பெயர் அறியப்படாத, புகழ் வெளிச்சம், ஔி வட்டம் இல்லாதிருப்பது அநாமதேயம். ஜனக் கூட்டத்தின் நடுவே ஒரு புள்ளியாய்த் தேய்ந்து போவது. அதாவது "யாரோ ஒருத்தி" என்பதாக அடையாளம் இன்மை நல்லது. இன்னும் கொஞ்சம் சொன்னால் அடையாளம் தேடாமல் இருப்பது பெரிய விஷயம். திருவண்ணாமலையைச் சுற்றி நிறைய சாதுக்கள் இருப்பர். ஜீவன் முக்தர்கள். எளிமையாக இருப்பர். இந்த அடையாளம் தேடுதல், தனி முத்திரை பதித்தல், கால் தடம் பதித்தல் வரலாற்றில் பெயர் பொறித்தல் கேட்க நன்றாக இருந்தாலும் அதையே குறியாகக் கொள்வமே ஆனால் மனம் சுருங்கிப் போகும். மகிழ்ச்சியைப் பற்றிச் சொல்கையில் அது பட்டாம் பூச்சி போன்றது. நாம் அதன் பின் துரத்திச் செல்ல அது விலகிப் பறந்து போகும். நாம் பாட்டுக்கு நம் வேலை செய்தால் தோளில் வந்து அமரும். புகழ் கௌரவம் எல்லாம் அப்படியே. கௌரவம் விருதுகள் பட்டங்களில் இல்லை அதற்கான நம் தகுதி ஞானத்தில் தான் இருக்கிறது என்ற பழமொழி உண்டு. புகழ் தேடிச் செல்லாமல் சரித்திரம் நம் பெயரை நமக்குப் பின் எழுதினால் நல்லது. அதைக் காண நாம் இருக்கப் போவதில்லை. "நான்" செத்து நீ வா என்று திருக்கோஷ்டியூர் நம்பி உடையவர் உபதேசம் முன்பு சொன்னதாக ஐதீகம். பதினேழுமுறை பெருமானார் அவரிடம் பயில வந்தார். இன்றைய உலகில் இந்த "நான்" "எனது" பூதாகாரமாக பயமுறுத்துகிறது.பரோபகாரம் செய்தால்கூட பெயர் பாெறித்து கல்வெட்டிக் கஷ்டம். வாரியார் சுவாமிகள் சொல்வார் கோயில் மின் விளக்கில் பெயர் பொறிப்பது நல்லதன்று. கொஞ்ச காலம் கழித்து எரியாத போது சேவார்த்திகள் சாபத்திற்கு ஆளாகலாம். தானத்தில் இடக்கை வலக்கை அறியாமை எல்லாம் பேசினாலும் உள்ளுக்குள் குறு குறு என்று பாராட்டுக்கு மனம் ஏங்குகிறது. என் பெயர் எங்கே என்று கண்கள் தேடுகிறது. எந்த சாதனை வெற்றியிலும் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் உலகம் இது. இதை சமூகத் தளங்களில் நன்கு பார்க்கலாம். எனக்கு அவரைத் தெரியும். நானும் இதில் பங்காற்றியுள்ளேன் என்று மார் தட்டும் உலகம். பீற்றி பீற்றி தகுதி கால் வீசம் பீற்றல் முக்கால் வீசம் என்றாகிக் கொண்டிருக்கிறது. அது கொஞ்சம் கூடிப் போய் பிறரது உழைப்பைத் திருடும் குணம் வந்து விட்டது. தாம் உழைத்து பிறருக்குப் பாராட்டை விட்டுத் தந்து தான் அநாமதேயமாக இருப்பது ஒரு பெரும் குணம். உண்மையான தலைமை இதைத்தான் செய்யும். தோனி நல்ல உதாரணம். எல்லாம் செவ்வனே செய்து விட்டு அநாமதேயராய் இருப்பது மிகப் பெரிய பண்பு நலன். தத்துவ ஞானி ஜே கே அவர்கள் பெருமையும் உண்மையைப் போன்று சார்பற்றது என்கிறார். உண்மையை எப்படி யாரும் சொந்தம் கொண்டாட முடியாதோ பெருமை புகழ் அப்படியே. இதை உணர்ந்தால் பந்தலில் முந்திப் பெருமை தேடார். மாலை மரியாதை பரிவட்டம் விழையார். அதுவும் இறையின் முன் கேட்பார் இன்னும் சிறுமை. தம்மைச் சாராத ஒன்றை விழையாமை தன் பெயர் பாெறிப்பதை விரும்பாது. இவ்விஷயத்தில் அநாமதேயமாய் இருப்பது மிகப் பெருமையான ஒன்று. புகழ் தேடும் நெஞ்சம் நிறைவின்றித் தவிக்கும். சலிக்கும். கலாம் ஐயா பெரும் விண்வெளி அறிஞர் தவான் அவர்கள் எப்படி விண்வெளித் தோல்வியை தமதாக்கி வெற்றியைக் குழுவுக்குத் தந்தார் என்று அழகாக சொல்வார். இதற்கு நல்ல நெஞ்சுரம் துணிவு தேவை. அதனால்தான் அருளாளர்கள் தொண்டர் குழாத்துடன் கூடிக் கரைய விரும்புகின்றனர். அப்பர் சுவாமிகள் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைய வேண்டும் என்கிறார். ஒரு முறை விவேகானந்த கேந்திராவில் ஏதோ தேவைக்கு தொலை பேசி விளித்த போது நீங்கள் யார் என்று கேட்க "சேவகன்" என்று பதில் வந்தது. JAYASALA42