1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Helen Keller

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jun 29, 2021.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஹெலன் கெல்லர் : பரிவும் விடாமுயற்சியுமே வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்த்திய ஒரு அபூர்வமான பெண்மணி!

    அமெரிக்காவில் பிறந்த ஹெலன் கெல்லர் உலகினருக்கு ஒரு அபூர்வமான உண்மையைக் காட்டுவதற்காகப் பிறந்த சாதனையாளர் என்றே சொல்லலாம். (பிறப்பு ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)

    மனம் தளராத விடா முயற்சி எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி தரும்! இது அவர் காட்டிய உண்மை.

    19 மாதக் குழந்தையாக இருந்த போது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களின் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

    ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிது வந்த அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்ஸில் இருந்த பெர்கின்ஸ் ஸ்கூர் ஃபார் தி ப்ளைண்ட் என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

    ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் (Annie Sulliven) என்ற ஒரு ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர் தான்.

    அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

    ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை CUP என்பதற்கான அசைவுகள்! அடுத்து அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது W A T E R என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

    ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் CUPக்கும் WATERக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுஸுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் WATER என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது. நீர் அவர் கையில் பாய ஆரம்பித்த போது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது. (It was as if I had come back to life after being dead – Helen Keller).

    இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

    ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் நான் எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். ("The most significant day I remember in all my life is the one on which my teacher, Anne Mansfield Sullivan, came to me. I am filled with wonder when I consider the immeasurable contrast between the two lives which it connects." - The Story of My Life)
    ஆன்னி தன் பணியில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான் ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

    பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர ப்ரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம். லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

    பல வருடங்கள் கடுமையாக உழைத்த பின்னர் 1900ஆம் ஆண்டில் ராட்க்ளிஃப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904ஆம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

    1902ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும் போதே அவர், ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்” (The Story of my life) என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி (John Albert Macy) என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார்.

    30 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார். குறிப்பாக அவர்களுது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1968ஆம் ஆண்டு அவர் மறையும் போது அவருக்கு வயது 87. அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14ஆம் தேதியன்று அவருக்கு ‘ப்ரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்; (Presidential Medal of Freedom) என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

    ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம். எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது; துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்.

    Jayasala42
     
    vidhyalakshmid likes this.
    Loading...

Share This Page