அன்பைப் போதிக்கும் துறவிகள் புலித்தோல், மான் தோலில் அமர்ந்து போதிப்பது முரண்பாடாக இல்லையா? ஆம். இந்த நாட்களில் இது முரண்பாடுதான். புலித்தோல் பற்றித் தெரியாது. மான்தோல் சமாச்சாரம் வேத காலத்திலிருந்து வரும் Primitive சடங்குகளின் மிச்சம். இந்து மதம் வெஜிட்டேரியனானதே புத்தர் காலத்துக்கு அப்புறம்தான். நியாயமாகப் பார்த்தால் நாம் செருப்பு அணிவதே, ஏன், பால் சாப்பிடுவதே முரண்பாடுதான். இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் கறிகாய்களுக்கும் உயிர் இருக்கிறது. அன்பைப் போதிப்பவர்கள் அவைகளை உண்பதும் முரண்பாடுதான். ஆனால், அப்புறம் எதைத்தான் தின்பது? மனிதன் முரண்பாடு இல்லாமல் வாழமுடியாது. தினமும் நாம் கொடுக்கும் எந்த வேலையினால் ‘மூளை’ அதிகம் சோர்வடைகிறது? வினோதமாக, தேகப்பயிற்சினால்தான் மூளை அதிகமாக சோர்வடைகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி ஸெரோடினின் (Serotinin) என்னும் ந்யூரோ ட்ரான்ஸ்மீட்டர்களின் அளவு தேகப்பயிற்சியின்போது அதிகமாகிறதாம். அதனால் மூளை சோர்வடைகிறதாம். எக்ஸர்சைஸ் பண்ணிவிட்டு கவிதை எழுதாதீர்கள். கொடைக்கானலில் சமீபத்தில் மறைந்த ஆடம் அஸ்பெர்க் பற்றி…. பில் கேட்ஸுக்கு முன்னோடியாக இருந்தவராமே! அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் கொடுமைதானே? அவரது பெயர் ஆடம் ஆஸ்போர்ன் (Osborne). அமெரிக்க பிரஜையான பிரிட்டிஷ்காரர். முதன் முதலாக மைக்ரோ ப்ராஸஸர் சில்லு கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் எழுதிய Introduction to Micro Processors எனும் நூல் மிகப் பெரிய வெற்றி. நாங்கள் எல்லாம் அதில்தான் ‘சில்லியல்’ கற்றோம். அருமையாக எழுதப்பட்ட நூல். கொஞ்சம் கடினமான பகுதிகள் என்று நினைப்பவற்றை அக்கறையோடு தனியாக அடிக்கோடிட்டுக் காண்பிப்பார். அவை இல்லாமல் படித்தாலும் புரியும். முதலி PC வகை மேசைக் கணிப்பொறிகளையும் பயிற்சி தரும் ‘கிட்’களையும் தன் ஆஸ்போர்ன் கம்ப்யூட்டர்ஸ் மூலம் விற்பனை செய்து மிகுந்த பணம் சம்பாதித்தார் ஆடம் ஆஸ்போர்ன். அடுத்த அலையை - ஆப்பிள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் அலையை அவரால் சமாளிக்க முடியவில்லை. சொந்த வாழ்வில் துயரங்களும் அடிக்கடி வரும் பராலிஸிஸும் விரக்தியும் அவரை ஆட்கொண்டது. எல்லாவற்றையும் விட்டொழித்து கொடைக்கானல் வந்தார். சின்ன வயதில் அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர். தன் சகோதரியுடன் கொடைக்கானலில் வாழ்ந்தார். 64 வயதில் 2003 வருடம் மார்ச் 24-ம் தேதி இறந்து போனார். ஒரு சிறிய கிராமத்தில் அவர் புதைக்கப்பட்டார். 1982-ல் கோடிகோடியாகச் சம்பாதித்தவர் செய்த ஒரு தப்பு, மாதம் 10,000 கம்ப்யூட்டர்கள் விற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டரின் அடுத்த மாடலை அவசரப்பட்டு சில மாதங்கள் முன்பே அறிவித்துவிட… ஜனங்கள் முந்தைய மாடலை வாங்குவதை நிறுத்திவிட… இருப்பு ஏகத்துக்கும் சேர்ந்துபோய் ஸ்டாக் விழுந்து அதிலிருந்து மீளவே இல்லை. சுஜாதா JAYASALA42