1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறுகதை உத்திகள்

Discussion in 'Stories in Regional Languages' started by saidevo, Mar 28, 2013.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    4. சிறுகதையில் மனவோட்டம்

    மனித மனம் விஷயங்களை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி நினைக்கிறது. இதனை ஆங்கிலத்தில் thinking by association என்பர். ஒரு விஷயத்தைப் பற்றி மனம் நினைக்கும்போது இடைப்படும் எண்ணக் கூறுகளில் தென்படும் ஒரு வார்த்தை, ஒலி அல்லது சித்திரத்தை எடுத்துக்கொண்டு அது தொடர்பான விஷயங்களில் விலகியும் வழுவியும் சஞ்சரிக்கிறது; பின்னர் மீண்டும் மைய நினைவுக்கு வருகிறது. இன்னோரிடத்தில் வேறொரு சம்பந்தம் தட்டுப்பட வழுவிப் பின் மீண்டும் மைய எண்ணத்திற்குத் திரும்புகிறது. இவ்வாறு நிகழ்வதால் மனவோட்டம் என்பது ஓர் தெளிந்த ஆற்றொழுக்குப் போல் அல்லாமல் குழம்பிச் சுழித்துச் செல்லும் நீரோட்டமாக இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் stream of consciousness என்பர்.

    இன்னொரு விஷயம். மனம் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் போது, நாம் வாயால் படிப்பது போல் இலக்கண சுத்தமாவோ அல்லது பேசும்போது எழும் வழக்குச் சொற்களிலோ நினைக்கிறதா? பெரும்பாலும் இல்லையென்று சொல்லிவிடலாம். மனத்தின் எண்ணவோட்டத்தில் முற்றுப் பெறாத வாக்கியங்களும் சொற்றொடர்களும் ஒலிகளும் சித்திரங்களும் சலனப் படங்களும் நினைப்பே இல்லாத புரிதல்களுமே அதிகம்.

    இப்படிப்பட்ட மனவோட்டத்தை அப்படியே கதையில் எழுதினால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரி:

    கல்பனாவை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தேன். கல்பனா ஓவியங்கள்--கல்கியிலா? கல்பனா சாவ்லா ஸ்பேஸ் ஷட்டில் வெடித்து இறந்தாள் பாவம்! ஆஹா, இளம் தென்றல்! வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்! அதென்ன மூசு வண்டறை? வண்டுக்குத் தமிழில் இன்னொரு பெயர் சுரும்பு. அரும்பு-சுரும்பு. கல்பனா மலரத் தொடங்கியிருக்கும் அரும்பு. என்ன அரும்பு, ரோஜாவா, மல்லிகையா? மலர்களிலே அவள் மல்லிகை! மல்லிகை? ஆம், கள்ளங் கபடமற்ற வெள்ளை யுள்ளம், ஒரு குழந்தையின் மனதைப் போல! இதோ ஒரு குழந்தை என்னைப் பார்த்துக் கையாட்டி அழகாகச் சிரிக்கிறது. அம்மாவும் அழகுதான்! ஜாக்கிரதை, பக்கத்தில் அப்பா! அப்பா போய் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? அம்மா எத்தனை வருஷங்கள் குடும்பத்தைத் தாங்கினாள்! வசுதேவ குடும்பகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வசனத்தின் பொருள் உலகம் ஒரு குடும்பமாம், ஸில்லி! பட்டினப் பாலையில் இதை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஜோதிடர். அடுத்த வரியிலேயே அவர் ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று மனிதனின் கர்ம வினைகளைப் பற்றியும் பிறவிச் சுழலைப் பற்றியும் அல்லவா பேசுகிறார்? இத்தனை பிறவிகளில் எத்தனை ஊர்களில் பிறந்திருப்போம், எத்தனை பேரைக் கேளிராகப் பெற்றிருப்போம்? என்றெல்லவா இதன் உட்பொருள்?

    "என்ன பலமான சிந்தனை?" எதிரில் கல்பனா!


    *****

    இப்படி மனவோட்டச் சலனங்களைச் சித்தரித்துக் கதை முழுவதும் எழுதிக் கதையின் ஒருமை சிதறாமல் வாசகனை மகிழ்வூட்டும் திறன் உங்களுக்கு இருந்தால் தாராளமாக இப்படி எழுதலாம். இது பெரும்பாலும் சாத்தியம் இல்லை என்பதால் கதாசிரியர் ஒரு பாத்திரத்தின் மனவோட்டத்தைச் சொல்லும் போது கதையை விட்டு விலகாதபடி ஓர் ஒழுங்கினைக் கையாள நேரிடுகிறது.

    ஒரு நாவலில் கதையை நிறுத்திக் கதை மாந்தர்களின் மனவோட்டத்தை விவரித்துச் சொல்லிப் பின் கதையைத் தொடரலாம். சிறுகதையில் இப்படி முடியாது. எனவே மனவோட்டம் என்பது சிறுகதையில் கதாபாத்திரத்தின் குணத்தைக் காட்டவும், கதையை நகர்த்தவும், உரையாடலுக்குப் பின்புலமாகவும் பொதுவாகக் கையாளப் படுகிறது. வேறு விதங்களில் கையாளும் போது கதையின் ஒருமையும் குரலும் பார்வையும் சிதறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவசியம். கீழ்வரும் சான்றுகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட கதைகளை முழுவதும் ஊன்றிப் படித்துக் கதையில் மனவோட்டம் சொல்லப் படும் விதங்களை அறிந்துகொள்ளவும்.

    1. ’கணவன், மகள், மகன்’: அசோகமித்திரன்

    [மனதில் கூடப் பிறருக்கு வருத்தம் தரும் நினைவுகளை அகற்ற முயலும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனத்தை அசோகமித்திரன் வருணிக்கிறார்.]

    மங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள்? இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா? அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா? இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா? அதனால் தான் அவன் ஓடிவிட்டானா?...

    உமாவும் ஒரு சீட்டு கம்பெனியில் ரசீது எழுதும் வேலைக்குப் போனாள். அவள் வேலைக்குச் சேர்ந்து இரு மாதங்களுக்குள் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று வேறு யாரோதான் மங்களத்துக்குச் சொன்னார்கள். மங்களத்துக்கு நம்ப முடியவில்லை. அவள் பெண் அன்று காலைகூட ஏதும் புதிதாக நடந்திராத மாதிரிச் சாப்பிட்டுக் கைக்குச் சிறிது மோர்சாதமும் எடுத்துப் போயிருக்கிறாள். உமா மாலையில் வீடு வந்தவுடன் அவளை கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் கேட்க வாய் வரவில்லை. அடுத்த நாளும் வாய் வரவில்லை. அதற்கடுத்த நாளும்.

    பதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை...

    ராமு அந்த முறை எழுந்து விட்டான். ஆனால் இதோ மறுபடியும் சீக்காளியாவதற்கான பாதையில் இருக்கிறான். அவனை இன்னமும், ’குடிக்காதேடா’ என்று ஒரு வார்த்தை அவளால் சொல்ல முடியவில்லை. அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்...

    *****

    2. ’ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்’: ஆதவன்

    [மனிதத் தன்மைகள் குறைந்துவரும் இளைய தலமுறையை ஒரு கிழவரின் மனம் மூலம் வருணிக்கிறார் ஆதவன்.]

    டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.

    ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய* வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.

    அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க* வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான* எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.

    *****

    3. ’இணைப்பறவை’: ஆர்.சூடாமணி

    [வாழ்க்கை அனுபவம் மனதை எவ்வளவு புதிராக ஆக்கிவிடுகிறது!]

    வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.

    தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.

    வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.

    "என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"

    *****

    4. ’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்

    [உரையாடல்களில் பின்புலமாமாய் இயங்கும் மனது பல சந்தர்பங்களில் சொல்லுவது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாக அல்லவோ செயல்படுகிறது!]

    எழுதி முடிச்சுட்டியாடி கௌசல்யா?" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...

    "கவர்ல எழுதறயா?... கவர் எதுக்கு? ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது? உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே!"

    கௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. "படிக்கறேம்மா, கேக்கறேளா?"

    "ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா?"

    "ரெடியா இருக்கும்மா! அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்..." என்று ஆரம்பிததுமே,

    "அதெல்லாம் எதுக்கு எழுதறே? அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்?"

    "..."

    "சரி சரி, படி! மணி பன்னெண்டாகப் போறது."

    "அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்!) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்..."

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுகதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்

    ஒரு சிறுகதையின் கதையைப் பல உபாயங்கள் மூலம் சொல்லலாம். கதை சொல்ல உதவும் உபாயங்களில் சில: கதைச் சட்டம் (framing), நாட்குறிப்புகள் (diary entries), கடிதங்கள், கதைக்குள் கதை, திரட்டு (collage), நிரலில்லாக் கதை (non-linear plot), அரைகுறைக்கதை (anti-story), மற்றும் கவிதை வடிவக் கதை (lyricism).

    நாவலில் இத்தகைய உபாயங்கள் பலவற்றை இணைத்து எழுதலாம். சிறுகதையில் அதன் வடிவமும் ஒருமையும் சரியாக வர ஒன்றிரண்டு உபாயங்களுக்கு மேல் பயன்படுத்த இயலாது.

    1. கதைச் சட்டம்

    சட்டம் போட்ட இயற்கை ஓவியப் படம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். காவி வண்ணத்தில் ஒரு பெரிய மலையின் பாறைச் சுவர். சுவரையொட்டி ஓடும் நீண்ட சாலை இருபுறமும் வளைந்து ஒரு கொடி போல மலையைப் பற்றி மேலேறுகிறது. சாலையின் திருப்பத்தில் வெள்ளிக் கோடாக இழியும் ஒரு சின்ன அருவியின் நீர்வீச்சில் சாலை அந்தப் பகுதியில் ஈரமாகத் தெரிகிறது. சாலையில் ஒரு கார் செயலிழந்து நின்றிருக்க அருகில் செய்வதறியாது நிற்கும் ஒரு பெண். கார்ச் சக்கரத்தின் அருகில் அமர்ந்து நோட்டமிடும் ஒரு ஆடவன். இவர்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு பேருந்து தாண்டிச் செல்கிறது. மலைச் சுவர் ஓரத்தில் வண்டி நின்றிருக்க எதிர்ப்புறம் அழகான பள்ளத்தாக்கை வெறித்தவண்ணம் அந்தப் பெண் நிற்கிறாள். பாறைச் சுவரில் சிறு செடிகள் முளைத்திருக்க, சாலையின் எதிர்ப்புறத்தில் காப்புத் தண்டவாளங்களுக்குக் கீழுள்ள நிலத்தில் வளர்ந்துள்ள காட்டுச் செடிகளில் பளீரென்று வெண்ணிறப் பூக்கள். சாலையும் சரிவும் முழுவதும் நிழலாகவும் பள்ளத்தாக்கில் இளம் வெய்யிலாகவும் இருப்பதில் அது ஒரு பின் மாலை நேரம் என்று தெரிகிறது.

    மேலுள்ள படத்தில் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கதைகள் தெரிகின்றனவா? சட்டம் போட்ட இந்தப் படத்துக்குள் எத்தனை படங்கள்! அவை யாவும் ஒன்றுக்கொன்று இயைந்தும் அதே சமயம் முரண்பட்டும் உள்ளது தெரிகிறதா? ஒவ்வொரு படத்தை வைத்தும் ஒரு கதை எழுதலாம் அல்லவா? மலையும் சாலையும் அழகாகத் இயைந்திருந்தாலும் மலையில் மனிதனின் கீறல் தானே அந்தச் சாலைகள்? இந்த ஆக்கிரமிப்பின் மெல்லிய எதிர்ப்பாகத் தான் அந்தக் கார் நின்றுவிட்டதோ? அந்தப் பெண் மலையை விடவும் அழகா? அல்லது ஆடவன் தான் மலையை விட வலிமையானவனா? காரில் செல்லும் பணக்கார மனிதர்களைப் பேருந்தில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் புறக்கணிப்பது வாழ்க்கையில் இயல்பா, முரணா? எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்த அருவி தன் வழியில் இழிந்து சாலையைக் கடந்து விழுகிறது. மலையோ காட்டுச் செடிகளோ ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா? ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியாதா? இருந்தும் அந்தச் செடிகள் மலையின் காவியுடன் இயைந்து வெண்பூக்களில் தன்னியல்பாகச் சிரிக்கிறது. இறுதியாக, இந்தப் படங்கள் எல்லாம் காலம் எனும் சட்டத்துக்குள் அடக்கம் என்பதை நினைவுறுத்துவது போல் ஆதவன் தன் கிரணங்களால் ஒளியையும் நிழலையும் பொழிகிறான்.

    இத்தனை படங்களில் எந்தப் படத்தைப் பற்றி உங்கள் கதை அமைந்தாலும் மற்றத் தனிப் படங்கள் யாவும் கதையின் ஒருமைக்கும் ஓட்டத்திற்கும் துணை நிற்க, எல்லாம் ஒரு சட்டத்துக்குள் அடங்குகிறது அல்லவா? அந்தக் கதிரவனும் காலமும் கூடக் கதையின் சட்டத்துக்குள் கட்டுப்பட்டே இயங்கும் அல்லவா?

    ஒரு சிறுகதை சில கதைமாந்தர்களைப் பற்றிக்கொண்டு நகர்கிறது. கதையில் வருணணைகளும் நிகழ்ச்சிகளும் காலங்களும் விவரிக்கப் படுகின்றன. ஏதாவது ஒரு மாந்தரையோ நிகழ்ச்சியையோ வருணணையையோ அல்லது காலக் குறிப்பையோ தனியாகப் பார்த்தால் அவை தனித்தனிப் படங்களாக மனதில் விரியும். ஆயினும் இவற்றில் எந்தப் படமும் தனியாக முழுமை பெறுவதில்லை. இவையெல்லாம் ஆசிரியர் சிறுகதையாக அமைத்த சட்டத்துக்குள் பொருந்தி இசைந்திருக்கும் போதுதான் கதையின் பெரிய படம் கண்ணுக்குத் தெரிந்து நெஞ்சை நிறைக்கவோ நெகிழ்விக்கவோ செய்கிறது.

    ஓர் ஓவியன் அளவான வண்ணக் கோவைகளில் தன் படத்தில் உள்ள உப-படங்களை வரைவது போலக் கதாசிரியர் தன் கதையில் கூறுகளாக விளங்கும் சொற்சித்திரங்களை இணைத்து இயைத்துக் கதையின் குரலை இசைக்கிறார். அந்தச் சொற்சித்திரங்களில் ஏதேனும் ஒன்று தூக்கலாக, நிரடாக இருந்தால் கதையின் ஸ்வரத்தில் பிசிறு தட்டிவிடுகிறது. கீழ்வரும் கதைகளின் கூறுகளை ஆராய்ந்து அவை எவ்வாறு கதையின் சட்டத்துக்குள் ஒரே படமாகப் பொருந்துகின்றன என்று அறிந்துகொள்ளவும்.

    1. ந.பிச்சமூர்த்தி: பலூன் பைத்தியம்

    இந்தக் கதையில் ஆசிரியர் ’குழந்தைகளுக்கு ஏன் திரும்பத் திரும்ப பலூன் மேல் ஆசை?’ என்ற கேள்வியை ஆராய்கிறார். பலூன்களின் வண்ணங்கள் என்றால் பூக்களில் கூட எத்தனை வண்ணங்கள் இருக்கின்றன? சூரியன் மறையும் மாலை வண்ண ஜாலத்துக்கு ஈடாக மனதை வேறொன்று நிறைக்க முடியுமா? பலூன்களின் மென்மை, வண்ணம், காற்றில் மிதக்கும் திறன் போன்ற வசீகரக் கூறுகளை ஆராய்ந்து ஆசிரியர் ஒரு முடிவுக்கு வருகிறார். முடிவைக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். கதையின் சட்டத்தில் தனிப் படங்களாக மனதில் வடிவெடுக்கும் குழந்தைகள், அவர்களது அன்னையர்கள், பலூன்கள், பூக்கள், சூரிய சந்திரன் போன்ற பிம்பங்கள் கதைச் சட்டத்துக்குள் எப்படி இணைந்து இசைகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    2. விந்தன்: மறுமணம்

    சமீபத்தில் மனைவியை இழந்து வருந்தும் கணவன் - அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் - வயதான தாயார் - சமையற்காரர் - குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள மனைவியின் தோழியான எதிர்வீட்டுப் பெண், அவளது வயதான தாயார்...

    இவர்களை வைத்து ஆசிரியர் விந்தன் ஓர் அழகான சிறுகதை பின்னி அதற்கு ஒரு முத்தாய்ப்பான முடிவையும் தருகிறார்.

    மற்ற உபாயங்கள் பற்றி வரும் பதிவுகளில்...

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்
    2. நாட்குறிப்புகள்

    நாட்குறிப்புகள் மூலம் கதை சொல்லும் போது எது உண்மையில் நடந்தது, எது கதைமாந்தர் மனதில் நடந்தது என்று வாசகர் தெளிவாக அறியும் படியாக எழுதுதல் வேண்டும். இதில் குழப்பம் இருக்குமானால் அது ஆசிரியர் வேண்டுமென்று அமைத்ததாக இருக்கவேண்டும்.

    புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் நாட்குறிப்புகள் மூலம் கதை சொன்னதாக அவசரத் தேடலில் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கதைகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடலாம்.

    1. எனினும், உதகை சத்யன் என்பவர் எழுதிய "’குண்டு’ குமாரின் டயரி" என்னும் கதையில் இந்த உபாயம் பயன்படுத்தப் படுகிறது:
    கதையிலிருந்து ஓரிரு மேற்கோள்கள் கீழே.

    10-07-2010
    இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
    ...

    05-09-2010
    அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார்.

    2. நாட்குறிப்புகளைக் கதையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கதையில் வரும் நாட்குறிப்புகள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் அற்புதம்!

    ஆலந்தூர் மன்னனின் ’யாதுமாகி...’ சிறுகதையில் ஒரு டயரியே கதையாகவும் கதையே டயரியாகவும் இணைந்து, இழைந்து இரும்பைப் பொன்னாக்குகிறது. கதைசொலல், காட்சிகள், கதைமாந்தர் குணங்கள், கதையின் நடை, களன், காலம் என்று எல்லாக் கூறுகளிலும் சிறந்ததாக விளங்கும் இந்தச் சிறுகதை, கதையெழுத விழையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று.


    கதையிலிருந்து ஒரு சின்ன ’சாம்பிள்’:

    நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.

    3. ரமணியின் ’அவன் அவள்’ சிறுகதையின் முடிவில் இந்த உத்தி கதைமாந்தரின் குணத்தைக் குறிப்பாகச் சொல்லப் பயன்படுகிறது.
    http://www.indusladies.com/forums/s...guages/174663-2958-2985-3021-2965-2980-a.html

    அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?

    கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.

    ஜனவரி 5, சனி.
    அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?

    ஜனவரி 6, ஞாயிறு.
    வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்
    2. நாட்குறிப்புகள்

    நாட்குறிப்புகள் மூலம் கதை சொல்லும் போது எது உண்மையில் நடந்தது, எது கதைமாந்தர் மனதில் நடந்தது என்று வாசகர் தெளிவாக அறியும் படியாக எழுதுதல் வேண்டும். இதில் குழப்பம் இருக்குமானால் அது ஆசிரியர் வேண்டுமென்று அமைத்ததாக இருக்கவேண்டும்.

    புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் நாட்குறிப்புகள் மூலம் கதை சொன்னதாக அவசரத் தேடலில் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கதைகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடலாம்.

    1. எனினும், உதகை சத்யன் என்பவர் எழுதிய "’குண்டு’ குமாரின் டயரி" என்னும் கதையில் இந்த உபாயம் பயன்படுத்தப் படுகிறது:
    கதையிலிருந்து ஓரிரு மேற்கோள்கள் கீழே.

    10-07-2010
    இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
    ...

    05-09-2010
    அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார்.

    2. நாட்குறிப்புகளைக் கதையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கதையில் வரும் நாட்குறிப்புகள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் அற்புதம்!

    ஆலந்தூர் மன்னனின் ’யாதுமாகி...’ சிறுகதையில் ஒரு டயரியே கதையாகவும் கதையே டயரியாகவும் இணைந்து, இழைந்து இரும்பைப் பொன்னாக்குகிறது. கதைசொலல், காட்சிகள், கதைமாந்தர் குணங்கள், கதையின் நடை, களன், காலம் என்று எல்லாக் கூறுகளிலும் சிறந்ததாக விளங்கும் இந்தச் சிறுகதை, கதையெழுத விழையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று.

    கதையிலிருந்து ஒரு சின்ன ’சாம்பிள்’:

    நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.

    3. ரமணியின் ’அவன் அவள்’ சிறுகதையின் முடிவில் இந்த உத்தி கதைமாந்தரின் குணத்தைக் குறிப்பாகச் சொல்லப் பயன்படுகிறது.
    http://www.indusladies.com/forums/s...guages/174663-2958-2985-3021-2965-2980-a.html

    அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?

    கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.

    ஜனவரி 5, சனி.
    அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?

    ஜனவரி 6, ஞாயிறு.
    வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுதை உத்திகள்
    3. கதை சொல்லும் உபாயங்கள்: கடிதங்கள்


    மின்-அஞ்சல், மின்-அரட்டை, அலைபேசிக் குறுஞ்செய்தி -- இன்று இவைதான் நம் உறவு, செய்தி மற்றும் கருத்தின் எழுத்துப் பரிமாற்றத்திற்கு இன்றியமையாக் கரணங்கள். இவற்றின் வசதியும் விரைவும் பரப்பும் பெருக்கமும் நம் எல்லார்க்கும் மிகவும் பயன்பட்டாலும், இவற்றின் குறுக்கம் நம் மொழியை, மனதைக் குறுக்கிவிட்டன என்று துணிந்து கூறலாம். முட்டாள்தனமான மின்-அஞ்சல் மொழிநடையே இன்று பலருக்கு இலக்கிய நடையாகிவிட்டது. குரலொலி எழுத்துக்கூறுகள் (phonetical alphabets) மூலம் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி இன்று நம் கவிதை கதை கடிதம் கருத்துகளைத் தட்டெழுதும்போது, கையெழுத்தில் மொழியின் இயல்பான வரிவடிவங்களில் எழுதும்போது வரமுடியாத பிழைகள் மலிந்துவிடுகின்றன. இன்றைய அவசர உலகில் நாளை நம் குழந்தைகள் கையெழுதி மொழி கற்பதை விடுத்துத் தட்டெழுதிக் கற்று எழுத்துகளின் வரிவடிவங்களையே மறந்துவிடுவார்களோ என்றுகூட அச்சம் ஏற்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் அன்றைய வாழ்வில் கையெழுத்துக் கடிதங்களின் பங்கினை இன்று நம்மில் பலர் அறியாதிருப்பது வியப்பல்ல. காகிதமும் மசியும் பேனாவும் கொண்டு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தான் அவற்றின் அருமையும் பெருமையும் இலக்கியமும் புரியும்.

    கடிதங்களில் கதை சொல்லும் போது இருவரின் உரையாடலாக அமைத்து அவர்களின் குணத்தையும் கதையையும் விவரிக்கலாம். அல்லது ஒருவர் தன் மனதை வெளியிடுவதாக அமைத்துத் தன்மைப் பார்வையில் எழுதலாம். கடிதங்கள் கதையின் திருப்புமுனையாக அமையலாம், கதையை நகர்த்தலாம், முழுக்கதையையும் கூடச் சொல்லலாம்.

    1. ஆர்.சூடாமணி அவர்கள் தன் கதை ’பூமாலையில்’ ஒரு கடிதம் மூலம் சிறுகதைக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறார். கதையை முன்னிலைப் பார்வையில் சொல்வது மட்டுமல்லாமல், கதையின் வரும் சம்பவங்களையும் செயற்கையாகத் தெரியாமல் அந்தக் கடிதத்திலேயே நுழைத்து விடுகிறார். கதையின் செய்தியும் முடிவும் அலாதி. கதையின் முடிவு பற்றி வாசகர்கள் அவசியம் பின்னூட்டம் இடுவார்களாக.

    அன்புள்ள ரம்யா,

    உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.

    கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ”எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ” என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை...

    *****

    2. குரு அரவிந்தன்: ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!


    மகளின் கடிதம் கண்டு தந்தை அவள் எதிர்காலம் குறித்து முக்கியமானதொரு முடிவினை எட்டுகிறார்.

    மனைவிக்கும் அவருக்கும் மனத்தாபம் முற்றி மனைவி விவாகரத்துக் கோரும் போது கணவர் அவர்களது பெண்ணின் எதிர்காலம் குறித்துக் கேட்கிறார். மனைவியே அது அவர் பெண்ணல்ல என்று கூறி அதை நிரூபித்துக்காட்டுவதற்காக மகளை மரபணு (DNA) சோதனைக்கு உட்படுத்துகிறாள். வெளியூரில் படிக்கும் மகளிடம் இருந்து தந்தைக்கு ஒரு கடிதமும் அந்த மரபணு அறிக்கையும் ஒரே தபாலில் வருகிறது. தந்தை கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கிறார்...

    *****

    3. புதுமைப்பித்தன்: கடிதம்

    ’பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்’ என்று அந்த எழுத்தாளர் கனவு காணவில்லை; அதே சமயம் பேனாவை வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கவும் அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் புகழ்ந்தாலும் சமூகத்தில் நூற்றில் ஒருவராக அவரை மதித்ததால் அவருக்கு எழுதுவதில் சலிப்பு ஏற்படுகிறது. நல்ல கதையை ரஸிக்க எவரும் இல்லையென்றால் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வியால் அவரது இப்போதைய சிறுகதை பாதியில் நிற்கிறது. இந்த சமயத்தில் அவர் கதையொன்றைப் புகழ்ந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது...

    *****

    4. அண்ணாதுரை: மூன்று கடிதங்கள்

    Typical தி.க. பிரசாரக் கதையாக இருந்தாலும் இந்தச் சிறுகதையில் உள்ள மூன்று கடிதங்கள் ஒரு சுவாரசியமான திருப்பத்தைத் தருகின்றன!

    *****

    5. சுஜாதா: மூன்று கடிதங்கள்

    இலக்கியம் படைப்பதில் சுஜாதாவுக்குப் சில முகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. எனினும் மிகப் பெரும்பான்மையான அவரது சிறுகதைகளிலும் புதினங்களிலும் வணிக உத்தியே தலைதூக்கி நிற்கிறது. இந்தக் கதையில் வரும் மூன்று கடிதங்களும் இது போலத்தான். இதில் இவருக்கு ஒரு பெருமை வேறு!

    *****

    கதைக்குள் கதை உபாயம் பற்றி அடுத்த பதிவில்...
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    சிறுதை உத்திகள்
    4. கதை சொல்லும் உபாயங்கள்: கதைக்குள் கதை


    கதைக்குள் கதை என்னும் உபாயம் நம் பஞ்சதந்திரம், புராணங்கள், ராமாயண-மகாபாரத இதிகாசங்கள் போன்ற பழமையான நூல்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் உத்தியாகும். கதைக்குள் அமையும் கதை ஒரு துணைக்கதையாகவோ, கிளைக்கதையாகவோ நிகழ்ந்து, மூலக்கதையின் செய்தியை வலியுறுத்துவது, மூலக்கதை மாந்தர் ஒருவரின் தற்போதய நிலையின் பின்னுள்ள கருமவினைகளைக் காட்டுவது, அல்லது வெறுமனே களிப்பூட்டுவது போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இரண்டு கதைகளுக்கும் இடையே ஓர் இணையான போக்கு காணப்பட்டு, துணைக்கதையில் சொல்லும் பொருள் மூலக்கதையில் மறைபொருளாள உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.

    சிறுகதையின் வடிவம், ஒருமை போன்ற கூறுகள் சிதைவுறாமல் கதைக்குள் கதை அமைப்பது கடினம். எனினும் இந்த உத்தியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இல்லாமல் இல்லை. நட்ட நடுவில், முடிவுக்குச் சமீபத்தில் ஆரம்பமாகும் சிறுகதையில் ஒரு வெட்டாக முன்கதையை விவரிப்பது வழக்கம். இந்த முன்கதை தன்னளவில் ஓர் தனிக்கதை அல்ல என்பதால் கதைக்குள் கதை ஆகாது என்பதைப் புரிந்துகொள்வோம்.

    1. புதுமைப்பித்தன்: கட்டிலை விட்டிறங்காக் கதை

    விக்கிரமாதித்த மன்னனின் சிம்மாசனப் படிகளில் வீற்றிருந்த பொம்மைகளில் ஒன்று உரைக்கும் கதைக்குள் கதையாக நையாண்டியுடன் ஆசிரியர் சொல்லும் கதையில் மூட்டைப் பூச்சிகள் கதைமாந்தர்கள்!

    2. ரமணி: பெண்மையின் அவலங்கள்

    கதையின் நாயகியே தன் கதையை ஒரு சிறுகதையாக எழுதும்போது எழுகின்ற கதைக்குள் கதை விழைந்ததும் நிகழ்ந்ததும் விவரிக்கிறது.

    3. ரமணி: சார்பு எழுத்துகள்

    வாழ்வின் யதார்ததைச் சரியாக ஆராயாமல் துணையிழந்த இரண்டு பெற்றோர்கள் ஒன்றை முனைய, அவர்களின் குழந்தைகள் இயல்பான வேறொன்றை முனைகிறார்கள். இரண்டு கதைகள் சந்திக்கும் போது உண்மைகள் புலப்பட்டுப் பார்வை தெளிவடைகிறது.

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    ஆறு சொற்களில் ஒரு கதை

    புகழ்பெற்ற கதையெழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு முறை ஆறு சொற்களில்
    அமையுமாறு தம்மால் ஒரு கதை எழுத முடியும் என்று பந்தயம் கட்டி ஜெயித்தார்.

    அந்தக் கதை உலகின் மிகச் சிறிய கதைகளின் முன்னோடி யாகியது:
    For sale: baby shoes, never worn

    இன்று அறுசொற் கதைகளுக்கென்றே ஒரு வலைதளம் உள்ளது!

    இந்த வலை தளத்தில் கண்ட சில சுவாரஸ்யமான ’கதைகள்’ கீழே.

    01. We’re lying in bed. She’s lying.
    02. "Joining the President is his husband..."
    03, Strangers. Friends. Best friends. Lovers. Strangers.
    04. Torched the haystack. Found the needle.
    05. Sorry soldier, shoes sold in pairs.

    06. Unwanted boy grows into wanted man.
    07. Free rent. Three squares. Maximum Security.
    08. The smallest coffins are the heaviest.
    07. Smoking my very last cigarette. Again.
    08. Should’ve. Could’ve. Would’ve. Didn’t. Didn’t. Didn’t.
    09. I’m beside myself; cloning machine works.
    10. Underwater collector. Bad lover. Lone shark.

    11. Alzheimer’s Advantage: new friends every day!
    12. Painfully, he changed 'is' to 'was'.
    13. Ex-wife, ex-husband are fine. Kids aren’t.
    14. Five armed vampires enter blood bank.
    15. Murderous rooster slaughters hens: foul play!

    தமிழில் இதுபோல் நான் முயன்றதில் உதித்த சில ’கதைகள்’.

    1. மன்னனின் வேட்டையில் சிக்கியது மான். திருமணம் செய்துகொண்டான்.

    2. தலைவனும் தலைவியும் ஊடிப் பிரிந்தனர். தோழியைக் காணவில்லை!

    3. புலவர் மன்னனைக் கடிந்து பாடினார். மன்னன் பரிசளித்தான்.

    4. அண்ணன் செத்தால் திண்ணை காலி. தம்பி முந்திக்கொண்டான்.

    5. வைக்கோலை எரித்துத் தேடினர். அரசியின் தங்க ஊசி!

    நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரே ஒரு நிபந்தனை, ஆறு சொற்களில் ஒரு கதை இருக்கவேண்டும்,
    கவிதை அல்ல.

    ரமணி, 27/08/2014

    *****
     
    Last edited by a moderator: Dec 22, 2014
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பத்திரிகையில் வரும் சிறுகதைகள் அளவில் சுருங்கிவிட்ட இன்னாளில் இது போன்ற கதைகளை
    ஆர்வலர்கள் மாதிரியாகக் கொள்ளலாம்.




    -ரமணி
     
    Last edited by a moderator: Dec 22, 2014

Share This Page