MAN & THE MANGO (BHAGWAN RAMANA MAHARISHI) துவைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் போன்ற மூன்று மார்க்கங்களையும் பற்றிப் படித்துக் குழப்பமடைந்த ஒரு பக்தர் ரமண மகரிஷியைப் பார்க்கச் சென்றார். போகும் போது ரமண மகரிஷிக்குத் தர ஒரு பெரிய மாம்பழம் கொண்டு போயிருந்தார். அதைத் தந்துவிட்டு ரமண மகரிஷியை அவர் வணங்கினார். அந்த மாம்பழத்தை வாங்கிய ரமண மகரிஷி அதையே பிரசாதமாய் அந்தப் பக்தரிடம் தந்து விட்டார். அவர் திருப்பிக் கொடுத்து விட்டாரே என்று ஒருபுறம் பக்தருக்கு வருத்தம். மறுபுறம் அவர் கையால் பிரசாதமாக அது கிடைத்ததே என்று மகிழ்ச்சி. “பகவான், நீங்கள் பக்தர்களிடம் துவைதம், அத்வைதம் என்றெல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் அதிகம் படிப்பறில்லாதவன். எனக்கு இந்த வேத, வேதாந்தம் எல்லாம் புரியாது. ஒன்றுமே படிக்காத, தெரிந்து கொள்ளும் சக்தி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் ஞானம், மோட்சம் எல்லாம் கிடைக்குமா? நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்” என்று வருத்தத்துடன் அவர் ரமண மகரிஷியைக் கேட்டார். உடனே பகவான், “இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? ’துவைதம்’ என்றால் என்ன? ’ இரண்டு’ என்று அர்த்தம். நீ இருக்கிறாய். இதோ இந்த மாம்பழம் இருக்கிறது. நீ வேறு, இந்தப் பழம் வேறு இல்லையா? அதுதான் ’துவைதம்’. இதோ இந்தப் பழத்தை நீ சிறிது வாயில் போட்டுக் கொண்டு விட்டாய் என்று வைத்துக் கொள். இப்போது பழம் உன்னுள் இருக்கிறது. நீயும் பழமும் ஒன்றாக இருக்கிறீர்கள். ஆனாலும் முழுவதுமாக ஒன்றில்லை. அதுதான் ’விசிஷ்டாத்வைதம்’. இந்தப் பழம் உன் வயிற்றுக்குள் போய் நன்றாக ஜீரணமாகி விட்டது என்று வைத்துக் கொள். இப்போது உனக்குள் பழம் இரண்டற ஒன்றாகக் கலந்து விட்டது. நீயும் பழமும் ஒன்றாகி விட்டீர்கள். இதுதான் ’அத்வைதம்.’ இந்த மாதிரி தத்துவத்தையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், இறை பக்தியோடு உன் கடமைகளையும் ஒழுங்காகச் செய்து வா. உனக்கு ஞானமும் மோட்சமும் கிடைக்கும்” என்று ஆசிர்வதித்தார் ரமண மகரிஷி. அருணாசலேஷ்வரா ஓம் குருவே சரணம்.