நந்திக்கலம்பகம்: சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பகம் என்பது பல வகை செய்யுள்களால் ஆனது. இதில் புயவகுப்பு, அம்மானை, காலம், மதங்கம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி , சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என பதினெட்டு பொருட்கூற்று உறுப்புகள் இருக்கும். இயைப, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, ஆசிரிய விருத்தம், காளி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை, என்ற பா வகைகள் உள்ளன. பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கேற்ப பாடல் எண்ணிக்கை இருக்கும். கலம்பக இலக்கியத்தில் நந்திக்கலம்பகம் காலத்தால் முந்தையது. மன்னர்கள் போரில் உயிரிழந்ததுண்டு. ஆனால் இது மொழிக்காக தன் இன்னுயிரை ஈந்த ஒரு அரசனைப் பற்றியது. தமிழ்ப் பாடலுக்காக உயிர்நீத்த அந்த மன்னவன் பெயர் மூன்றாம் நந்திவர்மன், பல்லவ மன்னன். நந்திக் கலம்பகத்தின் காலம் 825 முதல் 850 ஆம் ஆண்டுக்குள்ளானது. இதில் காஞ்சிபுரம், மயிலாப்பூர், மாமல்லபுரம் பற்றியும் பாடப்பட்டுள்ளது. இதை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நந்திவர்மனின் தம்பி நாட்டைக் கைப்பற்றி தான் அரசனாக விரும்பினான். இதற்காக பல சூழ்ச்சிகளை செய்தான். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. கடைசியில் நந்திவர்மன் தமிழ்ப்பற்று மிக்கவன் என்பதால் "அறம் பாடுதல்" என்ற முறையில் பாடல்களைப் பாடி அவனை அழிக்க முடிவு செய்தான். ஒருநாள் நந்திவர்மன் அரசவையில் வீற்றிருந்தபோது, அவன் தம்பி பக்கத்தில் உள்ள ஒரு சுவரில் துளையிட்டு அதன் வழியே, ஒரு புலவனைக்கொண்டு கொண்டு ஒரு பாடலை பாடச் செய்தான். மீண்டும் ஒரு நாள் மன்னன் இரவில் சோதனைக்காக நகர் வலம் சென்றபோது, ஒரு வீட்டில் பெண்மணி ஒருத்தி அதே பாடலை வீணை இசையோடு பாடுகிறாள் . இதைக்கேட்டு மறுநாள் அந்தப் பெண்மணியை அழைத்து அந்தப் பாடலை யார் எழுதியது என்று கேட்க, அப்பெண்மணி இதை எழுதியது உங்கள் தம்பிதான் என்கின்றாள். இப்பாடல் முழுவதும் நான் இறப்பதே ஆனாலும் கேட்டே ஆகவேண்டும், என்று முடிவு செய்து, தன் தம்பியை அரசவைக்கு வரவழைத்தான். தம்பியும் முழுவதும் பாடுவதற்கு உடன்பட்டு தனது சதித்திட்டத்தின் நிபந்தனைகளை சொன்னான். அவன் சொற்படி அரண்மனைக்கும் சுடுகாட்டிற்கு இடையில் 99 பந்தல் இடவேண்டும். ஒவ்வொரு பாடல் முடியும்போது அடுத்த பந்தலில் சென்று நந்திவர்மன் நிற்கவேண்டும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் முந்தைய பந்தல் எரிந்துவிடுகிறது. நூறாவது பாடல், கடைசி பாடல் மயானத்தில் கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது அமர்ந்திருந்து அரசன் கேட்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படியே அந்த மயான பந்தலில் அமர்ந்து கேட்டான் நந்திவர்மன். பாடலின் முடிவில் அந்த பந்தலும் எறிந்தது. அரசன் தமிழுக்காக தன் இன்னுயிரை ஈந்தான். அமர்ந்து இருந்து இறந்து அமரர் ஆனான். இதை, சிவஞான முனிவர் சோமேசர் முதுமொழி வெண்பாவில், “நந்திக்கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும். சுந்தரஞ்சேர் தென் குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும் வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை”. - என்று பாடினார். இது திருக்குறள் 872-ஐ அப்படியே ஒத்துள்ளது. கல்லாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு காயம் விட்ட தெள்ளாறை நந்தி – என்று தொண்டை மண்டல சதகப் பாடலும் உள்ளது. வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன் முதல் வந்த உன்றன் மாய் மாலை – என்கிறது நற்றிணை 3 வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லான் பதுக்கைக் கடவுள் பேண்மார் – என்கிறது அகநானூறு 35 வில்லேருழவின் நின் நல்லிசையுள்ளிக் குறைதலைப் படுபிணன் எதிரப் போர்பு அழித்து – என்கிறது புறநாநூறு 371. இந்த நந்திக் கலம்பகத்தின் பாடல்கள் கற்பனை நயம் மிகுந்த இலக்கிய விருந்து. இதன் நூறாவது பாடல், “வானுறு மதியை அடைந்தது உன் வதனம் மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம் யானும் என் கவியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தையா பரனே” வானத்தில் சந்திரனை அடைந்தது உன் முகத்தின் ஒளி, உன் புகழ் பரந்த கடலை அடைந்தது. உன் வீரம் காட்டில் வாழும் புலியை அடைந்தது. உன் கொடை கற்பக மரத்தைச் சென்று சேர்ந்தது. திருமகள் உன்னை விட்டு நாயகன் திருமாலிடம் சேர்த்துவிட்டாள். உன் உடம்பு நெருப்பிடம் சேர்ந்தது. இந்நிலையில் உன்னை விட்டுப் பிரிந்து வாழும், நானும் என் கவிதையும் எங்கே சென்று சேர்வதோ, என் தலைவனே, நந்திவர்மனே. என்று கையறுநிலைப் பாடலாகப் பாடுகிறார். எழுதியவர் தன் பெயரை எங்கும் எழுதாமல் விட்டுவிட்டார். நம் இதயத்தில் எழுதிக்கொள்வோம். JAYASALA 42