1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தைரோகேர் நிறுவன வற்பனை

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 5, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ``தைரோகேர் நிறுவனத்தை ஏன் ₹4,500 கோடிக்கு விற்றேன்?" - சொல்கிறார் ஏ.வேலுமணி
    ஏ.ஆர்.குமார்
    ஏறக்குறைய 27 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய தைரோகேர் நிறுவனத்தை பார்ம்ஈஸி நிறுவனத்திடம் ரூ.4,500 கோடிக்கு விற்றிருக்கிறார் தைரோகேர் ஏ.வேலுமணி. இந்தத் தகவல் வெளியானதும், அவரைத் தொடர்பு கொண்டோம். பல்வேறு அலுவல்களுக்கு நடுவே அவர் நமக்கு நேரம் ஒதுக்கி பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி இனி...
    தைரோகேர் நிறுவனத்தை பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு திடீரென விற்க என்ன காரணம்?
    ``இது ஒரு எமோஷலான பதில். ஒரு தாய் தன் மகனை ராணுவத்தில் சேர்க்கும்போது, என்னதான் நல்ல சம்பளம் கிடைத்தாலும், நாட்டுக்காகத்தான் தன் மகனை அர்ப்பணிக்கிறோம் என நினைப்பாள். எனக்கும் அந்த மாதிரியான எண்ணம்தான் இருந்தது. இந்த நிறுவனத்தை நான் நடத்தி, அதை நாட்டுக்கு முழுதாக உரித்தாக்க முடியாது. யாராவது ஒரு பெரிய நிறுவனம் அதைச் செய்வார்கள் என்கிற பேராசையில் என் நிறுவனத்தை விற்றிருக்கிறேன்.
    தவிர, எனக்கும் வயதாகிறது. நிறுவனம் பெரிதாக வளர்ந்துவிட்டது. அது குழந்தையாக இருந்தபோது குதூகலமாக இருந்தது. இப்போது அது வாலிப வயதை எட்டிவிட்டது. எனவே, இந்தச் சமயத்தில் இந்த நிறுவனத்தை இன்னொருவரிடம் தந்தால் அது சரியான முடிவாக இருக்கும் என நினைத்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.’’
    ``இதற்குமுன் பலரும் இந்த நிறுவனத்தைக் கேட்டபோது தராமல், பார்ம்ஈஸி நிறுவனத்திடம் தந்தது ஏன்?''
    ``இதற்கு முன்பு கேட்டவர்கள் எல்லாம் ஃபைனான்ஷியல் இன்வெஸ்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் நோக்கம், கொஞ்சம் லாபம். அவர்களின் கையில் என் நிறுவனம் சென்றால், உன்னத நிலையை எட்டாது என எனக்குத் தோன்றியது. ஆனால், பார்ம்ஈஸி நிறுவனத்தை நடத்துபவர்களுக்குத் தெளிவான நோக்கம் இருப்பது தெரிந்தது. பல ஆயிரம் கோடி ரூபாயை இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல நிறுவனங்கள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நிறுவனம்தான் பிடித்திருந்தது. இவர்களைப்போல, வேறு யாரும் கிடைப்பார்களா என்கிற கேள்வியும் எனக்கிருந்தது. எனவேதான், பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு தைரோகேர் நிறுவனத்தை விற்றேன்.’’
    ``நீங்கள் வளர்த்த நிறுவனத்தை உங்கள் வாரிசுகள் ஏற்று நடத்த விரும்பவில்லையா?''
    ``என் குழந்தைகளைப் போல அழகோ, அறிவோ உலகில் வேறு எந்தக் குழந்தைகளுக்கும் இல்லை என்று ஒவ்வொரு தந்தையும் நினைப்பான். இது நூற்றுக்கு 99% தவறு. நம் நாட்டில் பல குடும்பங்களில் ஒரு நிறுவனத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இப்படிச் செல்வதில் ஒரே ஒரு சதவிகிதத்தினர்தான் அப்பா வளர்த்த நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றனர். மற்றவர்கள் அதே நிலையில்தான் நிறுவனத்தை வைத்திருக்கின்றனர். அல்லது நிறுவனத்தைத் தொலைத்து விடுகிறார்கள். யாரோ ஒருவர் என் நிறுவனத்தில் முதலீடு செய்து, லாபம் பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு உழைப்பார். ஆனால், சாப்பாட்டுக்கு எந்த கஷ்டமும் இல்லாத குழந்தைகள் ஒரு நிறுவனத்தை முன்பின் தெரியாத யாரோ ஒருவர் கொண்டுசெல்ல நினைக்கும் அளவுக்குக் கொண்டு செல்வார்களா என்கிற கேள்வி எனக்குள் இருந்தது. இதைப் பற்றி என் குழந்தைகளிடமே பேசினேன்.
    `அப்பா, நீங்கள் நினைப்பதுதான் சரி. நாங்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வோம். நாங்களே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் ஜெயிப்பதுதான் எங்களுக்குப் பெருமையே தவிர, உங்கள் வெற்றியால் நாங்கள் வெற்றி பெற விரும்பவில்லை’ என்றார்கள்.
    இதைச் சொல்ல என் மகனுக்கும் மகளுக்கும் ஒரு பக்குவம் வேண்டும். அது அவர்களிடம் இருப்பதில் எனக்கு சந்தோஷம்.’’
    ``தைரோகேரை விற்ற பணத்தில் ரூ.1,500 கோடியை பார்ம்ஈஸி நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தது ஏன்?''
    ``வங்கி டெபாசிட்டுக்கான வருமானம் மிகக் குறைவு. வங்கி ஆரம்பித்து நடத்தும் அளவுக்கு கையில் பணம் இருக்கும்போது, அதைப் போட்டுவிட்டு, உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம். ஆனால், மீண்டும் புதிதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த எனக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் 6,000 கோடி முதலீடு செய்து என் நிறுவனத்தை வாங்குகிறார்கள். அந்த நிறுவனத்திற்கு அவர்கள் ஐ.பி.ஓ-வும் கொண்டுவரப் போகிறார்கள். அப்படியிருக்க, அந்த நிறுவனத்தின் பங்குகளை நல்ல விலைக்கு இன்றே ஏன் நாம் வாங்கக் கூடாது என்று நினைத்துதான் முதலீடு செய்தேன். நான் செய்யும் முதல் முதலீடு இது. அவர்கள் நல்ல விதமாக நிறுவனத்தை நடத்திக்கொண்டு செல்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.’’
    ``இனி என்ன செய்யத் திட்டம்?''
    ``அடுத்த மூன்று மாதங்களுக்கு நன்கு ஓய்வெடுப்பேன். அதற்குப் பின் என் கவனத்துக்கு வரும் நாட்டுக்கும் குடும்பத்துக்கும் நன்மை தரும் நிறுவனங்களில் முதலீடு செய்வேன். குறிப்பாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய எனக்கு விருப்பம்.’’
    ``சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் மனைவி இறந்ததுதான் நீங்கள் இந்த முடிவை எடுக்கக் காரணமா?''
    ``நான் என் மனைவியைக் காதலித்துத் திருமணம் செய்யவில்லை. ஆனால், திருமணம் செய்துகொண்ட பின் காதலித்தேன். திருமணமான பின் நாங்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை உன்னதமான வாழ்க்கைக்கு அடிப்படை. அவர்தான் தைரோகேர் நிறுவனம் அமைக்க ஆதாரமாக இருந்தார். நான் என்ன செய்தாலும், அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அதுதான் என்னை பலசாலி ஆக்கி, இவ்வளவு பெரிய நிறுவனத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக அமைந்தது. அவரை இழந்தபோது அதன் வலி எனக்குள் இருந்தது. ஆனால், நான் அழவில்லை. இப்போது நிறுவனத்தை இன்னொருவருக்குத் தரும்போதும் அதே வலி. இப்போதும் நான் அழமாட்டேன். அடிமட்டத்தில் கஷ்டப்படும் மனிதனின் நிலையும் எனக்குத் தெரியும்; பணக்காரனின் அகந்தையும் எனக்குத் தெரியும். எல்லா உணர்வுகளையும் பார்த்து, ஒரு சரியான வாழ்க்கையை என் மனைவியுடன் வாழ்ந்த திருப்தி எனக்கு இருக்கிறது.’’
    ``இனி உங்கள் நேரத்தை எப்படி செலவிடப் போகிறீர்கள்?''
    ``முதல் 20 ஆண்டுகள் நான் ஒரு விவசாயி மகன். அடுத்த 20 ஆண்டுகள் நான் ஒரு விஞ்ஞானி. அடுத்த 20 ஆண்டுகள் நான் ஒரு தொழிலதிபர். இனி அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கு நான் ஒரு கதை சொல்லி. கதை சொல்வதன் மூலம் எல்லோரையும் ஊக்கப்படுத்தி, பெரும் சாதனைகளைச் செய்ய வைக்க முடியும். அந்த வேலையைத்தான் நான் செய்யப் போகிறேன்’’ என்று கலகலப்பாகப் பேசி முடித்தார் வேலுமணி.
    நன்றி: விகடன்
     

Share This Page