1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 6, 2022.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார்.

    ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்கு ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.

    ‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

    திருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.

    ‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே! எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ!’

    பந்தி பரிமாறுவதென்றால் இலை போட்டு, முறையான வரிசையில் பதார்த்தங்களைப் பரிமாறுவது மட்டுமல்ல. பந்திக்கு வருகிற ஆட்களை வரவேற்று, உட்கார வைத்து, இலை போட்ட பின், அவர்களுக்குத் தேவையானதைப் பார்த்து கவனமாகப் பரிமாறி, பின் அவர்கள் எழுந்து கை கழுவும் வரைக்கும் கவனித்துக் கொள்வது.

    ‘கோவால் மாமா பசி தாங்க மாட்டா. மூர்த்தம் முடிஞ்ச ஒடனே மொத பந்தில அவாள உக்கார வச்சிரணுன்டே. மறந்துராத’.

    ‘சின்னப் பிள்ளேள பொம்பளையாளு பந்தில உக்கார வைலே, கணேசா. அப்பந்தான பக்கத்துல இருக்கிறவங்க, அதுகளுக்கு சோத்தப் பெசஞ்சுக் கிசஞ்சு குடுப்பாங்க. எலைல சாப்பிடத் தெரியாதுல்லா!’

    ‘எல! கோமதி ஆச்சிக்கு தனியா நாற்காலி போட்டு உக்கார வையி. அவளுக்குக் கால மடக்க முடியாதுலே’.

    ‘உலகநாதன் மகளுக்கு பாயாசத்த தம்ளர்ல ஊத்திக் குடுல. எலைல விட்டா, மேலச் சிந்தீருவா. அவ அம்மை ஆசயா பட்டுப் பாவாட உடுத்தி விட்டிருக்கா’.

    இப்படி உபசரித்து கண்ணும், கருத்துமாகப் பரிமாறுபவர்கள் கடைசிப் பந்தியில்தான் சாப்பிட உட்காருவார்கள். பெரும்பாலும் பல பதார்த்தங்கள் காலியாகியிருக்கும். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் சமையல் செய்த தவிசுப்பிள்ளைக் குழுவினருடன் உட்கார்ந்து சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள். விசேஷத்துக்கு வந்திருந்தவர்களை உபசரித்து நல்லவிதமாகச் சாப்பிட வைத்து கவனித்ததனால் ஏற்பட்ட திருப்தியில் அவர்களின் முகங்கள் கனிந்திருக்கும். இப்படி உபசாரம் செய்து பரிமாறுகிறவர்கள் சம்பந்தப்பட்ட விசேஷ வீட்டுக்கு உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லவே இல்லை. உறவினர்களைப் போல பழகிய ஒரே ஊர்க்காரர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட பல மனிதர்களை ஏதேனும் விசேஷ வீட்டில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற நாட்களில் கண்களில் அபூர்வமாகவே தென்படுவார்கள்.

    ‘நம்ம திரவியம்லாம் விசேஷ வீடுகள்ல பரிமாறதுக்கு மட்டும்தான் சிங்கப்பூர்லேருந்து இந்தியாக்கு வாரான்’.

    திரவியம் சொந்த ஊரான ஶ்ரீவைகுண்டத்தை விட்டு இது போன்ற விசேஷ வீடுகளில் கலந்து கொள்வதற்காக மட்டுமே திருநவேலி வருவதை இப்படிக் கிண்டலாகச் சொல்லுவார், ராமையா பிள்ளை.

    திருநவேலியில் சில சின்ன ஹோட்டல்களிலும் இப்படி உபசாரம் செய்பவர்கள் உண்டு. அம்மன் சன்னதி மண்டபத்தில் ஹோட்டல் நடத்தும் ஓதுவார், சாப்பிட வருபவர்களை, ‘சும்மா சாப்பிடுங்க சும்மா சாப்பிடுங்க’ என்று சொல்லி பரிமாறுவார்.

    ‘அப்பம் துட்டு வாங்க மாட்டேளோ?’ என்று அவரையும் கேலி செய்வார் ராமையா பிள்ளை.

    இப்போது எல்லா ஊர்களும் ஒரே ஊராகி விட்ட பிறகு பந்தி ஜமுக்காளம் விரித்து, இலை போட்டு, தண்ணீர் வைத்து, உப்பு, சுண்ட வத்தல் வைத்துத் துவக்குகிற முறையான பந்தி பரிமாறுதல் காணாமல் போய்விட்டது. கூடவே உபசாரம் செய்பவர்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். கேட்டரிங் ஊழியர்கள் கடனே என்று பரிமாறும் வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிடப் பழகி விட்டது மனம்.

    ஆனாலும் சென்னையில் அவ்வப்போது சில ஹோட்டல்களில் உபசாரம் செய்பவர்களை ‘சப்ளையர்கள்’ உருவில் பார்க்க முடிகிறது. வடபழனி ‘நம்ம வீடு’ வசந்தபவன் ஹோட்டலின் ஏ.சி ஹாலுக்குள் நுழையும் போதே, ‘அண்ணாச்சி வாருங்க’ என்று சொந்த வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளை வரவேற்பதைப் போல வரவேற்கிற ஓர் இளைஞனைப் பார்க்க முடியும்.

    ‘நம்ம வீடு’ங்கற கட பேருக்கேத்த மாரியேல்லா ஒபசரிக்கே! திருநவேலில எங்கடே?’

    முதல் சந்திப்பிலேயே கேட்டுவிட்டேன்.

    ‘ஏ ஆத்தா! எப்பிடி அண்ணாச்சி கண்டுபிடிச்சிய? எனக்கு பூச்சிக்காடுல்லா. தெசயன்விளைக்குப் பக்கம்’ என்றான்.

    ‘பூச்சிக்காடுன்னு சொன்னாப் போறாதா? தெசயன்வெளைக்குப் பக்கம்னு என்னத்துக்கு புளியப் போட்டு வெளக்குதேங்கென்?’

    ஊர்க்காரனைப் பார்த்த சந்தோஷத்தில் ஊர்ப்பேச்சு கொப்பளித்துக் கொண்டு வந்தது.

    ‘ஆப்பம் சின்ன சைஸாத்தான் இருக்கும். இன்னொரு ஐட்டமும் ஆர்டர் பண்ணுனியன்னாத்தான் வயிறு முட்டும். சின்ன வெங்காய ஊத்தப்பம் ஒண்ணு கொண்டு வந்துரட்டுமா?’

    சாப்பிடும் போது அருகில் நின்று கொண்டு உரிமையுடன், விகற்பமில்லாமல் பேசுவான்.

    ‘மெட்ராஸ்ல வெலவாசி அதிகங்காங்க. ஆனா சொன்னா நம்ப மாட்டிய. எனக்கு சம்பளத்துல பாதிக்கு மேல செலவே இல்லேன்னா பாத்துக்கிடுங்க. சேத்து வச்சு, ஊருக்குத்தான் அனுப்புதென். . . . லெமன் ஜூஸ் கொண்டு வரட்டுமா? நல்லா செமிக்கும்லா!’

    சில சமயங்களில் டியூட்டியில் அந்தப் பையன் இல்லையென்றால் கண்கள் தேடி ஒரு சின்ன வருத்தம் ஏற்படும்.

    ஒவ்வொருமுறை போகும் போதும் உற்சாக உபசாரம்தான்.

    உள்ளே நுழைந்த உடனே, ‘ஏ பூச்சிக்காடு’ என்பேன்.

    இன்று வரை அவன் பெயர் தெரியாது.

    ‘என்ன அண்ணாச்சி! நம்மூரு மாரி வேட்டில வந்துட்டிய? ரொம்ப நாளா இந்தப் பக்கம் காங்கலையே! என்ன சாப்பிடுதிய?’

    ‘நீ என்ன கொண்டாந்தாலும் சரிதான்’.

    ‘கரெக்ட் டயத்துல வந்திருக்கிய. இட்லி சூடா இருக்கு. கொண்டுட்டு வாரேன்.’

    வழக்கம் போல சாப்பிடும் போது அருகில் நின்றபடி பேசுவான்.

    ‘இட்லி பூவா இருக்குல்லா? . . . . அன்னைக்கு நிகில் அண்ணன் பேஜ்ல கமலகாசன் ஸார்வாள் கூட நீங்க இருக்கிற போட்டாவப் பாத்தெம்லா! அம்பாசமுத்ரம் படம் எப்பம் வருது அண்ணாச்சி?’

    ‘அது பாபநாசம்டே’.

    ‘சரியாப் போச்சு. இப்படி ஒளறுவெனா, அதுவும் ஒங்கக்கிட்ட. இதச் சொல்லியேல்லா கேலி பண்ணுவிய!’
    Forwarded

    Jayasala 42
     
    Loading...

Share This Page