1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Sep 17, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,747
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்

    “அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” பெரியவா.
    .....
    எனக்கு ‘காஞ்சி மஹா பெரியவா‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம்.
    ஒரு நாள், காஞ்சி முனிவர் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம்உட்கார்ந்திருந்தோம்.
    காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.

    மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.

    ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

    அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள்.

    திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.
    தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.

    நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

    “ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

    அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.

    ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். மஹா பெரியவாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.
    எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்.

    பெரியவருடன் அவரின் அனுபவம்- சுய சரிதை.
    “எனது சுயசரிதை” புத்தகத்தில் சிவாஜி கூறுகிறார்…
     
    Loading...

Share This Page