மழித்தல் நீட்டல் இரண்டும் இறை சார்ந்த இல்லற வாழ்க்கையில் உண்டு. விரதத்தில் முடி திருத்தாமல் தாடியும் மீசையுமாய் இருக்கும் சபரிமலை விரதம் உண்டு. பெண்கள் கருவுற்று இருக்கையில் கணவர் முடி திருத்தம் செய்ய மாட்டார்கள். இறைவனுக்கு நேர்ந்து முடி காணிக்கை செய்யும் மொட்டைப் பிரார்த்தனையும் உண்டு. முடியில் அப்படி என்ன இருக்கிறது. முக்காடு போட்டு பெண் அழகை மறைப்பது ஏனைய சமயங்களில் உண்டு. கேசம் அழகைக் கூட்டும் காட்டும் என்பதால் தலையில் துணியிடாமல் இருப்பது மாண்பன்று. அது கவரும் வசீகரம் என்று அவர் நடுவே கூறப்படுகிறது. ஆனால் நம் சமயத்தில் தலையில் முக்காடிடுதல் நல்ல நிலையில் நேரங்களில் இல்லறத்தார் செய்வதில்லை என்று தோன்றும். காஷாயம் உடுக்கும் சந்யாசிகளும் பண்டு கைம்பெண்களும் இத்தகைய பழக்கத்தைக் கைக்கொண்டனர். மற்றபடி தலையில் துணியிடுதல் நம்மிடையே கிடையாது. முடியிறக்கி மொட்டை போடும் பழக்கம் இறைவனுக்கு நம் நேர்ச்சை. மொட்டை அடித்தல் என்று சொல்லாமல் மொட்டை போடுதல் என்று தான் பெரியோர் சொல்வர். பிறக்கும் குழந்தை கருப்பையினுள்ளில் கிட்டிய எந்த சீவனற்ற உபரிகளையும் விட்டு சூரியன் இயற்கை எல்லாம் கண்டு புதிய உயிராக வேண்டும். அதனால் தலை முடியை காணிக்கை செய்கிறோம். தலைமுடி காணிக்கை செய்கையில் தலையில் முடியும் எல்லா நரம்புகளும் புத்துணர்வு பெறுகின்றன. ஆயுர் வேதம் சொல்கிறது. தலையில் நிறைந்திருக்கும் செருக்கு தலை தாழ்த்தி முடி அளிக்கும் போது குறையும். இறை முன் கைகுவித்து தலை தாழ்த்தி நிற்க நல்லது வரும். இந்தப் பணிவைத் தான் பெரியோர் இறப்பின் போதும் சடங்கில் காட்டுகிறோம். ஒரு விதத்தில் "எல்லாமற என்னை இழந்த நலம்" என்று பழனி வேலனுக்கு மொட்டை மூலம் குறிப்பால் தொடங்குகிறோம். இந்த மொட்டை என்றாலே நமக்கு திருமலை வாசன்தான் நினைவுக்கு வருவான். அங்கு முடி காணிக்கை இடத்தை கல்யாண கட்டா என்று அழைப்பார்கள். மொட்டை என்பது ஒரு நல்ல விஷயம் அல்ல என்பதை மாற்றி இறைக்கு நேர்ச்சை செய்வது நன்மை என்ற சிந்தை. ஆந்திரா மற்றும் தென் மாநிலங்களில் கேரளம் தவிர கிராமப்புறங்களில் பெண்கள்கூட முடி காணிக்கை தரும் வழக்கம் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மொட்டை திருமண் கோவிந்தா நாமம்தான். நம்மையும் பற்றிக் கொள்ளும் ஒரு உரத்த பக்தி திருமலையில் தான் நன்கு காணலாம். குல தெய்வ மொட்டை யாருக்கும் உண்டு. தவிர பிரார்த்தனை மொட்டை. பெருமாளுக்கு மொட்டை திருப்பதி. அம்பாளுக்கு மொட்டை சமயபுரம். சிவனுக்கு மொட்டை ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தலம் மஞ்சுநாத சுவாமி ஸ்ரீ சைலம். முருகனுக்கு மொட்டை எங்கும் உண்டு. பழநி ஜகப்பிரசித்தம். பிள்ளையாருக்கு மொட்டை பார்த்திருக்கிறீர்களா? சித்தூர் அருகே காணிப்பாக்கம் திருத்தலத்தில் நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் கணபதிக்கு உண்டு. கல்யாணம் காதுகுத்து மொட்டை எல்லாம் இந்தக் காணிப்பாக்கம் குட்டி பிரம்மசாரிப் பிள்ளை நல்லவிதமாய் நடத்தித் தருவான். நீர் வளம் இல்லாத பகுதியில் கரும்பு நெல் என்று விவசாயம் அவன் தந்த கேணியால்தான். மிஸ்டர் காணி தந்த கேணியால் இங்கு ஊர் வாழ்கிறது. இங்குள்ள மொட்டை உதர நிமித்தம் இட்ட பஹூக்ருத வேஷம் அன்று. அவனை எண்ணித் துதித்து "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்" என்று நம்பி நாளும் வரும் பக்தர் குழாம் சிறக்க அருளும் திறம். இந்தப் பொல்லாத உலகில் விக்னம் நீக்கி இல்லறத்தில் வெற்றி அருளும் மங்களம் நல்கும் மூன்று கடுத்த பிரம்மச்சாரிகள் அநுமன், ஆனைமுகன், ஐயப்பன். அவர் அடி தொழ பணிவுடன் பணிய நலமே. மொட்டை நாமம் கோவிந்தா எல்லாம் நன்மை தரும் சொற்களே. நாள் சிறக்க நாளும் சிறக்க நாமம் சொல்லுங்கள். நல்லதே வரும். JAYASALA 42