1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (28) கறவைகள் பின் சென்று !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 12, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    28) ஆண்டாள் பாடல் (தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை இவற்றைக் கூறி பாவங்களை நீக்கியருள வேண்டுதல்)

    கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
    அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
    குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
    உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
    சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
    இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
    .

    பாசுரப் பொருளுரை

    "பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவுடையவர்களான நாங்கள், ஆயர் குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு, ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக!"

    பாசுரக் குறிப்பு

    மூதறிஞர் இராஜாஜி எழுதிய,எம்.எஸ். குரலில் காற்றில் இழையும் புகழ்பெற்ற 'குறையொன்றுமில்லை' பாடல் இப்பாசுரத்தின் தாக்கத்தால் எழுதப்பட்டதே ! துயிலெழுந்து கோபிகைகளை அரவணைத்துக் கொண்ட கண்ணன்,"நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஆண்டாள் இயற்றிய இந்தப் பாசுரம் மிக உயர்ந்த பொருட்செறிவு கொண்டது.

    இந்தப் பாசுரமும், அடுத்து வரவிருக்கும் 29 ஆம் பாசுரமும் வைணவ நெறியின் மந்திர இரத்தினம் என்று கொண்டாடப்படும் 'த்வய மந்திரத்தின் ' விளக்கப் பாசுரங்கள். முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று சொன்னதற்கான ஆழமான விளக்கமாக இந்த இரண்டு பாசுரங்களும் மைகின்றன. அதாவது, இறைவனே அடையத் தக்கவன், ப்ராப்யம் , உபேயம். அவனை அடைகின்ற வழியும் அவனே-,ப்ராபகம் உபாயம். ஸம்ஸாரமென்னும் கடலைக் கடப்பதற்கு சீவாத்மாக்களுக்குப் படகாக இருப்பவனும் ஆண்டவனே, அந்தக் கடலைக் கடந்து, சீவர்கள் அடையக்கூடிய பரமாத்ம நிலையும் ஆண்டவனே ! வழியாகவும், வழி சென்று சேர்க்கும் இடமாகவும் ஒரு பயணம் உண்டென்றால் அது சீவாத்மா பரமாத்மாவை அடையும் பயணமே !

    இப்பாசுரத்தில் தான் ஆண்டாள் முதன்முதலாக 'இறைவன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள் . "நாங்கள் பறையும்,பரிசுகளும் வேண்டி உன்னைத் தொழுது வந்ததெல்லாம் உனக்குக் குற்றேவல் செய்யவே அன்றி வேறொன்றும் இல்லை" என்று கண்ணனிடம் உளப்பூர்வமாகத் தெரிவிக்கிறாள். "அறிவற்ற எங்களின் பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு அருள் செய்" என்று மன்றாடுகிறாள். "எங்களிடம் பல குறைகளிருப்பினும், உன் கருணைக்கு ஒரு குறைவுமில்லை ஆதலால் எங்களைக் காத்தருள் கோவிந்தா" என்று கோவிந்த நாமத்தைக் கொண்டாடும் பாசுரம்.

    ஆகிஞ்சன்யம்(கையறு நிலை),நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு),பரமனின் சௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன் இறைவன் எனும் தெளிவு ), பரத்துவம் (நாராயணனே இறையென அறிதல் ), ஜீவாத்மா-பரமாத்மாவுக்கு உள்ள சம்பந்தம் ,அபராத க்ஷமணம் (நம் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்ற தெளிவு), சித்தோபாயம் -பரமனை அடைவதற்கு ஆகிய பரமனே வழி என்று தெளிதல் என்றிவையான இறைவனை சரணாகதி செய்வதற்கான அறிவுத்தெளிவுகள், ஏழு நிலைகளை இப்பாசுரம் விளக்குகிறது.

    கால பஞ்சகத்தின் ஸ்வ அத்யாய, மற்றும் யோக காலத்தைக் குறிப்பதான பஞ்சகம்.

    (ஸ்வாத்யாயம் (அப்ராஹ்னம்) பிற்பகல் 1.13 க்கு மேல் இரவாகும் வரை -- செய்ய வேண்டிய இறைத்தொண்டுகள்- இறைவனைப் பற்றி எண்ணியபடி, சாஸ்திரங்கள், புராணங்கள், சூக்தங்கள் இவற்றைப் படித்தல், அடியார் தாமாக செய்யக்கூடிய இறைப்பணிகள், )

    யோகம்- இரவுப் பொழுது- செய்ய வேண்டிய இறைத்தொண்டு- இறைவன் திருவடிகளில் மனமொன்றி அர்ப்பணிப்பது.)

    த்வயத்தின் முதல் வரியின் விளக்கத்தை, அடியவர் இறைவனை அடையத் தாமாக செய்ய வேண்டியது என்ன என்பதற்கான விடையை இப்பாசுரம் கொண்டுள்ளது. இறைவனை அடைவதற்குத் தாங்கள் செய்யக்கூடியது சரணாகதி மட்டுமே என்று அறிவிக்கும் பாசுரம். வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் மிக முக்கியமான மந்த்ரமான த்வய மந்திரத்தின் முதல் வரியின் விளக்கமே இப்பாசுரத்தின் உட்பொருள். (இரண்டாவது வரி அடுத்த பாசுரம்) . த்வயத்தின் முதல் வரி (ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே)
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம் - சொற்பொருள்

    பசுக்கூட்டம் மேய்த்தபடி ஊணுறக்கம் கொண்டபடி,
    உசிதமாகக் கொள்ளும் அறிவெதுவும் இல்லாதபடி,
    பசுவோடு பசுவாக சொற்பத்திறன் வாய்த்தவராய்,
    புசித்தும் ,களித்தும் சிறுவாழ்க்கை வாழ்கின்றோம் !
    பசுவினக் காவலனாய் எம்மிடையே பிறந்தவுன்னை
    பூசிக்க வாய்த்ததொன்றே எங்களின் பிறவிப்பயன்!
    தூசொத்த சிறுகுறையும் எதுவும் இல்லாதவனே,
    விசித்தழும் பிள்ளைக்குத் தாயுறவைக் காட்டிலும்,
    பசுவொத்த நாங்களென்றும் உன்னுடனே கொள்ளுறவு,
    நசித்தொழிய நீயாக நினைத்தாலும் அழியாது !
    பூசிக்கத் தக்கவுன்னை அறிவற்றக் காரணத்தால், ,
    சிசுக்களாம் யாமுன்மேல் கொண்ட அன்பதனால்,
    இரசிக்கத்தகா முறையில் கள்வன், மாயனென்றும்,
    வசியங்கள் செய்தெம்மை மயக்கும் ஆயனென்றும்,
    உசிதமற்றுச் சொன்னதனால் சினந்தருள் செய்யாதே!
    விசுவத்தின் நாயகனே கருணையே பொழிந்துந்தன்,
    சிசுக்கள் யாம்விழையும் பறையினை அருள்வாயே !
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் -"நாங்கள் முதலில் மக்கள் எல்லோரையும் போல நாட்டில், ஊரில் வாழவில்லை. அப்படியிருந்தால் தானே நல்லறிஞர்கள் நிழலில் ஒதுங்கி அவர்கள் கூறும் உயர்ந்த கருத்துக்களை அறிய முடியும். நாங்கள் வாய் பேசாத கறவைக் கூட்டங்களை மேய்ப்பதையே பிரதான தொழிலாகக் கொண்டவர்களாகையால், காட்டில் தான் எங்கள் பெரும்பொழுதும். அங்கே இருப்பது நாங்களும், மாடு கறவைகளும், பிற விலங்குகளும், புல் பூண்டு செடி கொடிகளுமே ! ஆகையினாலே அறிவு பெறுவதற்கு நாங்கள் விரும்பினாலும் அதற்கான வழியே இல்லாதவர்கள் நாங்கள் !" என்று தங்களைப் பற்றி அறிவித்துக் கொள்கிறாள் ஆண்டாள்.

    இறைஞானமெல்லாம் அறியக்கூடிய வாய்ப்பினை நல்கும் அறிஞர்களின் நட்பெதுவும் எங்களுக்கு இல்லை. வாய்பேசாத ஆநிரைகள் மேய்த்துண்ணும், மாலையானதும் மேய்ச்சல் முடித்து வீடு திரும்பி அடையும் சாதாரணர்கள்.

    "ஆன்மாவை போஷிக்கும் அறிவமுதை உண்டு நல்லறிஞர் கூட்டத்தோடு இருக்கவில்லை ! வெறும் உடலை வளர்க்கும் உணவினை உண்டு எங்களைக் காட்டிலும் அறிவில்லாத புல் பூண்டு செடி கொடி மரங்கள் இருக்கின்ற காட்டில் வாழ்கிற கூட்டத்தினர் நாங்கள்!" என்கிறாள் ஆண்டாள். இவ்விடத்தில், கூலிக்கு உழைத்து, சோறுண்டு, உறங்கி, சந்ததி செய்து, களைத்து, அல்லலுற்று,அந்திமத்தில் அலைபாயும் ஆசைகளோடே அழிந்து படும் நம் போன்றவர்கள் என்று கருத்தில் தோன்றுகிறதல்லவா ? இகவுலக வாழ்க்கையின் கர்ம வினைகளிலேயே சீவாத்மாக்கள் உழன்று கொண்டிருக்கும் தன்மை. அதை விடுத்து வேறு நற்செய்கைகளைச் செய்யும் திறமின்மை குறிக்கப்படுகின்றது. (ஆகிஞ்சன்யம்-கையறுநிலை)

    அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து- "உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்கள் குலத்திலாவது யாருக்காவது அறிவுண்டா?" எனக் கண்ணன் கேட்க அப்படியும் இல்லையென்று கூறுகிறார்கள்.சரி தவறுகள் என்னவென்றெல்லாம் தெரியாதவர்கள், சூது வாதற்றவர்கள், இறைஞானம் பெறாதவர்கள் எங்கள் குலத்தினர் என்கிறார்கள். "நீங்களே பிறவியில் அறிவு பெறாவிட்டாலும், பெரியோர் கூறியிருக்கும் கருத்துகளைப் படித்தாகிலும் இருக்கிறீர்களா ?" என்றால் இல்லையென்றே கூறுகிறார்கள்."எங்களைப் பற்றிய அறிவே எங்களுக்கு இல்லை, இதில் இறையறிவு எங்கிருந்து வருவது ?" என்று கூறுகிறார்கள். (இறை)அறிவற்ற மக்கள் மாக்களுக்கே (விலங்கு) சமம் என்பது குறிக்கப்படுகின்றது.

    உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
    - என்னதான் பெருமையென்று பார்த்தால்,ஆயர்குலத்தில் கண்ணன் தோன்றியதே பெருமை."எங்களுக்கு அறிவெதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எங்கள் மத்தியில் நீ வந்து தோன்றி பெருமை செய்கின்ற அளவுக்குப் புண்ணிய பலன் எங்களுக்கு இருக்கிறது. அது தான் கண்ணா எங்களுக்கு இருக்கும் ஒரே ஏற்றம் !" என்கிறார்கள்.இறைவனே நமக்கு இரங்கி (ஸௌஸீல்யம்) நம்மிடையே வருகின்ற எளிமைத்தன்மையும் (ஸௌலப்யம் ) சுலபமாய் அவனை அண்டிப் பணிய நமக்கிருக்கும் வாய்ப்பையும் குறிக்கிறது.

    குறையொன்றுமில்லாத கோவிந்தா- எங்களிடம் மேற்கண்ட குறைகளிருந்தாலும், எமக்கருளும் உன்னிடம் ஒரு குறைவும் இல்லை, இறைவா ! கண்ணனைக் காண வந்த ஆய்ச்சிகளுக்கு அவன் என்ன இப்படிக் கேள்வி கேட்டு ஆராய்கிறானே என்று தோன்ற, ஆண்டாளும் "கண்ணா, எங்களிடம் நீ நிறை குறை என்று பார்த்தால் பற்பல குறைகள் இருக்கிறது. எங்களை, எங்கள் தகுதியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும் தள்ளி விடவும் எண்ணாதே ! எங்களிடையே வந்து நீ தோன்றியிருந்தாலும், எங்களைப் போன்ற குறைகள் உன்னிடம் இல்லையே இறைவா ! குறைவாயிருப்பவர்களுக்கு, குறையொன்றுமில்லாமல் நிறைய இருப்பவர்கள் தருவது தானே முறை ?" என்கிறாள்.

    "எங்கள் மேலேயே தான் குறையென்று சொல்லித் தாழ்த்திக்கொள்ளுகிறோம். ஆனால் எம்மிடையே தோன்றிய உனக்குக் குறைவுண்டு என்று நாங்கள் சொல்லவில்லையே ! அப்படிச் சொல்வதற்கும் உன்னிடம் குறை ஒன்று கூட இல்லையே கண்ணா ! "உன்னை நாங்கள் புகழ்ந்தால் ஆதரிக்கலாம், இகழ்ந்தால் விட்டுவிடலாமென்று இருப்பதற்கு நீ என்ன சாதாரணனா ? எங்கள் எல்லோரையும் காப்பவன் என்பதால் கோவிந்த நாமத்தைப் பெற்றவன் ஆயிற்றே ?" அவனே அடையும் இடமாகவும் (ப்ராப்ய) , பயணிக்கும் வழியாகவும் (ப்ராபக) இருக்கும் ஒருமித்தத் தன்மையினை (ஸங்க்ரஹம்) இச்சொல்லாடல் உணர்த்துகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி !

    ஆண்டவன் எந்தக் குற்றங்குறையும் இல்லாதவன் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெரியோர் சொல்வது. இராமாவதாரத்தில் தான் செய்ததாக உலகம் சொல்லக்கூடிய தவறுக்கும் கிருஷ்ணாவதாரத்தில் நேர் செய்து விட்டான் -

    இராமாயணத்தில் வாயுபுத்திரனான வாலியை மறைந்திருந்து கொன்று, ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனுக்கு உதவியதை சரி செய்யும் விதத்தில், மஹாபாரதத்தில் ஸூர்ய புத்திரனான கர்ணனை தண்டித்து, வாயுபுத்திரனான பீமன் பக்கத்திற்கு வெற்றியைத் தந்தான்.

    ஆண்டவன் எந்தவித மனக் குறையும் கொள்வதில்லை என்பதற்கு இரு சுவையான விளக்கம்.

    இராமாயணத்தில் இறைவன் மனதிற்கு மிகவும் உகந்த தொண்டனாம் அநுமன் இலங்கைக்குத் தூதுவனாகச் சென்று, பிராட்டியை நேரில் கண்டு, ஸுந்தர காண்டம் சொல்லி அவளைக் காப்பாற்றியதோடல்லாமல், இராவணாதிகளுக்கும் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி, மீண்டும் வந்து இராமனிடம்"கண்டேன் சீதையை!" என்று சொல்லி நன்மைகள் புரிந்தானல்லவா ? எங்கள் கூட்டத்திலேயே மிகவும் வலிமை குறைந்த நானே இவ்விடம் வந்து விட்டேன், இராம இலக்குவர்களுக்கும், மற்ற வானர வீரர்களுக்கும் கடலைக் கடப்பது சுலபமே என்று தன்னைத் தாழ்த்திப் பிறரை உயர்த்தியவர் அநுமன் ! அதுவே சிறந்த இறையடியாருக்கு இலக்கணமன்றோ ? அநுமனின் பெருமையை உலகம் அறியவும், தூது சென்று பெற்றப் பெருமை தனக்கும் கிடைக்கட்டுமென்றும் கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காகத் தூது சென்றானாம் ! அது கண்ணன் எண்ணப்படி வேறுவிதமாக முடிந்தது என்பது வேறு விஷயம் !

    அந்தக்குறை மட்டுமல்லவாம், இறைவனுக்கு ! இராமாவதாரத்தைப் பாடிய ஆதிக்கவி வால்மீகி அக்காவியத்திற்குத் தந்த பெயர் இராமாயணம் அல்ல. "சீதாயாஹ் சரிதம் மஹத்" (சிறையிருந்த சீதையின் ஏற்றம்) என்று சீதையின் கதை என்றே பெயரிட்டார். ஆகவே இராவண வதம் பொருட்டுத் தான் சிறையிலடைந்து துன்புற்ற சீதையின் பெருமை தனக்கு வேண்டுமென்றே, கண்ணன் மதுராவின் சிறைச்சாலையில் பிறந்தானாம் !

    இப்படியாக அந்த கோவிந்தனுக்கு எந்தக் குறையும் குற்றமுமில்லை !

    உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது - "நாங்கள் எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். அப்படியே நாங்கள் குற்றங்குறை செய்திருந்தாலும், எங்கள் மீது சினங்கொண்டு நீ தண்டிக்க முற்பட்டால், அது உன்னில் ஒரு பகுதியையே கடிந்து கொள்வதாகாதா ? இதை உன்னாலும் கூட மறுக்கவோ, மாற்றவோ முடியாதே ! " இற்றைக்கு ஈரேழ் பிறவிக்கும் இறைவன் ஒருவனே நம் உறவு, அது என்றும் மாறாது. கண்ணனே இறைவனென்று உணர்ந்து கொண்டார்களல்லவா ? அதுதான் இச்சொல்லாடல் !

    ஆண்டவன் தானே அனைவருக்கும் தாய் தந்தையாயிருப்பவன். சீவர்களை உருவாக்கியவன். அவனுடன் எல்லோருக்கும் தொடர்பு இருந்து கொண்டேயிருக்குமல்லவா ? அதை அழிக்க ஆண்டவனாலும் முடியாதே ! இறைவன் சேஷி (சேவிக்கப் பட வேண்டியவன்), அடியார் சேஷன் (சேவிக்க வேண்டியவர்) என்ற உறவு எப்போதும் மாறாதது. ஆண்டவனே ஆண்டான், நாமெல்லோரும் அவனுக்கு அடி பணிந்து தொண்டாற்ற வேண்டியவர்களே, அடிமைகளே, என்ற எண்ணத்தை சீவர்கள் மறந்து விட்டாலும், அந்த உண்மை மாறாது.

    அறியாத பிள்ளைகளோம்
    - "நாங்களோ அறிவொன்றும் இல்லாத ஆயர்குலப் பெண்கள், சிறுமிகள்!" என்று தங்களின் நிலையைக் கூறிக்கொள்கிறாள். இன்றும் நாம் "இப்படிச் செய்து விட்டாயே, இப்படி ஆகிவிட்டதே!" என்று ஆற்றாமையோடு சண்டைபோட்டுக்,கோபமாகவும், அழுகையாகவும் ஆண்டவனைக் கேள்விகள் கேட்கும் அடியாரைக் காண்கிறோமல்லவா ?ஆணவத்தினால் அல்லாமல் ஆண்டவன் மீதில் அவர்களுக்கு இருக்கும் அன்பினால் ஏற்பட்ட உரிமையினால் அவ்வாறு செய்வதும், அப்படியானவர்களின் கர்ம ஞான பக்தி யோகங்கள் எதுவும் தெரியாத, உலக வழக்கங்கள் அறியாத நிலையும் குறிக்கப்படுகின்றது.

    அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் - பெரியவாம் மறைகளுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக நீயாரென்று தெரியாமல், உன்மேல் கொண்ட அன்பு மிகுதியால் இறைவனான உன்னை நாராயணனென்றும், கண்ணனென்றும்,மாயன், மாதவன்,தாமோதரனென்றும்,பெயரிட்டு ஒருமையில் அழைத்தோம்.. இது அறியாமையாலும், சிறுவயதின் காரணமாகவும், அன்பினால் ஏற்படுகின்ற சுவாதீனத்தாலும் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

    கோவர்தன மலையைக் குடையாய்த் தாங்கி கோகுலத்தைக் காத்த பின்னே, கண்ணனுக்கு மிகவும் உயர்ந்ததான கோவிந்த நாமத்தைச் சூட்டி, இந்திரனே கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்த பின்னே வேறு பெயர்களைச் சொல்லி அழைப்பது தவறல்லவா ? ஆகவே தான் தங்களது பிழையைப் பொறுத்தருள வேண்டுகிறாள். போய பிழையும் புகு தரும் ஆண்டவனினடம் சீவாத்மாக்கள் தாம் முன்னர் அறிந்தும்,அறியாமலும் செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள (அபராத க்ஷமணம்) வேண்டுவதைக் குறிக்கும் சொல்லாடல்.

    இந்த வரி கீதையில் பார்த்தன் கண்ணனிடம் கோரும் மன்னிப்பின் சாயலே !

    ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
    ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி |
    அஜாநதா மஹிமாநம் தவேதம்
    மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி
    (பகவத் கீதை 11:41)

    இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ இடையா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும்,

    யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி
    விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு |
    ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்
    தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் ||
    (பகவத் கீதை 11:42)

    விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!

    சீறி அருளாதே - அறிவற்று நாங்கள் செய்த அச்செயலால் எங்களைக் கோபிக்காதே. இறைவாநீ தாராய் பறை - சீறுவது இறைத்தன்மையல்லவே ! பொறுத்து அருள்வது தானே இறையியல்பு ? நீயே எங்களைக் காக்கும் இறைவனாகையால், எம்மை மன்னித்துக் கருணையுடன் அருள் செய். நைச்சியமாகப் பேசி, "நீ பெரியவன் கண்ணா, நாங்கள் அறிவிலிகள். நீயே எம்மை மன்னித்துப் பறையென்னும் கருவியைத் தருவாய் !" என்று கேட்கிறார்கள். அவனருளால் அவன் தாள் பெறுதல் !

    இறைவா நீ தாராய் பறை என்று சொல்லுவதால், அவனே ப்ராபகம்,ப்ராப்யம் என்று உறுதி செய்து, அவனிடம் வேண்டுவதெல்லாம், இறைத்தொண்டு (கைங்கர்யம்) என்கின்ற பெரும் பேற்றினையே என்பதும் உணர்த்தப்படுகின்றது.
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    பேரானந்தமெனும் வைகுண்ட நிலை நீங்கி
    இருளுழல் இகவுலகின் சீவர்கள் எம்மிடையே
    கருணை மிகுதியினால் அவதாரம் செய்யும்
    அருள்மிகு ஆண்டவனே,உன்னிடம் காண்பதற்கு
    ஒருகுறை அற்றவனே,அனைத்தின் காவலனே !
    திருவருள் பெறுவதற்கு திறமற்ற நாங்களுமே,
    கருமங்கள் பற்பலவும் செய்து பிறந்தவர்கள்!
    பரமன் உந்தனையே சரணம் செய்வதல்லால்,
    பேரின்பப் பேறடைய, நற்பலன் அற்றவர்கள் !
    தரும சாத்திரங்கள் இறையுனை அடைதற்குக்,
    கருமம் ஞானத்துடன் பக்தியென மூன்றாய் ,
    உரைத்த வழியொன்றும் யாம றியாதவர்கள் !
    பெருந்தகை நீயாக எங்களிடைப் பிறக்கின்ற
    பெருநலன் அவ்வொன்றே எங்கள் புண்ணியமே !
    இருந்தும் யாமுணர்ந்த உண்மை இதுவொன்றே !
    பெருந்தந்தை நீயென்றும், யாமுன் மகவென்றும்,
    புருஷன் நீயென்றும், மனைவியர் யாமென்றும்,
    இரட்சகன் நீயென்றும், காப்பது எமையென்றும்,
    பேராண்டவன் நீயென்றும், அடிமை யாமென்றும்,
    பெருஞானம் நீயென்றும், பெறுபவர் யாமென்றும்,
    உரிமை உனக்கென்றும், பொருளே யாமென்றும்,
    பேராதாரம் நீயென்றும், சார்ந்தோர் யாமென்றும்,
    சரீராத்மா நீயென்றும், வெற்றுடல் யாமென்றும்,
    பெரும்போகன் நீயென்றும், போகம் யாமென்றும் ,
    பரமனாம் உன்னோடு சீவரெமை இணைக்கின்ற,
    அருமையாய் நவவிதத்தில் விரிகின்ற உறவுநிலை,
    ஒருபோதும் மறையாது ,பிரிவொன்றும் வாராது !
    பரம்பொருள் நீயென்று உணர்ந்து கொள்கின்ற,
    அரிய அறிவொன்றும் பெறாத காரணத்தால்,
    பிரேமையும், பேரன்பும் உன் மீதிருப்பதனால்,
    தரமும், தகவுமின்றி பெயரிட்டுனை அழைத்தும்,
    திருவருள் தாவென்று உனக்கே ஆணையிட்டும்,
    இருளொத்தத் தவறுகளை நாங்கள் செய்ததற்குப்
    பெரிதாய் தண்டனைகள் எதுவும் வழங்காமல்,
    கருணை நிறையிறையே பொறுத்துக் கொள்வாயே!
    அருளும் இயல்பினனாய் மன்னிப்பும் அளிப்பாயே !
    திருவடி சரணமென்று உனையேப் பணிகின்றோம்!
    விரும்பிடும் பேறெமக்குக் கொடுத்துக் காப்பாயே !
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    குறைஒன்றும் இல்லாத கோவிந்தா - பரத்துவம் - அசையும், அசையா, அண்டசராசரத்தின் அத்தனைக்கும் பரமாத்மாவாக , அனைத்தின் மீதும் அன்பும் கருணையும் ஆகிய பற்பல நற்குணங்கள் பொருந்தியவனாக இறைவன் இருக்கிறான் என்ற தெளிவு.

    கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்- ஆகிஞ்சன்யம்((கையறு நிலை) இறைவனை அடைவதற்கு வழிதெரியாத நிலையிலிருக்கிறோம், பேரறிவின்றி,சிற்றறிவே கொண்டுள்ளோம்.
    கறவைகள் பின் சென்று உண்போம்-ஸ்வாத்யாய காலத்தின் கீழ் இறைவனுடைய அடியார்களை அணுகி அவர்களுடன் சேர்ந்து சாத்திரங்கள், சூக்தங்கள் முதலியவற்றைப் படித்து இறையனுபவத்தை, ஞானத்தைப் பெறுதல்.

    அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து - நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு) சாத்திரங்கள் கூறும் ஸாத்யோபாயமான கர்ம ,ஞான,பக்தி யோகங்கள் எதுவும் அறியாதவர்கள்.

    புண்ணியம் யாமுடையோம்
    - ஆழ்ந்த உறக்க நிலையிலும் இறைவனை உணரக்கூடிய விழிப்புநிலை (ஜாகரம்) காலபஞ்சகத்தின் யோக காலத்தைக் குறிக்கிறது.

    உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் - - எல்லோராலும் அடைய முடியாத பரமானந்த நிலையிலிருந்து, மண்ணுளாரான நமக்கு இரங்கி , நாம் எளிதில் அனுபவிக்கக்கூடிய விபவ அவதாரங்கள் (இராமன்,கிருஷ்ணன் ) எடுத்தலாகிய, பரமனின் ஸௌலப்யம் பற்றிய தெளிவு.

    உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது- பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவுக்கும் அழியாது இருப்பதான நவ (ஒன்பது) வித சம்பந்தம் பற்றிய தெளிவு.

    பரமாத்மா-ஜீவாத்மா இடையேயான நவவித சம்பந்தமாவன

    1) பிதா -புத்ர, (தந்தை-மகவு),
    2) பர்தா -பார்யா (கணவன்-மனைவி)
    3) இரக்ஷக-இரக்ஷ்யக (காப்பவன்-காக்கப்படுபவர்)
    4) சேஷி-சேஷ (ஆண்டான்-அடிமை)
    5) ஞேயம்-ஞேயர் (அறியப்படுபவர்-அறிபவர்)
    6) ஸ்வாமி -ஸ்வ (உரிமையுள்ளவர்-உரிமைப்பொருள்)
    7) ஆதாரம்-ஆதேயம் (தாங்குபவர்-தாங்கப்படுபவர்)
    8) சரீரி-சரீரம் (ஆத்மா-உடல்)
    9) போக்தா-போக்யா (அனுபவிப்பவர்-அனுபவிக்கப்படுபவர்)

    உன் தன்னை, உந்தன்னோடு, அன்பினால் உன் தன்னை இப்படி மூன்று முறை 'உன்' என்ற சொல்லாலே இறைவனுக்கும் நமக்கும் இருக்கும் பிணைப்பை ஆண்டாள் உறுதி படுத்துகின்றாள் . 'அ'கர,'உ'கர,'ம'கரங்களால் ஆன பிரணவத்தின் அ - பரமனைக் குறிக்கும், ம - ஜீவாத்மாவாகிய நம்மைக் குறிக்கும். இடையில் இருக்கும் உ - பரமாத்மாவோடு ஜீவாத்மாவைப் பிணைக்கும் குறிப்பு. ஆண்டாள் மிகச் சிறந்த ஆச்சார்யர் !

    சீறி அருளாதே - அபராத க்ஷமணம் (நம் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்ற தெளிவு) நம் மீது இறைவன் கொண்டிருக்கும் அளவற்ற அன்பின் காரணமாகவே, கருணையோடு இகவுலகில் அவதாரம் செய்கிறான். தன்னை அண்டியவர்களுக்குப் பரிபூர்ணமாக அடைக்கலம் தந்து, அஞ்சேல் என்று ஆறுதலையும் , அவரவர் அடைய விரும்பும் இன்பமாகிற ஆனந்தத்தையும் தருகிறான். இது ஏனையோருக்கு வாய்க்காத அவனது ஸௌஸீல்ய குணம்.

    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் - அறிவின்மையாலும் அன்பினாலும் , பரமாத்மாவான இறைவனுக்கு நாம் அறியாமல் செய்யும் பூசைகளில்,ஆராதனைகளில் ஏற்படக்கூடிய தவறுகளை மன்னிக்கும்படி இறைவனை வேண்டுதல்.

    இறைவாநீ தாராய் பறை -த்வய மந்திரத்தின் முதல் வரி கூறுகின்ற சித்தோபாயம். பரமனை அடைவதற்கு பரமனே வழி என்று தெளிதல் இறைவனைச் சரணம் செய்தலே நாம் செய்யவேண்டிய ஒரே செயல் என்று தெளிதல் .
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    குறையொன்றுமில்லாத கோவிந்தா- எங்களிடம் மேற்கண்ட குறைகளிருந்தாலும், எமக்கருளும் உன்னிடம் ஒரு குறைவும் இல்லை, இறைவா ! கண்ணனைக் காண வந்த ஆய்ச்சிகளுக்கு அவன் என்ன இப்படிக் கேள்வி கேட்டு ஆராய்கிறானே என்று தோன்ற, ஆண்டாளும் "கண்ணா, எங்களிடம் நீ நிறை குறை என்று பார்த்தால் பற்பல குறைகள் இருக்கிறது. எங்களை, எங்கள் தகுதியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும் தள்ளி விடவும் எண்ணாதே ! எங்களிடையே வந்து நீ தோன்றியிருந்தாலும், எங்களைப் போன்ற குறைகள் உன்னிடம் இல்லையே இறைவா ! குறைவாயிருப்பவர்களுக்கு, குறையொன்றுமில்லாமல் நிறைய இருப்பவர்கள் தருவது தானே முறை ?" என்கிறாள்.

    அருமையான வேண்டுகோள் .பரமாத்மா-ஜீவாத்மா இடையேயான நவவித சம்பந்தமாவன

    1) பிதா -புத்ர, (தந்தை-மகவு),
    2) பர்தா -பார்யா (கணவன்-மனைவி)
    3) இரக்ஷக-இரக்ஷ்யக (காப்பவன்-காக்கப்படுபவர்)
    4) சேஷி-சேஷ (ஆண்டான்-அடிமை)
    5) ஞேயம்-ஞேயர் (அறியப்படுபவர்-அறிபவர்)
    6) ஸ்வாமி -ஸ்வ (உரிமையுள்ளவர்-உரிமைப்பொருள்)
    7) ஆதாரம்-ஆதேயம் (தாங்குபவர்-தாங்கப்படுபவர்)
    8) சரீரி-சரீரம் (ஆத்மா-உடல்)
    9) போக்தா-போக்யா (அனுபவிப்பவர்-அனுபவிக்கப்படுபவர்)
    என்ன ஒரு தெளிவான விளக்கம்
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இறைநெறி ஆன்றோர் விளக்கம் பெரியம்மா !
     

Share This Page