1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புரியாத சம்பிரதாயங்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Aug 2, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,312
    Likes Received:
    13,071
    Trophy Points:
    615
    Gender:
    Male
    புரியாத சம்பிரதாயங்கள்

    திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார்.

    அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூவினேன்.

    அவர்கள் போன பிறகு மனைவி என்னிடம், ‘‘அசடாக இருக்கிறீர்களே! அட்சதையை வந்தவர்களின் தலையில் அல்லவா போட வேண்டும், ஆசீர்வதிப்பதுபோல!’’ என்றாள்.

    ‘‘நீ டபிள் அசடு! வந்தவருக்கு அறுபது வயசுக்கு மேலிருக்கும். எனக்கு நாற்பதுதான். ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்’ கேஸ். நானாவது, அவர்கள் தலையில் அட்சதை போட்டு ஆசீர்வதிப்ப தாவது! உளறாதே!’’ என்றேன்.

    மனைவியும் என் வாதத்திலுள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டு, ‘‘ஒருவேளை, அதை அவர்கள் கையில் கொடுத்து, நம் தலையில் போடச் சொல்லியிருக்கணுமோ?’’ என்றாள்.

    இப்படித்தான்... வாழ்க்கையில் பல விஷயங்கள் நமக்குப் புரிபடுவதே இல்லை.

    என் சந்தேகங்களை எப்போதும் தீர்த்து வைக்க, இருக்கவே இருக்கிறான் நண்பன் நாராயணன். அவனிடம் இதுபற்றி விசாரித்தேன்.

    ‘‘பத்திரிகையுடன் வரும் அட்சதையை நீயும் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாது. வருகிறவர்களின் தலையிலும் போடக் கூடாது. அது ஒரு சமிக்ஞை!’’ என்றான்.

    ‘‘அதென்ன சமிக்ஞை?’’

    ‘‘அதாவது, கல்யாணத்தன்று சாப்பாட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்று அர்த்தம்!’’

    ‘‘நான்தான் காலை டிபன், மதியச் சாப்பாடு இரண்டுக்குமே தயாராக இருக்கிறேனே! சரி, சாப்பாட்டுக்கு வர வேண்டாம், டிபனுக்கு மட்டும் வந்தால் போதும் என்ற அபிப்ராயம் இருந்தால், அட்சதைக்குப் பதில் பட்டாணிக் கடலை மாதிரி ஏதாவது வைத்துக் கூப்பிடுவார்களா?’’ என்றேன்.

    அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

    இது மாதிரி சம்பிரதாயங்கள், ரகஸி யார்த்தங்கள் (ரகஸியா என்றதும் ஜொள்ளு விடக் கூடாது!) எனக்குப் புரிவதில்லை.

    சில பேர் ஏதேனும் விசேஷத்துக்கு அழைக்க வருவார்கள். குங்குமச் சிமிழை நீட்டிவிட்டுப் பசு மாதிரி தங்கள் நெற்றியை கனிவுடன் நம் அருகே காட்டுவார்கள். குங்குமத்தில் ஒரு துளி நாம் இட்டுக்கொண்டு அவர்களுக்கும் இட்டுவிட வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம்.

    அதுவும், கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்தால், நெற்றியில் மட்டுமே இட்டுவிட வேண்டும். வகிட்டில் குங்குமம் தீற்றிக்கொள்வது மணமான பெண்களுக்கு மட்டுமே உரியது.

    சில பெண்கள், சடாரென்று ஜாக்கெட் டுக்குள் கையை விட்டு தாலியை வெளியே எடுத்து, இரண்டு கட்டை விரல்களாலும் சரடைப் பிடித்துக் கொள்வார்கள். உடனே நாம், ‘‘ரொம்ப அழகாக இருக்கே? எப்போ பண்ணினது? எங்கே வாங்கினது? எத்தனை பவுன்’’ என்றெல்லாம் அபத்தமாகக் கேட்டுக் கொண்டு இராமல், அவர்களின் மாங்கல் யத்தில் துளி குங்கு மத்தை இடவேண்டும்.

    நவராத்திரியின் போது வாழ்கைக்கோ, நடைமுறைக்கோ கிஞ்சித்தும் உபயோகப் படாத சின்னஞ்சிறு கண்ணாடிகள், வாரவே வாராத குட்டி சீப்புகள், அடாஸான கண்ணாடி வளையல்கள் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுத் தருவார்கள். அந்தப் பொருள்களை வைத்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாது. அவற்றைப் பிறத்தியார் தலையில் கட்டவும் முடியாது.

    என்ன பொருள் பரிசாகத் தரப்படுகிறது என்று இப்போதெல் லாம் தெரியவே மாட்டேனென்கிறது.எல்லாவற்றுக்கும் மேலே பளபளவென்று ஒரு கிஃப்ட் பேப்பர் சுற்றி, சுலபமாகப் பிரிக்க முடியாதபடி டேப் போட்டு ஒட்டி விடுகிறார்களே!

    கடைசியாக என் மனோபுத்திக்கு எட்டாத ஒரே ஒரு சம்பிரதாயத்தைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

    நண்பர் ஒருத்தர் வீட்டு நிச்சயதார்த்த விழா. நானும் நாராயணனும் போயிருந் தோம்.

    ஒரு டபரா நிறைய நெல்லும், அதில் ஒரு நாலணாக் காசும் போட்டுக் கொண்டு வந்தார் உறவினர். ‘மடியைப் பிடியுங்கள்’ என்றார்.

    பாண்ட் போட்டுக் கொண்டு இருக்கிறவனுக்கு மடியாவது, கிடியாவது!

    ‘‘என்ன விஷயம்?’’ என்றேன்.

    ‘‘நெல்லு தர்றது சம்பிரதாயம். இதை நீங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போகணும்’’ என்றவர், கைக்குக் கிடைத்த ஒரு காகிதத்தை எடுத்து (அது கசங்கல் மட்டு மல்ல, கிழிசலும்கூட!), நெல்லை அதில் கொட்டி காமாசோமா வென்று சுருட்டி, எங்கள் கையில் திணித்து விட்டார்.

    ‘‘எதுக்குடா நெல்லு?’’ என்றேன். ‘‘நான் என்ன விவசாயியா? எந்த வயல்ல கொண்டு போய் விதைக்கப் போறேன் இதை? அல்லது, இந்தத் துளி நெல்லைக் குத்தி அரிசி பண்ணிச் சாதம் வடிச்சு சாப்பிட முடியுமா? பொட்டலம் வேறு சிந்தறதேடா!’’ என்று எரிச்சல் பட்டேன்.

    ‘‘இப்படிக் கொடுக்கிறது ஒரு சம்பிரதாயம். இதைக் கொண்டு பயிர் பண்ணி, நாம் பணக்காரராக ஆக வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள்’’ என்றான்.

    ‘‘சரி, நீயே டபுள் பணக்காரன் ஆகிக்கோ! இதைப் பிடி’’ என்று அதை அவனிடம் நைஸாகத் தள்ளிவிடப் பார்த்தேன்.

    ‘‘அட, நீ வேற! லட்சுமியை அலட்சியப் படுத்தாதே!’’ என்று பயமுறுத்தியவன், ‘‘ஒண்ணு பண்ணு! இதைக் கொண்டு போய் உங்க வீட்டு அரிசி டின்லே போட்டுவிடு’’ என்றான்.

    அது நல்ல யோசனையாகப் பட, அப்படியே செய்தேன். நெல் தனியாகத் தெரியப் போகிறதே என்று அரிசி டின்னை பலமாகக் குலுக்கிக் கலக்கி விட்டேன். விளைவு?

    ‘‘வழக்கமாக இவ்வளவு நெல்லு இருக்காதே அரிசியிலே’’ என்று என் மனைவி, ஒவ்வொரு தடவை சமைக்க அரிசி எடுக்கும்போதும் ஆச்சர்யப்படத் தொடங்கிவிட்டாள்.

    அதோடு நிறுத்திக் கொண்டால் பரவா யில்லை. முறத்திலே அப்பப்போ கொஞ்சம் அரிசியைக் கொட்டி, ‘‘இதிலிருக்கிற நெல்லை எல்லாம் கொஞ்சம் பொறுக்கி எடுங்கோ’’ என்று நெல் பொறுக்கும் வேலையை என் தலையில் கட்டிவிட்டாள். ‘பொறுக் கினார் பூமி ஆள்வார்’ என்று நானும் அந்த அரிசி டின் காலியாகிற வரைக்கும் நெல் பொறுக்கிக்கொண்டு இருந்தேன்.

    இப்படிப் பெற்றதுகளால் நான் கற்றது என்னவென்றால், எந்தச் சம்பிரதாயமாக இருந்தாலும், அதற்கான விளக்கத்தத்தையும் கூடவே கேட்டுத் தெரிந்துகொண்டு விட வேண்டும்; அப்படி, அது நமக்கு உபத்திரவம் தருவதாக அமையுமே யானால் தாட்சண்யம் இன்றி, பயம் இன்றி, அதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட வேண்டும் என்பதே!

    - பெற்றதும் கற்றதும் - பாக்கியம் ராமசாமி

    சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

    வலையில் சுட்டது
     
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,312
    Likes Received:
    13,071
    Trophy Points:
    615
    Gender:
    Male

Share This Page