1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பழமொழி விளக்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by saidevo, Jul 13, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பழமொழி விளக்கம்

    001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
    பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

    விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    *****

    002. பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
    பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

    விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.

    *****

    003. பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.

    பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.

    விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.

    மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.

    *****

    004. பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
    பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

    விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
    "God helps those who help themselves."
    "God gives every bird its food, but does not throw it into the next."

    *****

    005. பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
    பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.

    விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.

    *****
     
    Loading...

  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    006. பழமொழி: தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
    பொருள்: ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.

    விளக்கம்: பட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமக அவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர். கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான் இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய, அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.

    *****

    007. பழமொழி: சீதை பிறக்க இலங்கை அழிய.
    பொருள்: சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.
    விளக்கம்: ஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது.

    *****

    008. பழமொழி: காரண குரு, காரிய குரு.
    பொருள்: காரண குரு ஆத்மனை அறிவுறுத்தி மோக்ஷத்துக்கு வழி சொல்பவர். காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர்.

    விளக்கம்: ’குரு கீதா’ குறிப்பிடும் மற்ற குரு வகைகள் இவை: ’சூசக குரு’வானவர் உலகசாத்திரங்களை நன்கு கற்றறிந்தவர். ’வாசக குரு’வானவர் வர்ணாசிரம தர்மங்களை எடுத்துச்சொபவர். ’போதக குரு’வானவர் சீடனுக்கு ஐந்தெழுத்து போன்ற மந்திரங்கள்மூலம் தீட்சையளிப்பவர். ’நிஷித்த குரு’வானவர் மோகனம், மாரணம், வசியம் போன்ற கீழ்நிலை வித்யைகளைக் கற்றுக்கொடுப்பவர். ’விஹித குரு’வானவர் வைராக்யம் கைவரப்பெற்று சம்சாரபந்தத்திலிருந்து விடுதலை பெற வழிகாட்டுபவர். ’காரணாக்ய குரு’வானவர் ’தத்துவமசி’--ஆத்மனும் பிரமனும் ஒன்றே என்னும் மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து அனுபவித்துப் பயில்வதன் மூலம் மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர். கடைசியாகப் ’பரம குரு’வானவர் சீடனின் எல்லாவித சந்தேகங்களையும் நீக்கி, ஜனன-மரண பயத்தைப் போக்கி, பிரமனோடு ஐக்கியமாக வழிகாட்டுபவர்.

    *****

    009. பழமொழி: குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
    பொருள்: கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.

    விளக்கம்: சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டது, குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பைபோன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது பழமொழியின் தாத்பரியம்.

    *****

    010. பழமொழி: சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.
    பொருள்: சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி.

    விளக்கம்: சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது.

    *****
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    011. பழமொழி: அற்றது பற்றெனில் உற்றது வீடு.
    பொருள்: உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.

    விளக்கம்: அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ள ’எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ வரி நினைவுக்கு வருகிறது.)

    *****

    012. பழமொழி: இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
    பொருள்: இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.

    விளக்கம்: அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:
    கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
    தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
    தன் முதுகு தனக்குத் தெரியாது.

    *****

    013. பழமொழி: அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
    பொருள்: அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?

    விளக்கம்: மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டுவாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    இந்தக்காலத்தில் பெண்ணை அம்மையில் அரைக்கச்சொன்னால், சொன்னவர்மேலுள்ள கோபத்தில் அவள் மிடுக்கு--ஆற்றல் அதிகமாவது நிச்சயம்!

    *****

    014. பழமொழி: இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
    பொருள்: மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?

    விளக்கம்: ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்.

    *****

    015. பழமொழி: சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
    பொருள்: எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?

    விளக்கம்: ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது.

    *****
     
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Sai, very good proverbs with good narration. thanks for sharing dear.
     
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    016. பழமொழி: மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
    பொருள்: மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

    விளக்கம்: மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும் உண்டோ?

    *****

    017 பழமொழி: தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
    பொருள்: கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?

    விளக்கம்: முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.

    *****

    018. பழமொழி: உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
    பொருள்: ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.

    விளக்கம்: உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.

    புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்’ என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்’ என்கிறோம்.

    உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.

    *****

    019. பழமொழி: இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.
    பொருள்: இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு.

    விளக்கம்: இந்தப் பழமொழிக்குப் பின்னே ஒரு கதை உண்டு. குயவர்கள் என்றும் வைஷ்ணவர்களாக இருந்ததில்லை. ஆயினும் ஒரு சமயம் ஶ்ரீரங்கத்தில் இருந்த வைஷ்ணவர்கள் அங்கிருந்த குயவர்களை நெற்றியில் நாமம் தரிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்; இல்லாவிடில் அவர்கள் செய்யும் பானைகளைக் கோவிலுக்கு வாங்கமுடியாது என்றனர். இந்தக் கஷ்டத்தை நீக்க ஒரு புத்திசாலிக் குயவன் தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான். வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி.

    *****

    020. பழமொழி: கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
    பொருள்: ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.

    விளக்கம்: காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது. (’உன் பிள்ளை பரதன் காமாட்டி யானானே’--இராமாயணம், அயோத்.6)

    இதுபோல இன்னொரு பழமொழி: கண்டால் முறை சொல்கிறது, காணாவிட்டால் பெயர் சொகிறது.

    *****
     
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    021. பழமொழி: அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
    பொருள்: ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.

    விளக்கம்: அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.

    *****

    022. பழமொழி: குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?
    பொருள்: குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

    விளக்கம்: நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?

    *****

    023. பழமொழி: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
    பொருள்: எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.

    விளக்கம்: மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்.

    *****

    024. பழமொழி: ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்சாதி/பெண்டாட்டி கையே.
    பொருள்: தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.

    விளக்கம்: கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?

    *****

    025. பழமொழி: கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.
    பொருள்: இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.

    விளக்கம்: காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.

    தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. கஞ்சியும் காஞ்சியும் ஒன்றானால் வரதப்பா என்று வணங்குவது அவர்/அது வருவதைக் குறிப்பதாகவும் ஆகிறதல்லவா?

    *****

    026. பழமொழி: சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.
    பொருள்: தன்காரியத்தில் குறியாயிருந்து அலுக்காமல் சலிக்காமல் அதை வெற்றியுடன் முடிப்பவன், அதுவே கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான்.

    விளக்கம்: दुरन्त என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைக்கு ’தீவிர உணர்ச்சியுடன் மிகவும் முயல்வது’ என்றொரு பொருளுண்டு. வழவழவெனல் என்ற தமிழ்ச்சொல்லுக்குத் தெளிவின்றிப் பேசுதல் என்று பொருள். தன்காரியம் எனும்போது (பேச்சின்றி) எண்ணமும் செயலுமாக இருப்பவன், அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது.

    *****

    027. பழமொழி: குரங்குப்புண் ஆறாது.
    பொருள்: குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?

    விளக்கம்: இங்குக் குரங்கு என்றது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும் குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. குரங்கு தன் புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.

    *****
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    028. பழமொழி: பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.
    பொருள்: (சமீபத்தில் மாறிவிட்ட) பொன்னன் மீண்டும் பழைய பொன்னன் ஆனான், புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய்.

    விளக்கம்: பொன்னன் என்றொரு வேலக்காரன் ஒருநாள் பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்றைக் கண்டான். புதையலைத் தன்வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அங்கேயே அதை மறைத்துவைத்துப் பின் தினமும் அங்கு சென்று அதைக் கவனித்து வந்தான். புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். இதைக்கவனித்த அவன் யஜமானன் ஒருநாள் அவன் அறியாமல் அவனைத்தொடர்ந்து சென்று புதையலைக்கண்டுபிடித்து அதைக் கைப்பற்றிவிட்டான். மறுநாள் புதையல் காணாமல் போயிருந்ததுகண்டு பொன்னன் தன்விதியை நொந்து மீண்டும் பழைய பொன்னன் ஆனான். யஜமானன் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான்.

    *****

    029. பழமொழி: கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?
    பொருள்: திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?

    விளக்கம்: கொள்வது என்றால் வாங்குவது; கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல். ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாது’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. எனவே கோண்டு தின்னல் என்பது ஒரு உணவுப்பொருளை வாங்கித்தின்னுதலாகும். இன்றைய அரசியல்வாதிகள் இப்பழமொழியை நினைவூட்டுகின்றனர்.

    *****

    030. பழமொழி: குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.
    பொருள்: குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.

    விளக்கம்: காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ’காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே’--அறநெறிச்சாரம் 22.

    ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை. இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ’டூ’ விட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.

    குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான் (’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’). இவர்களின் வெறுப்பும் பொறாமையும் எளிதில் மாறுவன அல்ல.

    *****

    031. பழமொழி: கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்.
    பொருள்: எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.

    விளக்கம்: இது ஒரு வழக்கில் சாட்சிக்குச் சொன்ன ஆலோசனை.

    *****

    032. பழமொழி: மரத்தாலி கட்டி அடிக்கிறது.
    பொருள்: மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.

    விளக்கம்: இச்செயல் கொடுங்கோன்மையின் உச்சியைக் குறிக்கிறது. முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    *****
     
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    033. பழமொழி: அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.
    பொருள்: கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.

    விளக்கம்: அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில் ’பற்றவைப்பவன்’ ஆகிறான்! (என் விளக்கம்).

    சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு.

    *****

    034. பழமொழி: குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.
    பொருள்: வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.

    விளக்கம்: குறவன் என்ற சொல் அந்நாளில் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன் என்று பொருள்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு வசித்தோரின் உணவு தேனும் தினைமாவும். அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல்.

    *****

    035. பழமொழி: மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.
    பொருள்: துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.

    விளக்கம்: மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.

    *****

    036. பழமொழி: மாரைத்தட்டி மனதிலே வை.
    பொருள்: கேட்ட வசைமொழிகளை மார்பைத் தட்டியபடி மனதில் இருத்திக்கொள்வது.

    விளக்கம்: இருவருக்கிடையே ஏற்படும் சச்சரவில் வார்த்தைகள் தாறுமாறாகக் கையாளப்பட, வசைமொழி கேட்டவன் தன் மாரைத்தட்டியபடி, ’இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்’ என்று அறைகூவுவது இன்றும் நடப்பதைப் பார்க்கிறோம்.

    *****

    037. பழமொழி: மௌனம் கலகநாசம்.
    பொருள்: மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.

    விளக்கம்: தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.

    *****

    038. பழமொழி: ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?
    பொருள்: காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அது கோவிந்தனைப் பற்றி அறியுமோ?

    விளக்கம்: காக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். அதற்கு அந்த ஊரின் ஆன்மீக, கலாசார வழக்கங்கள் பற்றித் தெரியாது. அதுபோலச் சிலர் இருக்கிறார்கள்.

    *****

    039. பழமொழி: நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?
    பொருள்: நெல்குத்தும் பெண் இரத்தினங்களை இனம்காண அறிவாளா?

    விளக்கம்: கல்லு பரிக்ஷை என்பது இரத்தினக் கற்களை பரிசோதித்துத் தரம் பிரிப்பது. இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா? சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து.

    *****

    040. பழமொழி: சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.
    பொருள்: சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல.

    விளக்கம்: சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. சணப்பன் வீட்டுக்கோழி என்றது தன்னுடைய முட்டாள்தனத்தால் தனக்கே துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது.

    *****
     
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    041. பழமொழி: சேணியனுக்கு ஏன் குரங்கு?
    பொருள்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?

    விளக்கம்: சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான்’. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. "இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). பழமொழி நாம் கெட்ட பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது என்று சுட்டுகிறது.

    *****

    042. பழமொழி: ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
    பொருள்: ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.

    விளக்கம்: மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு: ’மூத்தது மோழை, இளையது காளை’ என்பர்.
    "Even a child may beat a man that’s bound."

    *****

    043. பழமொழி: அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.
    பொருள்: நாவிதன் மாப்பிள்ளையின் மீசை இதனால் மறைந்தே போயிற்று.

    விளக்கம்: ஒரு நாவிதன் மகளுக்குத் திருமணாமாம். மாப்பிள்ளை தன் வருங்கால மாமனாரிடமே மீசையைத் திருத்திக்கொள்ள வந்தானாம். வந்த இடத்தில் நாவிதனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறைசொல்லித் திருத்தியதால் மாப்பிள்ளையின் மீசை மறைந்தே போயிற்றாம்!

    *****

    044. பழமொழி: இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.
    பொருள்: கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!

    விளக்கம்: ஏன் கைகள் போதவில்லை? வங்கியது என்ன? கையூட்டு (லஞ்சம்).


    *****

    045. பழமொழி: இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
    பொருள்: அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.

    விளக்கம்: இது குறித்த தெனாலிராமன் கதையில், தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது.

    *****

    046. பழமொழி: எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
    பொருள்: கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.

    விளக்கம்: என் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது. ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியது ’சாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" என்று கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். எனவே அவன், "சாலீஸ் நஹி, சார் தஸ் பைசா தேதோ (சாலீஸ் அல்ல, நான்கு பத்து பைசாக்கள் கொடு)!" என்று பதில் சொன்னான்!

    *****

    047. பழமொழி: கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.
    பொருள்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.

    விளக்கம்: பல பழமொழிகள் அனுபவத்தில் எழுந்தாலும், இந்தப் பழமொழி ஒரு உருவகமாச் சொன்னதாகத் தோன்றுகிறது. அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். எடுத்துக்காட்டாக, ’நீ பெரிய ஆளப்பா’ என்று சொல்லும்போது நாம் அவன் உடல் பருமையோ உயரத்தையோ குறிப்பதில்லை.

    *****

    048. பழமொழி: குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.
    பொருள்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.

    விளக்கம்: கோபாலப் பெட்டி என்பது என்ன? விடை நாமம் என்ற பெயரில் உள்ளது. புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். இன்றும் அதைக் காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது.

    *****

    049. பழமொழி: பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.
    பொருள்: கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.

    விளக்கம்: பைத்தியம் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். அந்த வார்த்தைக்கு மூடத்தனம் என்றும் பொருளுண்டு. பதக்கு என்பது இரண்டு குறுணிகொண்ட ஓர் அளவு. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு.

    *****

    050. பழமொழி: சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது.
    பொருள்: நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா?

    விளக்கம்: சாப்பிள்ளை என்பது பிறக்கும்போதே இறந்திருந்த குழந்தை. வியாதி குணமாகாவிட்டாலும் நாம் டாக்டருக்கு ஃபீஸ் கொடுப்பதுபோல. மருத்துவச்சியாவது அவள் வேலை முடிந்தபின்னரே பணம் பெற்றுக்கொண்டாள். ஆனால் டாக்டர்?

    *****
     
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    051. பழமொழி: கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.
    பொருள்: மரண துக்கத்திலும் அவளுக்குத் திருட்டுப் புத்தி போகாது.

    விளக்கம்: வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது மாதர் வட்டமாக அமர்ந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கும்போது இவள் ஆறுதல் சொல்வதுபோல் ஒவ்வொரு பெண்ணாகக் கட்டியணைக்குபோதே திருட ஏதேனும் நகை அகப்படுமா என்று கைகளால் துழாவுகிறாள். திருடனுக்கு எதுவுமே புனிதம் இல்லை.

    *****

    052. பழமொழி: தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.
    பொருள்: தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான்.

    விளக்கம்: பொற்கொல்லர்கள் பொதுவாக ஏமாற்றுபவர்களாக அக்காலத்தில் கருதப்பட்டனர். இன்றோ கொடுப்பதில் நாணயம் குறைந்து ஏமாற்றுவது என்பது கடையுடமையாக்கப் பட்டுள்ளது.

    *****

    053. பழமொழி: சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை.
    பொருள்: நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை).

    விளக்கம்: சொந்தக்காரர்களிடையேயும் திருடர்கள் உண்டு. அதிலும் சம்பந்தி வீட்டில் திருடும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. சம்பந்தி கிரஹஸ்தன் என்ற சொற்றொடர் சம்பன்னகிருஹஸ்தன் என்ற சொல்லின் திரிபு. சம்பன்னகிருஹஸ்தன் சொல்லின் நேர்பொருள் தகுதியுள்ள வீட்டுக்காரன் என்று இருந்தாலும் அது அங்கதமாக நாணயமற்றவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

    *****

    054. பழமொழி: நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
    பொருள்: இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.

    விளக்கம்: மூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். இன்றுள்ள எல்லா ஜாதிகளும் அன்றுமுதல் மாறுதல் இல்லாமல் இருந்தனவல்ல என்பது செய்தி.

    *****

    055. பழமொழி: வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்.
    பொருள்: வியாபாரத்துக்கு வந்த வெள்ளைக்காரன், கொஞ்சம் இடம்கொடுத்ததால் நாட்டையே கைப்பற்றினான்.

    விளக்கம்: ஆட்டுத்தோல் என்றது, ஒரு ஆட்டின் தோல் அளவு இடம். அதை அறுத்து ஊர் முழ்தும் அடித்தது, அந்தத் தோல்துண்டுகளைப் போன்ற இடங்களை நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது.

    *****

    056. பழமொழி: ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
    பொருள்: ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.

    விளக்கம்: மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி.

    *****

    057. பழமொழி: பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்.
    பொருள்: எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது.

    விளக்கம்: திருமணத்துக்குப் பெண்தேடும் ஒருவன் நினைத்தது இது: நான் கொடுக்கும் சிறிய வரதட்சிணைப் பணத்துக்கு எனக்கு முத்தாக ஒரு பெண் கிடைக்கவேண்டும் அவள் என் அத்தை மகளாகவும் இருக்கவேண்டும்.

    *****

    058. பழமொழி: சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.
    பொருள்: தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.

    விளக்கம்: சந்நியாசி கல்யாணம் செய்துகொண்டதாகப் பொருள் இல்லை. கதை இதுதான்: ஒரு சந்நியாசி தன் கோவணத்தை எலி கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம். பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம். அந்தப் பசுவை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம். அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம்.

    *****

    059. பழமொழி: பூனை கொன்ற பாவம் உன்னோடே, வெல்லம் திண்ற பாவம் என்னோடே.
    பொருள்: பூனையைக் கொன்ற பாவம் உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும்.

    விளக்கம்: ஒரு பேராசைக்கார வணிகன் ஒரு பூனையைக் கொன்றுவிட்டானாம். அந்தப் பாவம்போக ஒரு பிராமணனிடம் பரிகாரம் கேட்டானாம். பிராமணன் சொன்ன பரிகாரம் (தங்கப் பூனை செய்து கங்கையில் விடுவது) செலவுமிக்கதாக இருந்ததால், பதிலாக வணிகன் ஒரு வெல்லப்பூனை செய்து அதற்குக் கிரியைகள் செய்துவிட்டுப் பின் அதைத் தின்றுவிட்டு பிராமணனைப் பார்த்து இவ்வாறு சொன்னானாம்.

    *****

    060. பழமொழி: ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.
    பொருள்: மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.

    விளக்கம்: ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.

    *****
     

Share This Page