1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

*மிராசுதார் நாணி மாமா*

Discussion in 'Stories in Regional Languages' started by Rrg, Jun 27, 2020.

 1. Rrg

  Rrg Gold IL'ite

  Messages:
  885
  Likes Received:
  404
  Trophy Points:
  138
  Gender:
  Male
  *மிராசுதார் நாணி மாமா* - (சிறுகதை)

  நாணி மாமா - தஞ்சாவூர் அருகே மெலட்டூர் கிராமத்தில் மிராசுதார் என்ற பட்டத்துடன் வேலை வெட்டியின்றி சுகமாய் பொழுது ஓட்டி வந்தார். மிராசுதார் என்றால் ஏதோ எக்கச்சக்க பணக்காரர் என்றெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் நிலபுலன். அதன் வருவாய் குடுமபம் நடத்த போது மானதாக இருந்தது. இவர் வேலைக்குப் போகாமல் வீட்டோடு இருந்து விட்டார். இத்தனைக்கும் அந்த கால SSLC. ரொம்ப படித்தவர் என்று கிராமத்திலும் ஒரு மதிப்பு இருந்தது.
  மாமா நல்ல உடற்கட்டு உடையவர். தினமும் யோகாசனம் செய்வார். முருக பக்தர்.
  காலா காலத்தில் அவர் பெற்றோர் ஒரு கல்யாணமும் பண்ணி வைத்தனர். வாழ்க்கை மேலும் இனித்தது. மணமாகி ஓராண்டில் முதல் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. இவருக்கோ பேர் சொல்ல ஆண் குழந்தை வேண்டு மென்ற ஆசை. விடாமல் முயன்று கொண்டே இருந்தார். விளைந்ததோ இன்னும் நான்கு பெண்குழந்தைகள் தான். மனிதன் அரண்டு போய் விட்டார். ‘ஐந்து பெண்கள் பிறந்தால் அரசனும் ஆண்டி என்பர். இந்நிலையில் நான் ஓட்டாண்டியாக வல்லவோ ஆகிவிடுவேன். போதுமடா சாமி‘ என்று தன் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
  இவர் திண்ணையில் வெற்றுடம்புடன் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்த வண்ணம் நாள் முழுதும் தெருவில் போவோர் வருவோரிடம் பேசிக்கொண்டே பொழித்தோட்டுவார்.
  துணைக்கு ஒரு வெற்றிலை செல்லப்பெட்டியும், ஒரு பித்தளை சொம்பில் தண்ணியும். சாப்பாடு நேரம் தவிர திண்ணையே அவரது உறைவிடம். அவர் மிராசுதார் என்னும் பெருமிதம் பேச்சில் ஒலிக்கும். எல்லோரையும் அழைப்பது ஒருமையில் தான். சமயத்திற்கு ஏற்றாற்போல் சில கெட்ட வார்த்தைகளும் சரளமாக வந்து விழும். அவரைப் பொறுத்தவரை காலம் சுகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

  முதல் பெண்ணிற்கு இருபத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. இரண்டாமவளுக்கு இருபது. இவர்களைக் கரையேற்றி இன்னும் மூன்றை கவனிக்க வேண்டுமே என்ற கவலை மாமியைப் பிடித்துக்கொண்டது. அவர் மாமாவைப் பிடுங்க ஆரம்பித்தார். அதனால் நாணி மாமா நேரிடையாகச் எங்கு நல்ல வரன் இருப்பதாக கேள்விப் பட்டாலும் அங்கு சென்றுவிடுவார். தரகர்களிடம் அவருக்கு அதிக நம்பிக்கையில்லை. தரகர்களை நம்பி பெண் கொடுக்கப்போய் விட்டு அவரது அத்தை மகள் ஓராண்டிற்குள்ளேயே வாழாவெட்டியாய் வீடு வந்து சேர்ந்தாள். அவள் கணவன் குடியும் கூத்தியுமாக இருந்ததால் இவளால் அங்கு வாழ முடியவில்லை. இதைப்பற்றி அந்த ஊரே அறிந்திருந்தும் ஒரு தரகரும் வாயே திறக்கவில்லை. அதனால் தன் மகளுக்கு எந்த ஒரு பொருந்தும் வரன் வந்தாலும் முன்னறிவிப்பின்றி தானே சென்று விசாரித்து முடிவு செய்வதென்பதில் உறுதியாய் இருந்தார்.

  1956 ஆம் வருடம். மெட்ராஸில் கவர்ன்மென்ட் உத்யோகத்தில் இருந்த பையனின் வரம் நன்றாக பொருந்தி இருந்தது. அவன் பெற்றோருடன் ஜார்ஜ் டவுனில் வசித்து வந்தான். நேரடியாக மெட்ராஸ் சென்று பையனையும் குடும்பத்தையும் பற்றி விசாரிக்க மாமா ஒரு கைப்பையுடன் கிளம்பி விட்டார். முதல் முறை மெட்ராஸ் வருவதால் கொஞ்சம் தயக்கம் இருந்ததென்னவோ உண்மைதான். இருப்பினும் தன் மகளின் வாழ்க்கைப் பிரச்சினை ஆயிற்றே. கிளம்பி வந்து விட்டார். ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்து கந்தசாமி கோயில் அருகில் ஒரு லாட்ஜில் தங்க முடிவு செய்தார். அவர் வந்து சேர்ந்த லாட்ஜ் ஒரு பழைய வீட்டை மாற்றி அமைத்தாற்போல் இருந்தது. இவருக்கு வாசல் திண்ணையை ஒட்டிய அறை. ஒரு கட்டில் மட்டும் தான் அந்த அறையில். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் வாடகை. சாப்பாடெல்லாம் வெளியில் தான்.
  மாமா குளித்து விட்டு வேட்டியையும் கோவணத்தையும் துவைத்து திண்ணையில் கொடி கட்டி காயப்போட்டு விட்டு சாப்பிட வெளியே சென்றார். அங்கு அருகிலிருந்த ஒரு வாடகை சைக்கிள் கடைக்காரர் பரிச்சயமானார். அவரிடம் ஒரு வண்டியை முழு நாளுக்கும் வாடகை பேசி எடுத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினார்.

  மெட்ராஸ் வித்தியாசமாக இருந்தது அவர் கண்களுக்கு. பார்க்க பார்க்க எல்லாம் வியப்பாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. இருட்ட ஆரம்பிக்கவும் அறைக்குத் திரும்பி வந்தால் வாசலில் உலர விட்டுச் சென்ற வேட்டியைக் காணோம். வெறும் கோமணம் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே ஓடினார் அங்கிருந்த வேலையாளைப் பார்க்க. ஒருவரும் தென்படவில்லை. அதிர்ந்து போய் விட்டார்.

  ‘என்ன இது? ரொம்ப மோசமான ஊரா இருக்கும் போலிருக்கே? கண் அசந்தா அரை வேட்டியையே உருவிடறானுங்களே. திருட்டுப் பசங்க. ரொம்ப ஜாக்கிரதையா இருந்து வந்த வேலையை முடிச்சுண்டு ஊரைப் பார்க்க ஓடிவிடவேண்டும்’ என தீர்மானத்திற்கு வந்தார். இருப்பதோ அரையில் கட்டி இருக்கும் வேட்டி மட்டும் தான். அதை தோய்த்து உலர்த்தி கட்டிக்கொண்டு நாளை வெளியே போகவேண்டும். வேறு வழியில்லாமல் இருட்டியதும் அந்த வேட்டியை துவைத்து திண்ணையில் தான் முன்னமேயே கட்டியிருந்த கொடியில் உலர்த்தினார். இதையும் யாராவது திருடாமல் இருக்க கோவணத்தைக் கட்டிக்கொண்டு திண்ணையிலே காவலுக்கு படுத்துக் கொண்டார். முன் ஜாக்கிரதையாக கொடியில் உலரும் வேட்டியின் ஒரு முனையை தன் அரைஞாண் கயிற்றிலும் இறுகக் கட்டிக்கொண்டார். ‘இப்பொழுது பார்ப்போம் எவன் திருடுகிறான் என்று’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டு ஒரு கைத்தடி சகிதம் திண்ணையில் படுத்திருந்தார். களைப்பில் கண் அயர்ந்து விட்டார். விடிகாலை வேளை யாரோ அரைஞாண் கயிற்றை இழுப்பதை உணர்ந்து எழுந்தால் எவனோ ஒருவன் வேட்டியை இழுப்பது தெரிந்தது.
  “திருட்டு ராஸ்கல்! நேத்துதான் ஒரு வேட்டிய திருடின. இன்னிக்கு அடுத்ததா? நான் கிராமத்தான்னா சும்பனா என்ன? நீ இன்னிக்கும் வருவேன்னு எதிர்பார்த்து தான் காத்திண்டு இருக்கேன். டாய், மாட்டினடா” என்று கத்திக்கொண்டு கைத்தடி சகிதம் நாணி மாமா எழுந்ததை எதிர்பார்க்காத திருடன் மிகவும் வேகமாக வேட்டியை இழுத்தான். அப்போது தான் மாமாவுக்கு தன் நிலைமை தெளிவாகியது. அவன் இழுக்கும் இழுப்பில் வேட்டியுடன் கட்டிய அரணாக்கயிறு அறுந்து விட்டால்?
  “கொம்மனாட்டி, நீ மட்டும் என்கிட்டே மாட்டின பொலி போட்டிடுவேன். விடுறா வேட்டிய” என்று கத்திக்கொண்டே இருந்த இடத்திலிருந்தே கையில் இருந்த கம்பை அவன் மேல் எறிந்தார். அது அவன் மேல் படாமல் தெருவில் போய் விழுந்தது. அவன் இழுக்க இழுக்க மாமாவிற்கு டென்ஷன் இன்னும் அதிகமாகியது.
  “டேய் டேய்! கடன்காரா, விட்டுடுடா. கோவணம் அதுல கட்டியிருக்குடா. இழுக்காதேடா, கட்டேல போன்றவனே. xxxxxxxxx Xxxxxx xxxxx ( இன்னும் பல கிராமிய மணம் கமழும் கெட்ட வார்த்தைகள்)”
  திருடனோ வேட்டியை இழுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தான். கடைசியில் அவன் வெகு வேகமாக இழுத்த இழுப்பில் அவர் அரைஞாண் கயிறும் அறுந்து கோவணமும் வேட்டியுடன் போய் விட்டது. மாமா ஒரு கணம் திகைத்துப்போய் நின்றார். அவருக்கு தர்மசங்கடம். இருக்கும் ஒரே வேட்டியும் கண்முன்னால் பறிபோகிறது. அதைத் துரத்தினால் மானமும் சேர்ந்தல்லவோ போய் விடும்.
  “கயவாளிப் பசங்க கோவணத்தைக் கூட விட மாட்டேங்கிறாங்களே. என்ன ஊருடா இது?” என்று கத்திக்கொண்டே தன் அறைக்கு ஓடி ஒரு டவலைக் கட்டிக்கொண்டு வெளியே ஓடி வந்தார். திருடன் அவருக்காக நிற்பானா என்ன? அவன் அதற்குள் மாமா விட்டெறிந்த கம்பையும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். பொழுது விடியும் நேரம். திருடன் முகம் ஓரளவு தெரிந்திருந்ததால் அவனைத் தேடிக்கொண்டு தெருத்தெருவாக சுற்றினார். ஒன்றும் பயனில்லாது போகவே மனமுடைந்து கந்தசாமி கோயில் வந்து சேர்ந்தார். நேரே முருகன் சந்நிதிக்கு சென்று உரக்க முறையிட ஆரம்பித்தார்.
  “முருகா! என்னய்யா உன் விளையாட்டு? மிலட்டூர்ல மிராசுதாரா வாகினியா இருந்த என்னை மெட்ராஸுக்கு வரவழைச்சு நிர்வாணமா நிக்க வச்சுட்ட. உன் பக்தனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏன் கொடுத்தாய்? இப்ப கட்டிக்க கூட துணி இல்லாம துண்ட கட்டிண்டு நிக்கிறேன். இதோட எந்த சம்பந்தியை எங்க தேடிண்டு போவேன்? உனக்கே இது சரி யென்று படறதா??”
  அவர் புலம்பலைக் கேட்ட கோயிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவர் அவரிடம் நெருங்கி விசாரித்து நடந்தவற்றை அறிந்து கொண்டார். மாமாவின் பால் இரக்கம் கொண்டு அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று புதுத்துணி உடுக்கக் கொடுத்து உபசரித்தார். அவர் லாட்ஜையும் காலி செய்து தன் வீட்டிற்கே வரும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றார். பின்னர் அவர் உதவியுடன் மாமா தேடி வந்த விலாசம் சென்று சம்பந்தம் பேசி முடித்தனர். எல்லாம் நல்ல படியாக நடந்ததை நினைத்து மாமாவிற்கு பரம சந்தோஷம்.
  அதன் பிறகு தனக்கு உதவி செய்தவருக்கும் கல்யாண வயதில் ஒரு பிள்ளை இருப்பதை அறிந்து அவனை தன் இரண்டாம் மகளுக்கும் சம்பந்தம் பேசினார். உதவியவருக்கும் மிக்க மகிழ்ச்சி. வெகு விரைவிலேயே பெண் பார்க்கும் படலம் முடிந்து இரண்டு பெண்களுக்கும் திருமணம் நிச்சயமாயிற்று.
  ஆயினும் அவர் மனைவிக்கு ஒரு சந்தேகம்.
  “ஆமாம், நீங்கள் யாரையுமே லேசில் விட மாட்டீர்களே, அந்த திருடனைப் பற்றி போலீசில் புகார் கொடுக்காமல் எப்படி விட்டிர்கள்?” என்று மனைவி கேட்டார்.
  “அடி அசடே! இன்னுமா உனக்கு புரியல. வந்தது திருடனே இல்ல. எப்போ கோமணத்தயும் கைத்தடியையும் தூக்கிண்டு ஓடினானோ அப்பவே அவன் யாருன்னு எனக்கு புரிஞ்சுடுத்து. அவன் என் முருகன் தான். கோவணத்தை மட்டுமல்லாது என் ஆணவத்தையும் எப்படி சேர்த்து பிடுங்கி விட்டான் பார்த்தாயா? கோயிலுக்குப் போய் அவன் காலடியில் விழுந்து கதறியதும் நான் ஒரு வரனுக்குப் போன இடத்தில் ரெண்டு வரனைக் கொண்டு வந்து நிறுத்தினான். அவனா திருடன்?”
  மாமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரைப் பொறுத்தவரை இரண்டு பெண்களை கரையேற்ற வழி செய்தாகிவிட்டது. இன்னும் மூன்று பாக்கி. தலை ஆட்டிக்கொண்டே உள்ளே சென்று விட்டார்.

  ‘மாமா சொல்வதே சரி என்பதா? அல்லது குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமல் சமாளித்தார் என்பதா?’ உங்களிடமே விட்டு விடுகிறேன்.
  அன்புடன்,
  RRG
  26/06/2020

  பி கு: வேட்டி திருட்டுப்போன ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதிய கற்பனைக் கதை.
   
  Craftykay likes this.

Share This Page