1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 24

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Dec 25, 2011.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஓடும் மேகங்களே - 24

    அரிதாரம் பூசும் இவ்வுலகில்
    அன்பாலே மனதினுள் நீ நுழைந்தாய்
    கனவினில் நான் சஞ்சரிக்கும்போது
    கனவாய் இருந்த உன்னரிதாரம்
    என்னைத் தட்டி எழுப்பி விலக்கியதே..

    சஞ்சீவ் இல்லாத நேரத்தில் அவனை நினைத்து உருகுவாள் தர்ஷினி. அவனைப் பார்த்ததும் அவனின் காக்கி சட்டை முன்னால் வந்து அனைத்தையும் கெடுத்து விடும். அவனை நினைத்து இந்த வரிகளை தன் டைரியில் கிறுக்கியவள் ஒரு பெருமூச்சுடன் அதை மூடி வைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

    அன்று அந்த கலாட்டா நடந்தபின் இன்று தான் அலுவலகத்திற்கு செல்கிறாள். எப்படியும் தன் நண்பர்கள் வட்டாரத்திற்கு அனைத்தும் தெரிந்திருக்கும், அவர்களை எப்படி பார்ப்பது, அவர்கள் எப்படி நடந்துக் கொள்வார்களோ என்று பயத்துடனே சென்றவளுக்கு அங்கே சென்றதும் ஆர்த்தி நின்ற கோலத்தைப் பார்த்து அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது.

    அங்கு ஒவ்வொரு கணினிக்கும் நடுவில் இருக்கும் கண்ணாடி தடுப்பில் தலை சாய்த்து நின்று ஒரு கையால் பக்கத்தில் இருந்த பேப்பரைப் பிய்த்துக் கொண்டு காலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் சென்ற தர்ஷினி "ஹே ஆர்த்தி என்னடி பண்ற" என்று கேட்க அதற்கு அவள் ஒரு தரம் நிமிர்ந்து பார்த்துவிட்டு "பார்த்தா தெரில வெட்கப் படுறேன் டி" என்று படு சீரியசாக பதில் கூறி விட்டு மறுபடி கால் விரலால் தன் கோலத்தைத் தொடர்ந்தாள்.

    "டேய் அருண், என்னடா பண்ணின, ஆர்த்தி இப்படி வெட்கப்படுறா" என்று கேட்டுக் கொண்டே தர்ஷினி திரும்பி பார்க்க அங்கே அருணும் அதே கோலம் போடும் வேலையைத் தான் செய்துக் கொண்டிருந்தான்.

    ஸ்ரீனியும் பிரியாவும் அவர்கள் இடத்திலிருந்து எழுந்து வந்தனர். பிரியாவும் "பாத்துமா, ரெண்டுபேரும் வெட்கப்படுறோம்னு தரையைத் தோண்டிராதீங்க.. கிரௌண்ட் ப்ளோர்ல இருந்தா தண்ணியாது வரும்.. நாம இருக்கிறது அஞ்சாவது ப்ளோர். நாலாவது ப்ளோர்ல இருக்கிறவனோட மண்டை தான் வரும்." என்று சொல்ல 'கிளுக்' என்று சிரித்துவிட்டு மறுபடியும் தரையைத் தோண்டும் வேலையை செவ்வனே செய்தாள் ஆர்த்தி.

    மூவரும் கடுப்பாகி ஆர்த்தியையும் அருணையும் சுற்றி நின்று "என்னனு சொல்லிட்டு வெட்கப்படுங்கடா பிசாசுங்களா" என்று கத்த, "அருண் நீயே சொல்லு" என்றாள் ஆர்த்தி.

    "அது.. அது வந்து... அது வந்து.. இந்த இந்த... அது வந்து எனக்கும் ஆர்த்திக்கும் இன்னும் பதினைந்து நாளுல கல்யாணம்.." என்று ஒருவழியாக சொல்லிமுடித்தான் அருண்.

    "ஹோ.." என்ற உற்சாகக் கூச்சலின் நடுவில் ஆர்த்தியையும் அருணையும் நண்பர்கள் கூட்டம் வாழ்த்தியது.

    "இருந்தாலும் செம ஸ்பீட் டா மச்சான், எப்படி டா" என்று ஸ்ரீனி கேட்க, "நான், ஆர்த்தி, சாவித்திரி அப்புறம் நம்ம பெல் நாலு பேரும் ஆபீஸ்லயிருந்து நெக்ஸ்ட் மன்த் லண்டன் போறோம்ல.. அங்க போய் ஒரு நல்ல வெள்ளைக்கார பிகரா பாத்து செட் பண்ணலாம்னு பாத்தேன்.. பட் விதி ஆர்த்தியோட பாட்டி ரூபத்துல வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டு.. ரெண்டு பேரும் சேர்ந்து போறதுக்கு ஒரு பழமொழி சொல்லிச்சே.. அது என்ன ஆர்த்தி.. ஆங்... கட்டு சோத்துல பெருச்சாளிய கட்டி எடுத்துட்டு போனமாதிரியாம் நானும் ஆர்த்தியும் சேர்ந்து போறது.. என்னை பெருச்சாளினு சொல்லுதுடா அந்த பெருசு.. கல்யாணம் ஆகாம ரெண்டுபேரையும் சேர்த்து தூர தேசத்துக்கு அனுப்ப முடியாதாம். அதனால இந்த ஆரத்திய இப்பவே என் தலையில கட்டி வைக்க பிளான் போட்டுட்டாங்கையா போட்டுட்டாங்க.. வாட் எ கொடுமை.. வாட் எ கொடுமை.." என்று பயங்கரமாக உணர்ச்சிவசப்பட, ஆர்த்தி கையில் கிடைத்த கோப்பைத் தூக்கி அவனை அடிக்க துரத்தினாள்.

    "ஏண்டா, உன் இத்து போன மூஞ்சிக்கு நானே ரொம்ப அதிகம்.. இதுல உனக்கு வெள்ளைக்கார பிகர் கேக்குதா... என் பாட்டி சொன்னது தப்பே இல்லடா.. நீ பெருச்சாளி தான்.." என்று அவனைத் துரத்தி துரத்தி அடிக்க, தர்ஷினியும், பிரியாவும் "அப்படிதான் விடாதே.. ம்ம் பிடி.. இதை வச்சி அடி" என்று ஆர்த்தியை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக அவர்கள் ஓட்டம் நிற்கவும் தர்ஷினி "அது எப்படி ஆர்த்தி அவ்ளோ அழகா வெட்கப்படுற" என்று கேட்டாள்.

    "ஹி ஹி ஹி.. எல்லாம் நம்ம பிரியாவோட ட்ரைனிங் தான்.." என்று பிரியாவை கைக் காட்ட, பிரியா "ஏன்டி என்னை மாட்டி விடுற" என்று ஆர்த்தியின் முதுகில் ஒரு அடி வைத்தாள். "ஹே.. இப்போ ஏன் என் டார்லிங்கை அடிக்கிற.. நீயும் ஸ்ரீனியும் 'கண்கள் இரண்டால்' ஜெய், சுவாதி ரேஞ்சுக்கு லுக் விடறத நாங்களும் பாத்துட்டு தானே இருக்கோம்.." என்று அருண் ஆர்த்திக்கு வக்காலத்து வாங்கினான்.

    "என்னது ஸ்ரீனியும் பிரியாவுமா.. இது எப்போ நடந்தது" என்று தர்ஷினி வியப்புடன் கேட்டாள்.

    "உனக்கு தெரியாதா தர்ஷு.. நம்ம அண்ணலும் நோக்கினான்.. அண்ணியும் நோக்கினாள்.. இப்படியே ஒரே நோக்கியாவா போய் நோக்கியா போனுல கடலைப் போட ஆரம்பிச்சி நோக்குகிற நம்ம கண்ணு பூத்து போய் ரொம்ப நாளாகுது" என்று அருண் கலாய்க்க ஸ்ரீனி "டேய்.. சும்மா இருடா" என்றான்.

    பிரியாவை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தர்ஷினி "சரி அது என்னடா அண்ணியும் நோக்கினாள்.. பிரியா எப்போ உனக்கு அண்ணி ஆனா" என்று கேட்க "அண்ணலுக்கு பெண்பால் அண்ணிதானே" என்று பெருமையாய்க் கேட்டான் அருண்.. அவனை முறைத்துவிட்டு "அது அண்ணனுக்கு பெண்பால்" என்று தர்ஷினி கூறினாள். "அப்படியா என்ன.. பயபுள்ளை தப்பா சொல்லிக் குடுத்துபுட்டான்.. ஊருக்குள்ள பல பயபுள்ளைக அப்படிதான் சொல்லிட்டு திரியுரானுங்க.. சரி விடு.. விடு.. இட்ஸ் ஆல் இன் தி கேம்" என்று சமாளிக்க தாங்கமுடியாமல் ஆர்த்தியே அவனை மறுபடி துரத்தினாள்.

    பிரியா-ஸ்ரீனி, ஆர்த்தி-அருண் ஜோடிகளைப் பார்க்கும் போது ஏனோ தர்ஷினிக்கு சஞ்சீவின் ஞாபகம் வந்தது. அவனும் இப்போ இங்கே இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்று நினைத்தவளுக்கு சட்டென்று கண்கள் கலங்க "வண்டில வந்தது முகமெல்லாம் ஒரே கசகசன்னு இருக்கு நா போய் முகம் கழுவிட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து பெண்கள் இளைப்பாறும் அறையை நோக்கி நடந்தாள்.

    அவள் அங்கிருந்து நகர்ந்ததும் அதுவரை சிரித்துக் கொண்டிருந்த ஆர்த்தி கண்கலங்கினாள். அருண் ஆதரவாக அவள் தோளில் தட்டிக் கொடுக்க ஸ்ரீனி "ஹே ஆர்த்தி இப்போ ஏன் கண்கலங்குற.. பாரு சின்ன வயசுல தர்ஷு கஷ்டப்பட்டு இருந்திருக்கலாம்.. ஆனா இப்போ அவளுக்கு என்ன குறை சொல்லு.. அவளுக்கு பாத்து பாத்து செய்ய வீட்ல பெரியவங்க.. தோள் கொடுக்க நாம எல்லாரும்.. எல்லாத்துக்கும் மேல அவளோட சஞ்சீவ்.. இனி அவள் சந்தோஷமாதான் இருப்பா.. கவலைப்படாதே" என்று கூறினான். "ம்ம் அதுவும் சரிதான்" என்று கண்ணைத் துடைத்துவிட்டு சிரித்தாள் ஆர்த்தி. 'நட்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'...

    அதே நேரத்தில் அங்கே தர்ஷினி பரப்பரப்புடன் முகம் முழுக்க வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள்,

    ஞ்சீவ் காக்கி சட்டையில் கம்பீரமாக தன் இரு சக்கர வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்தான். முன்னால் இருந்த கண்ணாடியை சரிப்படுத்தியவன் கண்களில் தன் பின்னால் இரண்டு நாட்களாக தொடர்ந்து வரும் இருவர் தெரிந்தனர். சிரித்துக் கொண்டே கமிஷனர் அலுவலகத்திற்குள் தன் வண்டியை விட்டான். அவனைத் தொடர்ந்து வந்தவர்கள் வெளியிலேயே வண்டியை விட்டுவிட்டு சுவரோரம் நின்றுக் கொண்டிருந்தனர்.

    வண்டியை நிறுத்தி சாவியை எடுத்துவிட்டு அவன் நடக்கவும் வெளியில் வந்த ஒரு காவலர் விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு "சார், கமிஷனர் கொஞ்சம் டிராபிக்ல மாட்டிகிட்டாராம், இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவாராம்.. அப்புறம் மீட்டிங் வச்சுக்கலாம்னு சொன்னார். உங்களுக்கு லஞ்ச் இங்கேயே சொல்லிடட்டுமா சார்" என்று கேட்டார். "சரி" என்று பதில் சொல்லிக் கொண்டே அலுவலகத்திற்குள் சென்றான் சஞ்சீவ்.

    சுவரோரமாய் நின்ற அவர்கள் இதைக் கேட்டுவிட்டு மதிய சாப்பாடும் இங்கேதான் என்றால் சஞ்சீவ் மீட்டிங் முடிய எப்படியும் நேரமாகும் என்று நினைத்து சாகவாசமாக எதிரில் இருந்த டீ கடையில் அமர்ந்தனர்.

    உள்ளே சென்ற சஞ்சீவ் நேராக அலுவலகத்தின் பின்பகுதிக்கு சென்றான் அங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தன் காரில் ஏறி தன் காக்கிச்சட்டையை மாற்றி அங்கு வைத்திருந்த டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினான். அவன் வண்டியைக் கொண்டு நிறுத்திய இடம் "பிரபாவதி மருத்துவமனை".

    வந்தவன் இரண்டாவது மாடியின் மூலையில் இருந்த அறைக்கு சென்றான். அங்கிருந்தவர்களிடம் தன் கையோடு கொண்டுவந்தவைகளைக் கொடுத்துவிட்டு அவர்களை எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறிவிட்டு மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

    முகம் முழுவதும் வியர்க்க ஓடி வந்த தர்ஷினி "ஸ்ரீனி.. அங்கே.. அங்கே.. நம்ம சாவித்திரி.. பிரியா.. சாவித்திரி.. வயிறை பிடிச்சிட்டு கீழே விழுந்து... வாயெல்லாம் ஒரே ரத்தம்.. பயம்.. பயமாயிருக்கு.. " என்று சொல்ல நால்வரும் அங்கே விரைந்தனர். பெண்கள் அறை என்று ஸ்ரீனியும் அருணும் கொஞ்சம் தயங்க, மேலும் சில பெண்களுடன் சேர்ந்து கண்கள் சொருக, வாய், மூக்கெல்லாம் ரத்தம் சொட்ட இருந்த சாவித்திரியை வெளியில் கொண்டுவந்தனர்.

    அலுவலக காரில் அலுவலகம் சார்பில் குழுத்தலைவரான ஸ்ரீனி முன்னால் ஏறிக் கொள்ள, பின்னால் சாவித்திரியைப் பிடித்துக் கொண்டு பிரியாவும், தர்ஷினியும் அமர்ந்தனர். ஆர்த்தியும் அருணும் வண்டியில் பின்தொடர அனைவரும் சென்றது பிரபாவதி மருத்துவமனை.

    உள்ளே சென்று அவளை சேர்த்ததும், பரிசோதித்த மருத்துவர் "சூசைட் அட்டெம்ப்ட்.. பாய்சன் சாப்பிட்டுருக்காங்க.. நீங்க கவெர்மென்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டுங்க.." என்று கைவிரித்துவிட்டார். தர்ஷினி "டாக்டர், கவெர்மென்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போணும்னா, ரொம்ப நேரமாகிடும்.. அவ கண்ணு இப்பவே மேல போகுது.. ப்ளீஸ் டாக்டர் கொஞ்சம் பாருங்க" என்று கெஞ்சினாள்.

    "நோ நோ.. போலீஸ் கேசாச்சுனா எங்க ஹாஸ்பிடலுக்குதான் ப்ராப்ளெம்.. நோ.. நீங்க கூட்டிட்டு போய்டுங்க.. " என்று மருத்துவர் மறுத்துவிட்டார். ஸ்ரீனி "சார், கவெர்மென்ட் ஹாஸ்பிடல் இன்னும் எப்படியும் அஞ்சாறு கிலோமீட்டர் போகணும்.. டிராபிக் எல்லாம் சேர்த்து நேரமாகிடும்.. ப்ளீஸ் சார் ஹெல்ப் பண்ணுங்க" என்று கேட்டுக் கொண்டிருந்தான்... ஆர்த்தியும், அருணும் வந்து சேர, ஐவரும் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கே இருந்த மாடியில் இருந்து இறங்கி வந்த சஞ்சீவ் இவர்களைப் பார்த்ததும் வந்து "என்ன ஆச்சு" என்று கேட்டான்.

    ஸ்ரீனி விஷயத்தை சொல்ல, சஞ்சீவ் டாக்டரிடம் திரும்பி அவன் யாரென்பதை கூறிவிட்டு "பொண்ணோட விஷயம்.. இது வெளிலே வரக்கூடாது.. போலீஸ் கேஸ் ஆகாம நான் பார்த்துக்கிறேன்.. நீங்க ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க.." என்று கூறினான். உடனே மருத்துவரும் தன் மருத்துவத்தை ஆரம்பித்தார்.

    இரண்டு மணி நேரம் அனைவரும் காத்திருந்த பின் மருத்துவர் வெளியில் வந்தார்.

    "அவங்களை காப்பாதிட்டோம், பட் பாய்சன் சாப்பிட்டதுல அவங்க கரு கலைஞ்சிடுச்சு.. ஏன் பாய்சன் சாப்பிட்டாங்கனு தெரியல.. பட் இன்னொரு தடவை அட்டெம்ப்ட் பண்ணினாங்கனா காப்பாத்துறது கஷ்டம். பத்திரமா பாத்துக்கோங்க.. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.. கொஞ்சம் நேரம் கழிச்சி போய் பாருங்க" என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.

    சாவித்திரி பிழைத்தது சந்தோசம் என்றாலும் அவர் கூறிய மற்றுமொரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இன்றைய பி.பி.ஒ ஒரு மாய உலகம். உள்ளே நுழையும்போதே அவர்கள் எந்த நாட்டிற்காக வேலை பார்க்கிறார்களோ அந்த நாட்டின் கலாசாரம் நம்மை வரவேற்கும். இங்கே நமது கதாப்பாத்திரங்கள் வேலைப் பார்ப்பது ஒரு மேற்கத்திய நாட்டுக்காக பணிபுரியும் பி.பி.ஒ.

    இங்கே மேற்கத்திய கலாசாரத்தில் தேவையானதை விடுத்தது தேவையில்லாததை தம் சொந்த வாழ்க்கையில் எடுத்து அதில் அமிழ்ந்து சீரழிந்து போனவர்களும் உண்டு. அந்த கலாச்சாரத்தை சிறிது தம் சொந்த வாழ்க்கையை பாதித்தாலும் முழுவதுமாய் அமிழ்ந்து போகாமல் வெளி வந்தவர்களும் உண்டு. வேலையில் மட்டுமே அந்த கலாசாரத்தை உபயோகப்படுத்திக் கொண்டு சொந்த வாழக்கையில் அதன் நிழல் கூட படாமல் இருப்பவர்களும் உண்டு.

    இதில் சாவித்திரி முதல் வகை. தருமபுரி அருகே ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த புதிதில் மேற்கத்திய கலாசாரத்தை தம்முடையதாய் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் நம் இந்தியக் கலாசாரத்தை விட்டுவிடவும் முடியாமல் தடுமாறினாள். உடை விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறும்போது அனைவரும் பாராட்ட அதில் ஆரம்பித்து அவள் முற்றிலுமாய் மாறினாள். ஆண் பெண் வித்தியாசமில்லாமல் கைகோர்த்து பேசுவது அந்த கலாச்சாரத்தில் வித்தியாசமாக தெரியவில்லை. இரவு நேர விருந்திற்கு செல்வது, அங்கே கொட்டமடித்துவிட்டு தாமதமாக திரும்புவது, விடுமுறை நாட்களில் வீட்டிற்கு தெரியாமல் கடற்கரை, ரிசார்ட் என்று சுற்றி விட்டு வருவது எதுவுமே அவளுக்கு தவறாக தெரியவில்லை. விடுதியில் தங்கி வேலைப் பார்ப்பதால் தட்டிக் கேட்கவும் ஆள் இல்லை. அதை டேனியல் உபயோகப் படுத்திக் கொண்டது தான் தவறாக முடிந்தது.

    அவளிடம் காதலிப்பதாக கூறி எல்லை மீறி அவன் நடந்துக் கொண்டபோதும் அந்த கலாச்சாரத்தில் மூழ்கி போயிருந்த அவளுக்கு மிக பெரிய தவறாக தெரியவில்லை. எப்படியும் திருமணம் செய்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வேறு. ஆனால் இதுவே தொடர்ந்து அவள் கருவுற்றிருக்கும் நிலை வந்ததும் அவனிடம் சென்று தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூறும்போது அவன் மறுத்து கேட்டக்கேள்விகளில் தான் முதன் முதலாக தான் இத்தனை நாள் தவறான பாதையில் பயணித்ததை உணர்ந்தாள். வீட்டில் உள்ளவர்கள், அம்மாவின் அறிவுரை அனைத்தும் அப்பொழுது தான் நினைவு வந்தது. அனைவரையும் பார்க்க அவமானப்பட்டு விஷம் அருந்தி இதோ மருத்துவமனையில் இருக்கிறாள்.

    அவள் கருவுற்று இருந்ததைத் தவிர மீதி விஷயங்கள் ஓரளவிற்கு தெரிந்த ஸ்ரீனி அங்கிருந்தவர்களிடம் அவனுக்கு தெரிந்தை அனைத்தையும் கூறி "இந்த விஷயம் ஆபீஸ்லயும் வெளியில் வராமல் பார்த்துக்கணும். அங்க அவளுக்கு அல்சர் முற்றி போய்டுச்சுன்னு சொல்லிடலாம்... சஞ்சீவ் டாக்டர்ட்ட நீதான் பேசி அப்படி ஒரு சர்டிபிகேட் வாங்கி தரனும்.. அப்புறம் அந்த டேனியல் மேல மேல எதுவும் வம்பு பண்ணாம இருக்கணும்.. அதுக்கும் நீ தான் ஹெல்ப் பண்ணனும்.." என்று கேட்டுக் கொண்டான்.

    ஸ்ரீனி அங்கிருந்து அருணின் வண்டியை எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் சாவித்திரியின் நிலைமையை சொல்வதற்கு சென்றுவிட்டான். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், சஞ்சீவ் மீதியிருக்கும் நால்வரையும் தன் காரில் வரும்படி அழைத்தான். அருண், ஆர்த்தி, பிரியா மூவரும் தர்ஷினியை ஒரு தரம் பார்த்துவிட்டு உடனே சரி என்று சொல்ல தர்ஷினி நின்று யோசித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அருண் பின்னால் ஏறி அமர, அவன் பக்கத்தில் ஆர்த்தி அமர்ந்தாள். அவள் பக்கத்தில் பிரியா அமர, இப்பொழுது தர்ஷினி முன்னால் சஞ்சீவின் பக்கத்தில் அமரவேண்டிய நிலைமை.

    "டேய் அருண் முன்னால வந்து உட்காருடா.. பின்னால பொண்ணுங்க பக்கத்துல உனக்கு என்ன வேலை" என்று அருணிடம் கத்தினாள் தர்ஷினி. "என் டார்லிங் பக்கத்துல உட்கார்ந்திருக்கேன் அதுல உனக்கு என்ன பொறாமை.. நீ வேணும்னா உன் ஆளை கண்டுப்பிடிச்சி அவன் பக்கத்துல உட்கார்ந்துக்கோ நா கேள்விக் கேட்க மாட்டேன்.." என்று அருண் அவளுக்கு பதில் கொடுக்க சஞ்சீவ் அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே காரை உயிர்பித்தான். வேறு வழியில்லாமல் முணுமுணுத்துக் கொண்டே அவன் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள்.

    முதலில் பிரியாவை இறக்கிவிட்டு விட்டு பின்னர் ஆர்த்தி, அதன்பின் அருண் என்று அனைவரையும் இறக்கிவிட்ட பின் காரில் சிறிது நேரம் அமைதி ஆட்கொண்டது. "அப்புறம் தர்ஷினி.. சாவித்திரி பத்தி என்ன நினைக்கிற" என்று அமைதியைக் கலைத்தான் சஞ்சீவ்.

    ஒரு கணம் அவனது தர்ஷுமா என்று இல்லாமல் தர்ஷினி என்ற அழைப்பில் திகைத்த தர்ஷினி "என்னது.. சாவித்திரி அவளைப் பத்தி நான் எதுவுமே நினைக்கல" என்று சொல்லிவிட்டு பேச்சை மேலும் வளர்க்க விரும்பாதவளாய் வெளியில் திரும்பி அமர்ந்தாள்.

    ஆனால் சஞ்சீவ் விடாமல் "இப்போலாம் பி.பி.ஒல வொர்க் பண்றவங்க எல்லாருமே இப்படிதான் இருக்காங்க இல்லையா.. போன வாரம் இப்படிதான் இன்னொரு கம்பெனில இருந்து ஒரு கேஸ். இங்க வொர்க் பண்ற பொண்ணுங்க யார்கிட்டயும் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது போல.." என்று ஏளனமாக கூறினான். தர்ஷினிக்கு அவன் பேச்சில் எதோ தவறாக தெரிந்தது.

    அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கடின குரலில் தன் பேச்சைத் தொடர்ந்தான், "நீயும் அங்கே தானே நாலு வருஷமா வேலை பார்க்கிற தர்ஷினி.. நீ எப்படி.. சாவித்திரி மாதிரி தானா.." என்று கேள்வியாக நோக்கினான்.

    "அவ்ளோ நம்பிக்கை இல்லாதவங்க ஏன் உங்க பிரெண்ட் ஸ்ரீனிகிட்ட சொல்லி எனக்கு இங்கே வேலை வாங்கி கொடுத்தீங்க.. என்ன எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறீங்களா.. அன்னைக்கு வீடு பார்க்க வரும்போது என்கூட தனியா பேசுறதுக்கு வசதியா ஸ்ரீனிக்கு போன் வந்ததே.. அன்னைக்கு நைட் அவனோட மொபைல எடுத்து பார்த்தேன்.. கால் ப்ரம் சஞ்சீவ்னு இருந்தது.. அப்பவே கொஞ்சம் சந்தேகம்.. அப்புறம் ஆபீஸ்ல என்னோட எம்ப்ளாயி பைல் எடுத்துப் பார்த்தேன்.. அதுல ரெபரன்ஸ் ஸ்ரீனினு இருந்தது.. அப்பவே எனக்கு கன்பார்ம் ஆய்டுச்சி" என்று ஆத்திரத்தை அடக்கிய நிதானக் குரலில் கூறினாள்.
    "ம்ம் நான்தான் இங்கே சேர்த்துவிட்டேன்.. நாலு வருஷம் ஆய்டுச்சே.. அதுவுமில்லாம இந்த கம்பெனிக்கு வந்தப்புறம் மாறாம இருக்க முடியுமா.. நீயும் அப்படி தான் மாறியிருப்ப.. இந்த மாதிரி கம்பெனில இருக்கிறவங்க எல்லாரும் ஒழுக்கத்துல இப்படி தான் இருப்பாங்க போல" என்று வெறுப்பாக கூறினான்.
    அவன் பேச்சில் கொதிநிலையை அடைந்த தர்ஷினி "காரை நிறுத்துங்க.. காரை நிறுத்துங்க சொல்றேன்ல" என்று ஆத்திரமாக கத்தினாள். அவள் வெளியில் இறங்கமால் இருப்பதற்காக கார் கதவிற்கான சென்ட்ரல் லாக்கைப் போட்டு விட்டு காரை ஓரமாக நிறுத்தினான் சஞ்சீவ். அவன் எதிர்பார்த்தபடி அவள் வெளியில் இறங்க முயற்சிக்கவில்லை. மாறாக அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள்.

    "எட்டு வருஷம் இருக்குமா உங்களைப் பார்த்து.. அன்னில இருந்து இன்னைக்கு வரை வேற யாரையாது நான் மனசால நினைத்து பார்த்திருக்கிறேனா.. ஒவ்வொரு வினாடியும் உங்களை தானே நினைச்சிட்டு இருக்கேன்.. இதோ இந்த காக்கி சட்டை மட்டும் நமக்கு நடுவுல வராம இருந்திருந்தா இந்நேரம் நமக்கு கல்யாணமே ஆயிருக்கும்.. இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்ங்கறது எனக்கு தெரியும்.. தெரிஞ்சும் என்னைப் பத்தி இப்படி பேச உங்களுக்கு எவ்ளோ திண்ணக்கம் இருக்கணும்.. வெட்கமா இல்லை உங்களுக்கு.. என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த கம்பெனிக்கு வந்தப்புறம் மாறிடுவேன்னு எப்படி சொல்லலாம் நீங்க " என்று அவன் முகத்தில் அவன் காலையில் காரில் கழற்றிய காக்கி உடையை எடுத்து வீசியப்படி ஆத்திரத்தோடு கேட்டாள்.

    மூச்சு வாங்க அவள் பேசிய விதத்தில் கொஞ்சமும் அசராமல் அவன் சட்டையில் இருந்து அவள் கையை மெதுவாக விலக்கிக் கொண்டு நிதானமாக அவள் கண்களைப் பார்த்து "நீயும் என்னை அப்படிதானே சொல்ற தர்ஷு.. அந்த கம்பெனில இருக்கிற நீயும் அப்படிதான் இருப்பனு நான் சொன்னதுக்கு கோபப்படுற.. போலீஸ் வேலையில் இருக்கிறதுனாலையே நானும் கெட்டவனா இருப்பேன்னு நீ சொல்லி எட்டு வருஷமா என்னைத் தவிக்க விட்டுட்டு இருக்க.. இது மட்டும் சரியா தர்ஷுமா" என்று வேதனையான குரலில் கேட்டான் சஞ்சீவ்.

    பதில் சொல்ல முடியாமல் திகைத்து அமர்ந்திருந்தாள் தர்ஷினி. அவன் வாதமும் சரிதானே.. அவளை குற்றம் சொல்லும்போது அவளுக்கு எவ்வளவு கோபம் வந்தது.. அவனைப் பற்றி வலுவான காரணங்களே இல்லாமல் வெறுமனே அவன் காவல் துறையில் இருப்பதை வைத்தே அவனை ஒதுக்கி வந்தாளே.. அது அவனுக்கு செய்யும் அநியாயம் தானே.. முதன் முதலாக அவனுடைய வேலையையும் அவனையும் பிரித்து யோசித்தாள் தர்ஷினி.

    மேகம் ஓடும்..

    அனு
     
    4 people like this.
    Loading...

  2. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    தோழிகளே..

    சென்ற வாரம் உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்ததால், இந்த மிக நீண்ட தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் சரியாக கழுத்தில் வலி என்பதால் என்னால் முடியவில்லை. இன்னும் சரியாக குணமாகாத நிலையில் அடுத்த பகுதியும் சிறிது தாமதமாகும். தயைக் கூர்ந்து மன்னித்து, தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

    அன்புடன்,
    அனு
     
  3. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Very nice update. seekirame mudiyapoguth polirukke. Dharshu avaloda loveah sollitta. wating eagerly for the next update.

    Take care of ur health Anu.
     
    1 person likes this.
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi anu..
    aarthi arun kalatta super...
    savithri ninacha paavam ah iruku...
    epdiyo correct time la sanjeev point ah eduthu vitrukkan.... dharshini s reaction was nice.... adi kudukkama vittadhu aachiriyam dhan...
    dharshini yosichu nalla mudiva solluva...

    also anu,take care of ur health...
     
    1 person likes this.
  5. Karpagamkarthik

    Karpagamkarthik Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Nice update Anu.

    No problem. Take care of your health.

    Happy new year.
     
    1 person likes this.
  6. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Anu,

    Take care of your health.. so that you can start again with a new one...:thumbsupAtlast Dharshini started to think about sanjeev, as a human and leaving his work aside..Very interesting post....:cheers But going to end soon.........Eagerly waiting to know, what will happen to the two, following sanjeev.

    Vasupradha.S
     
    1 person likes this.
  7. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Take care anu we will wait.

    anyways dharshu is realinsing her wrong attitude towards sanjeev
     
    1 person likes this.
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    no problem anu take care..........

    very nice update pa........

    ippa than correct ta yosikara nadaththunga pa........
     
    1 person likes this.
  9. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    super update oda return aaiteenga anu... good
     
    1 person likes this.
  10. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Anu..
    take care of ur health da..
    read ur update after a long gap..
    as usual very nice da..
    keep rocking :)
    -devi.
     
    1 person likes this.

Share This Page