எழுத்தாளரும், இசை நடன விமர்சகரும் ஆன 'சுப்புடு' கூறுகிறார்… எனக்குத் தெரிந்த ஒரு தொழில் அதிபர் என் விசிறி. என் எழுத்தில் அவருக்கு அபார மோகம்(இப்படியும் சில பைத்தியங்கள் இருக்கின்றன). எந்தக் கச்சேரியில் பார்த்தாலும் என்னை முகமன் விசாரிக்காமல் இருக்கமாட்டார். அந்தக் காலத்தில் தினமணிக் கதிரில் நான் எழுதிய இசைத் துக்கடா விமர்சனங்கள் யாவும் அவருக்கு அத்துப்படி. 'அந்த வாக்கியம் அப்படிப் போட்டீர்களே, இந்த வாக்கியம் இப்படிப் போட்டீர்களே' என்று ஒப்பிப்பார். அவ்வளவு ஈடுபாடு. எப்போது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும், "ஒரு மாலை என்னுடன் கழிக்க வேண்டும்" என்று கூறுவார். எனக்கு ஏது ஒழிவு ? ஒரு நாள் மாலை வகையாய் சிக்கிக் கொண்டேன். அன்று அகாடமியில் எனக்கு ஒவ்வாத பாட்டுக் கச்சேரி. அவரின் அழைப்புக்கு இணங்கினேன். "ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் திரும்பக் கொண்டு வந்து விட்டுவிட வேண்டும், அடுத்த கச்சேரிக்கு" என்றேன். சம்மதித்தார். முன்பக்கம், பின்பக்கம் புரியாத ஒரு படகுக் காரில் உட்கார்ந்து அவர் இல்லத்திற்குச் சென்றேன். அந்த வரவேற்பு அறை என்னை பிரமிக்க வைத்தது. உள்ளே திரும்பி "யாரை அழைச்சிண்டு வந்திருக்கேன், பாரு" என்று பெருமைப்பட்டுக் கொண்டார். கங்கையை பகீரதன் கொண்டு வந்தது போல. என் சட்டைக் காலர் என்னை அறியாமலேயே தூக்கி நின்று கொண்டது. அங்கிருந்து அவருடைய அந்தரங்க அறைக்குப் போனோம். ஒரே குளு குளு. ஒரு சுவர் பூராவும் வைணவ ஜீயர்களின் படங்கள். 'ஓஹோ.. அதீத ஆஸ்திக சிகாமணி' என்று அனுமானித்துக் கொண்டேன். அவ்வளவு தான். "என்ன சாப்பிடுகிறீர்கள் ?" என்றார். நான் ஒரு அசமந்தம். கேள்வியின் அர்த்தம் புரியாமல், "நெஸ் கேப், ப்ரூ என்றால் வேண்டாம். நல்ல டிக்காக்ஷன் காப்பி என்றால் ஒரு ஒண்ணரை தம்ளர் வேணும்" என்றேன். அவர் அப்படியே மூர்ச்சை ஆகிவிட்டார். அப்புறம் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, "அடப்பாவி மனுஷா ! ஒரு நல்ல மாலையைக் கெடுத்துவிட்டீரே. நீர் ஒரு பெரிய எழுத்தாளர். நல்ல ரசனை உள்ளவர் என்று எண்ணி ஏமாந்தேனே ! ஸார், என்னிடத்தில் எல்லாம் வெளிநாட்டுச் சரக்கு. இதோ பாருங்கள்" என்று நாற்காலியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு பட்டனை அமுக்கினார். அல்மரா கதவு தானாகவே திறந்து கொண்டது. உள்ளே பல வடிவங்களில் அழகிய புட்டிகள். அவர் ஒரு Buddist என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். சொன்னேன், "ஸ்வாமி எனக்கு அந்த பழக்கம் இல்லையேயொழிய நான் அதற்கு எதிரி அல்ல. என்னால் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்க முடியாது. எனக்கு சோறு கூட வேண்டாம். அதனால் வெற்றிலை பாக்கு போடாதவர்களை நான் வைய மாட்டேன்." நாமக்கல் கவிஞர் சொன்னது போல 'கூழுக்கு உப்பில்லை என்பானுக்கும், காப்பிக்கு சர்க்கரை இல்லை என்பானுக்கும் கவலை ஒன்றே !' அதைக் கேட்ட பிரமுகர் மூணாம் பேஸ்த்து முகத்துடன், "ஸார் போகட்டும் ! ஐ யாம் ரியலி டிசப்பாயிண்ட்டட் ! நான் சாப்பிடுவதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லையே ?" என்றார். "பேஷாக ! என் நண்பர்களில் பலர் மது அருந்துபவர்கள். ஆப்த நண்பர்கள். ஒரு ஆபத்து என்று நள்ளிரவில் கூப்பிட்டாலும் ஓடி வருவார்கள்" என்றேன். அவ்வளவுதான் ! அவர் அகமும் முகமும் மலர்ந்தது. நாற்காலியின் மற்றொரு பட்டனை அமுக்கினார். ஒரு பட்டுப் படுதா 'விர்ர்ர்ரென்று' சென்று ஜீயர்களை மறைத்தது. நான் காப்பி சாப்பிட்டேன். அவர் ஒரிஜினல் சரக்கை ரசித்துச் சாப்பிட்டார். நாழியாகிவிட்டது. "ஸார், ஹேவ் ய வாஷ் !" என்று டாய்லட் அறையைக் காட்டினார். அவ்வளவும் பளிங்கு மயம் நன்றாக முகம் கழுவிக் கொண்டு தலையை சீவிக் கொண்டு கிளம்பும் போது, அங்கே ஓரு கொக்கியில் ஒரு உச்சிக்குடுமி தொங்கிக்கொண்டு இருந்தது. 'ஓஹோ, பெரிய நாடக நடிகர் போலும்' என்று நினைத்துக் கொண்டு, "ஏன் ஸார், நீங்கள் நாடக நடிகரா ? டாய்லட்டில் ஒரு செயற்கை உச்சிக்குடுமி தொங்கிக் கொண்டு இருக்கிறதே ?" என்று கேட்டேன். "அய்யய்யோ… அதெல்லாம் ஒன்றும் இல்லை ஸார் ! அடிக்கடி ஜீயரைப் பார்க்கப் போவேன். சிகை இல்லைன்னா அவர் சடாரி சாத்தமாட்டார். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு ! எல்லாத்தையும் பார்க்க வேண்டியிருக்கோன்னா !" என்றாரே பார்க்கலாம் ! 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.' Jayasala 42