1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Dogs And Human Beings

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 14, 2025.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,609
    Likes Received:
    10,788
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எறிந்தவேல் மெய்யதா வால் குழைக்கும் நாய்“
    இந்த தமிழ் மண் பல பெரும் தமிழ் அறிஞர்களை பெற்று வாழ்ந்தது. அவர்களுள் - பெருஞ்சொல் விளக்கனார், முதுபெரும் புலவர், அ. மு. சரவண முதலியார் ஒருவர் ஆவார். பல அரிய நூல்களோடு, பெரியபுராணத்துக்கு - அருமையான ஓர் ஆய்வினைப் பெருநூலாகச் செய்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அருளிய பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்களை அறியாதவர் இருக்க முடியாது. அப்பேரறிஞருடைய தந்தையார் - திரு சரவண முதலியார் அவர்கள் .
    அப் பெரும்புலவருடைய சொற்பொழிவின் சில பகுதிகளை நான் படித்துள்ளேன்! அவர் கூறுவார்: பெரியோர்கள் மக்களிடத்தில் பெரும்பாலும் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழிகுணங்களைத் தம்பால் ஏற்றிக் கூறுவர். அதனால், நாயினும் கடையேன் என்று கூறுங்கால், நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் குணங்கள் மக்களிடத்தில் அங்ஙனம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவை எவை என ஆராய்வோம்.
    1. தன் தலைவனைப் போலவே பல்லாயிர மக்கள், உடை முதலியவற்றால் புனைந்து கொண்டு வரினும், சிறிதும் ஐயுறாது அவனை அறிந்து கொள்ளும் இயல்பு உடைமை.
    2. ஒரு பிடி சோறு ஒரு காலத்தில் ஒருமுறை ஒருவன் உதவினானாயின், அவனைத் தன் வாழ்நாள் உள்ளவரையும் நினைவில் பதித்து வைத்து இருத்தலுடன், அவனை எங்கேனும் காணின், தான் எத்துணைத் துன்ப நிலையில் இருப்பினும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன் வாலைக் குழைத்து, இன்முகம் காட்டல் முதலியவற்றால் தனது நன்றி அறிவை அவனுக்குக் காட்டுதல்.
    3. தன் தலைவன் ஒரு பணியின்கண் தன்னை ஏவினான் ஆயின், அப்பணி தன்னால் செய்தற்கு அரிதாயினும், அதில் செல்லின் தன் உயிர்க்கு ஈறு நேரும் ஆயினும், அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பணியில் செல்லுதல்.
    இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு என்பார் .
    நான்காவதாக, நாயினிடத்துப் பிறிதொரு அரிய குணம் காணப்படுகின்றது. அதாவது, தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமும் இன்றி, தனக்கு எத்துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட்படுத்தாது, அத்துன்பம் தன் உடலின்கண்ணதாய் இருக்கும்போதும், தன் வாலைக் குழைத்து அவனுக்குத் தன் நன்றி அறிவைக் காட்டுதல் ஆகும்.
    இவ் உண்மையை, பாடல்:
    "யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்
    கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் -- யானை
    அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
    மெய்யதா வால் குழைக்கும் நாய்."
    என்னும் நாலடியார்ச் செய்யுளும் நன்கு விளக்கியது.
    இனி, இக்குணம் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை உடையராய்ச் சிறிது அன்பினையும் மேற்கொண்ட மக்களில் பெரும்பாலோர் தமக்குத் துன்பம் நேர்ந்துழி, அது தாம் செய்த தீவினை காரணமாக வந்தது என்று அறிந்து வைத்தும், ‘பாழும் கடவுளே! நீதியற்ற கடவுளே! எம்மை இங்ஙனம் துன்புறுத்தல் தகுமா? நின்கண் கருணை இல்லையா?' எனக் கதறிப் பதறுவதுடன், அந் நம்பிக்கையையும் இழந்து கடவுள் இல்லை என்னும் கொள்கையை உடையர் ஆதலைக் காண்கின்றோம். இதனாலும் மக்கள் நாயினும் கடையர் ஆகின்றனர். இவ்வகையில் தன் வயதின் பெருங்காலம் - 60 வயதுவரை கூட சிலர் தெய்ல நம்பிக்கையோடு வாழ்ந்து , பின் “ கடவுள் இல்லை “ என்றானதை அறிவோம் !
    ஐந்தாவதாக, நாயினிடம், செயலுக்குக் காரணம் காணும் இயல்பு உண்டு. மக்களில் பெரும்பாலோரிடம் அது இல்லை. இல்லாதது மட்டுமில்லை. திரிபாகக் காணுதலையும் அறிகின்றோம். எங்ஙனம் எனில், ஒரு நாயை ஓர் இளைஞன் மறைவில் நின்று கல்லால் அடிக்கிறான். தன்மீது பட்டதும், தனக்குத் துன்பம் செய்ததும் கல். ஆனால், எந்த நாயும் அந்தக் கல்லைக் கடிப்பது இல்லை. அடித்தவனைக் கண்டால் அவன் மேலே வீழ்ந்து கடிக்கும். இன்றேல் வாளா போய்விடும் .
    மக்களுள் யாருக்கேனும் ஒரு துன்பம் வந்தால், அதற்கு மூல காரணம் தாம் முன்செய்த வினை என்று அறியாதது மட்டுமல்ல. அவ்வினையினால் செலுத்தப்பட்டுத் துன்பம் செய்தவர்களிடம் பகைமை பூண்டு, அவர்களைத் துன்புறுத்தக் காண்கின்றோம். எனவே, நாயின் மேலே பட்ட கல்லைப் போன்று, துன்புறுத்தியவர்களே காரணமாய் உள்ளவர் என்று தவறாகக் கருதுகின்ற மக்களை விட, உண்மையான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்துணைச் சிறந்தது என்பதை அறிக.
    மக்களின் அத் தவறான செயலைக் குறித்துத் தான், "எய்தவன் இருக்க அம்பை நோவது" என்ற பழமொழியும் எழுந்து வழங்குவது ஆயிற்று. மேற்காட்டிய பல நற்குணங்களை உடைய நாயினிடத்து, ஒரு இழிகுணம் காணப்படுகின்றது. அதாவது, தன் வயிறு நிறைய உண்டு, தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும் அருவருப்பு இல்லாமல் புதியதாகவே நினைந்து உண்ணுதல். மக்களும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப்பும் அருவருப்பும் இல்லாமல் நுகர்தல் கண்கூடாகக் காணப்படுவதாகும்.
    நாய்க்கு உள்ள மற்றொரு இழிகுணம் குறிக்கோள் இல்லாது அலைதல். அது மக்களிடத்தும் காணப்படுவது. இத் தன்மையால் மக்கள் நாய்க்கு ஒப்பிடப் படுகின்றார்கள்.
    இவ்வாறு பெருஞ்சொல் விளக்கனார், முதுபெரும்புலவர் திரு. அ. மு. சரவண முதலியார் அவர்கள் அழுது அடி அடைந்த அன்பராகிய மாணிக்கவாசகப் பெருமான் பாடிய திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, நாய்க்கு உள்ள நல்ல குணங்களையும், தீய குணங்களையும் விளக்கிக் காட்டி உள்ளார். எத்தகைய தமிழ்ச் சான்றோர் வாழ்ந்த மண் - தமிழ் மண் !
    JAYASALA42
     
    Loading...

Share This Page