1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேட்டி புடவை கஷ்டங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 4, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    வேட்டி
    புடவை
    கஷ்டங்கள் - சுஜாதா
    - ​
    06 ஜனவரி : அகில உலக வேஷ்டி தினம் என்று தெரிந்தது. நம் வாத்தியார் தான் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக எழுதி வைத்திருக்கிறாரோ ? அதனால் இதோ.....
    'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் படத்துடன் சம்பந்தப்பட்டவர்களை ராஜீவ் மேனன் வேட்டி - சட்டையில் வருமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
    பலவருடங்களுக்குப் பிறகு ஒரு பொதுநிகழ்ச்சியில் வேட்டியில் வரும் அனுபவம் சற்று அப்பத்திரமானதாக இருந்தது. படியில் தடுக்கி மேடையில் உள்ளவர்களை விழுந்து சேவிக்கும் சாத்தியம் இருந்தது.
    நினைத்தாலே வியப்பாக இருக்கிறது....இடுப்பு என்கிற சமாச்சாரமே இல்லாவிட்டாலும் கல்லூரிப் பருவம் வரை வேட்டிதான் அணிந்திருக்கிறேன். ஒருமுறை கூட நழுவியதில்லை. இன்ஜீனியரிங் சேர்ந்ததும்தான் பாண்ட் - அதுவும் காக்கி பாண்ட் - வொர்க் ஷாப்புக்காக. எம்.ஐ.டி யில் 'சைபர்னெட்டிக்ஸ்' பற்றிய செமினாரில் கூட வேட்டி கட்டிக்கொண்டுதான் பிரசங்கித்த ஞாபகம். வேட்டி அப்போதெல்லாம் சௌகரியமான உடை. கேரள பாணி டப்பா கட்டுக்கும் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் பெர்முடாஸுக்கும் அதிக வித்தியாசமில்லை.தமிழ்நாட்டில் லுங்கி அதிகம் புழங்குகிறது. வெள்ளை வேட்டி குறைந்து வருகிறது. மியான்மர், தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகளில் பல உடைகள் வேட்டி போல இருக்கின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் வேட்டி மாதிரி பூப்போட்ட ஸ்கர்ட் அணிந்திருப்பார்கள். அவ்வப்போது பிரிந்து பளிச்சிடும் வாழைத்தண்டுக் கால்கள் 'குருவி'களைக் கிறங்க வைக்கும்.
    பிராமணக் கல்யாணங்களில் மாப்பிள்ளை வேட்டி கட்டவேண்டும். அதுவும் பஞ்சகச்சம்.
    பஞ்சகச்சம் என்றால் ஐந்து இடங்களில் செருகுவது என்று அர்த்தம். எந்த ஐந்து என்று வாத்தியாருக்கே சரியாகத் தெரியாது. ஏதோ ஏற்ற இறக்கமாக முடித்து, விசிறி செருகி ஒரு சைடு தூக்கலாகவும், மற்றது இறுக்கமாகவும் கட்டிவிடுவார்.
    கல்யாண மாப்பிள்ளையைப் பண்ணுகிற பல ஹிம்சைகளில் இதுவும் ஒன்று. கோமாளி மாதிரி வேட்டி கட்டிவிட்டு, கையில் குடை, விசிறி, காலுக்குப் புதுச் செருப்பு, கண்ணுக்கு மை, நெற்றியிலும் கன்னத்திலும் சாந்துப் பொட்டு, கழுத்தில் சந்தனம்.....இந்த மாதிரியான அவமானங்களையெல்லாம் தாங்கிக் கொள்வதன் ஒரே காரணம், அவ்வப்போது கிடைக்கும் அந்த மென்மையான கரத்தின் (பலருக்கு முதல்) ஸ்பரிச சந்தோஷம்தான்.
    வேட்டி எப்போதிலிருந்து உடுத்த ஆரம்பித்தார்கள் என்று யாராவது ரிஸர்ச் செய்தால் குறைந்தபட்சம் எம் ஃபில் வாங்கலாம்.
    'வேட்டியும் தாழ்வடமும் வெண்ணீறும்' என்று ஒழுவிலொடுக்கம்' என்னும் நூலில்தான் முதல் வேட்டி வருகிறது என் நினைக்கிறேன். நீண்ட துணியை வெட்டிக் கட்டிக்கொள்வதால் 'வேட்டி' என்ற பெயர் வந்ததாம். வேட்டிதம் என்றால் சூழ்வது, மடிப்பு என்று பழைய இலக்கியச் சொல்லகராதி குறிப்பிடுகிறது.
    கலிங்கம் என்ற சொல் பொதுவாக ஆடை என்ற பொருளில் சங்கப்பாடல்களில் வருகிறது. (கலிங்கம் - பகர்நரும் - மதுரைக் காஞ்சி). பட்டினப்பாலையில் பட்டு வருகிறது. பருத்தி நெசவும் பழைய காலத்திலிருந்திருக்கிறது .
    விலங்குகள் - எலியின் முடியைக் கூட நெய்திருக்கிறார்கள். (பை மட்டும் எலிமுடில வச்சிருங்க). துணி நெய்பவர்கள் காருகர் இருக்கை என்று தனித்தெருவில் வாழ்ந்திருக்கிறார்கள். கைம்பெண்களை ஏனோ 'பருத்திப் பெண்டிர்' என்று குறிப்பிட்டுளார்கள்.
    குளத்தில் துணி மிதந்து சென்றுவிட, 'இக்கலிங்கம் போனாலென்ன மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை' என்று இரட்டைப் புலவர்கள் ஒரு வெண்பாவை முடித்த தனிப்பாடல் உள்ளது.
    இன்று வேட்டி தன் அந்தஸ்தை இழந்துவிட்டது. யாராவது எலாஸ்டிக் கரை வைத்து வெல்க்ரோ (Velcro) பொருத்தினால் அடிக்கடி நழுவிவிடும் அபாயத்தை நீக்கலாம்.(இப்போது 'ஒட்டிக்கோ / கட்டிக்கோ என்று வாத்தியார் சொன்னதை நிஜமாக்கிவிட்டார்கள்).
    வேட்டி கட்டிக்கொண்டு ஓடுவது கஷ்டம், ஏனென்றால் நவீன வாழ்க்கையில் பல தருணங்களில் ஓட வேண்டியிருக்கிறது. - பஸ் துரத்த, ட்ரெயினில் தொத்த, பஸ்களைக் கொளுத்துபவர்களிடமிருந்து தப்பிக்க, கண்ணீர்ப் புகை, தடியடி, மதக் கலவரங்கள் எல்லாவற்றிலும் தப்பி ஓடத் தேவைகள் அதிகமிருப்பதால், நாளடைவில் பாண்ட் கூட அடிக்கடி உரசுவதால் வழக்கொழிந்து பட்டா பட்டி டிராயர்தான் வசதியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    புரோட்டீன் குறைவினால் குச்சிக் கால்கள் தெரிந்தால் என்ன....உயிர் முக்கியமில்லையா?
    பெண்களிடம் புடவை கட்டும் பழக்கம் நகரங்களில் குறைந்துவிட்டது. இன்று சென்னையில் ஸ்கூட்டரின் பின்னால் செல்லும் மனைவிகள் பட்டுப்புடவை அணிந்திருந்தால் நிச்சயம் முகூர்த்த நாள். ஒரு ஊரில் பெண்கள் பட்டுத்தாவணி அணிகிறார்கள் என்றால் அவ்வூரில் மக்கள் தொகையும் நாகரிகத் தாக்கமும் குறைவு என்று அனுமானிக்க முடிகிறது.
    வடாம் வறுக்கும் போதும் கடுகு தாளித்துக் கொட்டும்போதும் கூலிங்கிளாஸ் அணியவும்.
    கண்களுக்குப் பாதுகாப்பு போன்ற பயனுள்ள குறிப்புகளைக் கொண்ட பெண்கள் பத்திரிக்கை ஒன்று புடவை கட்டுவதற்கும், சுடிதார் அணிவதற்கும் ஆகிற நேரத்தை ஒப்பிட்டு, 'பின்னதில் ஐந்து நிமிடம் மிச்சமாகிறாது. இதனால் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆண்டுக்கு முப்பத்தாறு மணிநேரம் கிடைக்கிறது' என்று புள்ளிவிவரம் கொடுத்துள்ளது.
    அந்த உடைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், வாங்குவதிலும் அவர்கள் வருடத்திற்கு எவ்வளவு மணிநேரம் செலவழிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அந்தப் பத்திரிக்கையில் இல்லை.
     
    Loading...

Share This Page