1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடாரம் - 2

Discussion in 'Posts in Regional Languages' started by iniyamalar, Dec 5, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    View attachment 144027

    கடாரம் - 1
    சோழன் கொண்ட சலனம்


    இராஜராஜேச்சுரப் பெருங்கோவில்,
    தஞ்சை.

    ண்டமெலாம் நிறைந்தவன் அந்த ஈசன்.

    ஆதியந்தமிலாத அந்த ஆண்டவனைத் தன்னால் ஆனமட்டும் அதி பிரம்மாண்டமாய்க் கல்லில் சமைத்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை கொண்டானோ என்னவோ? காண்போர் வியக்கும் வண்ணம், கண்கள் பனிக்கும் விதத்தில் அதைச் செய்தும் முடித்தான் அந்தப் பெருவேந்தன். ஈசனோடு விட்டானா? ஈசனைச் சுற்றி அவன் எடுப்பித்தச் சிறப்புவாய்ந்த அந்தக் கோவில், ஆஹா..அதை என் சொல்ல?

    உள்ளே நுழைந்த நொடியிலேயே மனதைக் கட்டிப்போட்டு விடும் உன்னதம்.

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோயில் தானே தெரிகிறது?

    சோழ மன்னனின் மனம் போலவே பரந்து விரிந்த அதன் அமைப்பு, தரை முதல் சிலை வரை, வாயில் முதல் விமான உச்சி வரை, மூலை முடுக்கும் கூட பிசிரற்ற வடிவமைப்பு.

    சைவத்தமிழரின் உயிர் நாடியான ஈசனின் திருவுரு கருவறைக்குள் பெரு மாணிக்கமாய் நடுவீற்றிருக்க, சுற்றிலும் வைரங்களாய் மற்ற தெய்வங்களின் அழகிய சன்னிதிகளும், பவழப் பதக்கம் போல நந்திகேஸ்வரனும், நின்று நிறைத்த கோவில் பெருவெளியைச் சுற்றி முத்துச்சரமாய் மதிற்சுவர். சுவர் தானே என்றில்லாமல் அதிலுங்கூட எத்தனைக் கலை நுட்பம்?

    கோபுரம்.

    கோபுரமா அது ? மேல் நின்று கை நீட்டினால், மேகந்தொட்டு விடலாம் போலிருக்கிறதே? வானளாவி நிற்கிறதே? இவை மட்டுந்தானா? கலைக்கருவூலம் என்று நாளை வையமே வியக்கத்தக்க விதமாய் அங்கும் இங்குமாய் உயிர்பெற்ற கல்லுருவங்களாய்த் திகழும் சிற்பக்கூட்டம்.

    இவையெல்லாம் எத்தனை நூற்றாண்டுகளாயினும் கலைத்தாயின் செல்லப்பிள்ளை நாந்தானடா என்று அந்த இரவிகுல மாணிக்கம், சோழ மார்த்தாண்டன், நித்திய வினோதன் ஸ்ரீ ஸ்ரீ இராஜராஜனே எதிரில் நின்று மார்தட்டி கர்வமாய்ச் சிரிப்பது போல அத்தனை எழிலுடனும் கம்பீரத்துடனும் மலைக்க வைக்கின்றனவே?

    ஒரு திராவிடக் கலைஞனின் படைப்பைப் பார், வையகமே!, என்று முரசு கொட்டி உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற பெருமிதத்தை நம் மனத்துள் விதைக்கிறதே?

    எத்தனை ஆயிரம் முறை வந்தாலும் மேனியெங்கும் சிலிர்த்தெழும் அந்த உன்னத உணர்வு மறையவே மாட்டேனென்கிறதே?

    இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டு அந்த மாபெரும் கோவிலின் முன் மைதானத்தின் நடுவில் நின்ற ஒற்றைக்கல்லால் ஆன பெரு நந்தியின் அருகில் நின்றபடி கருவறை நோக்கித் தன் பார்வையைப் பாய்ச்சிக் கொண்டு நிற்பவர் வேறு யாருமல்ல.

    இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தக்கற்றளியைக் கட்டிக் கட்டடக்கலையில் பெருஞ்சாதனை புரிந்த கலாரசிகன், நிகரிலிச்சோழன் என்ற பட்டங்கள் வென்ற கோப்பரகேசரி இராஜராஜப் பெருந்தேவரின் சீமந்திர புத்திரன். வீர தீரத்திலும், ஆட்சிப் பாங்கிலும் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்துவிட்ட சுப்பன்.

    கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் தாங்கித் தற்போது கடாரங்கொண்டச் சோழ சக்கரவர்த்தியாகி விட்டிருந்த பரகேசரி முதலாம் இராஜேந்திரச்சோழ தேவரே தான்.

    ரவிகுலத் தோன்றல்களுக்கே உரிய பொலிவு அவர் முகத்தில் தனித்தாண்டவம் ஆடுகிறது. அந்த முகமானது அவர் அணிந்திருந்த சிறப்பு வாய்ந்த மாணிக்க ஹாரத்தின் ஜொலிப்பையும், அதன் முடிவில் ஆடிய பயிட்ட*முத்துகளின் பிரகாசத்தையும் விட காந்தி பொருந்தியதாய் இருந்தது. ஆஜானுபாகுவான அவரது உடற்கட்டு இத்தனை வயதிலும் இன்னும் இவரை எதிர்க்க இன்னொருவர் பிறக்கவே இல்லை என்ற எண்ணத்தை ஊட்டுவதாய் இருந்தது. நறுக்கிவிட்டு, நெய் தடவிய மீசையில் இருந்த மிடுக்கு ஏனோ இன்று அவரிடத்தில் இல்லை.

    தனக்கு அன்புத் தந்தையாய், ஆசானுக்கு ஆசானாய் இருந்து வழி நடத்திய இராஜராஜசக்கரவர்த்தியவர்களின் மறைவிற்குப் பிறகு நினைக்க நேரமின்றி படையெடுப்பும், சிறையெடுப்புமாய் இருந்த தன் மனது இந்த ஒரு வருடமாகவே சாந்தி இழந்து இருப்பதை அவர் உணராமல் இல்லை.

    அத்தையார் குந்தவைப்பிராட்டியாரின் சாந்தி பொருந்திய வார்த்தைகளோ, அருமை மகள் அருள்மொழி நங்கையின் காந்தி பொருந்திய முகமோ கூட அவருக்கு முழுமையான சாந்தியைத் தரவில்லை. அதனால் தானே இதோ இந்த இராஜராஜேஸ்வரரின்* வடிவில் தன் தந்தை அந்த இராஜராஜப் பெருந் தேவரையேக் கண்டு மன நிம்மதி கொள்கிறார்.


    சில திங்களாய் அதையும் விடுத்து ஏதோ இனம் புரியாச் சலனம்,தவறு செய்துவிட்டதாய் ஒரு நெருடல் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

    சோழ தேசமே பேசிக்களித்த ஈழப்போருக்குப் பின் கடைசியாக சக்கரவர்த்தியவர்கள் முன்னின்று நடத்தியது கடாரத்து படையெடுப்புத்தான்.

    அதன்பிறகு பொறுப்புகள் பலவற்றையும் தன் மகன் இராஜகேசரி (முதலாம்) இராஜாதிராஜனிடன் ஒப்புவித்துவிட்டார்.
    இப்போதெல்லம் நாட்டு நலன், குடிகளின் நிலை பற்றிய எண்ணமே மனதில் மேலோங்கி நிற்கிறது. அடிக்கடி இப்படிக் கோவிலில் வந்து நின்றுவிடுவதும் வழமையாகி விட்டது.

    இன்றும் அப்படித்தான். கோவிலில் மன்னர் வந்திருப்பதுக் கேள்வியுற்று அங்கும் இங்குமாய் ஒரே ஜனசந்தடி. அது தவிர ஒருபுறம் தேவபாராயணம் செய்துகொண்டிருந்த மாணவர்களின் உரத்த மந்திர உச்சாடனம், எங்கோ நிருத்த தேவரின் நட்டுவனார்ப்பலகையின் ஜதி ஒலிக்குப் பதிலாய் கொஞ்சிய சலங்கைகள், ஓய்மா நாட்டு வருகைகளான வீணாதாரர்களின் சங்கீதத்தில் மயங்கிப்பாடிக் கொண்டிருந்த தேவரடியார்களின் பாடல்கள் என்று அந்த உலகமே ஏதோவொரு வித சப்தத்தில் இயங்கிக்கொண்டிருக்க இவர் மட்டும் மவுனமாய் நின்று கொண்டிருந்தார்.

    பின்னால் நின்ற உடன் கூட்டத்து அதிகாரிகளுக்கும், ஆபத்துதவிகளுக்கும், சேவகர்களுக்கும் அருகில் செல்லத் துணிவில்லை. மன்னர் வேறு எதோ ஒரு உலகில் சஞ்சரித்திக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டிருந்தார்கள்.


    “மன்னவ”

    குரல் கேட்டதும் தளர்ந்திருந்த சிம்மம் பிடறி உதறிக் கம்பீரமாய்த் தலை நிமிர்ந்தது.

    “யார்? ஆஹா… சிவாச்சாரியாரா வாருங்கள்”

    “நான் வருவதாவது? வந்திருப்பது நீரன்றோ?” ஒற்றை நாடி சரீரமும், நெட்டையான உருவமும், தலை வழித்துக் கட்டிய குடுமியும், நெற்றி நிறைத்த திருநீருமாய் நின்று சிரித்தார் சர்வசிவ பண்டிதர்.

    தற்சமயம் சக்கரவர்த்தியவர்களின் சமய குரு. கேள்வியில் கிண்டலும் கண்களில் அபயமும் தந்து நின்ற ஆச்சாரியரைப் பார்த்து மெல்லிய நகை பூத்தார் சக்கரவர்த்தியவர்கள். அதைக்கண்ட பண்டிதர் சிரித்துக்கொண்டார்.

    “சோழசிம்மத்தின் முகத்தில் சலனத்தின் சாயல்..ம்ஹ்ம்… நாட்டுக்கு இது நல்லதல்லவே”

    “அய்யனே..அப்படிச்சொன்னால் எப்படி? குழம்பிய மனதின்கண் தானே புதிய தெளிவான சிந்தனைகள் பிறக்கும்!”

    “அது சரி. பண்டிதச்சோழனிடம்* பேசி இந்த சிவ பண்டிதன் ஜெயிக்க முடியுமா என்ன?”

    “பூசைக்கு எல்லாம் தயாரா பண்டிதரே?”

    “ஓதுவார்களும், தேவரடியார்களும், எக்காளங்களும், ஏன் சர்வாலங்காரபூஷிதராக இராஜராஜேச்சுரருங்கூடத் தயார் தான். அவ்வளவு பேரும் இந்த அரசனுக்காகத் தான் காத்திருக்கிறார்கள்.”

    “ஆஹா… மகேசனுக்காக மனிதன் காத்திருக்கலாம் ஆனால் மன்னனுக்காக மகேசனும், மக்களும் காத்திருக்கலாகுமா? வாருங்கள் போகலாம்”

    பூசை முடிந்து சில நாழிகை நேரம் அர்த்த மண்டபத்தில் பல காரியஸ்தர்களையும் சந்தித்து உரையாடினார் மன்னர். பொதுவாக இதுபோல அவர் கோவிலுக்கு வருந்தருணத்தை உணர்ந்துகொண்டு அதிகாரிகளும், ஊர்ச்சபைத் தலைவர்களும் அவரவர் அலுவல்களோடு அரசரைக் காண வருவதுண்டு.

    ஒவ்வொருவராய் அனைவரும் கலைந்து சென்று கொண்டிருந்த வேளையில் பழக்கப்பட்ட குரல் ஒன்று ஒலிக்கக் கேட்டார் அவர்.

    “ம்க்ம்ம்ம். மன்னிக்க வேண்டும் வேந்தே.”

    “ஓ..தண்ட நாதரே..வாருங்கள். தங்களைத் தான் எதிர்பார்த்திருந்தேன்.”

    ஒரு முறை வணங்கி மீண்டார் அந்த மனிதர்.

    இழுத்துக் கட்டிய கச்சையிலேயே தெரிந்த அவரது திண்மை, இந்த வயதிலும் இப்படி ஒருவர் இருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. உடலில் பல இடங்களிலும் தெரிந்த வடுக்கள் அவரது வீரத்தை வெளிச்சத்தில் காட்டியது. நடையில் ஒரு கம்பீரம், முகத்தில் சாந்தம், கண்களில் அதீத தீட்சண்யம். பார்ப்பவர் மனதைப் பயத்தில் பிசைந்து போடும் விதமான மீசை.

    இவர் தான் தற்போதைய தென்சோழமண்டலாதிபதி, சக்கரவர்த்தியின் நெருக்கமான மாதண்ட நாதர், ஸ்ரீ கிருஷ்ணன் இராமர்(இராஜ ராஜத்தேவரின் கட்டளைப்படி பெரிய கோவிலின் திருச்சுற்று மதில் எழுப்பியவரும் இராஜராஜத்தேவர் காலந்தொட்டே தண்ட நாயகர் பதவியில் இருந்து பல போர்களில் துணைபுரிந்த பெரும் வீரரும் இவரே.). ஒரு புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்ட அரசர் தொடர்ந்து ஒரு நாழிகைப்பொழுது போல இராஜாங்க விஷயங்களை ஒவ்வொன்றாய் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்.

    “நம்பியாண்டார் நம்பியவர்களின் திருவாய்மொழித் தொகுக்கும் பணி எந்த நிலையில் உள்ளது?”

    “சில திங்கள்களில், திருப்பறை ஓதும் திருப்பணியோடு அரங்கேற்றிவிடலாம் என்று தேவார நாயகம்* குறிப்பிட்டார்.”


    பேச்சு இது போல நீண்டு கொண்டிருக்க, அதுவரை அருகில் இருந்த உடன் கூட்டத்து அதிகாரி வில்வலன் வானவரையனை ஒரு புருவ அசைவில் வெளியே அனுப்பிய பின், தனிமையில் இராமதேவரை நோக்கி அர்த்தபுஷ்டியுள்ள புன்னகை ஒன்றை வெளிக்காட்டியபடி கேட்டார் மன்னர்பெருமான்.

    “கடாரஞ்சென்று இத்தனை நாளில் மாராயனிடமிருந்து ஏதாகிலும் செய்தி?” அரசரின் இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே இருந்ததாலோ என்னவோ இராமதேவர் ஒரு குளிர்ந்த புன்னகையுடன் தலையசைத்தார்.

    “உண்டு அரசே..காலையில் தான் புது ஓலை வந்தது. இதை எழுந்துங்காலை தான் நானாதேச வணிகக் குழுவின் தலைவர் தனஞ்செயப் பெருவணிகருடன் இளவரசரின் சந்திப்பு நடந்ததென்று குறிப்பிருக்கிறது. மேலும், புதிய பட்டத்து இளவரசராய் நமது இளவரசர் இராஜாதிராஜர் தெரிவு செய்திருக்கும் பீமசேதுவின் அணுகுமுறைகள் நமக்கு நிரம்பத் திருப்தி அளிப்பதாய் இருப்பதாயும் செய்தி இருக்கிறது அரசே.”

    “ம்ம்..நல்லது.” சூசகமாய்ச் சிரித்துக்கொண்டார் மன்னர்.

    “சரி கடாரத்தில் மக்களின் நிலை?”

    “மக்கள் இன்னும் முனகிக் கொண்டு தாம் இருக்கிறார்களாம் வேந்தே. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் கீழ் சங்கராமவிஜயோத்துங்கரின் ஆட்சியை மிகவும் விரும்பிய மக்களுக்கு நடக்கப்போவது நேரடியான சோழர் ஆட்சி இல்லையென்றாலும் இதுவும் கூடக்கசப்பாகவே இருக்கிறதாய்த் தெரிகிறது. தம் மன்னர் மீது அதீத அன்பு கொண்டவர்களாய் இருக்கிறார்கள்.”

    “ம்ம்..” மன்னர் முகத்தில் மீண்டும் கவலை ரேகைகள் கொடி போல படர்ந்து விரிந்தன. கவலை யார் குறித்து என்று கேட்கவில்லை கிருஷ்ணன் இராமர்.

    “நமது அமைச்சுக் குழு ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மற்ற சிற்றரசர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை கூட முழு மனதாக நடக்கவில்லை போலும். ஆயினும் புதிய மன்னர் பீமசேது அதையெல்லாம் சமாளித்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.”

    “ம்ம்.. அரச உரிமையில் இருக்கும் குழப்பம் போதாதென்று பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தருணத்தில் புரட்சி வெடித்துவிட்டால் பிரச்சனை பலத்து விடும். எதிரியின் படையை விட நாட்டில் மக்கள்புரட்சி தான் ஆட்சிக்கு அதிக ஆபத்தானது. மக்களின் அபிமானம் தான் மன்னனின் பெருஞ்சொத்து. ஆதலால் தான் இராஜாதிராஜனை முதலில் இருந்தே பொறுமையாய் இருக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறேன்.”

    கிருஷ்ணன் இராமர் சிரித்தார் ”நமது இளவரசர் காட்டாறு போல வேகம். அந்த காட்டாற்றுக்கு சக்கரவர்த்தியவர்களின் சொல் மட்டுமே மந்திர அணை என்பது நாடறிந்த விஷயம் தானே”

    “உண்மை இராமதேவரே. இராஜாதி ராஜனெனும் காட்டாறு தான் இன்று சோழராஜ்யத்தின் எல்லைக்கோடுகளை விரிவாக்கிக் கொண்டும் வலுவாக்கிக் கொண்டும் இருக்கும் பெரும் சொத்து. வீரத்தின் விளிம்பில் நின்று கொண்டு வெற்றிக்கொடி பறக்கவிடுவதில் அவனுக்குத் தான் எத்தனை நாட்டம்?”


    “முதன்மைத் தளபதியாய் இருந்து அவர் நடத்திய கடாரப் படையெடுப்பைப் பற்றி நாளை சரித்திரம் பேசும் அரசே”

    “ம்ஹ்ம்.. வீரம் மட்டுமே எல்லா கால கட்டத்திலும் நமக்கு உதவிடாதே.” அரசரின் நெற்றியில் விழுந்த யோசனைக்கோடுகளையும் அதைத் தொடர்ந்த கவலையையும் கவனித்தார் கிருஷ்ணன் இராமர்.

    “உண்மை வேந்தே. ஆயினும் பருவ காலத்துக்கேற்ப மனிதனின் பக்குவமும் மாறுபடும் இல்லையா?”

    “பருவமும் பக்குவமும் இருந்தும் கூட சமயத்தில் தவறுகள் இழைத்து விடுகிறோமே!” எதையோ நினைத்து அவர் முகம் சிறிது சுணங்கியது, பின்

    “ஆயிரம் பாடம் கற்றாலும் அனுபவந்தான் சரியான ஆசான். அதனால் தானே இத்தனைக் குழப்பங்கள் மிகுந்த இந்த விஷயத்தில் அவனைத் தனியாய் முடிவெடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறேன்.”

    “வீரத்தில் மட்டுமின்றி விவேகத்திலும் உங்களையேக் கொண்டவர் இளவரசர். கடாரத்தில் இது வரை அவரின் செயல்பாடுகளே அதற்குச் சாட்சி. அதனால் இனி நடப்பவையும் சரியாக நடக்கும் அரசே. அவரையும் தாண்டி நீங்கள் அவ்வப்போது செய்யும் ஏற்பாடுகள் எல்லாம் சக்கரவியூகங்கள் போல மிகச்சக்தி வாய்ந்தவை.”


    ”ம்ம்..கடாரத்திலிருந்து எனக்கு ஏதும் விசேச சேதி உண்டா?”

    அர்த்தபுஷ்டியுடன் அவர் பார்க்கவும் தண்ட நாதர் சிரித்தார்.

    “இதோ! என் கச்சையில் தான் காத்துக் கொண்டிருக்கிறது.”


    பணிவுடன் அவர் தந்த ஓலையைப் பிரித்துப்படித்தார் மன்னர்.

    அந்த ஓலையின் செய்தி பண்டிதச்சோழனின் மனதில் பெரும் மாற்றத்தை விளைவித்திருக்க வேண்டும். ஆச்சர்யத்தில் உயர்ந்த புருவங்கள் பின் குழப்பத்தில் சுருங்கி, கவலையில் தொய்ந்து, நிம்மதியில் நீண்டுப் பின் அமைதியாய் தன்னிலை அடைந்தன. ஒரிரு வினாடி கண்களை மூடிய நிலையில் யோசனையில் இருந்தவர் விழி திறக்கையில் முன்னில்லாத ஒளியும் தெளிவும் அதில் தெரிந்தது.

    “மகிழ்ச்சி” ஒற்றை வார்த்தைப்பதிலுடன் ஓலையைச்சுருட்டி வைத்தார்.பின் தண்ட நாதர் கிருஷ்ணன் இராமரைப் பார்த்துக் கேட்டார்.

    “எனதருமை தண்டநாதரே! இந்த ஓலை குறித்தும், அதை அனுப்பியவர் குறித்தும் என் முடிவில் உங்களுக்கு ஆட்சேபம் உண்டா?”

    “தங்களின் முடிபுகளை ஆட்சேபிக்கும் அதிகாரம் எனக்குண்டு, அதைத் தந்தது தாங்கள் தான் என்றாலும், தங்களின் எண்ணங்களும் அதைத் தொடரும் செயல்பாடுகளும் எத்தன்மையானதாய் இருக்கும் என்ற கணக்கீடும் எனக்குள் உண்டு. இந்த விஷயத்தில் அனைத்தும் அறிந்த நிலையில் நானெப்படி மறுப்புச் சொல்ல முடியும்? இதில் உங்களை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன் அரசே”

    “ஹ..ஹ…ஆதரவுக்கு நன்றி..ஹ..ஹா” தன் கவலைகளை ஒரு நொடி மறந்தவராய்ச் சிரித்தார் சக்கரவர்த்தி.

    “தண்ட நாதரே..வர வர பேச்சில் உம்மை வெல்ல அந்த கருவூர்த்தேவரால் கூட முடிந்திராது போலிருக்கிறதே.. நல்லது நல்லது.” என்றவர்ப் பின் கனிந்த குரலில் தொடர்ந்தார்.

    ”இராமதேவரே! நீவிர் என் தந்தை காலத்திலிருந்தே இப்பதவியில் இருப்பவர். என் தந்தையின் அனுபவமும் இருப்பதோடு அவரது ஸ்தானமும் இப்போது உமக்கு உண்டு. அதை வேணும் பொழுதில் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு என்னைக் குற்றஞ்சொல்லக்கூடாது” கண்களில் குறும்பு மின்ன சக்கரவர்த்தியவர்கள் சொன்னதும் அந்தப் புன்னகை மாதண்ட நாதன் கிருஷ்ணன் இராமரையும் ஒட்டிக் கொண்டது.

    “புரிகிறது மன்னா..அதற்கான காலம் இதுவல்ல என்பது என் கணிப்பு.”

    மீண்டும் சிரித்தார் இராஜேந்திரர்.

    “ஓலை ஒன்று வரைய வேண்டும் போலிருக்கிறது” அவர் வேறெதுவும் சொல்லாமல் கிருஷ்ணன் இராமரைப் பார்க்க அவர் தனக்குப் புரிந்ததாய்க் கண்ணசைத்துச் சிரித்தார்.

    அதன் பிறகு அரசர் மீண்டும் “சரிபோகட்டும். வேங்கியில் என் மருமான் இராஜராஜன் பக்கமிருந்து செய்தியேதும்?”

    “தங்கள் இளைய மகள் அம்மங்கையைக் கைப்பிடித்ததிலிருந்து, இந்த இராஜராஜன் வீரத்தில் அந்த இராஜராஜப்பெருவேந்தனுக்கு இணையாகிடவே திகழ்வதாய்ச் செய்தி”

    “ஹ..ஹ…மிகச்சரி..மிகச்சரி..அமைதியில் அவர்களன்னையைக் கொண்ட அருள் நங்கை போலல்லவே இவள். அரசியல் அறிவில் என் அத்தையையும், எழுச்சிமிக்க பேச்சுத் திறனிலும் வீரத்திலும் என் தந்தையையும் கொண்டவளாயிற்றே அம்மங்கை. அவள் கணவன் அப்படியானதில் வியப்பேதும் இல்லை..வியப்பேதுமில்லை” இளவரசரைப் பற்றிய பேச்சில் கூட சக்கரவர்த்தியாய்ப் பேசிய இராஜேந்திர தேவர் தன் மகள் குறித்த பேச்சில் அரசமுகமூடியைத் தொலைத்தார். அவர் முகத்தின் கம்பீரம் கலைந்து அதில் பாசம் குடிகொண்டது.

    பத்து வயது பாலகிக்குப் பால்சோறுட்டும் கனிவு அவர் முகத்தில் தென்பட்டதைக் கண்டார்-வயதிலும் அனுபவத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட- மாதண்டநாதர் கிருஷ்ணன் இராமர்.

    அந்தத் தருணத்தில் அவருக்குச் சக்கரவர்த்தியவர்களைக் காண்கையில் அவரது தந்தை, மறைந்த பேரரசர் இராஜராஜப்பெருந்தேவரின் நினைவே வந்தது. இராமதேவரின் மனம் ஒரு கணம் அந்த அன்புத் தந்தைக்காக இரங்கியது.

    ‘இந்தப் பாசமிக்கத் தனி மனிதனின் வாழ்க்கை, அரச போகத்தில் மாட்டிக் கொண்டதால்த் தான் எத்தனைத் துன்பம் அனுபவிக்கிறது? வீரத்தில் மட்டுமின்றி அன்பிலுங்கூட அப்பனுக்குச் சரியாய்த் தான் இருக்கிறார் சக்கரவத்தியவர்கள். ஆயினும், இத்தனை ஆண்டுகளாய் இல்லாத குழப்பம் இப்போது இந்த முகத்தில் தென்படுவது ஏன்? இனிமேல் அமைதி மட்டுமே வேண்டுமென்று மனதில் தோன்றிய எண்ணத்தின் முதல் நிலையா இந்தக் குழப்பம்? இல்லை வேறேதுமா?

    இதே இராஜேந்திரச்சோழதேவர், இராஜராஜத்தேவர் காலத்தில் இளவரசராய் முடிசூட்டிக்கொண்டு என்னேரமும் போர் போர்..வெற்றி வெற்றி என்று வீறு கொண்டு திரிந்ததைக் காணாதவரா இந்த மாதண்டநாதர் கிருஷ்ணன் இராமர்? அவரும் தானே அத்தனைப் போரிலும் உடன் இருந்தார்.

    இராஜராஜ சக்கரவர்த்தியவர்களையும், இராஜேந்திரச் சக்கரவர்த்தியவர்களையும் கிருஷ்ணன் இராமர் தொடர்ந்தது போல, இப்போது அவரின் மகன் மாராயன் அருண்மொழி இளவரசர் இராஜாதிராஜரின் பின்னோடே வாள் தூக்கிக் கொண்டு அலைகிறான்.’ தன் மகன் நினைவில் தண்டநாதரும் கூட சிறிது காலம் மவுனமாய் இருந்தார்.
    அரசன் என்றாலும், தளபதி என்றாலும் அவர்கள் ஆள்பவர்கள் மட்டுமல்ல, வாழ்வு முழுமைக்கும் சஞ்சலங்களாலும், பிரச்சனைகளாலும் ஆட்டி வைக்கப்படுபவர்களும் கூட.

    தம் பிள்ளைகளின் தந்தை என்ற சராசரி மனிதனின் சம்சார விளிம்பைத் தாண்டி, ராஜ்யப்பரிபாலனை என்னும் சிக்கல் மிகுந்த சட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட இவர்கள், தம்மைப்பற்றியும் தம் மக்கள் பற்றியும் எண்ணிக்கொள்ள இது போன்றச் சமயங்கள் எப்போதாவது தான் அமையும்.

    அதுவும் எண்ணந்தொடங்கிய சில வினாடிகளுக்குள் அதில் அரசியல் புகுந்து கொள்ளும். அந்த நேரத்தில் கோவில் மணி அம்மனிதர்களின் மவுனத்தைக் கலைக்கும் விதமாய் ’க்ளாங்..க்ளாங்’ என்ற சப்தித்து அடங்கியது.

    உள்ளே விளக்கொளியில், வாழ்க்கையெனும் விளையாட்டில் நான் ஆடும் ஆட்டத்தின் பொருளெல்லாம் மனிதா நீ உணரமாட்டாயடா என்பது போல ஒரு மோனச்சிரிப்பில் தெரிந்தார் ஈசன்.

    மீண்டும் செல்வோம்....


    ---------------------------------------------------------


    பயிட்ட முத்து : 23 வகை முத்துக்களில் ஒரு வகை.

    இராஜராஜேச்சுரர் : பெரிய கோவில் ஈசனின் ஒரு பெயர்


    தேவார நாயகம்: தேவாரம் தொகுக்கப்பட்டு அதை கோவில்களில் ஓதும் பணியைக் கண்காணிக்க நிருவிக்கப்பட்ட ஒரு அலுவலர்.

    பண்டிதச் சோழன்: இராஜேந்திரர் தாங்கிய பட்டங்களில் ஒன்று.

    இராஜராஜன்: இராஜேந்திரரின் மருமகன். பெயர்-இராஜராஜ நரேந்திரன். கீழைச்சாளுக்கிய மன்னன்.
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Your way of writing is well organized Iniyamalar - setting up the base for the story here, reveals it. Creating a complex pattern and making it more interesting, is the best way to make this interesting. Very informative too. Thanks. Makes a good read. Your timing too is good. Monday morning! -rgs
     
  3. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    thnx a lot RGS.

    I am trying my level best to make it a good read.Do keep reading.:thumbsup
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Iniya,

    Wow your writing style excellent dear. This episode made me as i was with them wathcing everything very closely. I am very much interested in reading historical novels.
    Eagerly waiting for the next episode. A well organised kingdom and the feel of king's
    serious thinking about his people wow.A very big applause to you my dear IL.
     
  5. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear sreema,

    Thank you so much.

    I actually was a little hesitant in posting the story links here in blogs section since it didn't get much reception here(doesn't mean it is in high demand in stories section:)).

    Rare views and rarer comments.

    But reading your comment made it worth posting here.
    Thank you for the dose of boost.:thumbsup
    keep coming.
     

Share This Page