ஒரு சிறுகதையை சுஜாதாவிடம் எழுதி காட்டிய அனுபவம்: "சார், போன வாரம் திருச்சி போன போது என் ஸ்கூல் கிளாஸ்மேட் ஒருவன் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு இருந்தான்.. அதைப் பற்றி ஒரு சிறுகதை எழுதலாம் என்று இருக்கிறேன்" "எழுதுங்க" "எழுதிவிட்டு உங்களிடம் காண்பிக்கிறேன். நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்" "அதுக்கு என்ன கொண்டு வாங்க..." அடுத்த வாரம் நானும் அந்தச் சிறுகதையை எழுதி அவரிடம் காண்பித்தேன். கதையை முழுவதும் படித்துவிட்டு "முதல் பாரா... கடைசி பாரா நல்லா இருக்கு" என்றார். "மற்றவை?" கேட்ட என் குரல் காற்றிறங்கிக்கொண்டிருக்கும் பலூனாய் இருந்தது. "ரீரைட்" எப்படி என்று சொல்லவில்லை. எனக்கும் கேட்கத் தோன்றவில்லை. திரும்பவும் அடுத்த வாரம் அவரிடம் மாற்றியெழுதிய சிறுகதையைக் காண்பித்தேன். படித்துவிட்டு, "பரவாயில்லை... இன்னொரு முறை திரும்ப எழுதிவிடுங்கள்" என்றார். ஒரு வாரம் கழித்து நம்பிக்கையுடன் திரும்பக் காண்பித்த போது, படிக்கக் கையிலேயே வாங்காமல், "எவ்வளவு பக்கம் பிரிண்டவுட்" "8 பக்கம்" "அடுத்த வாரம் 6 பக்கமாக்கிவிட்டுக் கொண்டு வாங்க" சிறுகதையை எழுதுவதை விட்டுவிடலாமா என்று கூட நினைத்தேன். விடாக்கண்டனாய் அடுத்தவாரம் ஆறுபக்கக் கதையை அவரிடம் காண்பித்த போது "நடுவில் உள்ள ஒரு கதாபாத்திரம் மீது குரோதம் வருகிற மாதிரி ஒரு சம்பவம் வேண்டும்.. அது இந்தக் கதையில் இல்லை" "இல்லை சார்... அந்தக் கதாப்பாத்திரம் ரொம்ப ஸாஃப்ட்" "வில்லனா மாத்திவிடு" இப்படியாக அந்தக் கதையை முழுவதும் மாற்றி எழுத வேண்டியதாகிவிட்டது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவனாய் அடுத்த வாரம் காண்பித்த போது, "இன்னொரு முறை ரீரைட் செய்துவிடுங்கள்... சிறுகதை ரெடி" யாருக்கும் இந்த மாதிரி ஓசியில் சிறுகதை வகுப்பு எடுத்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து. அவருக்கு என்மீது அபிமானம் என்று சொல்லுவதை விட, சிறுகதையின் மேல் அவருக்கு இருந்த காதல்தான் இதற்குக் காரணம். இன்னொரு நேரில் கண்ட அனுபவம் - வாசகர் ஒருவர் மின்னஞ்சலில் சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தார். பிரிண்டவுட் எடுக்கச் சொன்னார். எடுத்தேன். முதல் பாராவை படிக்கச் சொன்னார். நடுவிலிருந்து ஒரு பாரா படிக்கச் சொன்னார். பிறகு "படிச்சுப் பாருங்க கதை இதுதான்" என்று என்னிடம் சொல்லிவிட்டார். படித்துப் பார்த்த போது ஆச்சரியப்படுமளவில் அவர் சொன்ன மாதிரியே கதை இருந்தது. எவ்வளவு சிறுகதைகள் ஆழ்ந்து ஆர்வத்துடன் படித்திருந்தால் இந்த மாதிரி சொல்ல முடியும்? JAYASALA 42