தபால்காரர்... ♂ ✉ Postman ஏரியாவுக்குள் வரும் வரைதான் போஸ்ட்மேனால் சைக்கிளில் அமர்ந்து பெடல் பண்ணி வரமுடியும். அப்புறமா ஒவ்வொரு வீடாய் தள்ளிக் கொண்டுதான் வரவேண்டும். மூன்று வீடு தள்ளி அவர் வருவது கண்ணில் பட்டு விட்டால் போதும்... காய்ந்து கொண்டிருக்கும் துணியை இழுத்து விட்டபடி, காயப் போட்ட மளிகை சாமானை கிளறி விட்டபடி என்று வாசலில் வந்து நின்று விடுவார்கள். ஈஸிச்சேர் தாத்தாவும் படிக்கட்டில் வந்து நின்றிருப்பார். தபால்காரரிடமிருந்து கடிதங்களை யார் வாங்குவது என்பதிலேயே போட்டி நிலவும். "பார்த்து... பார்த்து... கிழிஞ்சிடப்போறது என்பார் அவர்...!!" உறவுகளிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரும் கடிதங்களுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு, வரவேற்பு இருந்தது அப்போது. ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து விட்டால் மகிழ்ச்சி வெள்ளம்தான், திருவிழாதான். நீ இதைப் படி, நான் அதைப் படிக்கிறேன் என்று பிரித்துக் கொள்வதில் போட்டி. ஆனால், கடைசியில் ஒவ்வொன்றாகப் பிரித்து ஒருவர் வாசிக்க, நடுநடுவே ச்...ச்...ச்..என உச் கொட்டிக் கொண்டும் சபாஷ், அச்சச்சோ என்று உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டும் மற்றவர்கள் கேட்பது சுகம். மாலை அலுவலகத்திலிருந்து கணவர் வந்ததும் கைகால் கழுவிக் கொண்டு வர..., வந்து அமர்ந்ததும் அவரும் ஆவலுடன் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து படிப்பார். மறுபடி கடிதம் படிக்கும் படலம். எத்தனை நூறு வீடுகள் இருந்தாலும் அவர்கள் பெயர், சுய விவரங்கள், அவர்கள் தேவை போஸ்ட்மேனுக்கு அத்துபடி. நிறைய வீடுகளில் சந்தோஷங்களையும், சில வீடுகளில் துக்க, வருத்தங்களையும் விநியோகிப்பவர் தபால்காரரே! அவர் ஊரில் எல்லோருக்கும் உறவானவர். "என்னம்மா... பையனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடிச்சுட்டாங்க போல..." பொண்ணுக்கு ஜாதகம் வந்ததே...!! பொருந்திடுச்சா? பையன் வீட்டுக்காரர்கள் என்ன பதில் எழுதி இருக்காங்க...?? "மருமகளுக்கு குழந்தை பொறந்துடுச்சாமா?" "சார் எப்போ வர்றாராம்? இந்த வாரமாவது லீவு கிடைச்சுதாமா?" "உங்களுக்கு இன்னிக்கி ஒண்ணும் லெட்டர் வரலை பெரியம்மா..." என சங்கடத்துடன் ஒலிக்கும் அவர் குரல். அதைக் கேட்ட பெரியம்மா முகத்தில் குவியும் ஏமாற்றத்தை காணப் பிடிக்காமல் தலைகுனிந்து அடுத்த வீட்டுக்கு நகர்வார். சுப செய்திகள் என்றால் முதல் ஸ்வீட் (ஒரு ஸ்பூன் சர்க்கரை) அவருக்கு தான். எங்கள் வீட்டில் ரெகுலராக மோரோ, காபியோ அவருக்காக காத்துக்கொண்டிருக்கும். சில விசேஷ நாட்களில் சாப்பாடு, பட்சணங்களும் உண்டு. பொங்கலுக்கு அவருக்கும் புது வேஷ்டி துண்டு உண்டு. பெரும்பாலான வீடுகளில் வெகு தூரத்தில் (பட்டணம்) வேலை பார்க்கும் தங்கள் பிள்ளை அனுப்பும் மணியார்டர் பணத்தை வாங்கும் போது மகனையே தொடும் உணர்வில் கண் கலங்கும் பெற்றோர்கள். அதற்கு தனியாக போஸ்ட்மேனுக்கு டிப்ஸும் உண்டு. நிறைய வீடுகளில் பதில் எழுதும் லெட்டர்களும் அவரிடமே கொடுக்கப்படும். மே மாதங்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு அவர் பெரிய பூச்சாண்டி! ரிசல்ட் கார்ட் கொண்டு வரும் பூதம்! பொங்கல் சீசனில் கிலோ கணக்கில் பொங்கல் வாழ்த்துக்களை சுமந்து விநியோகிப்பதற்கு அவர் படும் பாடு அப்பப்பா... !!! ஆனந்த அனுபவங்களை அள்ளித் தந்த சொந்தமாய், நட்பாய், பாலமாய், இன்னும் பலவாய் அருமையான ஓர் துணையாய் இருந்தது அஞ்சல் துறை. எளிமையான இனிமையான வசந்தங்களை இன்று நாம் இழந்திருக்கிறோம். இழந்தால் தானே அருமை தெரிகிறது...!! இந்திய தபால் துறை, இந்த ஆண்டு அக்டோபருடன், தனது சேவை பயணத்தில் 170 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. (மலரும் நினைவுகளை பலரும் அசைபோடவே இந்த பதிவு )