1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மண்மணம்!

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 20, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    முத்தமிழில் கடைத்தமிழாம்
    கூத்துயெனும் கிராமக்கலை!
    முத்தெடுத்துப் பார்த்திடவோர்
    வித்தையின்றி அழிகிறதே!
    சத்தியமாய்ச் சொல்லுகிறேன்,
    பித்தர்களேப் பழிக்காதீர்!
    சத்தமின்றி நாட்டுக்கலை
    அத்தனையும் இழக்காதீர் !

    எத்திறமுமில்லாத நடிகரெலாம்
    இத்தனை நாள் நமையாண்டார்!
    கூத்துயெனும் கலையழித்து,
    வெத்துத்திரைக் கவர்ச்சியிலே,
    சொத்து சேர்த்து வாழ்கின்றார்!
    வத்தல் தொத்தல் நடிகையெலாம்,
    மெத்தப்படித்த மேதையென,
    கெத்துக்காட்டி சிரிக்கின்றார் !

    கத்துக்குட்டித் திரைத்துறையார்
    மொத்தமாக நாட்டுக்கலை,
    எத்தனைதான் உள்ளதென்று
    இத்திறத்தார் அறிவாரோ ?
    வித்திடவோர் வழியுமின்றி,
    சோத்துக்கின்றி அலைகின்றார்,
    செத்து மண்ணில் வீழ்கின்றார்,
    கூத்துக்கலை அறிந்தவர்கள் !

    வில்லுப்பாட்டு வல்லவர்கள்,
    சொல்லில் திறமுள்ளவர்கள்,
    நல்லகதை பலவற்றைச்
    சொல்லித்தந்தப் பெரியவர்கள் !
    பல்கிவிட்டத் திரையூடகத்
    தொல்லைக்காட்சி அதனாலே,
    மெல்லமெல்ல அழிந்ததுவே,
    வில்லிசையாம் கலையதுவே !

    சரசரக்கும் தலைக்குடமும்,
    பரபரக்கும் ஆட்டமுடன்,
    கரகரவென சுழன்றிடுவார்,
    கரகம் வைத்தாடிடுவார்!
    பரபரப்பைக் கூட்டுபவர்,
    நரகவாழ்வு வாழ்கின்றார்!
    மரணமடைந்து விட்டதையோ
    கரகக்கலை- அறிவிலிகாள்!

    பாவைக்கூத்து அறிவீரோ ?
    அவையிரண்டு வகையாகும்!
    மோவாயைச் சொறியாதீர்!
    எவையென்று சொல்கின்றேன்!
    பாவையென்றால் பொம்மைகளே
    அவைத் தோலாலும்,மரத்தாலும்
    மேவிச்செய்த உருவங்களே !
    பாவிகளே பொம்மலாட்டப்
    பாவைக்கூத்தும் அழிந்ததுவே!

    கட்டைக்கால் குதிரைமேல்,
    பட்டுத்துணி உடுத்தபடி,
    கொட்டுமேளம் முழங்கிடவே,
    எட்டிப்பாய்ந்து ஆடிடுவார் !
    கொட்டிக்கைகள் தாளமிட்டு,
    தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பார்,
    கட்டைப்பொய்க்கால் குதிரையெனும்
    ஆட்டமதும் அழிந்ததுவே !

    ஆவிவந்து அவர்மேலே
    ஆவிர்பவித்த தென்னும்படி
    கூவியொலி எழுப்பிக்கொண்டு
    தேவராளன் ஆடிடுவார்,
    தேவராட்டித் துணையிருப்பாள்!
    தேவப்பிரசன்னம் என்னுமந்த
    மேவிநின்றக் குரவைக்கூத்தும்
    பாவிமக்காள் அழியவிட்டோம் !

    விரும்பும் மக்களெண்ணப்படி
    கருத்தறிந்தக் கட்டியங்காரன்
    திரைக்கு முன்பின் இருந்தபடி
    கருக்கதையை விளக்கிக்கூற
    அருமையாக நடித்திடுவார்த்
    தெருக்கூத்துக் கலைஞரெல்லாம்!
    பெருமையெல்லாம் அழிந்ததையா!
    சிரமப்பட்டு வாழ்கின்றார்!

    முருகனுக்குக் காவடிதான்
    நாரணர்க்கு உறியடிதான்
    மாரிமழைக்கு உடுக்கையடி
    கிராமக்கலை மாடுபிடி!
    திருவிழாவில் புலியாட்டம்
    உருமிமேளம் மயிலாட்டம்
    பெருமையுள்ளத் தாலாட்டும்
    அருமையான கிராமக்கலை !

    கும்மிப்பாட்டு,குலவைப்பாட்டு,
    பொம்மியெனும் குறத்திப்பாட்டு,
    பாம்பாட்டம்,ஒயிலாட்டம்,
    கம்புச்சிலம்பு,கோலாட்டம் ,
    நம்மினத்தார்க் கலையென்பதால்
    கம்மியில்லை நாட்டுக்கலை!
    செம்மைச்சிறப்பு அழியக்கண்டு
    விம்மிமனம் வெதும்புதையா !

    நாட்டுக்கலை பற்றியொரு
    பாட்டிற்சொல்லி முடியாது !
    ஊட்டிவளர்த்தத் தாயாகும்,
    நாட்டுப்புறக் கலையாவும் !
    ஆட்சியிலே இருப்பவரும்
    மாட்சிமிக்கக் கலையிவற்றை,
    மீட்சிசெய்ய உதவவேண்டும்,
    காட்சியினி மாறவேண்டும்!

    பறையடித்தத் தமிழனென்றால்,
    கறைபடிந்தக் கூட்டமென்று,
    மறைவிதித்த மானக்கேடு,
    குறைகாணும் மனிதக்கேடு !
    முறைவகுத்து நாட்டுக்கலை
    திறத்தை மீட்டெடுத்திடுவோம் !
    இறைத்தன்மை உள்ளகலை,
    அறைகூவிச் சொல்வோமிதை!

    வறுமைக்குத் தள்ளப்பட்டு,
    சிறுமை வாழ்விலகப்பட்ட,
    அறமிக்க நாட்டுப்புறத்
    திறமிக்கக் கலைஞர்களை,
    இறுதிவரைப் போற்றிடவே
    உறுதிகொள்வோம் தமிழர்களே !
    மறந்துமிதைப் புறந்தள்ளோம்!
    மறத்தமிழின் மாண்புணர்வோம்!

    Regards,

    Pavithra
     
    kaniths, Jey and knbg like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆஹா மண்ணின் மணம் உள்ளத்தை துளைத்து விட்டது .வீதியில் ஆடுபவரை எள்ளி நகையாடும் கூட்டம் மூடிய அரங்கத்துள் கைகாசு கொடுத்து கண் கொட்டாமல் பார்ப்பார் .சிறிது நேரம்மீ கழித்து மீண்டும் வருகிறேன்
     
    Thyagarajan and knbg like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்பிற்குரிய வாசகர்களுக்கு,வணக்கம் !

    தமிழகத்தின் கிராமியக் கலைகளான நாட்டுப்புறக்கலைகள், மக்களின் அன்றாட வாழ்க்கையை,அவர்களின் எண்ணங்களை, திறமைகளை, எதிர்ப்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, வெற்றிகளை, தோல்விகளை- இப்படி எத்தனையோ உணர்ச்சிகளின் படிமங்களைத் தாங்கி வரக்கூடிய எளிய, கலைவடிவங்களாகும். பாமரமக்களின் மொழியிலே,அவர்களது எளிய வாழ்வு முறையோடு ஓத்திருப்பவர்களாகிய கூத்துக்கலைஞர்களால் நடித்தும்,பாடியும்,பேசியும்,ஆடியும் காட்டப்படக்கூடிய இந்தக் கலைகள் பெரும்பாலும் மண்ணின் மணத்தைச் சுமந்திருக்கும் மகத்துவமிக்கவை. பெண்களும்,ஆண்களும் தனித்தனியாகவும்,ஒன்றாக இணைந்தும் - ஊர்ப்புற மக்களின் சுக துக்க நேரங்களிலும் , சமயப்பொது நிகழ்வுகளின் போதும் - இந்தக் கூத்துகளை மாலையில் தொடங்கி இரவு வரை நடத்திக்காட்டுவார்கள். கதிரவன் மறைந்த நேரத்தில் தமது அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் பாட்டாளிகள்,இளைஞர்கள்,சிறார்கள், ஓய்வெடுக்கும் பெரியோர்கள்,வீட்டை நிர்வகிக்கும் தாய்மார்கள்- இப்படி எல்லோரும், சமுதாயத்தின் பலதரப்பட்டப் பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருபவர்களும், கிராமத்தில்/ஊரில் ஓர்ப் பொதுவிடத்தில் கூடி, இந்தக் கலைஞர்களின் கூத்தினை ரசிப்பார்கள்.

    இப்படிப்பட்ட உயர்ந்த கலைகள் தாமாக இன்று அழிந்துவிடவில்லை. காலத்தின் கட்டாயத்தால் அழியவிடப்பட்டுள்ளன. இயல் இசை கூத்து என்றிருந்த முத்தமிழ்- கூத்திலிருந்து- நடனம்,நாட்டியம்,நாடகம் என்று பரிணாமம் பல கண்டு இன்று, வெள்ளித்திரையென்றும்,
    சின்னத்திரையென்றும் சொல்லப்படும் காட்சி ஊடகங்களின் மாயப்பிடிக்குள் அகப்பட்டுக் கிடக்கின்றது. உயர்வானவற்றையும், உண்மைத்தன்மை உள்ளவற்றையும் கூத்துக்கட்டி நடத்தியக் கலைஞர்களை மெதுமெதுவே இந்தக் காட்சி ஊடகங்கள் அப்புறப்படுத்திவிட்டன. சில விதிவிலக்குகள் நீங்கலாகப் பெரும்பாலும் இந்தத் திரைக்கலைகள் மக்களின் மனத்தில் வக்கிர எண்ணங்களைத் தோற்றுவிக்கும்படியும், ஊக்கப்படுத்தும்படியுமே அமைந்துள்ளது வருத்தத்திற்குரிய உண்மை. இவ்விடம் நான் யாரையும்,எந்தக்கலையையும் புண்படுத்த வேண்டுமென்று இதைப் பதியவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.இதுவரை
    சொன்னதும்,இனிமேலும் எழுதியுள்ளதும் என் தனிப்பட்டக் கருத்துக்களே, அவைத் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லை.

    என்னுடைய சிறுபிராயத்தில் நான் வாழ்ந்த விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் இந்த கிராமியக் கலைகள் செவ்வையாக நிகழ்த்தப்பட்டு வந்தன. என்னுடன் பள்ளியில் பயின்ற மாணவர்களிலும் இந்தக் கலையை அறிந்திருந்தவர்கள் உண்டு. ஆண்டுவிழாக்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் அவர்கள் பங்கேற்றுப் பள்ளிக்குப் பெருமையும்,பரிசும் ஈட்டித் தந்திருக்கின்றனர். அது ஒரு கனாக் காலம். அவர்களும் இன்றையப் பொருளாதாரச் சுழலில்,சூழலில் சிக்கித் தங்களது கலையைக் கைவிடும்படியானதைக் கண்டு மனம் நொந்திருக்கிறேன். இப்போதே இப்படியென்றால் இன்னும் இருப்பது வருடங்கள் கழித்து,இந்தக் கலையைப் பற்றியெல்லாம் பேசினால் புரிந்துகொள்ளக் கூட நமக்குத் தெரியாமல் போய்விடும். இது தான் நாகரிக வளர்ச்சி நமக்குத் தந்த பரிசா ? நாகரிகமும்,நாட்டுப்புறமும் ஒன்றோடொன்று இணைந்து இங்கே தழைக்க வழியே இல்லையா ? விடை தெரியா வினாக்கள் என்னுள்..

    பகட்டுகளை இரசிக்கத் தலைப்பட்டத் தமிழர்கள் நாளடைவில் நமது வேரில் ஊறிக்கிளர்ந்த நாட்டுப்புறக் கலைகளை மறந்து போய்விட்டோம். அந்தக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்கும்,கேலிக்கும் உரியதாக்கிவிட்டோம். எப்போதோ வரக்கூடிய விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனையும்,அனிதா மற்றும் புஷ்பவனம் குப்புசாமிக்களையும்,கொல்லங்குடி கறுப்பாயிகளையும் ,பரவை முனியம்மாக்களையும்- அவ்வப்போது கௌரவிப்பதாய் நடித்து அப்போதைக்கப்போதே மறந்தும் போய்விட்டோம்.

    தாரையும்,தப்பட்டையும்,பறையும்,உறுமிமேளமும்,கம்பும்,சிலம்பும்,கட்டையும் கோலும்,குலவையும்,கும்மியும்,ஏர்ப்பாட்டும் ஏன் ஒப்பாரியும் - இவையெல்லாமும் கலையின் பல்வேறு வடிவங்கள் தானென்பதையும் மறந்துவிட்டோம் அல்லது மறக்கடிக்கப்பட்டோம்.
    நமது சொந்த மண்ணின் அவ்வப்போதைய ஆட்சியாளர்கள் தம்மை முன்னிறுத்திக் கொள்ள ஊறுகாயைப் போல இந்த நாட்டுப்புறக்கலைகளையும்,கலைஞர்களையும் தொட்டுக்கொண்டு, ஊக்குவிப்பதாய் நடித்து வருகிறார்கள். அந்த நாடகக்காட்சியின் முடிவிலே அந்தக் கலைகளும்,கலைஞர்களும் இருக்குமிடம் தெரியாதபடி அவரவர் சொந்த வாழ்வின் இருளிலே மூழ்கவிடப்படுகிறார்கள். அவர்கள் உண்டார்களா,உறங்கினார்களா என்ற அக்கறை நமக்கெதற்கு ? வாரம் ஐந்து நாட்கள் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தோமா, வாரயிறுதிகளில் திரைப்படங்களும்,விவாத மேடைகளும் கண்டோமா- அவற்றின் அபத்தங்களை நன்கு இரசித்தோமா,உண்டோமா,உறங்கினோமா என்று நாம் நம் அன்றாட வாழ்வில் மூழ்கிவிடுவோம்.

    நடைமுறைக்கு இதுவே ஏற்றவழியாக இருப்பினும், நமது மண்ணின் பாரம்பரியத்தையும், மொழியின் சிறப்பையும்,இனத்தின் தன்மையையும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பு நமக்கிருப்பதைத் தட்டிக்கழிக்கக்கூடாது. அதுவும், தம் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்,தாமாக முயன்று தம் குழந்தைகளுக்கு நமது மொழியறிவையும்,பண்பாட்டையும் கற்றுத்தரவில்லையென்றால், அவர்கள் மிகப்பெரிய பாரம்பரியக் கருவூலத்தை இழக்க நேரிடும். அது நமது வேருக்கு நாமே வெந்நீர் ஊற்றிக் கொள்வதற்குச் சமமாகும். அந்நிய மண்ணில் பிழைக்க வந்திருந்தாலும், அவர்களது கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தாலும், நாம் நம்முடைய தமிழ்ப்பண்பாட்டை மறக்கவோ,மறுக்கவோ கூடாது. நம்மால் இயன்றவரை இதுதான் நமது பண்பாடு என்பதை நம் இளந்தலைமுறையினர்க்கு எடுத்துச் சொல்லிவிட வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, கற்றுக்கொள்வதும் ,காப்பாற்றுவதும் -அல்லது மறுத்துப் புறந்தள்ளுவதும் அவரவர் விருப்பம். நாம் நமது கடமையைச் சரிவர செய்வது நலம்.

    இந்த எண்ணத்தில் தோன்றியதையேக் கவிதை வரிகளாய்ப் பதிந்துள்ளேன். வாசகர்கள் படித்து,தமது கருத்துகளையும்,மேலும் இந்தக் கலைகள் பற்றித் தாம் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் இவ்விடம் பதிந்தால்,மகிழ்ச்சி.
    தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    kaniths and knbg like this.
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    wow Pavithra dear......awesome....!
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா இன்னொரு வருந்த தக்க விஷயம் .திருமண வீடுகளில் இப்போது நாதஸ்வரம் தவிர்த்து விட்டு அடுத்த மாநிலத்தின் பாரம்பரியமான ஜண்டை மேளம் முழங்குகிறது .கோயில் திருவிழாக்களிலும் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது .மனது வலிக்கிறது .
     
    kaniths likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,564
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Avery timely painstaking thought provoking thread highlighting tamilian heritage and treasure.
    I enjoyed reading it.
    Thanks and Regards.
    God Bless Us All.
    V Thyagarajan
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you,Bhargavi ! Hope you are doing good.

    Thank you for your feedback and blessings,Sir !
    உறங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் உறங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எவ்வாறு எழுப்புவது ?
    தங்கள் கருத்துக்களையும்,மனக்குமுறலையும் பகிர்ந்ததற்கு நன்றி பெரியம்மா ! கிராமியக் கலைகள் சிறப்பாக நடத்திக்காட்டப்பட்டு வந்த பொழுதுகளான கோவில் திருவிழாக்கள் இப்போதெல்லாம் குடுமிப்பிடி சண்டைக்களங்கள் ஆகிவருவது வேதனைக்குரிய செய்தி. எல்லாம் மனிதர்கள் நாகரிகம் வளர்த்துக் கொண்டாலும்,பண்பாடு மறந்ததையேக் குறிக்கின்றது.

    நல்லவேளை, வெஸ்டர்ன் ம்யூஸிக்கை (அதைக் குறை சொல்வது நோக்கமில்லை) கம்ப்யூட்டர் ஸிஸ்டத்தில் போட்டுத் தாக்கிக் கல்யாண வீடுகளில் களேபரம் செய்யாமல், அண்டை மாநிலத்து ஜண்டை மேளத்தையாவது வாசிக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

    நகைச்சுவையாகச் சொன்னாலும், உங்கள் வருத்தமும் எனக்குப் புரிகின்றது
    "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற பாரதிக்கு, நம் தமிழரகள் இப்படி அடுத்தவர் கலையைக் கொண்டாடும் அதே சமயத்தில் தமது பாரம்பரியத்தைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிடுவார்கள் என்று தெரிந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ ? மெல்லத் தமிழினிச் சாகும் என்றது மொழிக்கு மட்டுமல்ல அவளின் கலைக்குழந்தைகளுக்கும் தான். வந்தாரை வாழவைக்கும் அதே நேரத்தில்,இந்த மண்ணின் மைந்தர்களையும் நாம் தானே ஆதரிக்க வேண்டும் ?
     
    kaniths and periamma like this.

Share This Page