1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பழமொழி விளக்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by saidevo, Jul 13, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    151. பழமொழி: இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
    பொருள்: நீ தூண்டித் துருவி ஆராய்வதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.

    விளக்கம்: பூராயம் என்றால் ஆராய்ச்சி, இரகசியும், விசித்திரமானது என்று பொருள். உன் ஆராய்ச்சியில் ஒன்றும் குறைவில்லை, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது.

    *****

    152. பழமொழி: ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
    பொருள்: வெங்காயம் புதிதாக, ஈரமாக இருந்தாலும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான்.

    விளக்கம்: மிகவும் கெட்டிக்காரத்தனமாக விமரிசனம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது. மரபு வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது.

    *****

    153. பழமொழி: ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
    பொருள்: ஊசி வாங்கச் சென்றவன் அதன் எடையை நிறுத்துக் காட்டச் சொன்னானாம்!

    விளக்கம்: அற்ப விஷயங்களைக் கூட சந்தேகத்துடன் ஆராய முனைபவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    154. பழமொழி: எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
    பொருள்: சாப்பிட்டபின்னர் இலகளை எடுக்கச் சொன்னபோது எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று இலைகளை எண்ணினானாம்.

    விளக்கம்: தன் வேலைக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம்கொண்டு நேரத்தை விரயம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    155. பழமொழி: குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.
    பொருள்: குதிரை பார்க்க நலமுடன் இருக்கிறது, ஆனால் அதன் சுழி சரியில்லை.

    விளக்கம்: குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி.

    *****

    156. பழமொழி: புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
    பொருள்: இரவலாகக் கொடுத்த எருதினை அது உழுதுமுடித்தபின் பல்லைப் பார்த்து சோதனை செய்ததுபோல.

    விளக்கம்: அன்பாக உதவியவர்களிகளின் உதவியில் குற்றம் கண்டுபிடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    157. பழமொழி: நிழல் நல்லதுதான் முசுறு கெட்டது (அல்லது பொல்லாதது).
    பொருள்: நிழலில் நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் செவ்வெறும்புகளின் கடிதான் தாங்கமுடியவில்லை.

    விளக்கம்: முசுறு என்பது முசிறு என்ற சொல்லின் பேச்சுவழக்கு. முசிறு என்பது சிவப்பு எறும்பு வகைகள். நிழல் தரும் மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும்!

    *****

    158. பழமொழி: முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
    பொருள்: தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை ஆராய முடியுமா?

    விளக்கம்: ஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது.

    *****

    159. பழமொழி: ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?
    பொருள்: நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா?

    விளக்கம்: சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள்.

    *****

    160. பழமொழி: ஒற்றைக் காலில் நிற்கிறான்.
    பொருள்: விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.

    விளக்கம்: ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

    *****
     
  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    161. பழமொழி: மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
    பொருள்: எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன்.

    விளக்கம்: வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி.

    *****

    162. பழமொழி: கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?
    பொருள்: நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ?

    விளக்கம்: கல்யாணத்துக்கு முன்பு அம்மா அப்பாவை நேசிக்காத பிள்ளை, மணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்பு நேசிப்பது அரிது.

    *****

    163. பழமொழி: கோல் ஆட, குரங்கு ஆடும்.
    பொருள்: எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

    விளக்கம்: ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும்.

    *****

    164. பழமொழி: தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
    பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தந்தாலும் அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும். வாயிலும் கையிலும் கண்டிப்புக் காண்டினால் வராது.

    விளக்கம்: முன்னுள்ள பழமொழிக்கு இந்தப் பழமொழியே முரணாகத் தோன்றுகிறதே? ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. இயற்கையில் ஒழுங்கு இருந்தால் கண்டிப்பால் அது சிறக்கும்.

    *****

    165. பழமொழி: உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
    பொருள்: சுற்றமும் நட்பும் தாங்கமுடியாத தொல்லைகள் ஆகும்போது பாதிக்கப்பட்டவன் சொன்னது: உங்கள் உறவைவிட மரண்மே மேல்!

    விளக்கம்: மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பது கருத்து.

    *****

    166. பழமொழி: ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.
    பொருள்: அவர் அடித்தாலும் பரவாயில்லை, ஏசினால் தாங்கமுடியாது.

    விளக்கம்: பட்டுக்கொள்ளலாம் என்ற பிரயோகம் இனிமை. அடி வாங்குதல் இன்று வழக்கில் இருந்தாலும், பணிந்து அடி பட்டுக்கொள்ளுதல் என்பதே சரியாகத் தொன்றுகிறது. வாங்குவதைத் திருப்பிக் கொடுக்க முடியுமோ? அல்லது பெற்றுக் கொள்வது அடி என்றால் அது ஒரு யாசகம் ஆகாதோ?

    தீயினாற் சுட்டபுண் ஆறும் ஆறாது
    நாவினாற் சுட்ட வடு

    என்ற குறளினை பழமொழி நினைவூட்டுகிறது.

    *****

    167. பழமொழி: காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.
    பொருள்: நச்சரிக்கும் ஒருவன் தான் கேட்பதைப் பெறாமல் விடமாட்டான்.

    விளக்கம்: விடக்கண்டானிடாம் கொடாக்கண்டனாக இருப்பது கடினம்!

    *****

    168. பழமொழி: சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
    பொருள்: வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான்; பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான்!

    விளக்கம்: வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப் படுகிறது.

    *****

    169. பழமொழி: கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?
    பொருள்: ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா?

    விளக்கம்: குறுணி என்பது எட்டுப்படி கோண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது கருத்து.

    இதுபோன்று இன்னும் சில:
    செருப்பால் அடித்து, பட்டுப் புடவை கொடுத்தாற்போல.
    பாப்பாச்சால அடித்து, பருப்பும் சோறும் போட்டதுபோல. (பாப்பாச்சு = பாப்பாச்சி = செருப்பு)
    விளக்குமாற்றால் அடித்து, குதிரையோடு தீவட்டியும் கொடுத்தாற்போல.

    *****

    170. பழமொழி: கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
    பொருள்: கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும்.

    விளக்கம்: விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து.

    *****
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    171. பழமொழி: இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
    பொருள்: இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?

    விளக்கம்: பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப் பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.

    *****

    172. பழமொழி: ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?
    பொருள்: ஒருநாளைக்கு மட்டும் போடும் பெண் வேஷத்துக்காக நான் என் மீசையை இழக்கவேண்டுமா?

    விளக்கம்: பெண் ஆண்வேடம் போட்டால் மீசை வைத்துக்கொள்வது எளிது. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம். சின்ன லாபத்துக்காக ஒரு அரிய உடைமையை எப்படி இழப்பது என்பது கேள்வி.

    *****

    173. பழமொழி: கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
    பொருள்: ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு!

    விளக்கம்: ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது.

    *****

    174. பழமொழி: பட்டும் பாழ், நட்டும் சாவி.
    பொருள்: நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. நான் நட்ட பயிரும் நெல்மணிகள் திரளாமல் பதராயிற்று.

    விளக்கம்: இது ஒரு மிக அழகான பழமொழி. இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். நெல்மணிகள் திரண்டு காய்க்காமல் வெறும் வைக்கோலாகவே உள்ல கதிர்களுக்குச் சாவி என்ற பெயர் எத்தனை வளமானது! chaff என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம். சாவி என்றால் வண்டியின் அச்சாணி என்று இன்னொரு பொருள் உண்டு.

    அதுபோலப் பட்டு, நட்டு என்ற சொற்களைப் பெயர்ச்சொற்களாக இன்று நம் கவிதைகளிலேனும் பயன்படுத்துகிறோமா? பாடுபட்டு, நாற்று நட்டு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும். அல்லது பட்டு என்றால் பட்டுத் துணி, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம். இந்த வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக நம் உழவர்கள் பயன்படுத்துவதில் எவ்வளவு நயம் பாருங்கள்!

    *****

    175. பழமொழி: அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.
    பொருள்: அப்பாசுவாமியை விட ஒரு கஞ்சனை நீங்கள் பார்த்ததுண்டா?

    விளக்கம்: அந்தக் காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது!

    *****

    176. பழமொழி: இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
    பொருள்: கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று சொல்லுவது.

    விளக்கம்: பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள். இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.

    *****

    177. பழமொழி: இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
    பொருள்: நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான்.

    விளக்கம்: ஒரு மாமியாரின் அங்கலாய்ப்பு இது!

    *****

    178. பழமொழி: ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
    பொருள்: இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன!

    விளக்கம்: நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.

    *****

    179. பழமொழி: கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
    பொருள்: ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.

    விளக்கம்: தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை இது! வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்திதான்.

    *****

    180. பழமொழி: உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
    பொருள்: வடநாட்டில் இருந்து வந்த பைராகி சந்நியாசி மேசையில் அமரவைக்கப் பட்டு உணவால் நன்கு உபசரிக்கப் பட்டுத் தின்பான். உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டியாகிய நான் வாங்குவதோ வசவும் உதையும்.

    விளக்கம்: பைராகி என்பவன் சிவனை வழிபடும் வடநாட்டுத் துறவி. வீரமுஷ்டி என்பவன் வாள் முதலிய ஆயுதங்கள் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி. ’பைராகி’ என்றதற்கு பதில் ’சிவ பிராமணன்’ என்றும் பழமொழியில் வழக்குள்ளது.

    *****
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    181. பழமொழி: உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.
    பொருள்: பொதி சுமக்கும் ஓர் எருதுடன் அடை மழையில் கால்கள் இறங்கும் சேறு நிறைந்த சாலையில் செல்வது போன்ற சிரமம் (இதற்குத்தானா)?

    விளக்கம்: இந்தப் பழமொழியின் கவிதை தீட்டும் ஓவியம் ஓர் ஆற்புதம்! ஏற்கனவே காலிறங்கும் சேறு நிறைந்த சாலை. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. இந்த மழையில் அந்தச் சாலை வழியே, தனியே, அதுவும் ஒரு பொதிமாடை இழுத்துக்கொண்டு, இதைவிடச் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து செல்வது போல. எதற்காக இது? இந்தச் சிறு லாபத்திற்காகவா?

    *****

    182. பழமொழி: எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
    பொருள்: எண்ணை எடுப்பதற்காக எள்ளை நன்கு வெய்யிலில் காயவைப்பர். எள்ளுபோல உடல்வருத்தி எலிப் புழக்கையும் காய்வது எதற்காக?

    விளக்கம்: ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

    *****

    183. பழமொழி: ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
    பொருள்: பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல.

    விளக்கம்: இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள்.

    *****
    காரியம் சின்னது, முயற்சி மிகப் பெரியது
    ஒரு சின்னக் காரியத்துக்காகப் பெரும் முயற்சி செய்வது பற்றிய பழமொழிகள் (தாமே விளங்குவன):

    01. அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனமா?
    02. ஆட்டுக்குட்டிக்கு ஆனையைக் காவு கொடுக்கிறதா?
    03. ஆனையை விற்றுப் பூனைக்கு வைத்தியம் பார்க்கிறதா?
    04. இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
    05. ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கறதா?
    06. எலிவேட்டைக்குத் தவிலடிப்பா?
    07. கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?
    08. கோழி அடிக்கிறதுக்குக் குறுந்தடியா?
    09. கோழி முடத்துக்குக் கிடா வெட்டிக் காவு கொடுக்கிறதா?
    10. சுடு கெண்டைக்கு ஏரியை உடைக்கிறதா?
    11. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதா?

    *****

    சிறிதாக இருப்பனவற்றின் பெரும் பயன்கள்
    அற்பமாகத் தோன்றுவதால் அதை அசட்டை பண்ணாதே பற்றிய பழமொழிகள் (தாமே விளங்குவன):

    01. அச்சாணி (அல்லது தேராணி/சுள்ளாணி/கடையாணி) இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
    02. அருகம் கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
    03. அற்பத் துடைப்பமானாலும் உள்தூசியை அடக்கும்.
    04. ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
    05. ஆனை வேகம் அங்குசத்தினால் அடங்கும்.
    06. நீரச் சிந்தினாயோ சீரைச் சிந்தினாயோ?
    07. உப்பச் சிந்தினாயோ துப்பைச் சிந்தினாயோ?
    08. பல துளி பெரு வெள்ளம்.

    சின்னத் தீமைகள் பெரிய நன்மையை அழித்துவிடும்
    01. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
    02. ஆயிரம் குணம் ஒரு லோபக் குணத்தால் கெடும்.
    03. கலப் பாலுக்குத் துளிப் பிரை.
    04. காணி ஆசை, கோடி கேடு.
    05. நெருப்பு சிறிது என்றால் முந்தானையில் முடியலாமா?

    சின்ன வழிகளால் பெரிய இலக்குகளை அடைய முடியுமா?
    01. ஆனை வாலைப் பிடித்துக் கரை ஏறலாம், ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா?
    02. கப்பல் ஓட்டிப் பட்ட கடன் நொட்டை நூற்றா விடியும்? [நொட்டை=குறை]
    03. குள்ளனைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறான்.
    04. சீப்பை ஓளித்துவைத்தால் கல்யாணம் நிற்குமா?
    05. நரி வாலைக்கொண்டு கடம் ஆழம் பார்க்கிறதுபோல.
    06. நாய் குலைத்து நத்தம் பாழாகுமா? [நத்தம்=கிராமம்]
    07. மின்மினிப் பூச்சி வெளிச்சத்துக்கு இருள் போகுமா?

    *****
     
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    184. பழமொழி: கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
    பொருள்: ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது.

    விளக்கம்: குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பதக்கு, இரண்டு மரக்கால். ஒரே தடவையில் குறுணி நாழியில் பதக்கு நாழியளவு நெல்லினை அளக்கமுடியுமா? கொட்டிக் கொட்டி அளந்தால் முடியுமே என்று தோன்றலாம். அப்படியானால் பழமொழி தப்பா? குறுணியில் கொட்டிக் கொட்டி பதக்கு அளவு அளக்கும்போது பத்க்கால் கொட்டி அளந்தால் எவ்வளவு அளக்கலாம்? எனவே சிறியோர் என்றும் பெரியோர் ஆகார் என்பது செய்தி.

    *****

    185. பழமொழி: ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
    பொருள்: ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்?

    விளக்கம்: அம்மை என்றால் தாய், பாட்டி. அம்மையார் என்றால் பாட்டிதான். அதாவது, அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?

    *****

    186. பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
    பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?

    விளக்கம்: உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.
    வன்னியர் தளம் Vanniar Thalam: உடையாà®°்பாளையம் சமஸ்தானத்து அரண்மனை.

    *****

    187. பழமொழி: சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
    பொருள்: சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண முனையாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும்?

    விளக்கம்: சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு? சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி.

    *****

    188. பழமொழி: கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
    பொருள்: ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல.

    விளக்கம்: குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    189. பழமொழி: வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
    பொருள்: மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல் செய்துவிட்டுப் பின் வராத கடன்களைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி.

    விளக்கம்: அது என்ன வலக்காட்டு ராமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. ராமன் என்பது ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.

    *****

    190. பழமொழி: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
    பொருள்: முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.

    விளக்கம்: இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அது கெட்டுவிடும் என்பதல்லவோ இதன் நேரடி விளக்கம்? அல்லது அமைதி நிலவியபோது ஒருவன் வலுச்சண்டைக்குப் போய் அமைதியைக் கெடுத்தானாம் என்பது இன்னொரு செய்தியாகக் கொள்ளலாம். பின்னால் உள்ள கதையை நோக்கிட விளங்கும்.

    ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள் ’மே’ என்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டி’ என்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்க தோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!

    பழமொழியின் பின் ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ’வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? வாசுகி கக்கிய நஞ்சை எடுத்து விழுங்க முற்பட்டுப் பார்வதி சிவனின் சங்கைப் பிடிக்க அவர் தன் கழுத்து ஊதி (வீங்கி) நீலகண்டனாகிச் சும்மா கிடந்த தன் சங்கைக் கெடுத்துக் கொண்டார் என்பது பழமொழியின் இன்னொரு குறிப்பு.

    *****

    191. பழமொழி: ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
    பொருள்: தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.

    விளக்கம்: ’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.

    *****

    192. பழமொழி: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
    பொருள்: ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.

    விளக்கம்: ’கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.

    ’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.

    *****

    193. பழமொழி: சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
    பொருள்: மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது, ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.

    விளக்கம்: இன்றைய சிதம்பரத்தில் வெண்பாடுவதை விட வன்பாடுவதே அதிகம் என்பதால், இன்று அங்குப் பிறக்கும் குழந்தைகள் கேள்விஞானத்தில் திருவெண்பா கற்றுக்கொள்வது எங்கே?.

    *****
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sir, very nice collection and explanations to Pazhamozhigal..going through i slowly..:)

    Sriniketan
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    namaste.

    Glad that you find the collection useful. I shall try to post more of it.

     
  8. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    very good collection...... thanks for sharing.....
     
    1 person likes this.
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    194. பழமொழி: எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
    பொருள்: திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.

    விளக்கம்: கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.

    *****

    195. பழமொழி: வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
    பொருள்: என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.

    விளக்கம்: கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது; சாணியை வழித்து எறிவதுபோல் மனதில் இருந்து கடவுளின் உருவையும் பெயரையும் மனிதன் வழித்து எறிந்துவிட்டால் அப்புறம் ஏது கடவுள்? என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம்.

    கடவுள் எனும் உண்மை ஒன்றே, அதுவே நாம் ஆத்மா என்பதால் என்றேனும் ஒருநாள் சாதகன் சாணியை வழித்து எறிவதுபோல் நாமரூபத்தை உள்ளத்திலிருந்து வழித்து எறிந்துவிட முடிந்தால்தான் பிறவிலா முக்தி கிட்டும் என்பது போல் ஆன்மிக விளக்கமும் தரப்படலாம்.

    பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்?

    கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம்.

    *****

    196. பழமொழி: எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
    பொருள்: அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.

    விளக்கம்: மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.

    *****

    197. பழமொழி: உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
    பொருள்: உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

    விளக்கம்: அது யார் உப்பிட்டவர்? உணவில் உப்பு சேர்த்துச் சமைப்பவரா? உப்பிலாப் பண்டம் குப்பையிலே என்பதனால் இவர் முக்கியத்துவம் பெறுகிறாரா? காஞ்சி பரமாசாரியார் அவர்கள் இந்தப் பழமொழிக்கு அருளிய விளக்கம் கீழே.

    "உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."
    ஆதாரம்: ’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’, ரா.கணபதி, பக்.264-265.

    *****
     

Share This Page