ஒரு ஆன்மீகச் சொற்பொழிவில் கேட்டது. பாண்டவர்கள் அனைவரும் 12 வருடம் வன வாசம்,ஒரு வருட அஞ்ஞாத வாசத்துக்குப் புறப்படத் தயார் ஆகும் நேரம். " காட்டுக்குப் போகும் முன் நீங்கள் மறுபடியும் ஒரு முறை சூதாட வேண்டும்".யார் இப்படிச் சொன்னது?திரௌபதி. தருமர் காரணம் கேட்க திரௌபதி "நாம் இப்போது அடிமைத்தளையில் இருக்கிறோம்.நீங்கள் ஜெயித்து விட்டால் அடிமைத் தளை நீங்கி விடும் "என்கிறாள் . தருமர்:"பணயம் வைக்க என்னிடம் ஒன்றும் இல்லையே." திரௌபதி:"உங்கள் புண்ணியத்தை பணயம் வைத்து விடுங்கள்". தருமர் காய்களைக் கையிலே எடுத்ததும் திரௌபதி "பகவானின் 12 நாமங்களையும் மனதார உச்சரித்து விட்டு ஆட ஆரம்பியுங்கள்"என்று சொல்கிறாள். தருமரும் பகவானின் நாமங்களை நினைவில் இருத்தி ஆட்டத்தில் ஜெயிக்கிறார்.அடிமைத்தளை நீங்குகிறது. இந்த சம்பவம் வியாசரின் மகாபாரதத்தில் இல்லை.வில்லிப் புத்தூரார் பாரதத்தில் இடம் பெறுகிறது. வேத வியாசர் சொல்லாததை வில்லிப்புத்தூரார் சொல்லுவானேன்? மனிதன் கஷ்டங்களின் எல்லையை அடையும்போது கடவுளை நொந்து கொள்ளத்தான் தோன்றுமே தவிர வணங்கத் தோன்றாது.அந்த இக்கட்டான நிலையிலும் தன்னை மனதார வணங்குபவனுக்குக் கடவுள் அவன் செய்யும் தீமை மூலமாகவே உதவுகிறார். சூதாட்டம் தீமையான செயலாயிருந்தாலும் அதில் வென்றதன் மூலம் பாண்டவரின் அடிமைத்தளை நீங்கியதாம். இதை வலியுறுத்தவே வில்லிப்புத்தூரார் இந்த நிகழ்ச்சியைச் சேர்த்ததாகக் கூறப் படுகிறது. ( திருடப் போகும் முன் கடவுளை வேண்டினால் காரியம் கைகூடுமா?என்று கூட்டத்தில் யாரோ வினவவும்,உபன்யாசகர் ரொம்ப சாமர்த்தியமாக "நிச்சயமாக.போலீஸ் விலங்கை மாட்டினால் இரண்டு கையும் கூடத் தானே செய்யும் "என்று சொன்னதும் பலத்த கரவொலி எழுந்தது.) " கர்ம வினைகளில் தான் மனிதனுக்கு உரிமை உண்டே தவிர அதன் பலன்களில் எந்த உரிமையும் இல்லை". சம புத்தி உடையவன் புண்யம், பாவம் இரண்டையும் இவ்வுலகிலேயே தியாகம் செய்து ,பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபடுகிறான்"( கீதை 2வது அத்தியாயம் ,47,50,51 வது ஸ்லோகங்கள்) கண்ணன் கீதையில் பின்னொரு நாளில் சொல்லப் போவதை திரௌபதி 'புண்ணியத்தைப் பணயம் வைக்கச் சொன்னதன் மூலம் செயல் படுத்தத் தொடங்கிவிட்டாள் ' என்று ஆன்மீகப் பேச்சாளர் விளக்கம் அளித்தார். வில்லிப்புத்தூரார் பாரதம் படித்தவர்கள் இருந்தால் இதனை உறுதி செய்யலாம். JAYASALA 42
I have not read Villiputhrar Bhratham. Hence this is new. The link with Geethai is also good. Now I want to read illiputhrar Bhratham.