பல்சான் றீரே!.. பல்சான் றீரே!. பகுத்துத் தொகுக்கும் பல்சான் றீரே! கல் மண் தீ நார் காற்றெனப் புவியோர் சொல் பொருள் அனைத்தும் தோன்றிய தெங்கனம்!?. வானும் மதியும் மண்ணிடைக் கடலும் தானே இயங்கும் தத்துவம் யார்செயல்?. ஒரு துளி விந்து உடலிற் புகுந்து உயிரொடு கண்வாய் செவியென விரிந்து பத்தாம் மாதம் பளிங்கென வெளிவரும் வித்தை யார் செயல்?.விளக்கம் எப்படி?. ஏழில் ஒருவன் எழுபதில் ஒருவன் சாவை யணைத்து தன்னை மறந்து போவது எவ்விடம்?.போனபின் எந்நிலை?. நுவலரும் நல்லோர் நோய்வாய் படுதலும் கயவர் கள்வர் காளை போல் வாழ்தலும் பூர்வஜென் மத்தின் புதிய தொடர்கதை!. என்பார் சிலபேர் ஏற்பீரோ மாட்டீரோ?. கோடை வசந்தம் குளிர்பனி பூமழை தோன்றுவதெங்கனம்?.சுழற்றுவதெவ்விதி? விஞ்ஞா னத்தால் விபரமறிந்து அஞ்ஞா னத்தை அகற்ற மாட்டீரோ?. சந்திர மண்டலம் தழுவிய ஞானம் சாவைத் தடுக்கச் சக்தியில் லாததேன்?. நானென நிமிர்ந்து நமதென முழங்கி தானென வாழ்ந்து தரணியை மிரட்டி ஆரவாரித்த ஆதிக்கக் காரரும் பள்ளி விழுந்து பாவ முணர்ந்து கொள்ளி வரை மனம் குமைந்ததன் காரணம் அவனோ பிறனோ?.ஆட்டுவித் தான்எவன்?. மூலம் வித்து முளைப்பது பூங்கொடி!. மூலம் விந்து முளைப்பது பாலகன்!. மூலம் மேகம் முகிழ்வது பொன்மழை!. மூலம் இல்லாமற் முளைப்பன இல்லையே! ஆயின் இந்த அவனிக்கு மூலம்!. யாரோ அறியேன்?.அவனை என்மனம் இறைவன் என்பது எவ்வழி தவறாம்!. பல்சான் றீரே!..பல்சான் றீரே!.. பதிலுரைப்பீரோ பல்சான் றீரே!?. ******************** ************** ********* கேட்கிறேன் சொல்லுங்கள் எனும் தலைப்பில் கவியரசு தொடுத்த கேள்விக்கணைகள். உங்களது கண்களில் எப்போதாவது இந்தக் கவிதை தட்டுப்பட்டிருக்கிறதா?.. JAYASALA 42