1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (13) புள்ளின் வாய் கீண்டானை !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 25, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    13) ஆண்டாள் பாடல் -- (கண்ணனின் தரிசனத்தைப் பெற்றக் கண்ணழகுடைய பெண்ணை எழுப்புவதான பாசுரம்.)

    புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
    பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்


    பாசுரப் பொருளுரை

    "கொக்குப் பறவையாய் வந்த பகாசுரனின் வாயைக் கிழித்துக் கொன்ற கண்ணன் மற்றும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த இராமனுடைய புகழைப் போற்றிப்பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நோற்க, குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். சுக்கிரன் உச்சிக்கு வந்து, வியாழன்(குரு) மறைந்து விட்டது. இரையைத் தேடி செல்லும் பறவைகளின் ஒலி உன் காதுகளில் விழவில்லையா? வண்டுகள் மொய்க்கும் அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல் இப்படி படுக்கையில் கிடக்கலாமோ, அழகிய பெண்ணே! இந்நன்னாளில் தூங்குவது போல பாவனை செய்வதை விடுத்து, எங்களுடன் கலந்து நோன்புக்கு வருவாயாக!"

    பாசுரக் குறிப்பு

    இறைவனின் விபவ அவதாரங்களில், இராமன் சிறந்தவனா கண்ணன் சிறந்தவனா என்ற விவாதத்திற்கு சமாதானம் சொல்லும் வகையில் இருவருமே நாராயண அவதாரங்களே , அவரவர் பார்வையில் அவரவர் உயர்ந்தவராதலால், இருவரையுமே போற்றிப் பாடலாம் என்கிற கருத்தைச் சொல்லும் பாசுரம். யோகபஞ்சகத்தின் கீழ் அமைந்த பாசுரம். இப்பாசுரத்தில் ஞானயோகம் பற்றிச் சொல்லப்படுகிறது.ஒருவர் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, கேள்வி கேட்டு, உண்மையென்ன என்று உணர்ந்து கொள்ளும் அறிவுத் தேடலே, ஞான யோகம். சரீரத்திற்கும் ஆன்மாவிற்குமான வேறுபாட்டை அறிவின் மூலமாக உணர்ந்து கொள்ளுபவர், உலகப்பற்றிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதைப் பற்றியும் அறிந்து கொள்வதே, ஞானயோகம். அத்வைத நெறியின் ஆதிசங்கரர் ஞானயோகத்திற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். ஆயினும் வைணவத்தின் 'விஸிஷ்டாத்வைத ' கோட்பாட்டினை முன்னிறுத்திய இராமானுஜரோ, ஞானத்தை, இறைபக்தியின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தியிருக்கிறார்.

    ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி வழக்கப்படி எழுப்பப்படுபவர் ஆண்டாளுக்குப் பின் வந்த அடியவர்கள் மூவருள் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஆண்டாள் ஞான திருஷ்டியால் தன் காலத்துக்குப் பின் வந்த வைணவ அடியார் மூவரைத் தான் இருக்கும் போதே அறிந்திருந்தாள் என்று இறைநெறியாளர் நம்பிக்கை. "போது அரிக் கண்ணினாய்!" மலர்களை அரிந்து (பறித்து) புஷ்ப கைங்கரியமென்னும் இறைத்தொண்டு செய்வதிலேயே கண்ணோட்டமுடையவர், விருப்பமுடையவர் தொண்டரடிப்பொடியாழ்வார்.. “துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” “தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்பவை இவரைக் குறிக்கும் தொடர்கள். பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் நந்தவனத்திலேயே இருந்தவராதலால்,6 ஆம் பாசுரத்தில் எடுத்தாண்ட அவ்விடத்து அடையாளமாகப் "புள்ளும் சிலம்பினகாண்" என்பது இப்பாட்டிலும் வருகிறது.
     
    periamma and rai like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    தன்னைக் கொல்லவே மாமன் கஞ்சனும்
    முன்னம் அனுப்பிய அரக்கக் கொக்கினை,
    அன்னவாய்ப் பிளந்துப் புல்லைப் போலவே,
    நன்றாய்க் கிழித்துக் கண்ணன் கொன்றனன் !
    தென்னிலங்கை அரசன் அரக்கன் தயமுகன்,
    தன் மனைவியைக் கொண்டு சென்றனன்
    என்பதால் சினமுற்ற இராமன் அவனுமே,
    திண்மை கொண்ட தன் விற்றிறத்தினால்,
    எண்ணம் கெட்ட அரக்கன் அவனையேக்,
    கொன்று சீதையின் துயர் களைந்தனன் !
    அன்றிப்படிச் செய்த இருவரும் வேறன்று
    ஒன்றெனப் பாடிப் புகழ்ந்து அனைவரும்
    ஒன்று சேர்ந்திட்டோம் நோன்பு நோற்கவே !
    விண்ணில் தோன்றிடும் வியாழ கிரகமும்
    சென்று தன்னிடம் புகுந்த நிலையிலங்கு,
    மின்னிடும் தாரகை போலுள்ள சுக்கிரனும்,
    விண்ணில் ஒளிர்வதை நாமும் காண்கிறோம்!
    கண்ணில் கதிரவன் தெரியப் போகிறான் !
    உண்ண உணவினைத் தேடும் பறவைகள்
    விண்ணில் பறந்திடும் காட்சி காண்கிறோம் !
    ஒன்றாய் அவைகளும் எழுப்பும் ஒலியதை
    நன்றாய்ச் செவிகளில் நாமும் கேட்கிறோம் !
    நுண்மையான நல்ல மலரைக் காட்டிலும்,
    மேன்மையழகு மான்விழியை உடைய நீ,
    என்ன இவ்விதம் உறக்கம் கொள்கிறாய் ?
    நோன்பிருந்திடும் முன்னம் நாம் சென்று,
    தண்மை பொருந்திய நதியில் நீராடியே,
    நன்றாய் மூழ்கி நம்முடல் குளிரெடுக்கவே,
    ஒன்றாய் மகிழ்ந்துமே குளியல் செய்யலாம் !
    இன்பமான இதைச் செய்திடாமல் நீயேன்
    நன்நாளில் பொய் யுறக்கம் கொள்கிறாய் ?
    கண்ணனைக் கூடியிருந்த நினைவில் நீ ,
    இன்னுமேன் மனம் மயங்கிக் கிடக்கிறாய்?
    தன்னந் தனியுறக்கம் கலைந்து நீயுமே
    உண்மை உணர்ந்து வா நோன்பிருக்கலாம் !

    புள்ளின் வாய் கீண்டானை ---புள் -பறவை, கிருஷ்ணாவதாரத்தில், மாமன் கம்சன் தன்னைக் கொல்ல அனுப்பிய கொக்கு வடிவம் கொண்ட பகாசுரனைக் குழந்தைக் கண்ணன், தன் கைகளால் அன்னவாயை அகட்டிப் பிளந்து புல்லினைக் கீறிப் போடுவதைப் போலக் கிழித்துக் கொன்றான். கண்ணனுக்குக் (இறைவனுக்குக்) கேடு நினைத்தால் என்னாகும் என்பதை உணர்த்துவதற்காக, மற்ற இடைச்சிறுவர்கள், இறந்துபட்ட அரக்கக் கொக்கின் இறகுகளைப் பிடுங்கித் தோரணம் கட்டினார்களாம் !

    பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை
    - இராவணனைப் போரில் வென்று தலை சாய்த்து, சீதைக்கு வந்தத் துயரைக் களைந்த இராமன். இராமனை சரண் புகாத இராவணன் பொல்லா அரக்கன். சரண் புகுந்த விபீடணன்,நல்ல அரக்கன் ! இராவணன் செய்த அக்கிரமங்களைச் சொல்லப் பிடிக்காமல் ஒரேயடியாக அவனைப் பொல்லா அரக்கனென்றுவிட்டாள் போலும் ! ஒருவேளை உள்ளே இருக்கும் கோபிகைக்குக் கண்ணனை விடவும் இராமனையே பிடிக்குமென்றால், அவனைப் புகழ்ந்து பாடுவோமென்று இராமாவதாரப் பெருமையைச் சொல்கிறாள் ஆண்டாள் !

    இவ்விடம் இராமனை மட்டும் புகழ்ந்தாள் என்பதற்கான விளக்கம்:

    புள்ளின் வாய்க் கீந்தானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை- புள் என்றால் பறவை. இங்கே பறவைகளின் அரசனான கழுகு, ஜடாயு. சீதையை அபகரித்துச் செல்லும் போது தன்னை எதிர்த்துத் தடை செய்து போரிட்ட ஜடாயுவை இராவணன் கொன்றான். அது மிகவும் கொடிய செயல். இதனால் வெகுண்டு இராமன் இலங்கை அடைந்த பின் போரில் இராவணனைக் கொன்றான்.

    இவ்விடம் கண்ணனை மட்டுமே பாடினாளோ என்று என் மனதிற்குத் தோன்றியதைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது பெரியோர்கள் விளக்கத்திலில்லை.என் தனிப்பட்ட சுவாரஸ்யமான கற்பனை மட்டுமே ! தவறாயிருப்பின் தயை கூர்ந்து மன்னிக்கவும்.

    புள்ளின் வாய்க் கீந்தானை- பகாசுரனை வாய் கிழித்துக் கொன்றதும், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை-மகத நாட்டு அரசன் மிகவும் கொடியவன் , ஜராசாந்தன்- ஜரா என்ற அரக்கியால், முழு உருவமற்று வெறும் சதைப்பிண்டமாக இரு உடல் பாகங்களாய்,இரண்டு தாய்மாருக்குத் தனித்தனியேப் பிறந்த குழந்தை ஒன்றாய் சேர்க்கப்பட்டது சந்தி - இணைப்பது. எனவே தான் அவன் உடலைக் கிழித்துப் போட்டாலும் மறுபடி ஒன்றாய் இணைந்து உயிர் பெற்று விடுவான். ஜராசந்தன் கம்சனின் மாமனார். கம்சனைக் கொன்ற கண்ணன் மீதில் அவனுக்கு வெறுப்பு. யாதவர்கள் மீது அடிக்கடி போர் தொடுத்து வந்தான். ஆகவே அவனைக் கொல்லும் நோக்கில் பாண்டவ பீமனுக்கு உபாயமாய், ஒரு சிறு கிளைக் காம்பினைக் கிள்ளி இரண்டாக்கி, அதன் கால் வேறு தலை வேறாகப் போட்டுக் காண்பித்து, அதேபோல ஜராசந்தனையும் உடலைக் கிழித்த பின்னே , ஒரு புற உடலின் தலைக்கு நேராய் இன்னொரு புற உடலின் கால் பாகம் வருமாறு மாற்றி போட்டால் இறந்து விடுவான் என்பதை சூசகமாக உணர்த்தினான் கண்ணன்.பீமனும் குறிப்பறிந்து ஜராசந்தனைக் கொன்று முடித்தான். இப்படித்தான் ஒரு பகையைக் கண்ணன் கிள்ளிக் களைந்தான்.

    இராமாவதாரமும் , கிருஷ்ணாவதாரமும், நாராயண அவதாரங்களே ! ஆதலால் இருவரில் யாரைப் பற்றிச் சொன்னாலும் அப்புகழெல்லாம் அந்தப் பரமன் ஒருவனுக்கே என்று விளக்கும் படியாக ஆண்டாள் இப்பாசுரத்தை மிகுந்த நயம்பட அமைத்திருக்கிறாள்.


    கீர்த்திமை பாடி- கண்ணனும், இராமனும் இருவரும் ஒன்றே, அவனே நாராயணன் என்று புகழ்ந்து பாடி, பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் - பாவை நோன்பிருக்கும் இடத்திற்கு (ஆற்றங்கரை) மற்ற தோழிகள் சென்று விட்டனர்.பலர் திரளுமிடம் களம் எனப்படும். இங்கு நோன்பு நோற்பதற்குப் பெண்கள் திரண்ட இடமாதலால், பாவைக்களம் என்ற குறிப்பு.

    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று- வெள்ளி- சுக்கிர கிரகம், வியாழன்- குரு கிரகம் ,விடியும் நேரத்தில் வானில் சுக்கிரன் தோன்றும், குரு மறையும் . ஆகவே பொழுது விடிந்ததன் குறிப்பு. வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாத்திக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாத்திகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள்.

    புள்ளும் சிலம்பின காண் - 6 ஆவது பாசுரத்தில் குறித்தது, பறவைகள் தம் கூட்டில் கண்விழித்துப் பேசிக்கொள்வதை. இங்கே 13 ஆம் பாசுரத்தைப் பாடும் தோழியின் வீட்டு வாயிலை அடைவதற்குள் சற்று நேரம் கடந்து விட்டதாகையால், அப்பறவைகள் கூட்டை நீங்கி வானத்தில் சிறகடிக்கும் ஓசையைக் குறிக்கிறாள், ஆண்டாள் !

    போதரிக் கண்ணினாய் - கண்ணனை முன்னமே தரிசித்து விட்டு உறங்குகிறாளல்லவா ? அவளது கண்கள் எப்பேற்பட்டவையாக இருக்கும் ? அதைப் புகழும் விதமாகத்தான் இப்படியொரு வர்ணனனையை ஆண்டாள் வைக்கிறாள் என்று இந்தச் சொல்லாடலுக்குப் பற்பல விளக்கங்களை அறிஞர்கள் உரைக்கிறார்கள்.

    போது = அலையும், அரி= மான்- அலைகின்ற இயல்புடைய மானின் விழிகளைப் போல் கண்கள் உடையவள்.

    பல பொருளொரு சொல்லாகிய ஹரி என்ற வட சொல், அரி எனத் திரிந்தது.அரி என்பதைப் பகையென்று பொருள் கொண்டால் , பூவின் அழகுக்கு எதிரியான (அதைவிட அழகுடைய) கண்ணழகுடையவளே !

    போது = மலர், அரி- அதனிடமிருந்து அபகரித்த கண்ணினாய்- அழகு விழியாளே. மலரைக் காட்டிலும் அழகிய கண்களுடையவள்.

    அரி என்பதை வண்டெனப் பொருள் கொண்டால் பூவிற்படிந்த வண்டுபோன்ற கண்ணுடையவளே!’ என்பது ஒரு பொருள் . போது என்றால் மலர், அரி என்றால் வண்டு. மலரை மொய்க்கும் வண்டினையொத்த விழியழகி என்று பொருள்.

    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே- ஆற்றில் மூழ்கி நல்லக் குளிரெடுக்கக் நீராடாமல்,- ஏற்கனவே கண்ணனை எண்ணிய விரக தாபத்தினால் உடல் வெப்பம் வாட்டுகிறது. இன்னும் சூரியன் முழுதும் வெளிப்பட்டு ஆற்று நீரெல்லாம் சூடாவதற்குள் குளிர் நீராடலாம் வா !

    பள்ளிக் கிடத்தியோ- உறங்காது பொய்யுறக்கமாய்ப் படுத்திருக்கிறாயோ
    நன்நாளால் கலந்து - எங்களோடு ஒன்றாக நோன்பிருக்க வேண்டிய நல்ல நாள்
    கள்ளம் தவிர்ந்து- பொய்யுறக்கம் நீங்கி, - ஏற்கனவே அவள் கண்ணனைத் தனியாகக் கண்டு அனுபவித்து விட்டு ,ஏனைய தோழியர் வரும்போது அவர்களுடன் சேராமல் சுகமான நினைவுகளில் மயங்கி, உறங்காமல் கண் மூடிக் கிடக்கிறாள். உயர்ந்த பொருளைத் தான் மட்டும் தனியே அநுபவிக்க வேண்டும் என்று எண்ணுவதே இங்குக் கள்ளத்தனம்.
     
    Last edited: Nov 25, 2016
    periamma and rai like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் -- உட்பொருள்

    அல்லல் விளைக்கும் புலன்களோடு, மனதையும்,
    தொல்லை தராவண்ணம் அடக்கி ஆள்வதினால்,
    இல்லை இறையெனவே சொல்லும் நாத்திகரை,
    நல்லாசான் ஆனவரும் எதிர்கொண்டு வாதிட்டு,
    வெல்லுகின்ற திறத்தினை போற்றிப் பாடியபடி,
    எல்லா அடியார்களும் ஆசானைப் பணிந்திட்டால்,
    நல்லதாம் இறைஞான விளக்கங்கள் அருளிடுவார் !
    கல்வித்திறத்தால் நம் அகவிருளைப் போக்கிடுவார் !
    நல்ல இறைஞானக் கண்ணோட்டம் வாய்த்தவர்கள்,
    வல்லவனாம் இறைவனன்றி தமக்கென்று வேறுவழி
    இல்லை என்பதனை நன்குணர்ந்து தமக்குள்ளேயே,
    நல்லிறை ஞானத்தின் அனுபவத்தில் திளைக்காமல்,
    நல்லின்பம் தருபவற்றைத் தனியாகக் கொள்ளாமல்,
    எல்லோர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியுறுதல் போல்,
    வல்லமை உற்றவராம் ஞானயோகம் வாய்த்தவர்கள்,
    நல்லாசான் அடிபணிந்து இறைஞான விளக்கமுற்று ,
    எல்லோருடனும் ஒன்றாய்க் கூடியிறைவன் புகழ்பாடி,
    கல்லுருவில் காட்சியுறும் கோவில்களில் தொழுதபடி,
    நல்லவர்கள் பிறரோடும் திருவடியைச் சரணடைந்து,
    வல்லவனாம் இறைவன் அனுபவத்தைப் பெறுவதுவே,
    நல்லதாம் வீடுபேற்றை அடைவதற்கும் உதவிடுமே !

    புள்ளின்வாய் கீண்டானை-அரக்கன் பகாசுரன் கொக்கின் வேடத்தில் கோகுலத்து இடைச் சிறுவர்களை ஏமாற்ற வந்தபோது , கண்ணன் அவனையெப்படி வாயைக் கிழித்துக் கொன்றானோ, அதுபோன்றே, இறைமறுப்புக் கொள்கையுடன் பிறரை ஏமாற்றும் போலி நாத்திகர்களை,ஆச்சர்யர்களும் வாதப்போரில் வென்று அடக்குவார்கள்.

    பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை- உணர்புலன்(ஞானேந்திரியம்) ஐந்து- மெய் ,வாய் , கண், மூக்கு, செவி . செய்புலன் (கர்மேந்திரியம்) ஐந்து--அழுக்கினை வெளித் தள்ளும் உறுப்பு ,சந்ததி உருவாக்கும் உறுப்பு, ஓரிடத்திலிருந்து வேறிடம் எடுத்துச் செல்லும் உறுப்பு (கால்), வினையைச் செய்யும் உறுப்பு(கை ) பேச்சின் உறுப்பு (நாக்கு ). புலன்கள் பத்தையும் பின்னிருந்து இயக்கும் மனமே (அரக்கன்) பெரும் எதிரி. இவற்றை அடக்கி ஆள்பவரே நல்லாச்சார்யன்.

    கீர்த்திமை பாடிப்போய்
    - புலன்களையும் மனதையும் அடக்கி, நாத்திகர்களை வெல்லும், ஆச்சார்யரின் புகழைப் போற்றிப் பணிந்து
    பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார் -கர்மயோகமோ,ஞானயோகமோ வேறெதுவும் தெரியாத, மற்ற சீடர்களெல்லாம் ஆச்சார்யரின் இருப்பிடம் அடைந்து, அவர் அருளும் விளக்கங்களைக் கேட்க ஒன்றுகூடுவது.

    புள்ளும் சிலம்பின காண்- அப்படி வந்த அடியார்களுக்கு , ஆச்சார்யர் இறைஞான விளக்கங்களைக் கூறுகின்றனர்.

    வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று - ஆச்சார்ய உபதேசம் பெறுவதினால் ஞான ஒளி எழுந்து ,அஞ்ஞான இருள் (அகந்தை எனும் கர்வம், மமதை எனும் உலகப்பற்று- நான் எனது) விலகும்

    போதரிக் கண்ணினாய்- அவரவர் இதய கமலத்தில் குடிகொண்டிருக்கும் அரி என்னும் இறைவனை (பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப என்றாளல்லவா ?) தியானித்து தரிசிக்கும் ஞானம் வாய்த்த,உயர்வான கண்ணோட்டமுடைய அடியார், ஞான மார்கத்தைக் கடைப்பிடித்து, தம்முடைய அறிவாலும் சக்தியாலும் ஒன்றுமாவதற்கில்லை என்று தம்மைத் தாழ்த்தி இறைவனை உயர்த்தித் , தமக்குள்ளேயே இறை அநுபவத்தில் மனமொன்றி விடுவார்கள். இவர்களே இறைவனுக்குப் பிடித்தமானவர்.

    பள்ளிக் கிடத்தியோ கள்ளம் தவிர்ந்து கலந்து- நான் அடைந்த ஞானத்தைக் கொண்டு, நான் மட்டுமே இறைவனை அடைந்து னுபவிப்பேன் என்று எண்ணுவது சுயநலமான கள்ளத்தனம். கடினமான இறை மார்கங்களான, பக்தியோகம், கர்மயோகம் , ஞானயோகம் பற்றியெல்லாம் ஒன்றும் அறியாத பெரும்பான்மையானவர்களும்,மிகவும் எளிதாய் இறைவனை அடையக் கூடிய சரணமார்கத்தில் ஈடுபட்டு ஏனையோரோடும் இறையானந்தத்தைப் பகிர்ந்து கொள்வதே உயர்வான செயல்.
    இவ்விடம், எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பெற்ற உடையவர் என்று போற்றப்படுகின்ற இராமானுஜர், தான் நரகம் புகுந்தாலும் கவலையில்லை எல்லோரும் இறைவனை அடையச் செய்வதே உகந்தது என்று மற்ற எல்லோருக்கும் அந்த மந்திரத்தை உபதேசித்த நிகழ்வை (திருக்கோட்டியூர்) நினைவு படுத்திப் பார்க்கலாம்
    .
    நன்னாளால் - ஆச்சார்யரை அடைந்து இறைஞான உபதேசம் கிடைக்கும் நாள்,நல்லநாள்

    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே- ஞான மார்க்கம் மிகவும் கடினமானது. அதை விட எளியது, மற்ற இறையடியவருடன் ஒன்றாய்க் கூடி (குளிர), இறை நாமங்களை(நீராடுதல்) பாடி, சிலை (குடைந்து)வடிவத்தில் எளிதாய் அருளும் இறையனுபவத்தில் மூழ்கித் திளைத்தலே (குள்ளக்குளிர) ஆகும்.

    தன்னந்தனியில் இறைப்பணி செய்து அதன் மூலம் இறையனுபவம் பெறுவதைவிட, நல்லாச்சார்யரை அணுகி, இறைஞானம் அடைந்த பின்னர்,அனைத்து அடியார்களோடும் கூடி இறைவனைப் பாடிப் பணிந்து,சரணாகதி செய்து இன்புறுவதே சரியானது என்கிற வைணவ நெறியே இப்பாசுர உட்பொருள்.
     
    periamma and rai like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Pavithra,
    As usual very good explanations.
    The paasuram is set to Ataana ragam, normally representing raudra rasa.Perhaps the first two lines indicating of samhara of Bakaasura and Ravana made the composers tune the verse in Ataana.
    While we love Andal, her devotion, her profiency in Tamil,we may
    doubt whether there could have been a character like Andal in the near past! A valid question!

    The well-known information on the period of Thiruppavai is

    contained in the verse 13 (VeLLi yezhundu Vyaazham urangittru)

    indicating a celestial happening of simultaneous

    rising and setting of Venus and Jupiter respectively

    in the pre-dawn time of that day she composed that verse.

    Based on this information,

    Dr M.RajamAnikkanAr had identified 4 time periods,

    600 AD, 731 AD, 885 AD and 886 AD.

    He arrived at the probable time as 885 AD or 886 AD,

    based on the near opposition of Venus and Jupiter

    at pre dawn in the month of Margazhi in those two years.
    From the fist pasuram we understand that it was Margazhi 1st paurnami.
    'Maargazhi thingal mathi niraintha nannaal.'--Full moon.
    While analysing astronomically it appears that Margazhi 1st and Paurnami would have coincided 1200 years back.In these days of computers it is considerably easy to arrive at the date from the data provided by Andal herself.
    Actually the dates of Ramayana and Mahabharatha have been arrived at by using the clues like thithi, star and constellations provided by valmiki and veda vyasa in their respective works.
    Very interesting paasuram showing data on scientific research.
    However Priyaazhwar seems to have lived 200 years later and there is some confusion here.However there is no conclusive proof for all these particulars.We are sure that there was a diary of literal events happening and poets have never omitted to record those events in their literary works.
    I feel that I am off the tangent while you trying to immerse in Bhakthi Rasa.I feel that we have to appreciate Andal not only for her devotion but for her her precision in recording events in course of her narration.


    jayasala 42
     
    periamma and rai like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Yes, it is.

    Of course not. Your enlightening replies are what my exact expectations. We definitely have to appreciate Andal's all round proficiency.
    Yes, I am aware of that. Modern day techniques and computers help in a great way in calculating actual time periods of our great historical events of Spiritual nature. Though I appreciate the scientific angle , something in me feels it is better to keep certain things, இறை இரகசியங்கள் as secrets itself :)
    Thank you very much !
     
    periamma likes this.
  6. rai

    rai Platinum IL'ite

    Messages:
    290
    Likes Received:
    559
    Trophy Points:
    205
    Gender:
    Female
    @PavithraS , your indepth analysis of Andals' poems, with explanations, interpretations from various sources and your own is stunning! i enjoy your wrting. I thank you and jayasala42 for her scholarly contributions. Keep going.
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female

Share This Page