைக்கு மழை எனும் கண்ணீர்த்தோழி கொண்டு கடைந்தெடுக்கிறாள். பிறகு சட்டென்று வடிந்துப் பிள்ளையாய்ச் சிரித்து அன்னையாய்த் தாலாட்டுகிறாள்.

    அடேயப்பா!..பெண்ணிலும் பெண் இவள் பொல்லாப்பெண்ணல்லவா?

    ஆனால் ஒரு முறை மையல் கொண்டு விட்டால் ஆயுளுக்கும் மறக்க முடியாத பெண்ணும் கூட. அதனால் தான் ஒரு முறை கடல்மகளிடம் பழகிய மாலுமி அடுத்து நிலமகளை ஏறிட்டும் பார்ப்பதில்லை போலிருக்கிறது.

    இந்த மாலுமிகளுக்கும், சதா சர்வ காலமும் கடலோடும் வணிகர்களுக்கும் தான் எத்தகைய வாழ்க்கை? இவர்களுக்குச் சராசரி மனிதனின் சட்ட திட்டங்கள் செல்லாது என்பது எத்தனை உண்மை?

    கடலில் இருந்த நாட்களில் பல நாள் அவனுக்கு அவனது வினோத கனவு நினைவுக்கு வந்தது. கண்ணெட்டும் தூரம் வரை விரவிப்பரந்து கிடந்த நீலக்கடலின் விஸ்தாரம் அவனுக்கு விஸ்வரூபமாய்த் தெரிந்தது. பொங்கு கடலின் முன் அவன் ஒரு தேர்த்துகள்* அளவு இருப்பானா? ம்ஹ்ம்.. தூசுக்கும் தூசாயிருப்பானோ?

    அவன் மனது என்னென்னவோ நினைத்துக் கொண்டது. ஏதேது!? ’ப்ரிகத் ஸம்ஹிதை*’ சொல்வது போல தனக்கும் கடலில் பிரயாணித்ததால் சந்திரனின் சாயை விழுந்து தன் விதியோ மதியோ மாறித்தான் போனதோ? தான் சோழபுரம் விட்டுக் கிளம்புகையில் இருந்த மன நிலை என்ன? இப்போது இருக்கும் மன நிலை என்ன? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

    பதினைந்து தினங்களாய்க் கிட்டத்தட்ட நூறு யோஜனை*த் தூரம் கடலிலே மிதந்துவிட்டு முதல் முறையாக ஐந்து தினம் முன்பு மாநக்கவாரத்தின்* கரையில் கால் பதிக்கையில் இன்னும் தான் மிதந்து கொண்டே இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டதை நினைத்து இப்போது சிரிப்பு வந்தது அவனுக்கு.

    ரை கூப்பிடு தூரத்தில் காத்துக் கொண்டிருந்தது. அத்தனை நாள் அருகே கண்டு ரசித்த கடல்மகளைப் பிரியுந்தருணமென்று உணர்ந்து அவன் மனம் ஒரு ஏக்கப்பெருமூச்சை வெளிவிட்டது. அதைக் கண்டுகொண்டு கடல்மகளும் அலையாய்ச் சீறிஎழுந்து சற்றுத் தைரியமாய் எட்டிப் படகின் விளிம்பைத் தாண்டி அவன் முகத்தைத் தொட்டு வருடினாள்.

    அவன் அந்த முத்தத்தின் எச்சத்தைத் துடைத்துச் சிரித்தபடி முகத்தைத் திருப்பி கரை நோக்கினான்.

    அந்தச் சிறு துறைமுகத்தின் இருபுறமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகளின் பச்சைப்படுக்கையும் கடலின் நீலவிரிப்பும் மாறி மாறிக் காட்சியளித்து அவனது மனதில் இன்பச்சுகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

    அருகே வந்து நின்றவன் அவனைப் பார்த்துச் சிரித்தான். அவர்கள் பேசத்துவங்குமுன் அந்தப் புதியவன் யாரென்று நாமும் பார்த்துவிடுவோமே!

    அவன் ரத்னசேகரன்.

    நித்திலங்குமரனின் அண்ணன். தன் தம்பிக்கு நேர் மார், அமைதியும் அடக்கமும் நிறைந்தவன். அன்பும் பரிவும் மட்டுமே அவன் மொழி. அதிர்ந்து பேசக்கூடத் தெரியாது. அவன் அதிகபட்சமாய் உரக்கப்பேசிச் சிரிப்பது அவன் தம்பியிடம் தான். அவன் அதிகமாய் நேசிப்பதும் அவன் அருமைத் தம்பியைத் தான்.

    அன்னை இறந்த பிறகு தனக்கேப் பிறந்த மகன் போல தன் தம்பியைப் பார்த்துக் கொண்டவன். தன் தோளுக்கு மேல் வளர்ந்த தன் தம்பி இன்னும் தனக்குக் குழந்தை என்ற எண்ணத்தில் அவன் மீது எந்த வேலைப் பளுவையும் ஏற்றாமல் தானே அத்தனைச் சுமையையும் ஏற்று நடத்துபவன். அதற்காக தந்தை கடிந்து கொண்ட போதிலும் சிரித்தவன்.

    இந்த முறை வியாபாரம் பார்க்க நித்திலனும் வருகிறேன் என்று சொன்னதும் வானுக்கும் பூமிக்குமாய்க் குதித்து மகிழ்ந்தவன். அவனுக்குத் தன் தம்பி மீது அதீத பெருமை. அழகன், வீரன், சாதுரியன் என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வான். அப்படிப்பட்டவனை கடாரத்திற்கு அழைத்துச்சென்று அனைவரிடமும் காட்டி மகிழ வேண்டும் என்பது அவன் ஆசை. அது நிறைவேறப்போகும் மகிழச்சியில் இருந்தான் அவன்.

    என்னவோ இன்னும் திருமணத்தின் பால் தான் நாட்டமே இல்லை. எத்தனை முறை கேட்டாலும் இப்படியே இருந்துவிடுகிறேனப்பா என்று சொல்லிவிடுவான். எப்போதும் தன் பிள்ளைகளின் விருப்பத்துக்கு வேலி போடாத அவர்கள் தந்தை இந்த விஷயத்திலுங்கூட ஒன்றும் சொல்லவில்லை. சந்ததி வளர்க்க நித்திலன் ஒருவனே போதுமென்ற எண்ணமாயுமிருக்கலாம்.

    அப்போதெல்லாம் ஒரு வழக்கமுண்டு.

    மாதக்கணக்காய் கடல் கடந்து திரிவதாலும், வருடக்கணக்காய் வேறு நாட்டில் இருப்பதாலும் வணிகர்கள் பலர் தன் சொந்த நாட்டில் ஒரு மனைவியும், சென்ற நாட்டில் ஒருத்தியும் மணந்து கொள்வது உண்டு. இவர்கள் வழியிலும் அப்படித்தான். ஆனால் தனஞ்செயரோ காதல் கடிமணம் புரிந்தவர். தன் மனைவி இறந்து இத்தனை ஆண்டுகளிலும் கூட இன்னொருத்தியை இது நாள் வரை நினைக்காதவர். அதனால் ரத்னசேகரன் தன்னைப்போல பிரம்மச்சாரியாய் இருந்தாலும் நித்திலன் ஒன்றிரண்டு பெண்களையாவது கட்டிக் கொண்டு குலத்தை வாழவைப்பானென்றே நம்பியிருந்தார்.

    அந்தக் குலக்கொழுந்துகள் இப்போது படகில் அருகருகே அமர்ந்திருந்தது பார்க்க அத்தனை அம்சமாய் இருந்தது.

    ரத்னா நல்ல தந்த நிறம். அவர்கள் தாயார் கலிங்கத்தைச் சேர்ந்தவர், அந்த நிறம் அவனுக்கு அப்படியே வந்திருந்தது. முகமும் சாந்தி பொருந்தி எப்போதும் ஒட்டவைத்த சாண் அகலப்புன்னகையுடன் அமைதியான அழகுடன் இருந்தது.

    நித்திலன் தந்தையைப் போல கொஞ்சம் அரக்கில் சந்தனம் சேர்த்தாற்ப்போன்ற நிறம். பிளிறியொத்த சிறிய கண்கள், கூர் நாசி, பிடிவாதத்தைக் காட்டும் அழுத்தமான உதடுகள், வலது நெற்றியில் சிறு தழும்பு.

    நித்திலன் அவன் அண்ணன் அளவு அழகன் அல்ல. ஆனால் வசீகரன்.

    பார்த்தவுடன் அந்தக் கண்களின் ஒளியும், புன்னகையின் கவர்ச்சியும் சட்டென மனதுக்குள் உட்கார்ந்து கொள்ளும். அதே கவர்ச்சிப் புன்னகையைக் காட்டியபடி அவன் அண்ணனிடம் பேசினான் அவன்.

    “அடடா..ரத்னா…பார்த்தாயா? இந்தக் கடாரத்துக் கட்டழகி தான் எத்தனை அழகானவள்? நமது நாகப்பட்டினத்துத் துறைமுகத்தைக் காட்டிலும் கம்பீரம் குறைந்தேயிருந்தாலும், அழகில் இவள் ஒரு படி மேல் என்று ஒப்புக் கொண்டே ஆகவேண்டுமில்லையா?”

    “ம்..வந்து இறங்கியதும் உன் ரசனைமன்றத்தை திறந்துவைத்து விட்டாயாடா நித்திலா?” அலுத்துக்கொண்டான் ரத்னசேகரன்.

    “அண்ணா..என்னை நித்திலா என்று விளிக்காதே என்று எத்தனை முறை தான் சொல்லித் தொலைப்பது உனக்கு? பெண்பிள்ளையை அழைப்பதைப்போல இருக்கிறது. ஆயிரம் தான் ரத்தின வியாபாரி என்றாலும், இருந்திருந்து நம் தகப்பனாருக்கு இந்தப்பெயர்கள் தானா கிடைத்தன? உன்னுடையதாவது பரவாயில்லை. என் பெயர் தான் மோசம்.” சலித்துக் கொண்டான் இவன்.

    ”என்ன செய்வதடா அன்புத் தம்பி! நீ பிறக்குமுன் பெண் பிள்ளை தான் வேண்டுமென்று தவமாய் இருந்தாராம் நம் அன்னை. நீ பிறந்த நொடியில் கூட உன் முகத்து பொலிவையும், அழகையும் கண்டு பாட்டி ஒரு கணம் பெண்ணோ என்று தான் நினைத்தார்களாம். அந்த நொடியிலேயே உன் பெயரைக்கூட நித்திலங்குமரி என்று முடிவு செய்துவிட்டாராம் பாட்டி. பிறகு நீ ஆணென்று தெரிந்தது. குமரியும் குமரனனானது” அவன் வேடிக்கையாய்ச் சிரிக்கவும் இவன் முறைத்தான்.

    “ஆஹா..இந்தக் கதை ஒன்று சொன்னார்கள் உனக்கு, எங்கு போனாலும் முன்னுரை போல எடுத்துரைக்க வசதியாய்.. என் வீரத்துக்கு ஏற்ற பெயரை வைக்காமல் இப்படி ஒரு பெயரை வைத்து விட்டார்களே என்று நான் மருகினால் நீ வேறு...”

    “வீரன் தானடா நீ. அதைத்தான் ஊரே சொல்கிறதே. தினம் ஒரு விவகாரம் இழுத்துக் கொண்டு வந்து பாட்டிக்கு நித்தம் கடவுளிடம் கேட்க விஷயம் எதையாவது கொடுப்பவனும் நீதான். இங்காவது வியாபாரத்தை மட்டும் பார்த்துக்கொண்டிரு”

    தமையனின் வார்த்தைகளில் கவனம் பதியவில்லை நித்திலங்குமரனுக்கு.
    அவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். வீட்டைப் பற்றி ரத்னசேகரன் சொன்னதுமே அவனுக்கு மனது சோழபுரம் சென்றுவிட்டது.

    ஏனோ கங்காணியரைக் கண்டதிலிருந்தே அவரிடம் தன் கனவைப் பகிர்ந்துகொண்டதிலிருந்தே அவன் மனது ஒரு வித சுழலில் உழன்று கொண்டுதானிருக்கிறது. இந்த குழப்பங்களுக்குத் தீர்வு வேண்டியே இந்தப் பயணத்தையும் மேற்கொண்டிருந்தான் அவன். இதோ இப்போதுங்கூட இனம் புரியாத அந்தக் குழப்பம் அவன் மனதில் மெல்ல அலை போல மோதத் துவங்கியது. அதைக் கவனியாமல் ரத்னசேகரன் பேசிக் கொண்டிருந்தான்.

    “நீ முன்பு என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்? ஆஹா… தலைத்தக்கோலத் துறைமுகம் அழகு என்று தானே? இதற்கே நீ வாய்பிளந்தால் எப்படி? இன்னும் கடாரத்தின் தலைசிறந்த துறைமுகமான நாகவெளித்* துறைமுகத்தைக் காணும்போது என்ன சொல்வாயோ? உன்னளவு ரசனை இல்லாத எனக்கே ஒரு முறை கண்டும் திருப்தி இல்லையே…அதனால் தானே இந்த ஆண்டு மீண்டும் வந்துள்ளேன்.”

    ”ம்ம்..இப்படியேச் சொல்லிச் சொல்லித்தான் என்னையும் மயக்கிவிட்டாய். சிங்கம் போல் சிலிர்த்துத் திரிந்தவன் ஆட்டுக்குட்டி போல உன் பின்னேயே வந்துவிட்டேன் பார்.”

    “சரிதான் வாடா. கரை வந்து விட்டது, இங்கே சுங்க அதிகாரிகள் சமீப காலமாய் நிரம்பவும் கடுமையாயிருக்கிறார்களாம். புது இடம், பழக்கமற்ற மக்கள், புதுப்புது வழக்கங்கள், இதை எதையும் பொருட்படுத்தாதே. புரிகிறதா? அது மட்டுமல்ல, நாம் இன்னும் நமது தந்தையுடன் சேர இரண்டு முழு நாட்கள் இருக்கின்றன. அதனால் உன் கோமாளித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டிவைத்துக் கொள். ஜாக்கிரதை”

    ”சரி சரி..”

    ரை வந்து விட்டிருந்தது. காலச்சக்கரத்தின் சுழற்சியின் முன் மனிதனின் நானெனும் மாயை என்ன செய்து விட முடியும் என்று கேட்பதாய் நின்று கொண்டிருந்தது கடாரத்தின் பழமையான துறைமுகங்களுள் ஒன்றான அந்த சிறு துறைமுகம். முகப்பில் பளீரென்று பறந்தது புத்தம்புது புலிக்கொடி.

    ஆம்.. இது சோழ நாட்டுக்குச் சொந்தமாம்!.

    யார் அந்தச் சோழன், தன்னகமான தென்னகத்தைத் தாண்டி இந்துமாக்கடலில் துவந்து வந்து இங்கும் புலிக்கொடியைப் பறக்க விட்டவன்?

    அவன் தான் முதலாம் ராஜேந்திரச்சோழ தேவன்.முந்தைய அத்தியாயத்தில் ராஜராஜேச்சுரத்தில் நாம் பார்த்த அதே சோழ சிம்மம் தான்.

    இவனது காலம் தமிழகத்தின் பொற்காலம். இந்த காலத்திய இந்திய மன்னர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த நாடாகத் தன் சோழ வளநாட்டை முன்னிருத்தித் தமிழனின் தலை நிமிர்த்தியும் தாகம் தீராமல், தமிழகத்தின் எல்லையை இந்திய தீபகற்பத்துக்கும் அப்பால் ஈழம், சுவர்ணத்தீபம், கடாரம் என்று அவன் விரிவுபடுத்திக் கொண்டேயிருந்த காலம்.

    அத்துனை நாள் சோழப்பேரரசுடன் இருந்த நட்புறவின் பிளவு ஏற்படுத்திய யுத்தத்தின் விளைவாய், ஏழாம் நூற்றாண்டில் துவங்கி படிப்படியாய் உறுதிபெற்று, அக்ஷய முனையிலிருந்து ( வடக்கு சுமத்திரா ) மயூரடிங்கம், மாப்பாளம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் (சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), சாவகம் என்ற யவத்வீபம் (ஜாவா தீவு ) வரையிலும் முழுமையாய் ஒரு குடையின் கீழ் ஆட்சியில் வைத்திருந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யமே சோழப்பேரரசின் கீழ் வந்திருந்த காலம்.

    இத்தகைய காலத்தில் தான், இவர்கள் இங்கே வருகிறார்கள். வந்த காரணம் யாதாயினும் நடக்கப்போகின்றவை எவையும் இவர்கள் கனவிலும் கூட நினைத்துப் பாராதவை. ஆனால் அதைப்பற்றி ஏதும் அறியாதவர்களாய், இதோ! இவர்கள் கரையைச் சமீபித்து இறங்கியும் விட்டார்கள்.

    ரத்னசேகரன் முன்னே நடந்தான். நித்திலன் நிதானித்தான்.

    இளமையின் கனவுகளும், வீரத்தின் துடிப்பும், இயல்பிலேயே இருந்த கூர்மையான அறிவின் தெளிச்சியும் நிறைந்த கண்களால் அவ்விடத்தைக் கவ்வினான்.

    பல நாட்களாய் கப்பல் மீதே கண்டு காதல் கொண்டிருந்த அந்த வசீகர இளைஞனின் முழுமையான முதல் ஸ்பரிசம் பட்டு கடல்ப்பெண்ணே வெட்கச்சிலிர்ப்புற்று அலையாய்த் திரும்பிக் கடலகம் புகுந்தாள்.
    கடாரம் புன்னகை தவழும் அந்த இளம் முகங்களை அன்புடன் வரவேற்றது.


    மீண்டும் செல்வோம்..


    ----------------------------------------------------------------------------


    *ஒரு தேர்த்துகள் = 1/2323824530227200000000 – பழந்தமிழின் இறங்குமுகக் கணக்கு.
    “ப்ரிகத் ஸம்ஹிதை - வராகமிகிரர் எழுதிய நூல்களுள் ஒன்று. வானவியல், கணக்கியல், கணிகம், ரத்தினக்கற்கள் மூலம் கணிகம். ரத்னங்கள் அவற்றின் குணங்கள்(gemology) என்று பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நூல்.
    “மாநக்கவாரம் – மாநக்கவாரமென்றும், மாநக்காவரம் என்றும் அழைக்கப்பட்ட Andaman Nicobar islands.
    “யோஜ(ச)னை -8 miles.
    *நாகவெளித் துறைமுகம்: தற்போதைய மலேஷியாவின் பினாங்குக்கருகில் உள்ள bujang valley. இது குறித்து இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் காணலாம்.

    பி.கு: இதற்குப் பின் வரும் அத்தியாயங்களை இன்னும் பெரிதாகப் போடுகிறேன்.[​IMG]

     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was very interesting to read Iniyamalar. The explanation about the sea lady in particular. Liked your narration. Thanks. -rgs
     
  3. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Iniya,

    I think you would have born in the historical period. that is why you are able to post the story in a rhythamic ,excellent literature manner. I had a feeling of travelling in the sea. You are making me in every episode that i am with the characters watching everything meticulously. Eagerly waiting for the next episode:thumbsup
     
  4. bharathi28

    bharathi28 Bronze IL'ite

    Messages:
    123
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    hi malar
    super story. adutha episode eppappa podareenga? romba avala irukkutu.
     

Share This Page