அன்றைய கோடம்பாக்கம் பாதிக்கு மேல் வெறும் காடு தான்!..குறுக்கே ஒரு ரயில்வே க்ராஸிங் மட்டும் ஓடும்.வட பழனி கோயில் பகுதிகளில் கொஞ்சம் நடமாட்டம் இருக்கும்.இதன் அன்றைய பெயர் கோடே பாக்.அதாவது குதிரை லாயம்!..ஊருக்குள் ஓடிய ராவுத்தர்களின் குதிரைகளில் பெரும் பகுதி இங்கே தான் ஓய்வெடுக்கும்.மண்ணடி தோல் ஷாப் சாயபுமார்கள் சல்லிசான விலைக்கு வாங்கிப் போட்ட நிலங்கள் இங்கே நிறையவே இருந்தது.அதிலொரு நிலத்தில் தான் அந்த ஸ்டுடியோ வேகமாக வளர்ந்தது!..சினிமா எனும் சாதனம் நாடு முழுவதும் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம்!..படப்பிடிப்பு நிலையங்கள் அத்யாவசியமாக தேவைப்பட்ட நேரத்தில் அந்தத் தொழிலில் இறங்கினார் ஒருவர்.சினிமாவைப் பற்றி எந்தவித அறிவும் இல்லாத அந்த மனிதர் அதை ஒரு வளம் கொழிக்கும் வியாபாரமாக மாற்றிக் காட்டினார்.தமிழ்த் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் மாறிப் போனார்.அவர் தான் ஏ.வி.எம்.செட்டியார்.அந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்காத உதடுகள் வெகு குறைவு.ஐயாவின் பிறந்த தினம் இன்று!.. முயற்சி திருவினையாக்கும்!..ஏ.வி.எம்மின் தாரக மந்திரம்.1907 இதே நாளில் காரைக்குடி செட்டிநாட்டுக் குடும்பத்தில் பிறந்த மெய்யப்பன் உடம்பில் ஓடியது மொத்தமும் வியாபார ரத்தம் தான்.பெயருக்குத் தான் பள்ளிப் படிப்பு!..துள்ளியோடும் பள்ளிப் பருவத்தில் மனமென்னவோ பணம் பண்ணாவதிலேயே குறியாக இருக்கும்.தந்தையார் நடத்தி வந்த பல்பொருள் அங்காடியின் ஒரு ஓரத்தில் விற்பனைக்காக இருந்த கிராமஃபோன் பொட்டி தான் ஐயாவின் சினிமா ஆர்வத்திற்கு அஸ்திவாரம் போட்ட சாதனம்!..அந்த பொட்டியிலிருந்து இசைத் தட்டுக்கு மனம் தாவியது.இசையில் நாடகம் இருந்தது.நாடகத்தில் சினிமா பிறந்தது.அந்த சினிமா தான் ஸ்டுடியோவிற்கு அடிகோலியது!..படிப்படியாக வளர்ந்த ஆசை பக்குவமாச்சு!..அதில் பல பஞ்சாயத்துக்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. எடுத்தவுடன் செட்டியாருக்கு சினிமா வசப்படவில்லை.மூன்று தொடர் தோல்விகள்.முடிஞ்சதுடா சோலி என மூட்டை முடிச்சுகளோடு அவர் ஊர் பக்கம் போயிருந்தால் இன்று அந்த ஆல மரம் இல்லாமலேயே போயிருக்கும்.தொலைத்த இடத்தில் தேடு எனும் முது மொழியை ஏ.வி.எம்.கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.எப்படி நஷ்டமாச்சு?..ஏன் நஷ்டமாச்சு?..எந்த ஒரு தொழிலைத் தொடங்கினாலும் திட்டமிடல் அவசியம்.ஆழம் தெரியாமல் காலை விட்டாச்சு!..நீச்சலை ஒழுங்காகப் பழகாதது நமது தவறு!..ருசி பார்த்து சாப்பிடத் தெரிந்தவன் தான் நல்ல சமையல்காரனாக மாற முடியும்!..ஏ.வி.எம்.அடிக்கடி சொல்லும் வாசகம்.செட்டியார் ஒரு அட்டகாசமான சமையல்காரர்!..அவர் சினிமாவிற்காக முட்டி மோதியதெல்லாம் பிற்கால சந்ததிக்கான பால பாடம்!.. விடா முயற்சிக்கு மறு பெயர் செட்டியார்.எடுத்த காரியத்தை முடிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது.சினிமாவில் தொலைத்த பணம் அவரது தூக்கத்தைப் போக்கியது.நமக்கானதொரு சொந்த ஸ்டுடியோ இல்லாதது தான் இந்தத் தோல்விக்கான காரணம்.காரைக்குடிக்கும் தேவ கோட்டைக்கும் இடைப்பட்ட சின்ன கிராமம் தான் தேவகோட்டை ரஸ்தா!..அங்கே ஜமீன்தார் சோமநாதன் செட்டியாருக்கு நிலமிருந்தது.மாதம் மூவாயிரம் ரூபாய் வாடகையில் அங்கே தான் தனது முதல் ஸ்டுடியோவை நிர்மானித்தார் ஏ.வி.எம்.அரிச்சந்திரா கன்னடப் படத்தின் வெற்றி அவருக்கொரு உத்வேகத்தை தந்திருந்தது.அதையே தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய அதுவும் வெற்றி.வேறொரு மொழியிலிருந்து ஈஸியா டப்பிங் பண்ணலாம் என்பதை தமிழுக்கு முதன் முதலாக அவர் தான் அறிமுகம் செய்து வைத்தார்.பம்மலின் சபாபதியை வாங்கி தானே இயக்க அது இன்று வரை பேசப்படுகிறது.எந்த டெக்னிக்கல் வந்தாலும் அதை முயன்று பார்ப்பதில் அவருக்கு அலாதி இன்பம்.காந்தி பார்த்த ஒரே படமான ராம ராஜ்யாவை விஜய் பட்டிடம் பேசி தமிழுக்கு கொண்டு வர அதுவும் ஹிட்!.. ரத்ன குமாரில் வந்த மகாலிங்கத்தைப் பிடிச்சு டி.ஏ.ஜெயலட்சுமிக்கு ஜோடியாக்கி நாம் இருவரை இந்த ரஸ்தாவில் தான் அவர் எடுத்தார்.படம் படு ஹிட்.காரணம் பாரதி பாடல்கள்.அறுநூறு ரூபாய் அடமானத்திலிருந்த பாடல்களை பத்தாயிரம் கொடுத்து வாங்கி இதில் அவர் பயன்படுத்த இந்த பாரதியை ஊரே கொண்டாடியது.ஆடுவோமே பள்ளு பாடுவோமே!..சுதந்திரம் தந்திடுவான் எனும் நேரத்தில் எட்டு திக்கும் கொட்டு முரசே என மக்களை கொண்டாட வைத்தது!..வி.கே.ராமசாமியின் முதல் படமிது!..குமாரி கமலாவை இரண்டாக்கி முரசின் மீது ஏற்றி நிறுத்தி பள்ளு பாட பட்டம்மாளை அழைத்து!..டேய்!..ரெண்டு கமலாடா!..காசு கொடுத்தவன் விசிலடிக்க செட்டியாருக்கு புதுசு புதுசா ஏதாவது செய்துகொண்டே இருக்கணும்.வேதாள உலகம் ஃபினிஷிங்கில தான் ஸ்டுடியோவில் தீப்பிடித்தது!..அப்போது கே.சங்கர் எடிட்டிங்கில் எடுபிடியாக இருந்தார்.அவர் தான் சட்டுன்னு ஸ்டோர் ரூமில் புகுந்து வேதாள உலகத்தை எடுத்துக் கொண்டு ஓடினார்.சங்கரின் சமயோகிதப் புத்தி அந்த உலகத்தைக் காத்தாலும் செட்டியாருக்கு பத்தாயிரம் ரூபாய் நட்டமானது!..இது வேலைக்கு ஆகாதுப்பான்னு சென்னைக்கு மாறினார்.வாழ்க்கை தான் சென்னையில் தயாரான முதல் படம்!.. காரனேஷன் ஹாலில் ஆடிக்கொண்டிருந்த வைஜயந்தியை இந்தியா முழுக்க கொண்டு சென்றவர் ஏ.வி.எம்.இந்த மூன்றெழுத்து இந்தியா முழுவதும் பரவியது!..செட்டியாருக்கு பக்க பலமாக நின்றவர் இருவர்.ஒருவர் எம்.வி.ராமன்.இன்னொருவர் ஜாவர் சீதாராமன்.இந்த இரு ராமன்களும் திரைக் கதை அமைப்பதில் கில்லாடிகள்.ஒரு திரைப்படத்தை எப்படி தொய்வில்லாமல் கொண்டு போகலாம் என்கிற வித்தை தெரிந்தவர்கள்.சினிமா விஷயத்தில் செட்டியார் நிறையவே பெர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பார்.செய்யிற வேலையை ஒழுங்காச் செய்யணும்.வெற்றியா தோல்வியா வேறு விஷயம்.ஏம்ப்பா!..யார் யார் கூடயோ ஹீரோ சண்டை போடுறான்.முதலை கூட எவனாவது சண்டை போட்டிருக்கானா?..இல்லைங்க!..ஒரு முதலையைப் புடிச்சு நீச்சல் தொட்டியில விட்டு கே.ஆர்.ராமசாமியை அதில் இறக்கிவிட்டார் செட்டியார்.யோசித்து பார்த்தா அதுக்கு முன்னாடி யாரும் முதலையை யோசித்ததே இல்லை!..முதலைக்கு பயிற்சி கொடுக்க கரையான்னு ஒருத்தரு!..முதலைக்கு கறி போட்டு கரையானுக்கும் கறி போட்டு தொட்டியைச் சுற்றி நாலு பக்கமும் கண்ணாடி போட்டு அதுக்கு மூணு கேமிரா வெச்சு!..ரெண்டு இயக்குநரையும் மாற்றி எடுக்கப்பட்ட செல்லப் பிள்ளை அவ்வளவா ஓடல!..அதைப் பற்றி செட்டியார் கவலையும் படலை!.. வசூலாகலையா?..ஏன் ஆகல?..செட்டியாருக்குத் தெரிஞ்சாகணும்.இந்த இந்த இடத்தில தப்பு பண்ணியிருக்கோம்.அடுத்த தடவை இது ரிபீட் ஆகக் கூடாது.பணம் போனா பரவாயில்லை!..ஆறாயிரம் அடி எடுத்தாச்சுங்களே!..தூக்கிப் போடு!..சந்திரபாபுவை வெச்சு காமெடியா எடுக்கிறதை விட சிவாஜியை வெச்சு சீரியஸா எடுங்கப்பா!..எவ்வளவு செலவானாலும் நானே தர்ரேன்.பீம்சிங் யோசிக்க ஏ.வி.எம்.சொன்ன அந்த பாவ மன்னிப்பு பிச்சுக்கிச்சு ஓடிச்சு!..எதுக்குங்க இந்தச் சின்னப் பையனுக்கு இவ்வளவு பெரிய பாட்டு!..?..படத்துக்கு இது தேவைங்க!..நான் சொன்ன மாதிரி எடுத்துக் கொடுங்க!..அப்படீன்னா என்னை விட்டுறுங்க!..மகராசனா போயிட்டு வாங்க!..பீம்சிங்கு ஃப்ரீயா இருக்காரா பாரு!..பணம் போடும் தயாரிப்பாளர்களின் பொற்காலம்!..தயாரிப்பாளரே அங்கே ஹீரோ!..நான் தான் இங்கே எல்லாம்!..அதனால் தான் அருமையான படங்களை செட்டியாரால் தர முடிந்தது!..அதே நேரத்தில் தொழிலாளியின் கருத்தைக் கூட காது கொடுத்துக் கேட்பார்.சினிமாவில வெற்றியும் தோல்வியும் சகஜம் தான்.அதை ஈஸியா கடந்து போவார் ஏ.வி.எம்.இந்தியில எம்.வி.ராமன் இயக்கிய ஆஷாவை பிரமாண்டமா எடுத்தது ஏ.வி.எம்.நெனச்ச மாதிரி அது ஓடல.ஆனால் செலவு கம்மியா எடுத்த பாபி அங்கே பட்டையைக் கிளப்பிச்சு!..ஐம்பது வாரம் ஒரே ஒரு பிலிம் பிரிண்டை வெச்சு ஓட்டினாங்க.இதை பாராட்டி கொடாக் கம்பெனிக்காரன் விருதே கொடுத்தான். வெறும் சினிமாவோடு ஏ.வி.எம்.நிறுத்தமாட்டார்.இந்த சாதனத்தை வைத்து எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம்?..கச்சா ஃபிலிம் டிஸ்ட்ரிபியூஷன் தொடங்கி படத்துக்கு ஃபைனான்ஸ் வரை ஏ.வி.எம்.நிறுவனம் பரபரப்பா இயங்கியது.ஒரே நேரத்தில முப்பது நாற்பது வண்டிகளுக்கு பெட்ரோல் போட வேண்டிய அவசியம் வந்தபோது ஷெல் நிறுவனத்திடம் பேசி முதன் முதலா ஸ்டுடியோவுக்கு உள்ளேயே ஒரு பெட்ரோல் பங்க் கொண்டு வந்தவர் செட்டியார்.அப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில பெட்ரோல் பங்கே இல்லை!..ஏ.வி.எம்மை பார்த்து தான் நாகிரெட்டியே எனக்கும் ஒரு பங்க் வேண்டுமென்றார்.எதிர்கால தேவைக்காக இப்போதே திட்டமிடுவார்.செய்யிற வேலையை ஒழுங்காச் செய்!..புரியலையா கேளு!..மூணு தடவை கேட்டாலும் கோபப்படமாட்டார்.புரிஞ்ச மாதிரி தலையாட்டினா எங்கே சொல்லு என திரும்பவும் கேட்பார். .கதை டிஷ்கஸனுக்கு உட்கார்ந்தா எனக்கு புரியல திரும்பச் சொல்லுங்க என்பார்.நேத்தைக்கு எங்கப்பா நிறுத்தினோம்.அவருக்கு தெரிஞ்சாலும் கேட்பார்.அதுக்கு முன்னாடி வர்ர சீன் என்ன?..பானுமதிக்கு எதுக்கு இவ்வளவு நீளம்!..டயலாக்கை ஜானகிக்கு அதிகப்படுத்து!..நர்ஸிங் ஹோம் வால் க்ளாக் சதுரமா வேண்டாம்.ஸ்டோர்ல போய் வட்டமான வால் க்ளாக் எடுத்துட்டு வா!..ஒரே நேரத்தில கண்ணு பல இடத்தில ஓடும்!..இந்த சீனை ஒரே வரியில சொல்லு!..ரைட் இதையே வெச்சுக்கலாம்!.. ஸ்கிரிப்டுக்கு என்றே ஒரு ஃபைலை மெய்ண்டெய்ன் செய்வது ஏ.வி.எம்.வழக்கம்.அன்பே வா ஸ்கிரிப்டைப் பார்த்து எம்.ஜி.ஆரே அசந்து போயிட்டார்.சீன் பை சீன் பக்காவா வெச்சிருக்கீங்களே!..எங்க ஜே.பி.ரூமை வந்து பாருங்க!..அந்த திரை நாயகனின் அறை எப்படி இருக்கணும்!?.ஆர்ட் டைரக்டர்கிட்ட செட்டியார் சொன்னது தான் அங்கே இருக்கும்.அவ்வளவு பெரிய பணக்காரன் தங்குற ரூமில என்னென்ன வேணும்?..ஸ்டோர் ரூம்ல என்னவெல்லாம் ஸ்டாக் இருக்கு?..பத்து மீட்டர் திரைச் சீலை பத்தாதுங்க!..நீல கலர்ல வாங்கணும்!..லைட் பிங்க் போடுங்கப்பா!..இந்த சோபா வேணாம்!..பிங்க் போடு!..கண்ணுக்கு உறுத்தாம இருக்கணும்!..அப்படியே இந்த மேட்டையும் மாத்திடுங்க!..இப்படி டிஸைன் இருக்கணும்!..ஜே.பி.நைட் கவுன் முதற் கொண்டு செட்டியார் கவனத்துக்குப் போகும்.ஒரே நேரத்தில ரெண்டு மூணு படம் தயாராகும்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஃபைல்.அவரோட தலைமாட்டில இருக்கும்.நைட்டு 12 மணிக்கு எழுந்து புரட்டுவார்.கரெக்ஷன் கண்ணில படும்.பக்கத்தில டேப் ரிக்கார்டர்.நாளைக்கு செய்ய வேண்டியதை பதிவு செய்வார்.காலைல அவருக்கு முன்னாடியே அந்த கேஸட் ஸ்டுடியோ பறந்திருக்கும்.பாலு என்கிற டி.பி.பாலசுப்ரமணியம் யாருக்கு என்ன வேலைன்னு பிரிச்சு கொடுப்பார்.பக்காவா டைப் செய்யப்பட்ட ஷீட்!..யாரும் ஏமாத்த முடியாது. செட்டியாரின் டைம் மேனேஜ்மெண்ட் நம்மை வியக்க வைக்கும்.இந்த நாளில் இந்த நேரத்தில இன்னது நடக்கணும்.நாலாவது ஃப்ளோர்ல என்னப்பா நடக்குது?..ரங்காராவ் இன்னும் வரலைங்க!..அவருக்காக வெயிட்டிங்.இவருக்கு இதே வேலையா போச்சு!.நாலு மணிக்கெல்லாம் ஓடிறாருங்க!..இரு!..இன்னைக்கு நானே வர்ரேன்!..ஏன் இந்த லைட்டு வீணா எரியுது?..வேலை முடிஞ்சா அணைங்கப்பா!..கோயில் செட்டு போட்டோமே!..விளக்குல எண்ணெய் ஊத்துனீங்களா?..அப்பவே ஊத்தீட்டமே!..மறுபடியும் ஊத்துனியா?..இல்லைங்க!..எண்ணெயில்லாம கருகின வாசம் வருது!..செட்டியார் கண்ணிலிருந்து மட்டுமல்ல மூக்கிலிருந்தும் எதுவும் தப்ப முடியாது!..எத்தனை எத்தனை படங்கள்.அதில் எத்தனையோ அனுபவங்கள்.எவ்வளவு ஹீரோக்களை உருவாக்கிய இடம்.எத்தனை டெக்னீஷியன்களுக்கு வாழ்வளித்த இடம்.ஏ.வி.எம்.எனும் தனி மனிதனிடத்தில் எப்படிப்பட்ட கேரக்டர்கள்.சலவைச் சட்டை கசங்காமல் அழுக்கு ஆகாமல் இருந்தால் அதையே தான் அடுத்த நாளும் போடுவார்.எதுக்கு வீணா துவைக்கணும்.இன்னும் ரெண்டு நாளைக்கு வரும்.தேவையில்லாமல் வேஸ்ட் பண்ணுவது அவருக்கு பிடிக்காது.தேவையா லட்சத்தில செலவு செய்வார்.ஏம்ப்பா பாலு!..ஏன் பாத்ரூம்ல வீணா லைட் எரியுது?..அதை அணைச்சிட்டுப் போ!..நர்ஸிங் ஹோம் படுக்கையில கிடந்து ஏ.வி.எம்.மகன் பாலுவிடம் சொன்ன கடைசி வார்த்தை!..அது ஒரு ஞாயிற்றுக் கிழமை!..சுவர் கடிகாரம் 9.30.காட்டுது.வீணா எரியுது!..ஏ.வி.எம்.மின் எந்த நிமிடமும் வீணா கழியவில்லை!..12ம் தேதி ஆகஸ்ட் 1979.அணைச்சிட்டுப் போ!..அநேக குடும்பங்களுக்கு வெளிச்சம் வழங்கிய இந்த விளக்கு அந்த நேரத்தில் தான் அணைந்தது!..இப்படியொரு வாழ்க்கையிலிருந்து நாம் படிக்க வேண்டியது நிறைய இருக்கு!.. முக நூலில் அப்துல் சமத் ஃபாயஸ் JAYASALA42